சனி, ஜூலை 15, 2006

புதுக்கோட்டையின் புதுமைப் பெண்கள்

சில நேரங்களில் நம் ஆட்சியாளர்களும் விவரம் தெரிந்து செயல்பட்டிருக்கின்றனர். அத்தகைய ஒரு வெற்றிக்கதையே இது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்த திருமதி. ஷீலாராணி சுங்கத் தொலைநோக்குப் பார்வையுடன் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அறிவொளி இயக்கத்திற்கு அவரது பங்கு / ஆதரவு கணிசமானது என்று தெரிய வருகிறது. முக்கியமாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுமார் 350 கல்லுடைக்கும் ஆலைகளில் சரிபாதியை மிகுந்த ஏழ்மையில் வாடும் பெண்களுக்கு நியாய விலையில் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் விளைவைப் பார்ப்போம்.

சுமார் 4000 ஏழைத் தாழ்த்தப்பட்ட பெண்கள், தாம் எங்கு அடிமட்டக் கூலிகளுக்கு வேலை செய்து வந்தார்களோ, அதே கல்லுடைக்கும் ஆலைகளுக்கு அவர்களே அதிபதிகளானார்கள். அவர்களின் கணவர்கள் அதே ஆலைகளில் தினக்கூலிகளாகச் சேர்ந்தார்கள். இந்த மாற்றத்தால், முன்பு எட்டு மணி நேர வேலைக்கு ரூ.6/- சம்பாதித்து வந்த இப்பெண்கள், இப்போது நாளொன்றுக்கு ரூ.35 – 40 வரை ஈட்ட முடிகிறது. அனைவரும் அறிவொளியால் பயிற்றுவிக்கப்பட்டு விட்டதால் அவர்களது கணக்கு வழக்குகளை அவர்களாலேயே பார்த்துக் கொள்ள முடிகிறது. வருமானமும் பெண்களின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அது குடும்பச் செலவுகளுக்குச் செல்கிறது, சாராயக்கடைகளில் சென்று ஐக்கியமாகாமல். குழந்தைகள் பசியின்றி, நல்ல உடைகளில் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று வர முடிகிறது. உபரி வருமானம் தந்த வசதியில் இப்பெண்களால் தங்கள் வீடு வாங்கும் திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது.

பொதுவாக இத்தகைய ஆலைகள் அரசுக்கு ஒரு தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு லாரி அளவு ஜல்லிக்கு (தமிழ்மண ஜல்லி அல்ல ;) ) ரூ.110/- என்ற விகிதத்தில். முன்பு காண்டிராக்டர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்தப் பணம் அரசை வந்தடைந்ததே இல்லையாம். ஒரு வருடம் ரூ.525யே இது போல் வசூலிக்க முடிந்ததாம். ஆனால், சரிபாதியான ஆலைகள் ஏழைப்பெண்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு வருடத்திற்கு ரூ.25 லட்சமாக உயர்ந்ததாம் இந்த வசூல் தொகை. அதற்கடுத்த ஆண்டு ரூ.48 லட்சம் எதிர்ப்பாரக்கப்பட்டதாம், அதில் பெண்கள் நிர்வகிக்கும் ஆலைகளின் பங்கு ரூ.38 லட்சம். 10 லட்சமே தனியார் காண்டிராக்டர்கள் பொய்க்கணக்குகள் காட்டி, அரசுக்கு செலுத்தும் தொகை.

இத்திட்டத்தில் சிக்கல்கள் இல்லாமலில்லை. குத்தகையை இழந்த காண்டிராக்டர்கள், அவர்களது அரசியல்வாதி நண்பர்கள், அவர்களிடம் something பெற்று வந்த அரசு ஊழியர்கள் என்று கூட்டு சேர்ந்து கொண்டு இத்திட்டத்தைக் குலைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். அருகாமையிலுள்ள ஒரு கோவிலுக்கு இந்த ஆலைகளால் ஆபத்து என்று புரளியைக் கிளப்பி Archeological Survey of Indiaவைத் துணைக்கழைத்தது, ரவுடிகளை இப்பெண்களுக்கு எதிராக ஏவி விட்டது, போன்ற நற்பணிகளை நம் ஆதிக்க சக்திகள் செவ்வனே செய்து வருகின்றன. அறிவொளி மட்டுமே இப்பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.

*************

புதுக்கோட்டையின் சாராய சாம்ராஜ்யத்திற்கெதிராக போர்க்கொடி ஏந்திய பெண்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மலர்மணி - அறிவொளி இயக்கத்தின் ஒரு தன்னார்வலப் பணியாளர். 'ஊர் பெரியவர்கள்' அனுப்பிய பெண்களால் அடித்து நொறுக்கப்படுகிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவருக்கு மாவட்ட ஆட்சியாளரின் ஆதரவு கிட்டுகிறது. ஆகவே, ஊர் பெரியவர்களால் (மற்றும் காவல்துறையினரால்) மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவரை ஊர் புறக்கணிப்பு செய்கிறது. அவரது மகன்களுக்கு முடி திருத்துவது மறுக்கப்படுகிறது. அவருக்கு தேநீர் வாங்கி வந்த ஒரு மகனின் கைகளிலிருந்து தேநீர் கோப்பை தட்டி விடப்படுகிறது, ஒரு ஊர் பெரியவரால். மளிகை சாமான்கள் வாங்க அவர் நான்கு கி.மீ. தூரத்திலுள்ள அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும். குடிநீருக்காக, இரண்டு கி.மீ. நடந்தே சென்று எடுத்து வரவேண்டும். இந்த தண்டனைகள் பெறும் நிலைக்கு அவர் ஆளாகக் காரணம் - அரசு அறிவித்திருந்த மது விலக்கு வாரத்தில் நடத்திய ஒரு மேடைப்பேச்சு நிகழ்ச்சியில், சில தலித் மக்களை அதே மைக்கை உபயோகித்து பேச வைத்த அவரது செயல். அரசு திட்டத்தைச் செயல்படுத்தியதால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை இது.

இருந்தும் தளராமல் மலர்மணி போன்ற பெண்கள் உழைத்ததால், பல கிராமங்களில் சாராயம் தடை செய்யப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், சாராயம் அருந்துபவர்களும் திருந்தினார்களாம், சாராயம் காய்ச்சுபவர்களும் திருந்தி, தம் நற்பணிகளை நிறுத்திக் கொள்வதற்கு சம்மதித்தார்களாம். ஆனால் இந்த வர்த்தகத்தினால் ஆதாயமடைந்து கொண்டிருந்த காவல்துறையினரோ, வியாபாரத்தை மறுபடியும் தொடங்குமாறு திருந்திய சாரய வியாபாரிகளை வற்புறுத்திக் கொண்டிருந்தார்களாம்.

**************

இன்னொரு புரட்சி, பெரும்பாலான பெண்கள் மிதிவண்டிகள் ஒட்டப் பழகியது. இதிலும் திருமதி. ஷீலாராணி சுங்கத் மற்றும் அறிவொளியின் பங்கு கணிசமானது. மிதிவண்டி இருந்தால் எங்கு வேண்டுமானாலும் விரைவில் சென்றடையலாம், பேருந்துகளுக்குக் காத்திருக்கவோ, அல்லது தந்தை / கணவர் / சகோதரர் / மகன் ஆகியோரின் தயவை நம்பி இருக்கவோ தேவையில்லை, நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்களுக்குச் சென்று திரும்பலாம் என்ற காரணங்களினால் இது அறிவொளியால் ஒரு முக்கியமான நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.

இப்படியாக மிதிவண்டி ஓட்டுவதற்குப் பழகிய பெண்களோ, அதனால் பெரிதும் கவரப்பட்டு, அதை அதிக அளவில் வாங்கவும் பயன்படுத்தவும் செய்தார்கள். ஊர் ஊராகச் சென்று தம் விளைப் பொருட்களை விற்று வருவது, தண்ணீர்க் குடங்களை சுமந்து வருவது, குழந்தைகளை அழைத்துச் செல்வது போன்ற பல தேவைகளுக்கு மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு நான்கு கி.மீ.க்கு உட்பட்ட தூரங்களை பெண்களால் எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது. முன்பு குறிப்பிட்ட கல்லுடைக்கும் ஆலைகளில் பணியற்றும் பெண்களுக்கும், தங்கள் தொலைதூரப் பணியிடங்களுக்குச் சென்று வர மிதிவண்டி பெரிதும் உதவியது. இவையனைத்தும் அல்லாமல், மிதிவண்டி ஓட்டுவது என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தின் அறிகுறியாக கருதப்படும் நிலையும் ஏற்பட்டது. எல்லா பெண்களும் மிதிவண்டியை ஓட்டும் திறனைப் பெற வேண்டும் என்ற சிந்தனை பெண்கள் மத்தியில் வலுவாகத் தோன்ற ஆரம்பித்தது. இவ்வாறாக, சுமார் ஒரு லட்சம் பெண்கள் மிதிவண்டி ஓட்டப் பயின்று, தங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கண்டார்கள். மற்ற பெண்களுக்கும் பயிற்சியளித்து இந்த இயக்கத்தைப் பரப்பினார்கள். இந்தியாவிலேயே அதிகமான அளவில் பெண்கள் மிதிவண்டிகள் ஓட்டும் மாவட்டம் புதுக்கோட்டைதானாம்.

ஆனால், இது அத்தனை சுலபமாக நிகழவில்லை. ஆணாதிக்கப் போக்குகளால், தொடக்கக் காலங்களில் மிதிவண்டி பழகிய பெண்களைப் பற்றி மோசமான விமர்சனங்களெல்லாம் வைக்கப்பட்டன. இருந்தும் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்து சாதனை படைத்தனர் இப்பெண்கள்.

******************

இதுவரை திரு.சாய்நாத் எழுதிய Everybody loves a good drought என்ற நூலிலிருந்து சில உதாரணங்களை வழங்கியுள்ளேன். நான் முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் அரசியல்வாதிகள், தனியார் துறையினர், ஊடகங்கள் மற்றும் மத்திய வர்க்கத்தினர் ஆகியோரால் உதாசீனப்படுத்தப்படும் / மோசமான நிலைகளுக்குத் தள்ளப்படும் அதிகாரமற்ற மக்களின் நிலைமையை இந்த உதாரணங்கள் விவரமாக விளக்கியிருக்குமென்று நம்புகிறேன். தற்போது பொறுமை காத்துவரும் இம்மக்கள் ஒரு நாள் பொறுமையிழக்கக் கூடும். புரட்சி என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதையே தினமும் காண்கிறோம். அத்தகைய நிலை ஏற்படுமுன், இந்த ஏற்ற தாழ்வுகள் சரி செய்யப்படுமென்று நம்புவோம்.

அடுத்து, திரு.சாய்நாத்தை வழியனுப்பி விட்டு, வேறு சில கருத்தியல்களின் மீது வெளிச்சம் போட்டுப் பார்க்கலாமென்றிருக்கிறேன். அதுவே அடுத்த இடுகை - வறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்.

11 கருத்துகள்:

வானம்பாடி சொன்னது…

நன்றி VoW, இந்த வாரம் முழுக்க பயனுள்ள பதிவுகளை தந்ததற்கு.

ramachandranusha(உஷா) சொன்னது…

VOW,
பூ பெயரில் இயங்கும் மகளிர் அமைப்புகள் தமிழக கிராமங்கள் அனைத்திலும் இருக்கின்றன. சின்ன
ஊர்களில்கூட பல பெண்களிடம் மிக அதிக விழிப்புணர்வு இருக்கிறது. குழந்தைகள் படிப்பு, கம்ப்யூட்டர்
என்ற ஒற்றை சொல்லை மட்டும் தெரிந்துக்க்கொண்டு அதைப்பற்றிய கேள்விகள், பெண் குழந்தைகளின்
படிப்பைப் பற்றிய கேள்விகள் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல், (வருடா வருடம்
போகிறேன் இல்லையா) அதிகரித்து வருவது கண்கூடாய் பார்க்கிறேன்.
இந்த வருடம், சின்னதாய் ஒரு ப்ராஜெக்ட் செய்து வலையில் ஏற்றலாம் என்று இருக்கிறேன். வெகு
சில இடங்களைத் தவிர பலரிடம் சினிமா மோகம், அரசியல் மோகம் குறைந்துள்ளதாகவே தோன்றுகிறது.
அரசியலைலும், சினிமாவும் வாழ்க்கையல்ல என்று உணர்ந்திருக்கிறார்கள் அல்லது அவைகளை வாழ்க்கையாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இவை கிராமங்கள்/ சிறு நகரங்களின்
வாழ்க்கை முறை.
சென்னை என்றால் அது வேறு உலகம். எல்லாம் எழுத வேண்டும் :-)

Voice on Wings சொன்னது…

சுதர்சன், உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. மேலும் இரண்டு இடுகைகள் பாக்கியிருக்கின்றன. அவற்றையும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

உஷா, உங்கள் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. பொதுவாக, பெண்கள் முன்னேற்றமடைந்து கொண்டிருப்பது உண்மையே என்றாலும், கடைநிலைகளில் வாழும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். தொண்டு நிறுவனங்களின் மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் ஈடுபாடு, மற்றும் அப்பெண்களின் மன உறுதியுடன் கூடிய விடாமுயற்சி போன்றவையால் இத்தகைய சவால்களைக் கடந்து அவர்கள் மேம்பாடடைதல் சாத்தியபடும்.

பாலசந்தர் கணேசன். சொன்னது…

சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஆக்கபூர்வர்மாக செய்யபடும் இந்த உதவிகள் தான் நிஜமான உதவிகள். ஆனால் ஆட்சியாளர்க்ள் இந்த மாதிரியான வழிகளை தேடாமல், கலர் டீவி போன்றவற்றின் பின்னால் ஓட காரணம் அதில் கமிஷன் கிடைக்கும். இந்த வழிகளால் கிடைக்கும் கமிஷன் குறையும்.

- உடுக்கை முனியாண்டி சொன்னது…

VOW

புதுக்கோட்டை அமைப்புகள் பத்தி வேற எதுவும் தகவல்கள் சேகரிக்க முடிஞ்சதா.

ஏன்னா தமிழ்ச்செல்வன் தன்னோட புத்தகத்தில அறிவொளி இயக்கம் முடிவடைஞ்ச உடனே இந்த குவாரிங்க எல்லாம் பணமுதலைகளுக்கே திரும்ப போய் சேந்துருச்சின்னு எழுதிருக்காரு.

அப்புறம் உங்களோட (எல்லா பதிவுலயும்) குறிப்புகளுக்கான/தகவல்களுக்கான சுட்டிகளையும் குடுக்க முடிஞ்சா நல்லது.

Thangamani சொன்னது…

Thanks for the post VOW.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

தகவல்களுக்கு நன்றிகள்...

Voice on Wings சொன்னது…

பாலசந்தர் கணேசன், நீங்கள் கூறுவது உண்மையே. பின் தங்கிய மக்கள் கையில் பொறுப்பை ஒப்படைத்து அவர்களுக்கு முன்னேறும் வாய்ப்புகளை வழங்குவதை விட இலவ்சங்களை வாரி வழங்குவது எளிய செயல்தான்.

முனியாண்டி, நீங்கள் அளிக்கும் தகவல்கள் வருத்தத்தை அளிக்கின்றன. திரு.சாய்நாத் அளித்துள்ள தகவல்களின்படி, பணமுதலைகள் குவாரிகளை மீட்க முயன்றதாகவும், ஆனால் ஜெயலலிதா அரசால் இப்பெண்களுக்கே (ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு) குத்தகைகள் நீட்டிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். தற்போதய நிலவரம் குறித்துத் தெரியவில்லை.

மேலும், எனது தகவல்கள் இந்த இரு நூல்களிலிருந்துதான்:
1. Everybody loves a good drought - P Sainath
2. Fortune at the Bottom of the Pyramid - C K Prahalad ('மாற்றுச் சிந்தனைகள்' இடுகையில் அளித்த தகவல்கள்)

Thangamani, thanks for your support :)

மா சிவகுமார் சொன்னது…

முந்தைய அதிமுக அரசு, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மிதி வண்டி கொடுத்ததும் பெரிய புரட்சியாகச் சொன்னார்கள். ஒருவரைச் சார்ந்து இருக்க வேண்டியிராத விடுதலை மிக அருமையானது.

இப்படி அங்கங்கே நடக்கும் நல்ல நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, பிற இடங்களிலும் அது நிகழ வழி வகுப்பதுதானே ஊடகங்களின் பொறுப்பு. இங்கோ முகேஷும், அனிலும் சண்டை போட்டுக் கொள்வதுதான் எட்டுக் கால செய்தி தொடர்ந்து பல நாட்களுக்கு.

நீங்கள் சொல்வது போல பொறுமை தீர்ந்து வன்முறைகள் வெடிக்கும் முன்னர் மாற்றங்கள் வர வேண்டும். அதற்கு நம் ஒவ்வொருவர் பங்கும் வேண்டும். இம்சை அரசனையும், பின்னூட்ட அரசியலையும் விவாதித்துக் கொண்டிருக்காமல் இன்னும் உருப்படியாக செயல்படலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

தருமி சொன்னது…

புரட்சி என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் ...//
அதிலும் எனக்கு நம்பிக்கையில்லை...நம் மக்கள் ரெளத்திரம் பழகாமலேயே வாழ்ந்து பழகிவிட்டார்கள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நானும் புதுக்கோட்டை காரன் தான்..நீங்க சொன்ன விஷயங்கள் மகிழ்ச்சி தருது. 90கள்ல நான் சின்னப்பிள்ளயா இருந்தப்ப எங்க ஊரில் அறிவொளி இயக்கம் அமோகமா நடந்தத பார்த்திருக்கிறேன். இப்ப அவ்வளவா இல்ல..ஆனா, மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஊருக்கு ஊர் சக்கை போடு போடுது..பள்ளிப் பெண்களுக்கு மிதிவண்டி வழங்கியது எவ்வளவோ நல்ல விஷயம் தான்