செவ்வாய், செப்டம்பர் 27, 2005

வீடடுப் பெண்களும் வீதிப் பெண்களும்

நம்மிடையே பாலியல் விவகாரங்கள் பற்றியத் திறந்த மனப்பான்மையும் பார்வைகளும் வேண்டுமென்று எழுப்பப்பட்டக் கோரிக்கை தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பண்பாட்டுப் பொய்ப் பிரச்சாரங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட அறிவுக் கொழுந்துகள் எழுப்பும் கண்டனங்களும் கேள்விகளும் நேர்ச் சிந்தனை கொண்டவர்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன. இதனைப் படித்து யாரும் மனம் மாறப்போவதில்லையென்றாலும், அந்த வாய்ப்பையாவது அளிப்போமேயென்ற நல்லெண்ணத்தில் இதைப் பதிகிறேன்.

பாலியல் உறவுகள் பற்றி நம் மரபு, பண்பாடு, மதபோதனைகள் என்ன சொல்கின்றன? சில மூலங்கள் (sources) பலதார மணத்தை அங்கீகரிக்கின்றன, இன்னும் சில இதை எதிர்க்கின்றன. சில, விவாகரத்திற்கும் கருத்தடுப்பிற்கும் தடை விதிக்கின்றன. சில, திருமணம் என்ற பந்தத்திற்குள்தான் ஆணும் பெண்ணும் உறவாடலாம் என்றொருக் கட்டுப்பாட்டை விதித்து, ஆனால் கருத்தரிக்க இயலவில்லையென்றால் யாராவது ரிஷியின் உதவியுடனோ அல்லது இளவட்டத்தின் உதவியுடனோ கருத்தரிக்கலாமென்று அங்கீகாரம் வழங்குகின்றன. திருமணமாகாதக் கோவலனும், மாதவியும் உடன்வாழ்ந்து மணிமேகலையைப் பெற்றெடுத்தப் பழம் பண்பாடுதான் நம் தமிழ்ப் பண்பாடு. இவ்வாறு, ஒரு முரண்பாட்டு மூட்டைதான் மிஞ்சுகிறது நம் மரபையும் பண்பாட்டையும் ஆராய்ந்தால். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒழுக்கம், சுத்தம், களங்கம், மாசு என்றுப் பிதற்றிக் கொண்டிருக்கின்றன நம் அறிவுக் கொழுந்துகள்.

பாலியல் சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவை குறித்த புரிதல்கள் இன்று அத்தியாவசியமாகின்றன, எய்ட்ஸ் என்றக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் சமூக நலன் என்ற வகையிலும். குடும்பம், திருமணம் போன்ற ஏற்பாடுகளின் வருங்காலமும் இன்று கேள்விக்குறியாகிக் கொண்டு வருகிறது. தனிமனித உரிமைகள், அவற்றை உறுதிப்படுத்துவது என்றக் கோணங்களில் நோக்கினால் திருமண வாழ்க்கை இவைகளில் அதிக மதிப்பெண்கள் பெறுமா என்பது சந்தேகமே. மேலும், நம் பண்பாடுகள் வழிமொழிந்த படி, திருமணம் என்பது free sexஆ, licence to sexஆ? என்றக் கேள்வியும் தோன்றுகிறது. Isn't marriage an overkill, if all you want is just sex? (இதைத் தமிழ்ப்படுத்த முடியவில்லை :) ) திருமணத்தை விட எளிமையானத் தீர்வு இருக்கக் கூடுமல்லவா இதற்கு? இத்துடன் இன்று ஓரினச்சேர்க்கை என்றப் பரிமாணமும் சேர்ந்து கொண்டுள்ளது, ஆண் - பெண் திருமண உறவு என்ற ஏற்பாட்டைக் கேள்விக்கிடமாக்கும் வகையில். இவைகளைக் குறித்த மனம் திறந்த விவாதங்கள் இன்றைய நிலையில் தேவைப்படுகின்றன. பாலியல் உறவு என்பதே திருமணம் என்ற அமைப்பிற்குள்தான் நடைபெற வேண்டுமென்றக் கற்காலச் சிந்தனை நலிவடைந்து வருகிறது உலகின் பெரும்பாலானப் பகுதிகளில் (நம் பகுதியிலல்ல - நாம்தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே)

இந்நிலையில், இக்கருத்தை நேர்மையான முறையில் ஒருவர் முன்வைக்க, அவருடன் உடன்பட்டவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, நம் அறிவுக் கொழுந்துகள் எழுப்பினரே ஒருக் கேள்வியை. அதன் சாரம், "வீதிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கும் நியாயத்தை உம் வீட்டுப் பெண்களுக்கும் பரிந்துரைப்பீர்களா?" முட்டாள்த்தனமான இந்தக் கேள்வியை பெரும்பாலோர் சட்டை செய்யாததால் ஏற்பட்டத் துணிச்சலில், இக்கேள்வி பலரால் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கப் பட்டு வருகிறது. இதற்கு விடையளிப்பதற்கு பதிலாக, இக்கேள்வியின் அடிப்படைக் காரணிகளை ஆராய்வது பொருத்தமானச் செயல்.

தனிமனிதச் சுதந்திரம் என்றால் அது அனைவருக்கும் பொருந்தக்கூடியதே என்பதே பொதுவானப் புரிதல். ஆண்களுக்கு மட்டும் என்றோ, பெண்களுக்கு மட்டும் என்றோ, மேலும் பாகுபடுத்தி உங்கள் வீட்டுப் பெண், எங்கள் வீட்டுப் பெண் என்றெல்லாம் தேர்ந்தெடுத்து வழங்கப் படுவதல்ல இவ்வுரிமை. இவ்வாறிருக்க, இத்தகைய பாகுபாடுகளை நினைவுப் படுத்தி ஏனிந்தக் கேள்விகள்? வீட்டுப் பெண்ணுக்கும் வீதிப்பெண்ணுக்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள்? வீட்டுப் பையன்களைப் பற்றியும் ஏன் கவலையுடன் விசாரிக்கவில்லை? நான் கேட்கிறேன், உங்கள் மகனோ, தமையனோ (தந்தையோ) திருமணமற்றப் பாலியலுறவு கொண்டால் அதில் உங்களுக்கு முழுச் சம்மதம்தானா? ஆமென்றால், பெண்களுக்கு மட்டும்தான் பண்பாட்டு வேலிகளா? வீட்டுப்பெண்ணைத் தங்கக் கூண்டுக்குள் அடைத்து விட்டு, வீதிப் பெண்ணைச் சூறையாடும் மனோபாவத்தைத்தானே உங்களை அறியாமலே வெளிப்படுத்துகிறீர்கள், உங்கள் 'புத்திசாலித்தனமானக்' கேள்வியால்? உங்கள் கேள்விக்கு விடையளிக்க வேண்டுமென்றால் நாங்களும் உங்களைப் போலவே சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில், எங்கள் ஆற்றாமையை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். மன்னித்துப் பொறுத்தருளுங்கள், நன்றி.

12 கருத்துகள்:

Ganesh Gopalasubramanian சொன்னது…

வாய்ஸ் அருமையான கருத்து அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
வா.மணிகண்டன் பதிவில் அனானிமஸாக ஒருவர் நீங்கள் சொல்லும் அந்த சம்பந்தத்தை என் பின்னூட்டத்திற்க்காக ஏற்படுத்தியிருந்தார். எப்படி அவருக்கு பதிலளிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவையே பதிலாக கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

அப்படியே இந்த பதிவையும் படியுங்கள்.

http://gganesh.blogspot.com/2005/09/blog-post_27.html

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

Arumaiyaana pathivu voice!

வானம்பாடி சொன்னது…

VoW, அந்த முட்டாள்தனமான கேள்விக்கு உங்களின் பதில் மிக அருமை.

Voice on Wings சொன்னது…

கணேஷ், உங்கள் தெளிவானக் கருத்திற்கு வந்தத் தரக்குறைவான எதிர்வினை இப்போது அழிக்கப் பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இவைகளுக்கு விடையளிக்கத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. உங்கள் பதிவையும் படித்தேன்.

சுரேஷ், நன்றி.

தெருத்தொண்டன் சொன்னது…

சங்கை நீங்களும் கையில் எடுத்துட்டீங்க. பொழுது விடியறப்போ விடியட்டும்னு வேற சொல்லிட்டீங்க.
மனசு திறந்து இருந்தாத் தானே மாற்றுக் கருத்துக்கு காது கொடுக்கலாம்னு தோணும். நாங்க தான் இந்து பூட்டு அல்லது தமிழ் பூட்டு போட்டு மனசை/ சிந்தனையை பூட்டி வைச்சுட்டோமே..
ஈரோடு,மகாராஷ்டிரா,ஜெர்மனி எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது.

Voice on Wings சொன்னது…

சுதர்சன், உங்கள் ஆதரவுக்கு நன்றி.

தெருத்தொண்டன், ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு நீங்க எழுதினதப் புரிஞ்சிக்கறத்துக்கு. ஈரோடு சரி, மகாராஷ்டிரா - அம்பேத்கரா? ஜெர்மனி - மார்க்ஸா? //பொழுது விடியறப்போ விடியட்டும்னு வேற சொல்லிட்டீங்க. // இதுக்கு ஏதாவது உள்குத்து / உள்ளர்த்தம் எதாவது இருக்குதா? :)

neyvelivichu.blogspot.com சொன்னது…

நல்ல கருத்து.. பெனாத்தல் சுரேஷ் தான் உங்கள் பதிவைப் பற்றி என் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார்..

என் பதிவு

சின்னக் குழந்தை கள் கண்ணை இருக்க மூடிக்கொண்டு அழும்..நீங்கள் என்ன காட்டினாலும் பார்க்காது.. சொன்னாலும் கேட்காது.. அது போலத்தான் இவர்களும்.

சிவசேனை இதையே தான் செய்தது கலாசாரப் போலிஸ். அவர்களைத் திட்டிய எத்தனை பேர் சிறுத்தைகளைப் பாடுகிறார்கள். எல்லாம் ஒரு அதிகப்படியான பத்து தொகுதிகள் செய்யும் வேலை. பலசாலிகளாகக் காண்பித்தால், பலன் உண்டு..ஒரு கட்சி 50 தொகுதிக்காகக் கூட்டணி தாவும் போது மற்றவர்களுக்கு இப்பொது .யிர் ஆக இருக்கும் தமிழ் .யிராகிவிடும்.


அன்புடன் விச்சு

Ramya Nageswaran சொன்னது…

VoW, நல்ல பதிவு. நன்றி.

Thangamani சொன்னது…

//ஒரு முரண்பாட்டு மூட்டைதான் மிஞ்சுகிறது நம் மரபையும் பண்பாட்டையும் ஆராய்ந்தால். //

முரண்பாட்டு மூட்டை என்ற பதம் எனக்கு உவப்பானதாக இல்லை. மாறாக காலந்தோரும், இனக்குழுக்கள்தோரும், பிரதேசங்கள்தோரும், மாறி மாறி வந்திருக்கிறது. ஒரு நிருவனப் படுத்தப்பட்ட மத/ கலாச்சார அமைப்பு இல்லாத நிலை இந்தத் துணைக்கண்டத்தில் அபரிமிதமான சுதந்திரமும், எல்லாவிதமான சாத்தியங்களும் நிகழ இயல்பானதாக இருந்திருக்கிறது என்று கொள்ளலாம். இன்று இந்தத் துணைக்கண்டமும், தமிழ் நாடும் ஆபிரகாமிய மதங்களைப்போல இறுக்கமான மத/ கலாச்சாரவழி நிறுவனப்படுத்தப்பட்டதைப்போல செயல்படதுவங்கி விட்டனவோ என எண்ணுகிறேன். இந்த நிறுவனமயமாக்குதல் பெரும்பான்மையான மக்கள் அந்த மதங்களுக்கு மாறாமலேயே நடப்பதும், இந்துத்துவ இயக்கங்களாக அறியப்படும் நிறுவனப்படுத்தபட்ட இயக்கங்கள் அதை முன்னெடுப்பதும், இதனால் இந்த மண்ணின் பன்மைத்தன்மையும், சுதந்திரமும் மறைந்து போவதும் நிகழ்ந்துவருகிறது.

ஏனெனில் ஒரே தமிழ்ப்பண்பாடு, இந்தியப்பண்பாடு, இந்துப்பண்பாடு என்பனவெல்லாம் ஆபிரகாமிய மதங்களின் வழியில் கிளைத்த சிந்தனைகள் என்றே தோன்றுகிறது.

Thangamani சொன்னது…

இதற்கு மேலைக் கல்விகூட காரணமாக இருக்கலாம்.

Voice on Wings சொன்னது…

குழலி, உங்கள் பதிவைப் படித்தேன். உங்கள் கேள்விகள் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் இப்போது பேசப்பட்டு வரும் விஷயத்திற்கும் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கும் அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. பெண்களுக்கு சம உரிமை, அவர்களைப் பற்றிய முன் முடிவுகள் கொள்ளாத மனப்பான்மை ஆகியவற்றை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். இதில் எனக்கும் உடன்பாடே. ஆனால் இன்று நாம் சந்தித்துள்ள நிலைமை பாலியல் உறவுகளைப் பற்றியது. அதில் நிலவி வரும் hypocracyயைப் பற்றியது. ஒரு தனிமனித வாழ்க்கையில் 'சமூகம்' என்ற சக்தி செய்யும் குறுக்கீடுகளைப் பற்றியது. பாலியல் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அது வழங்கும் தீர்ப்புகளைப் பற்றியது. உ-ம், குஷ்புவின் சொந்த வாழ்க்கையைப் பற்றி எத்தனை விமர்சனங்கள் வைக்கப்பட்டன பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் (மற்றும் ஏனைய ஊடகங்களிலும்)? இவர்களுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது எது? பண்பாடா? அப்படியென்றால், அதனை உடைத்துப் போட வேண்டாமா? நீங்கள் கூறும் சம உரிமையும் சம அங்கீகாரமும், அவரது கணவரிடமிருந்து அவருக்கு கிடைத்திருக்கலாம். இருந்தும், 'சமூகம்' அவரை வீழ்த்தி விட்டது, உண்மையைச் சொன்னதற்காக. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் பலரும் எழுந்துள்ளனர் என்பது என் புரிதல்.

விச்சு, உங்கள் பதிவையும் படித்தேன். எந்தவிதமான அமைப்பாக இருந்தாலும் (வலதுசாரி, இடதுசாரி, காவி, கறுப்பு, சிவப்பு, பச்சை, வெள்ளை) அது தனிமனித வாழ்வில் குறுக்கிடுவது தவறே. ஆனால் mobocracy ஒங்கியுள்ள நம் சூழலில் இப்படியொரு எதிர்பார்ப்பே ஒரு ஆடம்பரமெனக் கருதப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

ரம்யா, உங்கள் ஆதரவுக்கு நன்றி.

தங்கமணி, பன்மைத்தன்மையை நான் முரண்பாடென்று அழைக்கவில்லை. சமூகம் தனக்குத் தேவைப்படும்போது தேவையானவற்றை அங்கீகரிப்பதைத்தான் குறிப்பிடுகிறேன். வேற்று ஆண்களைக் கொண்டு கருத்தரிப்பது பற்றி பதிவிலேயே குறிப்பிட்டேன். 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று பொதுவாக அறியப்பட்ட சமூகத்தில், செல்வாக்குடையவர்களுக்கு 'சின்ன வீடுகள்' இருப்பதில் ஒரு தடையுமில்லை. அது பற்றி அவர்களது முதுகிற்குப் பின்னால் நகைப்புகள் கூறிச் சிரித்து விட்டு நகர்ந்து விடுமிந்த சமூகம். மகாபாரதத்தில் குந்தி தேவிக்கு கர்ணன் பிறந்தக் கதையென்ன? கோவலனையும் மாதவியையும் போல, மற்ற உடன்வாழும் தம்பதிகளையும் இச்சமூகம் அங்கீகரிக்கட்டுமே? காப்பியங்களில் வந்தால் அவை போற்றப்பட வேண்டியவை. அதையே நாம் செய்தால் அது தூற்றப்படும். அகலிகை பற்றி எங்கோ குறிப்பிடப்பட்டது. வேறோருவனை மனதால் தீண்டியதற்காகக் கல்லாகும் அகலிகை, இன்னொருவனின் பாதம் தீண்டுவதால் விமோசனம் பெறுகிறாளாம். இதில் எழும் கேள்வி - தீண்டுவது சரியா, தவறா? அல்லது சிலர் தீண்டினால் பரவாயில்லையா? (ஏதோவொரு கிராமப்புறச் சமுதாயத்தில் வயதுக்கு வந்த சிறுமிகள், அவர்களது முதல் அனுபவமாக, கோவில் பூசாரிகளின் இன்பத்திற்காகப் 'படைக்கக்' படுவதைக் பற்றி யாரோ வலைப்பதிந்திருந்தார்கள்) இத்தகைய குணங்களையே நான் முரண்பாடென்று கூறுகிறேன்.

மேலைக் கல்வியினால் நம் பார்வைகள் விரிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். கல்வி நிச்சயமாக ஒரு விடுவிக்கும் சக்தியே. இத்தகைய விவாதங்களும் அதன் தொடர்ச்சியே, என்று நம்புகிறேன்.

தெருத்தொண்டன் சொன்னது…

//ஈரோடு சரி, மகாராஷ்டிரா - அம்பேத்கரா? ஜெர்மனி - மார்க்ஸா? //ஆம் வாய்ஸ்..அதில் ஏதும் பிழை உள்ளதா?