வெள்ளி, ஏப்ரல் 01, 2005

நடுநிலை

உள்ளங்கைகள் மோதிக் கொள்ள, பலத்த ஓசையோடு கைகொட்டிக் கொண்டு, தொட்டுத் தடவி முத்தமிடாக் குறையாக அன்பு செலுத்தி, அதற்குக் காணிக்கை கேட்டு நச்சரிக்கும், பொதுவிடங்களில் சங்கோஜப் பட வைக்கும், ஆணல்லாத, பெண்ணுமல்லாத மனிதர்களை நாம் சந்தித்திருக்கலாம். அவர்களை எதிர்கொள்கையில் நமக்கேற்படும் இயற்கையான உணர்வுகள் அருவருப்பு மற்றும் வெறுப்புணர்வுகளே. ஒன்று, அவர்களை ஏவலாட்கள் கொண்டு விரட்டுவோம், அல்லது வெகுவேகமாக அவர்களிடமிருந்து விலகிச் செல்ல முற்படுவோம். இதனால் அவர்களும் வீராப்புடன் நம்மை பின்பற்றுவர், நாம் அவர்கள் எதிர்பார்க்கும் கட்டணத்தை அளிக்கும் வரை.

அலிகள் என்றும் ஹிஜ்ராக்கள் என்றும் அரவாணிகள் என்றும் பெயர் பெற்ற இந்த பாற்கடந்த நபர்கள் நம் சமூகத்தின் எல்லைகளில் பெறும் வாழ்வு மிகவும் சோகமானதே. அவர்களைப் பற்றிய ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்கையில், அவர்களின் வாழ்க்கையை அண்மையிலிருந்து பார்க்க முடிந்தது. அவர்களுக்கெதிரான சமூகத்தின் வன்முறைகள், அங்கீகாரமின்மை, தொல்லைகள், சட்டமே விதித்த அநியாயங்கள் என அவர்களை வாழத் தகுதியில்லாதவர்களாகவே நடத்தி வந்துள்ளன நம் சமூகங்கள். பேட்டி காணப்பட்ட சில அரவாணியர் கூறியவை:
  • "என்னை ஒரு ஆண் மணந்து கொண்டதை தொடர்ந்து எமக்கு ஏற்பட்ட கொலை மிரட்டல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள், அதனைக் காவலர்களிடம் சென்று முறையிட்டால் அவர்களோ எம் திருமணம் சட்டப் படி செல்லுபடியாகாதெனக் கூறும் வேதனை..... திருமணமிருக்கட்டும், எமக்கு உயிர் வாழ சட்டத்தில் இடமுள்ளதா என நாங்கள் கேட்ட எதிர் வினை......." என்று கசப்பான உண்மைகளை ஒருவர் முன்வைத்தார்.
  • "குலச் சான்றிதழ் கேட்டு அரசு அதிகாரி ஒருவரை அணுகினால், அவரோ நீ பெண்ணல்ல, பெண்ணுடை தரித்த ஆண் என்று அவதூறு செய்ய, சம்பந்தமில்லாத இந்த பேச்சு எதற்கு, எனக்கு வேண்டியதெல்லாம் என் குலச் சான்றிதழ்தானே" என இன்னொருவர் நியாயமான ஒரு கேள்வியை வினவினார்.
  • "ஒரு பெண்ணுக்கும் எனக்குமுள்ள ஒரே வேறுபாடு, அவளால் குழந்தை பெற முடியும், என்னால் முடியாது. இந்த ஒரே காரணத்திற்காக நாங்கள் சமூகத்தை விட்டே புறக்கணிக்கப் படவேண்டுமா?" என மற்றொருவர் கேள்வி தொடுத்தார்.

இவர்கள் பிழைப்புக்கு என்ன செய்கின்றனர் எனப் பார்ப்போம். இவர்கள் இந்நாளில் செய்து வருவது மூன்று வகையான தொழில்கள்: (1) பிச்சையெடுப்பது (2) விசேஷங்களுக்குச் சென்று ஆசி கூறி காணிக்கை பெறுவது (அவர்களது வருகை ஒரு நல்ல சகுனமென்ற பாரம்பரிய ஐதீகமிருந்தாலும், இவ்விசேஷங்களில் பெரும்பாலும் அவர்கள் அழையா விருந்தினர்கள் / வேண்டப் படாதவர்களென்பதால், இதற்கும் பிச்சையெடுப்புக்கும் அதிகமானதொரு வித்தியாசமில்லை) (3) வேசித்தொழில்.

இவர்களின் பாலியல் பின்னணி குறித்து ஆராய்வதல்ல என் நோக்கம். பாலியலால் சிறுபான்மையானவர்கள் என்ற ஒரே காரணம் காட்டி அவர்களுக்கு நலவாழ்வு மறுக்கப் படுவதேன் என்ற ஐயப்பாட்டை இங்கே முன்வைப்பதே என் நோக்கம். ஏன் இவர்களிலிருந்து ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ முன்னேறும் வாய்ப்பு ஏறக்குறைய இல்லாத நிலையே நிலவுகிறது? ஆண்குறியையும் பெண்குறியையும் வைத்துக் கொண்டு இத்துறைகளில் அதிகமாக என்ன சாதித்துவிட முடியும், இவர்களால் முடியாதென எண்ணும் விதமாக? ஏன் சட்டமும் இவர்களுக்குப் பாதகமாகவே இயற்றப் பட்டுள்ளது? இக்கேள்விகளை பலர் வாயால் கேட்டுக் கொண்டிருந்தாலாவது சட்டமும் சமூகமும் இவர்களுக்கு கருணைக் கண் திறக்குமென்று நம்பிக்கை கொள்வோம்.

5 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு. நானும் சிங்கையில் சந்தித்த ஒருவரைப் பற்றி எழுத இருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

Voice on Wings சொன்னது…

துளசி அவர்களே, உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

டிசே தமிழன் சொன்னது…

Voice of Wings,
நல்லதொரு பதிவு. அரவாணிகள் பற்றிய விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு நமது புரிதல்கள் இன்னும் விரிவுபடுத்தப்படவேண்டும். அரவாணிகளில் ஒரு பெண் நடனத்தில் சிறந்து விளங்குவதாய் வாசித்திருக்கின்றேன். பெயர் சரியாய் ஞாபகமில்லை. விகடனிலும் அண்மையில் குலதெயவங்கள் பகுதியிலும் அவரைப் பற்றி வாசித்திருந்ததாய் நினைவு.
அதே சமயம், தமிழ்ப்படங்களின் பாடல்களில் ஒரு நிமிடத்திற்கோ அல்லது குறைவாகவோ ஆடவிடப்பட்டு மிகவும் கொச்சைப்படுத்தும் அரவாணிகளின் காட்சிகள் பற்றிய எனது எரிச்சலையும் இங்கே பதிவு செய்துகொள்கின்றேன். நன்றி

டிசே தமிழன் சொன்னது…

Sorry I called your name in a wrong way (above). It is suppose to be Voice on Wings.

Voice on Wings சொன்னது…

DJ தமிழன்(Disk Jockey?), நன்றி :)

அரவாணிகள் குறித்த பல செய்திகளை இந்த வலைபக்கத்தில் காணலாம்:
http://androgyne.0catch.com/hijrax.htm
கூத்தாண்டவர் திருவிழா என்று தமிழகம், கடலூர் மாவட்டத்தில் அவர்களுக்கென்றே நடைபெறும் திருவிழாவைப் பற்றியும் இந்த வலைப் பக்கத்திலுள்ள சுட்டிகள் மூலமாக அறியலாம்.

பல திரைப்படங்கள் அவர்களை insensitiveஆக சித்தரித்தாலும் சில படங்கள் (Darmiyaan, Dayraa etc.) அவர்களை மையமாகக் கொண்டே எடுக்கப் பட்டன என அறிகிறேன். (info again from the above weblink) தமிழிலும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் அத்தகையவொரு படம் வந்ததாகக் கேள்வி. 'பம்பாய்' படத்தில் ஒரு அரவாணி பாத்திரம் மரியாதைக்குரிய வகையில் சித்தரிக்கப் பட்டிருப்பது நினைவிருக்கலாம்.

நீங்கள் கூறியபடி அவர்களைப் பற்றிய புரிதல் மிக மிக அவசியம்.