வியாழன், மார்ச் 31, 2005

பன்மைவாதம்

மலர்கள் பலவகை. மணங்களும் அப்படியே. ஆயிரமாயிரம் ரோஜாக்களை ஒன்றாகப் பார்ப்பதில் பெரிதாக என்ன சுவாரசியம் இருக்க முடியும்? ஒவ்வொரு நாளும் அதே தட்ப வெப்ப நிலையுடன் இருந்தால் சலிப்படைந்து விடமாட்டோம்? அல்லது வானொலியில் மறுபடி மறுபடி ஒரே பாடகரின் குரல் ஒலித்தால், எவ்வளவு நேரம்தான் அது நம் கவனத்தை ஈர்க்கும்? ஒரே வகையான இசைக் கருவிகளைக் கொண்டு கச்சேரி செய்ய முடியுமா இல்லை ஒரு பாலார் மட்டுமே உள்ள சமூகம்தான் தழைக்க இயலுமா? நாமனைவரும் நிறத்தால், இனத்தால், பாலினத்தால், மொழியால், சிந்தனையால், செயல்திறனால், பழக்க வழக்கங்களால், பண்பாட்டால், விருப்பு வெறுப்புகளால், உயரத்தால், தோற்றத்தால்............ என பல குணாதிசயங்களால் தனித்தன்மை பெற்றவர்கள். இத்தகைய நிலை விரும்பத் தக்கதே.

எனினும், பண்டைய காலத்திலிருந்து இவ்வேறுபாடுகளைக் களையும் முயற்சி நடைபெற்ற வண்ணம் உள்ளது. மதமாற்றங்கள், நவீனமயமாக்கல் என்ற பெயரில் மேற்கத்திய சிந்தனைகளின் திணிப்பு, உடை / தோற்றங்களிலும் சீர்மை என்று தனிமனிதத் தன்மையை தாக்கிய படியே உள்ளனர் சமூகங்களின் பாதுகாவலர்கள். "அக்கடான்னு" உடை போடுபவரைத் "துக்கடான்னு" எடை போடத் துடிப்பவர்கள், Valentine's Dayயைக் கொண்டாடக் கூடாதெனத் தடைவிதிக்கும் வானர சேவையினர், கடும் வெயிலிலும் பெண்ணென்பவள் கருமையான ஆடைகளால் தலையிலிருந்து கால் வரை மறைத்தபடியே இருத்தல் வேண்டுமென்று fatwaக்களிடும் மதவெறியர்கள், இரவு பதினோறு மணி ஆனால் வணிகங்கள் அனைத்திற்கும் மூடுவிழா காண விரும்பும் நலம் விரும்பிகள், மது விலக்கு, போதைப் பொருள் விலக்கு என ஒரு சமூகத்தின் அங்கத்தினர்களின் தனிமனித முடிவுகளை ஒட்டுமொத்தமாகத் தன் கைக்குள் போட்டுக் கொள்ள விழைவோர், ஓரின சேர்கையாளர்களை சமூக விரோதிகளாக பாவிப்பவர்கள், அந்தரங்க blogspotகளைத் தடை செய்யத் துடிப்போர் ;)....... என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் கடைசியாக சேர்ந்து கொண்டவர்கள்தாம் இந்த மொழிப் பாதுகாவலர்கள்.... ஆங்கிலம் கூடாது, ஆங்கிலப் பெயர் கூடாது, மம்மி / டாடி கூடாது என்று நாட்டு மக்களுக்கு மேன்மேலும் fatwaக்களை விதிப்பவர்கள். இவ்வகையான culture policeகளின் ஒட்டு மொத்தக் குறிக்கோள் தனிமனித உரிமை மறுப்பே அன்றி வேறெதுவுமில்லை. இவர்களின் உதவியின்றியே நாட்டு மக்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

இந்நிலையில் மேற்கூறிய பன்மைவாதம்(Pluralism) முக்கியத்துவம் பெறுகிறது. "உன் வழியில் எனக்கு உடன்பாடில்லை, எனினும் உன் தனிமனித உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்" என்பதே பன்மைவாத்தின் அடிப்படைக் கொள்கை. இச்சிந்தனையே பலதரப் பட்ட மக்களும் ஒருவருக்கொருவர் இசைந்து வாழ வழிவகுக்கும். மாற்றுக் கருத்து / வாழ்வுமுறைகளுக்கு அணைபோடத் துடிப்பவர்களின் கை ஓங்குமானால், அது நமக்கேற்படும் பேரிழப்பே.

சீர்மைவாதத்தால், ஒருமித்த வாழ்வுமுறைகள் நிறுவப் பெற்றதால், மறைந்த, அடையாளமின்றி அழிந்த, நொறுங்கிய, நசுங்கிய, பண்டைகாலத்திய உப கலாச்சாரங்கள் எவ்வளவோ. உதாரணம், பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் மற்றும் மொழிகள், indigenous sciences around the world, மறைந்த பல கலைகள் / கண்டுபிடிப்புகள், ஆகியன. எல்லோரும் ஒரு போக்கிலேயே சிந்திக்க வேண்டும் என்றெண்ணும் பேர்வழிகளால் மனிதம் இன்னும் என்னென்ன இழப்புகளைச் சந்திக்க வேண்டி வருமோ.

3 கருத்துகள்:

ஒரு பொடிச்சி சொன்னது…

i posted b4, didn't appear so i post again!
-
ஒவ்வொருவரும் நிறத்தால், இனத்தால், சிந்தனையால் மாறுபடுபவர்கள், தனித்தன்மை பெற்றவர்கள் என்பதெல்லாத்துடனும் உடன்படுகிறேன். உண்மையில், உலகை அழகாய் வைத்திருக்க விடயமே இந்த வித்தியாசப்படல்தான்! ஆனால் -அரசியலை விடுங்கள்- ஆங்கிலத்தில் பெயர்வைப்பதும், ஐரோப்பாவில் ஆங்கில படங்கள், பாடல்கள், ஆதிக்கம் செய்வதும், அதை 'தடுக்கவேண்டும்' என்று சொல்லாவிட்டாலும் இன்னொரு 'தனித்துவமான' ஒன்றை அழுத்துகிறது என்பது எனது கருத்து. பன்மைவாதத்திற்கு எதிரானதாகவே இதைப் பார்க்க முடியும். எல்லாமே ஆங்கிலமும் அமெரிக்காவும் ஆனால் அதில் என்ன அழகு? படைப்பாளிக்கு சுதந்திரம் வேண்டும் என்பதை ஒத்துக்கொள்ளமுடிகிற அதேசமயம், தமிழில் பெயர் வைக்க சொல்லி அழுத்துவதால் தமிழ்சினிமாவிற்கு ஒன்றம் ஆகிவிடப்போவதில்லை எனவே நம்புகிறேன்!
நல்ல பதிவு, நல்ல மொழி. நன்றி.

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது…

நல்ல பதிவு. இதுபோல சமூக-சிந்தனைப்பதிவுகள் அரிதே.
படிக்கவும் சுவையாய் இருந்தது.

பன்மைவாதத்தில் ஒற்றுமையின் சக்தி இல்லை, எதிரிகளால் எளிதாக வீழ்த்தப்படுவீர் என ஒருமைவாதிகள்(?) சொல்லக்கூடும். அதற்கு பன்மை வாதத்தில் தீர்வு இருக்குமா?

Voice on Wings சொன்னது…

பொடிச்சி,

உங்கள் கருத்தை மறுபதிவு செய்ததற்கு நன்றி. Bloggerஇல் குறை இருந்திருக்கலாம், அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோருகிறேன்.

உங்கள் மாற்று கருத்துக்கு மரியாதைகள். நீங்கள் கூறும் 'அழுத்தம்' தான் என்னை கவலையுறச் செய்கிறது. தனித்துவமான தமிழைக் காக்க இன்னொரு தனித்துவத்துக்குத் தடை என்று இருந்தால், அது சீர்மைப் படுத்தலேயன்றி பன்மைவாதமாகாது. எதிர்வாதத்துக்கும் இடமுண்டு / அனுமதியுண்டு என்றாலேயே அங்கு பன்மைவாதம் நிலவுவதாகக் கொள்ளலாம்.

தமிழ் காக்க விரும்புவோர் தமிழ் பெயர்களை ஆதரித்தும், ஆங்கில பெயர்களை விமரிசித்தும் இருந்தார்களென்றால் அது நன்றே. வைரமுத்து ஒரு முறை அதைத்தான் செய்தார், 'இயற்கை' என்னும் (செயற்கை நிரம்பிய) திரைபடத்தை பாராட்டுகையில். அது தவிர்த்து, தடை / கண்டனம் என்று அரசியல் செல்வாக்குள்ளவர்கள் செய்தால் அது வன்முறைகளில் முடியும் வாய்ப்புகள் ஏராளம். அத்தகைய சூழல் நிச்சயமாக பன்மைவாதத்துடன் ஒத்துப் போவதல்ல.

Jeeva,

உங்கள் பாரட்டுக்கு நன்றி. "வாழு, வாழவிடு" என்றிருப்பவருக்கு, "வீழ்த்து, வீழ்த்தப்படு" எனக் கூறுவோரால் அபாயமா என்றுதானே கேட்கிறீர்? :) எனக்கு தெரிந்த வரையில் முன் தரப்பைவிட பின் தரப்புக்கே அபாயம் அதிகம் எனத் தோன்றுகிறது, அதுவும் அவர்களைப் போலுள்ள மற்றவர்களால்.