ஞாயிறு, ஏப்ரல் 03, 2005

என் தோரணைகள்

பல வருடங்களாக நான் அனுபவித்து வரும் ஒரு குறைபாட்டை இங்கு முன்வைக்கிறேன். இதற்குத் தீர்வுண்டா இல்லையா எனத் தெரியவில்லை. எனினும், உலக மக்களோடு இதைப் பகிர்ந்து கொண்டாலாவது மனதில் உள்ள பாரம் குறையும் என்ற எதிர்பார்ப்போடு இந்த விஷயத்தை இங்கு விவரிக்கிறேன். மேலும், பலரும் இத்தகையவொரு குறையால் அவதிபடுகின்றனர் என்ற நற்செய்தி கிடைக்குமாயின் "யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்" என்ற ரீதியில் கொஞ்சம் ஆறுதலேனும் கிடைக்குமென்ற நப்பாசையும் ஒரு காரணம், என் சொந்த பிரச்சனைகளை இங்கு குறிப்பிடுவதற்கு.

தொழில்நுட்ப வளர்ச்சிகளால் மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும் என்னை நடுங்க வைக்கும் சில சாதனங்களுமுண்டு. என்னை பீதியடையச் செய்யும் ஒன்று இருக்குமானால் அது இந்த புகைப்படக் கருவியே. இதனாலேயே சுற்றுலாக்கள் செல்வதற்குக் கூட மிகவும் தயங்கும் நிலை. புகைப்படங்களுக்குத் தோற்றம் கொடுப்பது, செயற்கையாகப் புன்சிரிப்பது, மகிழ்ச்சியாக இருப்பது போல் பாசாங்கு செய்வது இவையெல்லாம் எனக்கு சிறிதும் சாத்தியமாகாத செயல்கள். எவ்வளவு முயற்சித்தும், புகைப்படங்களுக்குக் கொடுக்கும் தோற்றங்களெல்லாம் நான் ஏதோ படுஅவதியில் இருப்பது போலவே பதியப் படுகின்றன. (இயல்பாக சிரித்துக் கொண்டிருக்கும்போது அறிவிப்பின்றி படமெடுக்கப் பட்டதால் விளைந்த பயங்கரவாதங்களைப் பற்றி இங்கு குறிப்பிடத் தேவையில்லை.)

புகைப்படங்களைப் பார்பவர்கள் என்னை அனுதாபத்தோடும், மனிதாபிமானத்தோடும் நோக்குகையில் எனக்கு ஏற்படும் ஆற்றாமையைச் சொல்லியடங்காது. சிரிக்க முயன்றதால் ஒரு கண்றாவி, சிரிக்காதிருந்ததால் மற்றொரு கண்றாவி, அகலக்கண் காட்டியதாலொரு கண்றாவி, புருவம் சுருக்கியதால் இன்னொரு கண்றாவியென்று என் புகைப்படத் தொகுப்பைப் பார்வையிடுபவரின் நிலை பரிதாபத்துக்குரியதே. மனசாந்தியில்லாத வேளைகளில் அத்தொகுப்பை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புகைப்படத்திலும் என்னுடைய முகபாவத்தைப் பார்த்து சிரித்துக் கொள்வது, சன் டிவி 'காமெடி டைம்'ஐ விட நகைச்சுவையான ஒரு அனுபவம். தர்மசங்கடத்திலிருப்பது போல் ஒரு தோற்றம், 'ஏதோ அவசரத்தில்' இருப்பது போல ஒரு பாவனையென்று புகைப்படக் கருவியைக் கண்டதும் எனக்கு ஏற்படும் மாறுதல்கள், மேதாவிகளால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவேண்டிய ஒரு விஷயமாகும்.

இந்நிலையில் எரியும் விளக்கில் எண்ணை உற்றுவது போல் திகழும் என் ஒன்று விட்ட சகோதரர் மற்றும் சகோதரி. மனவெறுப்புடன் உட்கார்ந்திருந்தாலும் புகைப்படக் கருவி வெளியெடுக்கப்பட்டவுடன் அவர்கள் காண்பிக்கும் நம்பத்தகாத மாற்றமும் மலர்ச்சியும் குளிர்ச்சியும், ஏதொ புகைப்படம் எடுக்கப் படுவதற்கென்றே பிறந்தவர்கள் போல இருக்கும் அவர்கள் பாங்கும், நினைத்த முகபாவத்தை கொண்டுவரும் ஆற்றலும் தோற்றுவிக்கும் உணர்ச்சிகளும் (வயிற்றெரிச்சலே இதனால்தான்)...... வாழ்க்கை ஏனிப்படி சிலருக்கு மட்டும் சாதகமாக விளங்குகிறது?

இணையத்தால் வந்த சங்கடங்கள் வேறு. 'முன்' / 'பின்' கண்டிராதவர்கள் நன்றாக பழகுகிறார்களே என்று ஆறுதலைடந்திருக்கும் நேரத்தில், திடீரென்று நம் புகைப்படத்தைக் காணக் கோரி வேண்டுதல் விடுப்பவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். இத்தகைய வேண்டுகோள்களை நிறைவேற்றியதால் இழந்த இணைய நட்புகள் கணக்கிலடங்காதவை. இருப்பினும், என் படங்களை மின்கோப்புகளாக மாற்றி, கேட்பவருக்கு மின்னஞ்சல் செய்து, அவர் படும் பாட்டை நினைத்து ஒரு குரூர மகிழ்ச்சி கொள்ளும் மனப்பான்மை இன்னும் என்னை விட்டு அகலவில்லையென்பதே உண்மை. இதற்கு ஏதுவாக வந்துள்ள விலையுயர்ந்த மின் (Digicam) புகைப்படக் கருவிகளில் ஒன்றை வாங்கும் எண்ணமும் அண்மையில் தோன்றியுள்ளது. பாவம், உலகக் குடிமக்கள்.

என் குறைகளைப் இங்கு பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இக்குறைகள் உங்களும் இருப்பின், என்னை நினைத்து ஆறுதலடைவீர் என எதிர்பார்கிறேன்.

மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன்,

சிறகடித்து வானெழும்பும் குரல் / சிறகின் குரல் / பெயரிலிகளுக்குத் தோன்றிய மற்ற மொழியாக்கங்கள் ;-)

கருத்துகள் இல்லை: