தப்பி தவறி தனியா இருக்கற வேளையில இந்த பேய் படத்த பாத்து தொலச்சிட்டேங்க. ஐயையோ, ரொம்ப பயமா இருக்குங்க. நடுராத்திரி நேரமா வேற இருக்குது. இணையத்துல இணச்சிகிட்டு தொணைக்கி யாராவது தூதுவன்ல ஆப்புடுவாங்கன்னு பாத்தா, எல்லாரும் துங்கிட்டாங்க போல இருக்கே. கொஞ்சம் தொணயா இருக்கட்டுமேன்னு பாட்ட போட்டு விட்டா, நாம கேக்கற பாட்டெல்லாம் இந்த நேரத்துல நம்மளையே பயமுறுத்துதுங்க, என்ன பண்றது. சாமி கும்புடறத வேற எப்போலேருந்தோ நிறுத்தி தொலச்சாச்சு. இல்லாட்டி முருகான்னுட்டோ, இல்ல ஜீஸஸ்னுட்டோ இல்ல அல்லானுட்டோ சொல்லிக்கிட்டு இருக்கலாம். இந்த பேய்ங்களுக்குல்லாம் சாமி பேர சொன்னா புடிக்காதாமே.
இந்த மாதிரி நேரங்களில் எனக்குத் தோன்றும் ஒரு கேள்வி - நாமேன் அவதியுறுவதற்கு பணம் கொடுத்து சகல வசதிகளையும் செய்து கொண்டு அவதியுறுகிறோம்? மேலே குறிப்பிட்ட திகில் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு வகை. அதிக விலை கொடுத்து குடி / புகை / போதை மருந்து என்று உடல்நலத்தை பாதித்துக் கொள்வது ஒரு வகை. கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று வாழ்கையை சிக்கலாக்கிக் கொள்வது இன்னொரு வகை. சுற்றுலா பயணம் என்று ஊர் ஊராக சென்று அல்லல் படுவது மற்றொரு வகை. இதையெல்லாம் ஆராய்கையில் ஒரு விளக்கம் மட்டுமே தென்படுகிறது - sadomasochism எனப்படும் தன்னையே துன்புறுத்திக் கொண்டு அதில் இன்பம் காணும் மனப்பான்மை ஒரு சில மனநோயாளிகளுக்கு மட்டுமே உள்ள ஒரு குறைபாடல்ல, அது நம்மிடையே மிகவும் பரவலாகத் திகழும் ஒரு குணாதிசயம் என்பதே. நள்ளிரவு சித்தாந்தத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து நித்திரைக்குச் செல்கிறேன், நன்றி. நிம்மதியா தூங்க முடிஞ்சா சரிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக