செவ்வாய், ஏப்ரல் 26, 2005

எழுப்பிவிட்ட சிந்தனைகள்

என் தூக்கம் தொலைந்தது போ!! ஒரே இடிச் சத்தம், மழைச் சத்தம், மின்னல்ச் சத்தம்(?)......... விடாது பெய்கின்ற மழை, மின்னி மின்னி மூடியிருந்த கண்களையும் ஒளிவெள்ளத்தால் நிரப்பும் மின்னல்கள் - நம் கண்ணிமைகள் வெறும் transparent layerதான் போலும் என எண்ண வைக்கும் வகையில். அதன் பிறகு சொல்லிவைத்தாற்போல் சில வினாடிகளில் கேட்கும் இடியோசை (அறிவியலைக் குறித்த எனது புரிதல்கள் அபாரம்), லேசாக காற்றடித்தாலும் நின்று விடும் மின்சார சேவை / மின்விசிறி - அதனால் ஏற்பட்ட புழுக்கம் வேறு....... இப்படி பலவேறான காரணங்களால் இந்திய நேரம் காலை சுமார் 4.30க்கு எனது தூக்கம் தடைபட்டது.

ஏன் இப்படி இடிக்கிறது? மேகங்கள் அதிகமிருந்தால் இடிகளூம் அதிகம் போல. சென்னையில் பல்லவ சவாரிகளில் இடிபட்டவர்களுக்கு இது எளிதில் புரியும். அதேபோல் வாய்(சு)கள் அதிகமிருந்தால் வாதங்களும் அதிகம்தான். எனினும் என்னிடத்தில் அந்த சாத்தியமில்லை. இருப்பது நான் மட்டுமே. எனது 'பிளவாளூமை' / பலவாளுமைகளைக் கணக்கில் கொண்டாலும், அவை அதிகமாக வாதிடுவதில்லை. அதிக கருத்து வேற்றுமையில்லை என்ற காரணத்தினாலா, அல்லது 'எதிரும் புதிருமாக இருக்கும் இந்த நிலையில் பேசி ஒரு பயனுமில்லை' என்ற முடிவுக்கு அவை விரைவில் வந்துவிடுவதாலா எனத் தெரியவில்லை. எப்படியோ, இந்திய சனத்தொகையையொத்த அளவில் இன்று மேகங்கள் காணப்பட்டதால், ஒரே இடிபாடுதான் வானுலகில்.

இப்பொ என்ன மழை? ஏப்ரல் - மேயிலே காய்ந்து போயிருக்க வேண்டிய நாட்களில், 45 டிகிரி வெயில் கொளுத்த வேண்டிய இந்த காலத்தில், ஏனிப்படிக் கொட்டுகிறது? இது ஏதாவது Climate change அம்சமா? இப்போதுதான் கோடை சூட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிக் கொண்டிருந்தன அகமும் புறமும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வானிலை மாறிக்கொண்டே இருந்தால் அதற்கு அட்ஜச்ட் செய்து கொண்டிருப்பதே முழுநேரப் பணியாகிவிடும். பறவைகளை நினைத்தால்தான் கவலையாக உள்ளது. முன்னறிவிப்பின்றி வந்த இந்த மழையால் அவற்றின் இறகுகள் நனைந்திருக்கும். சுதந்திரத்துக்கு அவை கொடுக்கும் விலை என எண்ணி ஆறுதலடைய வேண்டியதுதான்.

மின்விசிறி மறுபடி சுற்ற ஆரம்பித்தது, முன்னை விட அதிவேகமாக. மழை பெய்து அணைகள் நிரம்பி மின்சுழலிகள் வேகமாக சுழலத் தொடங்கி விட்டனவா? அருகிலிருக்கும் தர்க்காவிலிருந்து காலைத் தொழுகைகள் கேட்க ஆரம்பித்தன, எந்த ஒரு மாற்றமுமில்லாமல். ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கேட்கும் அதே சொற்கள், புரியாத மொழியில். நிச்சயமாக விடிந்துவிட்டது, இனி தூக்கமில்லை.......


(......என்று எழுதிவிட்டு, விட்ட இடத்திலிருந்து தூங்க ஆரம்பித்தேன், இன்னொரு இரண்டு மணி நேரத்திற்கு)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

So Sad, No :)