செவ்வாய், மார்ச் 15, 2005

சகாவிலிருந்து சகா வரை

சக பரிமாற்ற (peer to peer) இணையங்கள் குறித்து ஒரு கண்ணோட்டம்

சமீபத்திய சில வருடங்களாக மிகவும் பேசப் பட்டு வரும் இந்த சக பரிமாற்ற இணையங்களைப் பற்றிய ஆர்வம் பெருகியதால் ஏற்பட்டது இந்த பதிவு முயற்சி. முதலில் சில அறிமுகங்கள். பொதுவாக இணையங்களின் கட்டமைப்பில் வழங்கி (server) எனப்படும் கணினி ஒரு பிரதான அங்கமாகும். எல்லா வகையான இயல் - இசை - நாடகப் படைப்புக்களும் (அதாவது multimedia content) இந்த வழங்கியில் குடியிருக்கும். இந்த படைப்புக்களை நுகர விரும்புவோர் வாங்கி (client) எனப்படும் தத்தம் கணினிகளை பயன் படுத்தி, இணைய இணைப்புக்கள் வாயிலாக, தமக்கு வேண்டிய பலனை பெறுகின்றனர். இத்தகைய கட்டமைப்பு client - server architecture என ஆங்கிலத்தில் கூறப் படுகிறது.

சமுதாய நோக்கில் ஆராய்ந்தால், இங்கு ஒரு ஏற்ற தாழ்வு மிக்க சூழ்நிலை நிலவுவதை காணலாம். அதிவலிமை பெற்ற அங்கமான வழங்கியின் தயவில் மற்றெல்லா அங்கங்களும் இருப்பதைப் போன்றொரு எண்ணம் எழுவது இயற்கையே. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தும் வகையிலேயே பல இணைய சேவக நிறுவனங்களும் நடந்து கொள்கின்றன. எத்தகைய படைப்புகள் தங்கள் வழங்கிகளில் படைக்கப் பெறலாம், எவைகளுக்குத் தடை, என்றெல்லாம் விதிமுறைகள் விதித்து, மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கின்றன. அவை அப்படி இல்லாவிடினும், சட்டம் மற்றும் பணம் படைத்த மற்றும் பதவியிலிருப்பவர்களுக்கு இசைந்து, நுகர்வோராகிய நம்மை கடினங்களுக்கு உள்ளாக்குகின்றன.

இவ்வாறு சமூக நோக்கில் பாராமல், தொழில்நுட்ப ரீதியில் நோக்கினாலும் பல சிக்கல்கள். எல்லா வாங்கிகளும் வழங்கியைச் சார்ந்து இருப்பதால், வழங்கி எந்நேரமும் செயல்படும் நிலை உறுதி செய்யப் படவேண்டும். இல்லாவிட்டால், பல நுகர்வோரின் வேலை தடைபடும். இன்னொன்று, வழங்கியின் இணைப்புப் பரப்பளவு (Bandwidth) மிகுதியாக இருத்தல் அவசியம். ஏனென்றால், ஒரே சமயத்தில் வழங்கியின் சேவையை கோருபவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் கூட இருக்கலாம். மற்றொன்று, பல கோடிக் கணக்கான தகவல் துகள்களை சேமித்து வைக்க வேண்டுமென்பதால் அவற்றின் தகடுகளின் கொள்ளலளவும் மிகுதியாக இருக்க வேண்டும். அல்லது, ஒரு வழங்கி ஆயிரக் கணக்கான தளங்களை சுமக்கும் பட்சத்தில், தளங்களின் கொள்ளலளவைச் சுருக்கி, ஒரு படைப்பாளியின் சிந்தனைகளைச் சிறை படுத்தும் நிர்பந்தமும் நிகழலாம்.

இந்நிலையில் உருவெடுத்ததே நான் முதலில் கூறிய சக பரிமாற்ற இணையங்கள். இவ்வகை இணையங்களில் நுகர்வோருடைய கணினியே சில நேரங்களில் வாங்கியாகவும் பிற நேரங்களில் வழங்கியாகவும் செயலாற்றும் திறனை பெறுகிறது. அதிவேக இணைப்பு இருந்தால் இரு செயல்களையும் கூட ஒரே நேரத்தில் செய்யத் தகுந்ததே. எந்த ஒரு கணினியும் எந்நேரம் வேண்டுமானாலும் ஒரு வழங்கியாகவும் பொறுப்பேற்க இயலும் என்பதால், ஒரு கோரப் பட்ட படைப்பை ஒரு நுகர்வர் பலமுனைகளிலிருந்து (அதிவேகமாக) பெறும் வாய்ப்பு உள்ளது. தளத்தின் படைப்பாளியோ, தனது படைப்புகளை தன் கணினியிலேயே மேடையேற்றி விடலாம், அளவுத் தடைகள் எதுவுமின்றி. அவை வழியில் பல கணினிகளில் ஏறி இறங்கி, துள்ளி குதித்து ஒரு தூரத்து நுகர்வனைச் சென்றடையலாம். பலரது இணைப்புகளும் பங்கு பெறுவதால், அதிவேக இணைப்பெதுவும் தேவையில்லை, ஒரு வழங்கு கணினிக்கு. 'ஊரே சேர்ந்து குளம் வெட்டுவது போல' என உவமானமாகக் கூறலாம் இச் சூழ்நிலையை.

இன்று சக பரிமாற்ற இணையங்களைக் கொண்டு தகவல் கோப்புக்கள், இசை மற்றும் திரைப் படக் கோப்புகள் என தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குழுமங்கள் பலப் பல. இவற்றில் சில செயல்கள் சட்ட விரோதமாக பாவிக்கப் பட்டாலும், இத் தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ள ஒரு கருவியாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. நூற்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படக் கோப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ, அல்லது அலுவல் சம்பந்தமான தகவல்களை பலரது கூட்டு முயற்சியால் திரட்டவோ, இப்படி சட்டத்துக்குட்பட்ட பல செயல்களை செய்யவும் மிக உதவியாயிருக்கும் இவ்விணையங்கள். உங்கள் இசை / திரைக் களஞ்சியங்களை நீங்களும் கேட்டுக் கொண்டே நண்பர்களுக்கும் ஒலி / ஒளி பரப்பலாம். வெகுதூரத்திலிருக்கும் சினேகிதியுடன் சேர்ந்து காதல் படம் பார்க்கலாமென அடுக்கிக் கொண்டே போகலாம்.

சோதித்துப் பார்த்திட சில செயலிகள் / சக பரிமாற்ற இணையங்கள்: Grouper, QNext, eMule, BitTorrent, Mercora ஆகியன. தொலைதூர நோக்கில் எனக்குப் படும் சில சாத்தியக்கூறுகள்: விடுமுறை பயணத்தின் போது mobile camera கருவி வாயிலாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் live அனுபவங்கள், ஒளியோடையாய் நண்பர்கள் / ஆர்வலர்களின் கணினித் திரையில் பாயும் சாத்தியம், வெகு தொலைவில் உள்ள சங்கீத வித்தகர்கள் இணையம் வாயிலாக ஒன்று சேர்ந்து நடத்தும் ஜுகல் பந்தி நிகழ்ச்சி, என்று கற்பனைச் சிறகுகளை வேகமாக அடித்துக் கொண்டே போகலாம். இக்கனவுகள் நனவாகுமானால் நன்றாகத்தானிருக்கும்.

பி. கு.: 'வழங்கி' / 'வாங்கி' என்ற கணினிச் சொற்கள் திரு.காசி அவர்களின் பதிவிலிருந்து கண்டறியப் பட்டவை. அவருக்கு எமது நன்றி :)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு. இன்னும் தொழிற்நுட்ப விளக்கம் அளித்திருக்கலாம். இதற்காக தற்காப்பு அரணை (firwall) தளர்த்துவதால் வைரஸ் பாதிப்பு ஏற்படுமா ?

Voice on Wings சொன்னது…

அன்பரே, பாதிக்கப் பட்ட கோப்புகளின் வாயிலாக வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது. இறக்கும் கோப்புகளை கண்காணிக்கும் anti-virus உங்கள் கணினியில் நிறுவப் பட்டிருந்தால் இந்த அபாயம் சற்று குறைவே.

மற்றபடி, Firewallஇன் ஒருசில TCP portகளை மட்டுமே தளர்த்துவதால், நேரடியாக தாக்கப் படும் அபாயம் வெகு குறைவு என்றே கருதுகிறேன். எனினும் ஜாம்பவான்கள் நான் விட்ட இடத்திலிருந்து தோடருவார்க்ள் என நம்புகிறேன் :)

மாலன் சொன்னது…

மிகப் பயனுள்ள பதிவு.தகவல்களுக்கு நன்றி. நீங்கள் இதுபோல peer2peer பயன்படுத்திய அனுபவம் இருந்தால் அதைக் குறித்தும் எழுதுங்கள்.
மாலன்

Voice on Wings சொன்னது…

திரு.மாலன் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி.

P2Pயை பயன்படுத்திய அனுபவம் உண்டென்றாலும் எனது Hathway இணப்பில் இருக்கும் சில கட்டுப்பாடுகளால் என்னால் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை. முன்னொரு அன்பர் வினவியது போல், Firewallஐ கொஞ்சம் தளர்த்தி, Transfer Control Protocol (TCP) எனப்படும் மென்னிணைப்புகளை(ports) திறந்தாலொழிய நம் கணினியை வழங்கியாக பயன்படுத்த இயலாது. இதனால், you end up benefitting without contributing your resources to other users, which is not appreciated much in P2P networks.

இக்குறைபாடு எனக்கும் இருப்பதால், வேறு இணைய சேவைக்குத் தாவலாமாவென யோசித்துக் கொண்டிருக்கிறேன் :)