சனி, மார்ச் 05, 2005

வித்தியாசமான வீட்டுச்சாப்பாடு

சரியான நேரத்தில் பசியெடுக்க ஆரம்பித்தது. சக பணியாளர் ஒருவரும் நானுமாக சேர்ந்து யோசித்தொம், மதிய உணவு குறித்து. ஒவ்வொறு நாளும் அலுவலகத்துக்கு வெளியே சென்று உண்போம், வெவ்வேறு உணவகங்களில். ஒரு நாள் தென்னிந்திய வகை, ஒரு நாள் வட இந்திய வகை, சில சமயம் மேற்க்கத்திய பண்டங்கள், அல்லது வெறும் சிற்றுண்டிகள் என விதவிதமான மாறுபாடுகளை செயல்படுத்திக்கொண்டே இருப்போம். அன்று ஒரு சீன உணவகம் செல்ல முடிவெடுத்தொம்.

எங்களூரில் பல பிரபல சீன உணவகங்கள் இருப்பினும் நாங்கள் தேர்ந்தெடுத்த உணவகம் சற்று low profile என்று சொல்லலாம். பிரதான சாலையில் இல்லாமல் சிறிது உட்பகுதியில் இருப்பது ஒரு காரணமாயிருக்கலாம். எவ்வாறாயினும், இந்த low-profile எங்களுக்கு பிடித்த ஒன்றே - குறைந்த ஜன நடமாட்டம், பணிவான, திருப்திகரமான சேவை.... என பல ஆதாயங்கள். குறை கூறாமல் பட்டியல் ஏட்டை புரட்டினோம்.

பலவகையான சீன உணவுகள். இவை மற்றுமல்லாமல், மலேய (Malay) மற்றும் தாய்(Thai) உணவுகளும் கூட. Noodles சாப்பிட மனமில்லாததால் அரிசி உணவே, என்று முடிவெடுத்தொம். சீன வகைகள் எல்லாமே சலிப்பூட்டியதால் மலேய பகுதியை கூர்ந்து பார்வையிட்டேன். சில மிகவும் தெரிந்த பெயர்கள் தென்பட்டன - nasi goreng (a kind of fried rice with vegetables), gado gado (a salad of vegetables with peanut sauce)............

பாசத்தோடு அந்த பெயர்களை மறுபடியும் படித்தேன். பின்பு நண்பரை நோக்கினேன். சிறிது குழப்ப நிலையில் இருந்தார், என்ன ஆணையிடுவதென்று. உணவுகளின் விலை, அளவு இரன்டும் அதிகம் என்பதால் பங்கிட்டுக்கொள்வது என ஏற்கனவே முடிவாகியிறுந்தது. மென்மையாக ஆரம்பித்தேன், எனது பரிந்துரையை. புதிதாக மலேய வகை ஒன்றை முயன்று பார்ப்போமே, என யோசனை கூறினேன். (உனக்கு புதுசு, எனக்கு பழசு...... என்று திரைப்பாடல்கள் நினைவுக்கு வந்த வண்ணம் இருந்தன) நல்லவேளையாக நண்பர் சம்மதித்தார். உற்சாகமடைந்து, இந்த nasi goreng வேண்டுமென்று ஆணை கொடுப்போமா என்றேன். குழப்பத்திலிருந்த நண்பர் அதற்கும் அமோதித்தார். உடன் உண்ண காய்கறி வகையை நண்பர் தேர்தெடுத்தார். பின் ஆவலுடன் காத்திருந்தோம், உணவின் வருகைக்கு.

உணவு பரிமாறப் பட்டது. ஒரு கவளம் எடுத்து மென்றேன். மனம் பல வருடங்கள் பின்னோக்கி விரைந்தது. அந்த காதல் நிறைந்த நாட்கள்.......... சுவைசுவையான, புதிதுபுதிதான உணவுவகைகள்...... அன்பு தோய்ந்த கைகளால் சமைக்கப்பெற்று......... சுடச்சுட......... வித்தியாசமான ஒரு இல்லற வாழ்வின் விளைவாக......... இன்று இந்த சீன உணவகத்தில், அதே சுவையை அனுபவித்தேன் - ஒரு வீட்டுச்சாப்பாட்டின் அருமையை அடைந்தேன், இந்த விதேச உணவகத்தில்.

நண்பரை நோக்கினேன். அவரும் சுவைத்து உண்டுகொண்டிருந்தார், என் நிலையை சிறிதும் அறியாதவராய். நல்லதாயிற்று என உணவை முடித்துக்கொண்டேன். காலச்சக்கரம் மறுபடியும் சுழலத்தொடங்கியது.

2 கருத்துகள்:

Muthu சொன்னது…

Voice on Wings,
நீங்கள் சொல்வது போல, சில சுவைகள், நிறங்கள், மணங்கள், ஒலிகள் நம்மைக் கடந்த காலத்துக்கு இட்டுச் செல்வது பெரும்பாலும் ஒரு இனிய அனுபவம்.

Voice on Wings சொன்னது…

சிறப்பாக சொன்னீர்கள் முத்து. சில சமயம் இத்தகைய பயணங்கள் கவலை தருவதாக இருக்கும். இருப்பினும், இக்கவலையும் நன்றே.