வெள்ளி, ஏப்ரல் 29, 2005

Windows 98 / Me பயனர்களுக்கு (Firefox matter)

உங்கள் இயங்கு தளத்தில் Firefox பிரச்சனைக்குத் தீர்வில்லை என்று பொதுவாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மையாகாது. உங்கள் கணினியிலும் Firefox உலாவியில் தமிழை அழகாகத் தெரியப் படுத்தலாம். செய்முறை பின்வருமாறு:

1. இந்த கோப்பை இறக்கி, கீழ்க்கண்ட folderஇல் சேமியுங்கள்:

C:\WINDOWS\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxxxx.default\chrome

(Note: the file userContent.css has been revised to enable all Windows versions to support Firefox for tamil browsing)

2. விரிவான விளக்கத்துக்கு என் முந்திய பதிவை ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.

3. உங்கள்் கணினியில் "TSCu_Paranar", "ThendralUni", "TSCu_InaiMathi", "TheneeUni" ஆகியவற்றில் ஏதாவது ஒரு எழுத்துரு நிறுவப் பட்டிருக்க வேண்டும், அவ்வளவே. thamizha.comஇலிருந்து இவற்றை இறக்கிக் கொள்ளலாம்.

4. Firefox menuவில் Tools > Options > General > Fonts and Colorsஇல் Always use my fonts என்ற checkbox tick செய்யப் பட்டிருக்கக் கூடாது.

இணையத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் :)

செவ்வாய், ஏப்ரல் 26, 2005

எழுப்பிவிட்ட சிந்தனைகள்

என் தூக்கம் தொலைந்தது போ!! ஒரே இடிச் சத்தம், மழைச் சத்தம், மின்னல்ச் சத்தம்(?)......... விடாது பெய்கின்ற மழை, மின்னி மின்னி மூடியிருந்த கண்களையும் ஒளிவெள்ளத்தால் நிரப்பும் மின்னல்கள் - நம் கண்ணிமைகள் வெறும் transparent layerதான் போலும் என எண்ண வைக்கும் வகையில். அதன் பிறகு சொல்லிவைத்தாற்போல் சில வினாடிகளில் கேட்கும் இடியோசை (அறிவியலைக் குறித்த எனது புரிதல்கள் அபாரம்), லேசாக காற்றடித்தாலும் நின்று விடும் மின்சார சேவை / மின்விசிறி - அதனால் ஏற்பட்ட புழுக்கம் வேறு....... இப்படி பலவேறான காரணங்களால் இந்திய நேரம் காலை சுமார் 4.30க்கு எனது தூக்கம் தடைபட்டது.

ஏன் இப்படி இடிக்கிறது? மேகங்கள் அதிகமிருந்தால் இடிகளூம் அதிகம் போல. சென்னையில் பல்லவ சவாரிகளில் இடிபட்டவர்களுக்கு இது எளிதில் புரியும். அதேபோல் வாய்(சு)கள் அதிகமிருந்தால் வாதங்களும் அதிகம்தான். எனினும் என்னிடத்தில் அந்த சாத்தியமில்லை. இருப்பது நான் மட்டுமே. எனது 'பிளவாளூமை' / பலவாளுமைகளைக் கணக்கில் கொண்டாலும், அவை அதிகமாக வாதிடுவதில்லை. அதிக கருத்து வேற்றுமையில்லை என்ற காரணத்தினாலா, அல்லது 'எதிரும் புதிருமாக இருக்கும் இந்த நிலையில் பேசி ஒரு பயனுமில்லை' என்ற முடிவுக்கு அவை விரைவில் வந்துவிடுவதாலா எனத் தெரியவில்லை. எப்படியோ, இந்திய சனத்தொகையையொத்த அளவில் இன்று மேகங்கள் காணப்பட்டதால், ஒரே இடிபாடுதான் வானுலகில்.

இப்பொ என்ன மழை? ஏப்ரல் - மேயிலே காய்ந்து போயிருக்க வேண்டிய நாட்களில், 45 டிகிரி வெயில் கொளுத்த வேண்டிய இந்த காலத்தில், ஏனிப்படிக் கொட்டுகிறது? இது ஏதாவது Climate change அம்சமா? இப்போதுதான் கோடை சூட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிக் கொண்டிருந்தன அகமும் புறமும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வானிலை மாறிக்கொண்டே இருந்தால் அதற்கு அட்ஜச்ட் செய்து கொண்டிருப்பதே முழுநேரப் பணியாகிவிடும். பறவைகளை நினைத்தால்தான் கவலையாக உள்ளது. முன்னறிவிப்பின்றி வந்த இந்த மழையால் அவற்றின் இறகுகள் நனைந்திருக்கும். சுதந்திரத்துக்கு அவை கொடுக்கும் விலை என எண்ணி ஆறுதலடைய வேண்டியதுதான்.

மின்விசிறி மறுபடி சுற்ற ஆரம்பித்தது, முன்னை விட அதிவேகமாக. மழை பெய்து அணைகள் நிரம்பி மின்சுழலிகள் வேகமாக சுழலத் தொடங்கி விட்டனவா? அருகிலிருக்கும் தர்க்காவிலிருந்து காலைத் தொழுகைகள் கேட்க ஆரம்பித்தன, எந்த ஒரு மாற்றமுமில்லாமல். ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கேட்கும் அதே சொற்கள், புரியாத மொழியில். நிச்சயமாக விடிந்துவிட்டது, இனி தூக்கமில்லை.......


(......என்று எழுதிவிட்டு, விட்ட இடத்திலிருந்து தூங்க ஆரம்பித்தேன், இன்னொரு இரண்டு மணி நேரத்திற்கு)

சனி, ஏப்ரல் 23, 2005

Firefox பிரச்சனைக்குத் தீர்வு (only for Windows XP/2000)

மன்றத்தில் பதித்த இந்த செய்தியை மறுபடி இங்கு தமிழில் பதிக்கிறேன். தமிழெழுத்துக்கள் Firefox உலாவியில் சிதைவுறுவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுவே:

இந்த கோப்பை இறக்கி, கீழ்க்கண்ட folderஇல் சேமியுங்கள்:

C:\Documents and Settings\[User Name]\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxx.default\chrome

இதில் கவனிக்க வேண்டியவை:

1. [User name] என்பது உங்களது Windows 2000/XP user name ஆகும்.

2. xxxxx.default என்பது '.default' என முடியும் ஒரு folderஇன் பெயர். Windows Explorerஇல் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

3. 'Application Data' எனப்படும் folderஇன் பாதை (path) வெவ்வேறு கணினிகளில் வேறுபடலாம், மறைக்கப்பட்டும் இருக்கலாம் (i.e. hidden). Start > Run உரையாடல் பெட்டியில் %AppData% என கட்டளையிட்டால் அது 'Application Data' folderஐத் திறக்கும். அங்கிருந்து மேற்குறிப்பிட்ட folderருக்குத் தாவிக்கொள்ளலாம்.

4. கோப்பை சரியான இடத்தில் சேமிப்பது மிக மிக முக்கியம்.

5. Firefox menuவில் Tools > Options > General > Fonts and Colorsஇல் Always use my fonts என்ற checkbox tick செய்யப் பட்டிருக்கக் கூடாது.

இந்த மாற்றங்களைச் செய்வதற்கு முன் Firefoxஆல் காணப்பட்ட ஒரு வலைப்பதிவின் தோற்றமிது. மாற்றங்களுக்குப் பின் அதே வலைப்பதிவு Firefoxஇல் இப்படிக் காட்சி அளிக்கும். முன்னேற்றம்தானே?

இது தொடர்பாக நான் கூறவிரும்பும் இன்னொன்று. அன்பார்ந்த (Windows 2000/XPயைப் பயனிக்கும்) Internet Explorer பயனர்களே,


Get Firefox!

புதன், ஏப்ரல் 20, 2005

Blogger பயனர்களின் கனிவான கவனத்திற்கு

உங்கள் Blogger வலைப்பதிவுகள் Firefox உலாவியில் அக்ஷர சுத்தமாகத் தெரிய வேண்டுமா? "விடுதலை விரும்பி" என்று நீங்கள் ஆர்வத்தோடு இட்ட தலைப்பை Firefox "வ ி ட ு த ல ை வ ி ர ு ம ் ப ி" என இஸ்த்துகுனு போகாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால் இங்கு கூறப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

முதலில் உங்கள் Blogger Templateஐ பார்வையிடுங்கள், குறிப்பாக 'blog-title' அல்லது 'post-title' ஆகிய பகுதிகளை. "letter-spacing:" எனத் தொடங்கும் வரி(கள்) இருப்பின் அவற்றை செயலிழக்கச் செய்ய வேண்டும். எனது templateஇல்

letter-spacing:.2em;

என இருந்ததை கவனித்தேன். தேவையில்லாத இந்த கட்டளையைச் செயலிழக்க

/* letter-spacing:.2em; */

என முன்னாலும் பின்னாலும் அடைப்புகளை ஏற்படுத்தி சிறை பிடித்தேன். /* என ஆரம்பித்து */ என முடியும் எந்த கட்டளையையும் உலாவி 'கண்டுகாம' விட்டு விடும், ஏதோ பினாத்தல் என்று. உங்கள் templateஇல் இந்த கட்டளை இருந்தால் நீங்களும் மேற்கூறியவாறு அதனை சிறை பிடிக்க வேண்டும். பிறகு மாறுதல்களை சேமித்து republish செய்தால் உங்கள் வலைப்பதிவு Firefoxஇல் எசகுபிசகாக இல்லாமல் நல்லபடியாகத் தெரியும்.

அதுசரி, இந்த text-align:justify அப்படின்னு ஒரு நூறு பேர் ஓட்டு போட்டாங்களே அது இதுக்குத்தானா? அப்படியென்றால் எனக்குத் தோன்றும் ஒரு தீர்வு, இத்தகைய கட்டளைகளை செயலிழக்கச் செய்வதே. Since a tamil character is often made of two to three unicode characters, functions like justify, letter-spacing etc. would split the tamil characters and cause havoc. Such functions are best left disabled in the case of tamil text. How about a plug-in that parses the fetched html page and disables these commands / tags before the browser renders the page? I'm not a programmer, and I leave it to the programmers to ponder over whether it's a feasible idea. Or, if the blog authors / content providers would handle it as I suggested above, the browsers need not have to.

சனி, ஏப்ரல் 16, 2005

காட்டில் மழை

ஒண்ணுமில்ல, மாலையில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனால் ஏற்பட்ட சந்தோஷத்தில் உருவாக்கியதுதான் இது.

சனி, ஏப்ரல் 09, 2005

Podcast - ஒரு சோதனையோட்டம்

எனது முதல் சோதனையாக ஒரு ஒலிப்பதிவு இதோ (right click & save). சராசரியான mp3 கோப்புதான். பயமின்றி இறக்கிக் கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அறுத்திருப்பேன். ஜாலியாகக் கேளுங்கள். ஆரம்ப முயற்சி என்பதால் மிகவும் செம்மையாக உருவாக்க முடியவில்லை. ஆனாலும் இது முதற்படி என்பதால் 'பெருமையுடனே' வழங்குகிறேன் :) ("சட்டைல என்ன பொம்ம? அதுல என்ன பெரும? Get out!" என்று 'தில்லு முல்லு' படத்தில் நேர்முகத் தேர்வு நடத்தும் தேங்காய் சீனிவாசனை நினைவு படுத்திக் கொள்கிறேன் :) அவரிடம் podcasting பற்றியெல்லாம் கூறினால் பெரும்பாலும் அதே விடைதான் கிடைக்கும் போலும்.)

இதைவிட மிகச் சிறப்பாக இருக்கும் ஒலிவலைப்பதிவுகளை இங்கும், இங்கும் உள்ள அட்டவணைகளில் காணலாம். Doppler என்ற ஒரு podcatcher செயலி கொண்டு உங்களுக்கு பிடித்தமான ஒலிவலைப்பதிவுகளை subscribe செய்து கொள்ளலாம். அவ்வாறு செய்தபின், இந்த செயலி, நீங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் புதிய ஒலிப்பதிவுகள் உள்ளனவா என்று அவற்றின் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டு, இருந்தால் தானே இறக்கமும் செய்து அந்தப் பதிவுகளை உங்கள் செவியின்பத்திற்காகத் தயார் நிலையில் வைத்திருக்கும். இதே போன்று iPodder என்றும் ஒரு செயலி உள்ளது. ஏனோ, என்னால் அதனை செயல் படுத்த முடியவில்லை.

எனது அடுத்த முயற்சி இதை விட சீரானதாக இருக்குமென்று நம்புகிறேன் :)

புதன், ஏப்ரல் 06, 2005

பழையன கழிதலும், புதியன புகுதலும்

Bloggerல வலைப்பதிவ பதிச்சிட்டு அதப் பாத்து பெருமிதப் பட்டுக்கிட்டிருக்கீங்களா? அப்பொன்னா நீங்களும் என்னை மாதிரி ஒரு பழமைவாதிதான். தப்பா எடுத்துகிடாதீங்க, இதவிட இன்னும் என்னன்னவோ சந்தைக்கி வந்துடுச்சின்னுதான் சொல்ல வரேன்.

இப்பொழுது வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம் podcasting ஆகும். சுலபமாக சொல்லப்போனால், ஒலிவடிவ இணையம். அதாவது, நீங்கள் எழுத்தாக கணினித்திரையில் படிப்பதைவிட பேச்சாக, ஒலிவடிவமாக கேட்டு அறிந்து கொள்ளக்கூடிய படைப்புகள் மற்றும் செய்திகள் (கொன்று போட்டாலும் 'உள்ளடக்கம்' என்ற போலியான சொல்லை உபயோகப் படுத்துவதாக இல்லை). இது எங்கு பயன்படும்? எங்கு வேண்டுமானாலும் என்பதே விடை! iPod போன்ற ஒலிக்கருவிகள் நாம் அறிந்ததே. கையில்(அல்லது பையில்) அடக்கமான, தனிச்சிறப்பு பெற்ற ஒரு கணினியைக் கொண்டு உருவான இக்கருவி, mp3 போன்ற ஒலிக்கோப்புகளை நம் செவிகளில் ஒலிக்கச் செய்யும் தன்மையுடையவை. ஆயிரமாயிரம் பாடல்களை தமக்குள் தக்க வைக்கும் சிறப்புடையவை. அளவில் சிறிதாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல ஏதுவாக இருப்பவை. இவ்வாறான iPod புராணத்தை முன்னமே அறிந்தவர்கள், "விஷயத்துக்கு வா மச்சி" என பொறுமையிழக்கலாம். ஆதலால், நேரங்கடத்தாது விஷயத்துக்கே வந்துவிடுகிறேன்.

இந்தப் பதிவு இப்படி எழுத்தாக உங்கள் முன் தோன்றாமல் ஒரு பேச்சாக (எனது இனிய குரலில்) உங்கள் காதுகளில் ஒலித்தால் எப்படியிருக்கும்? podcasting என்றால் அதே, அதே! என் பதிவை கண்கள் வழியாக அல்லாது செவிவழியாக உட்கொண்டு புரிந்து கொள்ளுதல். இது ஒன்றும் புதிய அனுபவமல்ல. வானொலிகளில் உரையாடல்களையோ, உரையாற்றல்களையோ கேட்டு நாம் புரிந்து கொண்டதில்லையா? அதே போல்தான் இதுவும். சரி, podcast. அதுக்கென்ன இப்பொ? என்று இந்நேரம் உங்களுக்குத் தோன்ற ஆரம்பித்திருக்கும்.

இப்போது Bloggerஇல் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு தெரிந்த ஒரு சமாச்சாரம் - RSS. 'செய்தியோடை' என்று தப்பாகத் தமிழாக்கிய 'செய்தித் தொகுப்பு'. podcastகளையும் இவ்வாறு தொகுக்க முடியும், தொகுக்கிறார்கள். நீங்கள் சந்தாதாரராகிய எல்லா podcast தொகுப்புகளும் உங்கள் கணினியில் வந்து விழும், நீங்கள் கேட்குமுன்னரே. இதற்கு podcatcher எனப்படும் (RSS Readerஐப் போலச் செயல்படும்) செயலியை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். வெளியில் கிளம்புவதற்கு முன், iPod கருவியை உங்கள் கணினியுடன் இணைத்து அவையிரண்டும் கொஞ்சம் மனம் விட்டு பேசிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களுக்கு வேண்டிய எல்லா podcastகளும் இப்போது, உங்கள் iPodஇல் சேமிக்கப் பட்டு, உங்கள் செவிகளுக்கு எந்நேரமும், எங்கு வேண்டுமானாலும் விருந்து படைக்கத் தயாராக இருக்கும். காலையில் அலுவலகத்திற்குச் செல்கையில் தமிழ்மணத்திலுள்ள எல்லாருடைய பதிவுகளையும் உங்கள் iPod அல்லது அதனுடன் இணைக்கப் பட்ட car stereo வாயிலாக கேட்டுக் கொண்டே பயணிக்கலாம். இது எப்டி இருக்கு?

சரி, podcastகளை தயாரிப்பது எப்படி என்கிறீர்களா? இப்போது கடைபிடிக்கப் பட்டு வரும் முறை மைக்கில் பதிவை படித்து, ஒலிதிருத்தச் செயலிகளைக் (sound editors) கொண்டு mp3 ஒலிக்கோப்புகள் உருவாக்குவதே. (அதனுடன், பின்னணி இசை என்று ஜிகினா வேலைகளும் செய்கின்றனர்) இதற்குப்பின், உருவாக்கிய podcastஐ serverருக்கு ஏற்றம் செய்து அதை இணையத்திலுள்ள அனைவரும் அடைய வழிவகுக்க வேண்டும். இந்த podcastஐ கேட்டுப் பாருங்கள், புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். இவ்வலைபக்கத்தில் இது குறித்து விவரமாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு செய்வது மிகப்பெரிய ஒலிக்கோப்புகளை உருவாக்குவதால் அவற்றை இறக்கம் செய்ய அதிவேக இணைய இணைப்புகள் தேவைப்படும். iPodஇல் சேமிப்பதற்கும் அதிக இடம் தேவைப்படும். இதனால் எனக்குத் தோன்றும் ஒரு யோசனை என்னவென்றால், பதிவுகளையும் செய்திகளையும் எழுத்து வடிவமாகவே iPodக்குள் சேகரித்து, iPodஇல் உள்ள ஒரு செயலியைக் கொண்டு 'எழுத்திலிருந்து பேச்சு' (text to speech conversion) என மாற்றம் செய்து, அதனை ஒலிக்க வைப்பது என்பதே. (ஆங்கிலத்தில் ஏற்கனவே உள்ள இந்த தொழில்நுட்பம் தமிழிலும் வரவேண்டுமென்றால் நாம்தான் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்) இது ஒரு படி முன்னேற்றம். மற்றொரு படி, iPod கருவி தந்தியற்ற இணைப்பாற்றல் (wireless connectivity) பெறுவது. இது நிகழ்ந்தால், இணையத்தில் பதிவாகும் செய்திகளையும் படைப்புகளையும் 'உடனுக்குடன்' செவிவழியாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், நாமெங்கிருந்தாலும். இந்த முன்னேற்றங்கள் விரைவில் நிகழலாம் என்ற நம்பிக்கையில்தான் இந்த சாத்தியங்களைப் பற்றியும் 'அளந்து' கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் உலவுவதற்கு கணினியின் முன் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, நடை, ஓட்டம், காரோட்டம், கடைத்தெருவில் பவனி என வேண்டிய பணிகளை செய்துகொண்டே இணையத்தில் பதிக்கப்படும் படைப்புகளை நுகரும் ஆற்றலை நமக்கு அளிக்கிறது இந்த podcast தொழில்நுட்பம். இது ஒரு வகையான ஊடுருவிய கணினிச் செயல் (pervasive computing) எனலாம் (என்று நினைக்கிறேன் :) ) விரைவில் நாமனைவரும் podcastடுவோமாக!

செவ்வாய், ஏப்ரல் 05, 2005

ஆறாவது உணர்வு

தப்பி தவறி தனியா இருக்கற வேளையில இந்த பேய் படத்த பாத்து தொலச்சிட்டேங்க. ஐயையோ, ரொம்ப பயமா இருக்குங்க. நடுராத்திரி நேரமா வேற இருக்குது. இணையத்துல இணச்சிகிட்டு தொணைக்கி யாராவது தூதுவன்ல ஆப்புடுவாங்கன்னு பாத்தா, எல்லாரும் துங்கிட்டாங்க போல இருக்கே. கொஞ்சம் தொணயா இருக்கட்டுமேன்னு பாட்ட போட்டு விட்டா, நாம கேக்கற பாட்டெல்லாம் இந்த நேரத்துல நம்மளையே பயமுறுத்துதுங்க, என்ன பண்றது. சாமி கும்புடறத வேற எப்போலேருந்தோ நிறுத்தி தொலச்சாச்சு. இல்லாட்டி முருகான்னுட்டோ, இல்ல ஜீஸஸ்னுட்டோ இல்ல அல்லானுட்டோ சொல்லிக்கிட்டு இருக்கலாம். இந்த பேய்ங்களுக்குல்லாம் சாமி பேர சொன்னா புடிக்காதாமே.

இந்த மாதிரி நேரங்களில் எனக்குத் தோன்றும் ஒரு கேள்வி - நாமேன் அவதியுறுவதற்கு பணம் கொடுத்து சகல வசதிகளையும் செய்து கொண்டு அவதியுறுகிறோம்? மேலே குறிப்பிட்ட திகில் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு வகை. அதிக விலை கொடுத்து குடி / புகை / போதை மருந்து என்று உடல்நலத்தை பாதித்துக் கொள்வது ஒரு வகை. கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று வாழ்கையை சிக்கலாக்கிக் கொள்வது இன்னொரு வகை. சுற்றுலா பயணம் என்று ஊர் ஊராக சென்று அல்லல் படுவது மற்றொரு வகை. இதையெல்லாம் ஆராய்கையில் ஒரு விளக்கம் மட்டுமே தென்படுகிறது - sadomasochism எனப்படும் தன்னையே துன்புறுத்திக் கொண்டு அதில் இன்பம் காணும் மனப்பான்மை ஒரு சில மனநோயாளிகளுக்கு மட்டுமே உள்ள ஒரு குறைபாடல்ல, அது நம்மிடையே மிகவும் பரவலாகத் திகழும் ஒரு குணாதிசயம் என்பதே. நள்ளிரவு சித்தாந்தத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து நித்திரைக்குச் செல்கிறேன், நன்றி. நிம்மதியா தூங்க முடிஞ்சா சரிதான்.

ஞாயிறு, ஏப்ரல் 03, 2005

என் தோரணைகள்

பல வருடங்களாக நான் அனுபவித்து வரும் ஒரு குறைபாட்டை இங்கு முன்வைக்கிறேன். இதற்குத் தீர்வுண்டா இல்லையா எனத் தெரியவில்லை. எனினும், உலக மக்களோடு இதைப் பகிர்ந்து கொண்டாலாவது மனதில் உள்ள பாரம் குறையும் என்ற எதிர்பார்ப்போடு இந்த விஷயத்தை இங்கு விவரிக்கிறேன். மேலும், பலரும் இத்தகையவொரு குறையால் அவதிபடுகின்றனர் என்ற நற்செய்தி கிடைக்குமாயின் "யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்" என்ற ரீதியில் கொஞ்சம் ஆறுதலேனும் கிடைக்குமென்ற நப்பாசையும் ஒரு காரணம், என் சொந்த பிரச்சனைகளை இங்கு குறிப்பிடுவதற்கு.

தொழில்நுட்ப வளர்ச்சிகளால் மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும் என்னை நடுங்க வைக்கும் சில சாதனங்களுமுண்டு. என்னை பீதியடையச் செய்யும் ஒன்று இருக்குமானால் அது இந்த புகைப்படக் கருவியே. இதனாலேயே சுற்றுலாக்கள் செல்வதற்குக் கூட மிகவும் தயங்கும் நிலை. புகைப்படங்களுக்குத் தோற்றம் கொடுப்பது, செயற்கையாகப் புன்சிரிப்பது, மகிழ்ச்சியாக இருப்பது போல் பாசாங்கு செய்வது இவையெல்லாம் எனக்கு சிறிதும் சாத்தியமாகாத செயல்கள். எவ்வளவு முயற்சித்தும், புகைப்படங்களுக்குக் கொடுக்கும் தோற்றங்களெல்லாம் நான் ஏதோ படுஅவதியில் இருப்பது போலவே பதியப் படுகின்றன. (இயல்பாக சிரித்துக் கொண்டிருக்கும்போது அறிவிப்பின்றி படமெடுக்கப் பட்டதால் விளைந்த பயங்கரவாதங்களைப் பற்றி இங்கு குறிப்பிடத் தேவையில்லை.)

புகைப்படங்களைப் பார்பவர்கள் என்னை அனுதாபத்தோடும், மனிதாபிமானத்தோடும் நோக்குகையில் எனக்கு ஏற்படும் ஆற்றாமையைச் சொல்லியடங்காது. சிரிக்க முயன்றதால் ஒரு கண்றாவி, சிரிக்காதிருந்ததால் மற்றொரு கண்றாவி, அகலக்கண் காட்டியதாலொரு கண்றாவி, புருவம் சுருக்கியதால் இன்னொரு கண்றாவியென்று என் புகைப்படத் தொகுப்பைப் பார்வையிடுபவரின் நிலை பரிதாபத்துக்குரியதே. மனசாந்தியில்லாத வேளைகளில் அத்தொகுப்பை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புகைப்படத்திலும் என்னுடைய முகபாவத்தைப் பார்த்து சிரித்துக் கொள்வது, சன் டிவி 'காமெடி டைம்'ஐ விட நகைச்சுவையான ஒரு அனுபவம். தர்மசங்கடத்திலிருப்பது போல் ஒரு தோற்றம், 'ஏதோ அவசரத்தில்' இருப்பது போல ஒரு பாவனையென்று புகைப்படக் கருவியைக் கண்டதும் எனக்கு ஏற்படும் மாறுதல்கள், மேதாவிகளால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவேண்டிய ஒரு விஷயமாகும்.

இந்நிலையில் எரியும் விளக்கில் எண்ணை உற்றுவது போல் திகழும் என் ஒன்று விட்ட சகோதரர் மற்றும் சகோதரி. மனவெறுப்புடன் உட்கார்ந்திருந்தாலும் புகைப்படக் கருவி வெளியெடுக்கப்பட்டவுடன் அவர்கள் காண்பிக்கும் நம்பத்தகாத மாற்றமும் மலர்ச்சியும் குளிர்ச்சியும், ஏதொ புகைப்படம் எடுக்கப் படுவதற்கென்றே பிறந்தவர்கள் போல இருக்கும் அவர்கள் பாங்கும், நினைத்த முகபாவத்தை கொண்டுவரும் ஆற்றலும் தோற்றுவிக்கும் உணர்ச்சிகளும் (வயிற்றெரிச்சலே இதனால்தான்)...... வாழ்க்கை ஏனிப்படி சிலருக்கு மட்டும் சாதகமாக விளங்குகிறது?

இணையத்தால் வந்த சங்கடங்கள் வேறு. 'முன்' / 'பின்' கண்டிராதவர்கள் நன்றாக பழகுகிறார்களே என்று ஆறுதலைடந்திருக்கும் நேரத்தில், திடீரென்று நம் புகைப்படத்தைக் காணக் கோரி வேண்டுதல் விடுப்பவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். இத்தகைய வேண்டுகோள்களை நிறைவேற்றியதால் இழந்த இணைய நட்புகள் கணக்கிலடங்காதவை. இருப்பினும், என் படங்களை மின்கோப்புகளாக மாற்றி, கேட்பவருக்கு மின்னஞ்சல் செய்து, அவர் படும் பாட்டை நினைத்து ஒரு குரூர மகிழ்ச்சி கொள்ளும் மனப்பான்மை இன்னும் என்னை விட்டு அகலவில்லையென்பதே உண்மை. இதற்கு ஏதுவாக வந்துள்ள விலையுயர்ந்த மின் (Digicam) புகைப்படக் கருவிகளில் ஒன்றை வாங்கும் எண்ணமும் அண்மையில் தோன்றியுள்ளது. பாவம், உலகக் குடிமக்கள்.

என் குறைகளைப் இங்கு பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இக்குறைகள் உங்களும் இருப்பின், என்னை நினைத்து ஆறுதலடைவீர் என எதிர்பார்கிறேன்.

மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன்,

சிறகடித்து வானெழும்பும் குரல் / சிறகின் குரல் / பெயரிலிகளுக்குத் தோன்றிய மற்ற மொழியாக்கங்கள் ;-)

வெள்ளி, ஏப்ரல் 01, 2005

நடுநிலை

உள்ளங்கைகள் மோதிக் கொள்ள, பலத்த ஓசையோடு கைகொட்டிக் கொண்டு, தொட்டுத் தடவி முத்தமிடாக் குறையாக அன்பு செலுத்தி, அதற்குக் காணிக்கை கேட்டு நச்சரிக்கும், பொதுவிடங்களில் சங்கோஜப் பட வைக்கும், ஆணல்லாத, பெண்ணுமல்லாத மனிதர்களை நாம் சந்தித்திருக்கலாம். அவர்களை எதிர்கொள்கையில் நமக்கேற்படும் இயற்கையான உணர்வுகள் அருவருப்பு மற்றும் வெறுப்புணர்வுகளே. ஒன்று, அவர்களை ஏவலாட்கள் கொண்டு விரட்டுவோம், அல்லது வெகுவேகமாக அவர்களிடமிருந்து விலகிச் செல்ல முற்படுவோம். இதனால் அவர்களும் வீராப்புடன் நம்மை பின்பற்றுவர், நாம் அவர்கள் எதிர்பார்க்கும் கட்டணத்தை அளிக்கும் வரை.

அலிகள் என்றும் ஹிஜ்ராக்கள் என்றும் அரவாணிகள் என்றும் பெயர் பெற்ற இந்த பாற்கடந்த நபர்கள் நம் சமூகத்தின் எல்லைகளில் பெறும் வாழ்வு மிகவும் சோகமானதே. அவர்களைப் பற்றிய ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்கையில், அவர்களின் வாழ்க்கையை அண்மையிலிருந்து பார்க்க முடிந்தது. அவர்களுக்கெதிரான சமூகத்தின் வன்முறைகள், அங்கீகாரமின்மை, தொல்லைகள், சட்டமே விதித்த அநியாயங்கள் என அவர்களை வாழத் தகுதியில்லாதவர்களாகவே நடத்தி வந்துள்ளன நம் சமூகங்கள். பேட்டி காணப்பட்ட சில அரவாணியர் கூறியவை:
  • "என்னை ஒரு ஆண் மணந்து கொண்டதை தொடர்ந்து எமக்கு ஏற்பட்ட கொலை மிரட்டல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள், அதனைக் காவலர்களிடம் சென்று முறையிட்டால் அவர்களோ எம் திருமணம் சட்டப் படி செல்லுபடியாகாதெனக் கூறும் வேதனை..... திருமணமிருக்கட்டும், எமக்கு உயிர் வாழ சட்டத்தில் இடமுள்ளதா என நாங்கள் கேட்ட எதிர் வினை......." என்று கசப்பான உண்மைகளை ஒருவர் முன்வைத்தார்.
  • "குலச் சான்றிதழ் கேட்டு அரசு அதிகாரி ஒருவரை அணுகினால், அவரோ நீ பெண்ணல்ல, பெண்ணுடை தரித்த ஆண் என்று அவதூறு செய்ய, சம்பந்தமில்லாத இந்த பேச்சு எதற்கு, எனக்கு வேண்டியதெல்லாம் என் குலச் சான்றிதழ்தானே" என இன்னொருவர் நியாயமான ஒரு கேள்வியை வினவினார்.
  • "ஒரு பெண்ணுக்கும் எனக்குமுள்ள ஒரே வேறுபாடு, அவளால் குழந்தை பெற முடியும், என்னால் முடியாது. இந்த ஒரே காரணத்திற்காக நாங்கள் சமூகத்தை விட்டே புறக்கணிக்கப் படவேண்டுமா?" என மற்றொருவர் கேள்வி தொடுத்தார்.

இவர்கள் பிழைப்புக்கு என்ன செய்கின்றனர் எனப் பார்ப்போம். இவர்கள் இந்நாளில் செய்து வருவது மூன்று வகையான தொழில்கள்: (1) பிச்சையெடுப்பது (2) விசேஷங்களுக்குச் சென்று ஆசி கூறி காணிக்கை பெறுவது (அவர்களது வருகை ஒரு நல்ல சகுனமென்ற பாரம்பரிய ஐதீகமிருந்தாலும், இவ்விசேஷங்களில் பெரும்பாலும் அவர்கள் அழையா விருந்தினர்கள் / வேண்டப் படாதவர்களென்பதால், இதற்கும் பிச்சையெடுப்புக்கும் அதிகமானதொரு வித்தியாசமில்லை) (3) வேசித்தொழில்.

இவர்களின் பாலியல் பின்னணி குறித்து ஆராய்வதல்ல என் நோக்கம். பாலியலால் சிறுபான்மையானவர்கள் என்ற ஒரே காரணம் காட்டி அவர்களுக்கு நலவாழ்வு மறுக்கப் படுவதேன் என்ற ஐயப்பாட்டை இங்கே முன்வைப்பதே என் நோக்கம். ஏன் இவர்களிலிருந்து ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ முன்னேறும் வாய்ப்பு ஏறக்குறைய இல்லாத நிலையே நிலவுகிறது? ஆண்குறியையும் பெண்குறியையும் வைத்துக் கொண்டு இத்துறைகளில் அதிகமாக என்ன சாதித்துவிட முடியும், இவர்களால் முடியாதென எண்ணும் விதமாக? ஏன் சட்டமும் இவர்களுக்குப் பாதகமாகவே இயற்றப் பட்டுள்ளது? இக்கேள்விகளை பலர் வாயால் கேட்டுக் கொண்டிருந்தாலாவது சட்டமும் சமூகமும் இவர்களுக்கு கருணைக் கண் திறக்குமென்று நம்பிக்கை கொள்வோம்.