ஞாயிறு, டிசம்பர் 25, 2005

Mozilla Thunderbird - ஒரு அறிமுகம்

இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு மென்பொருள் கருவி. உங்கள் gmail (மற்றும் இதர POP access வசதியளிக்கும் மின்னஞ்சல் சேவைகளின்) வழங்கியிலிருந்து, தானியங்கு முறையில் உங்கள் மின்னஞ்சல்களை உங்கள் கணினியில் கொண்டு வந்து ஒப்படைக்கக் கூடியது. விரும்பும் RSS தொகுப்புகளைச் சேர்த்துக் கொண்டால், அவை புதுப்பிக்கப்படும் போதெல்லாம் புதுவரவுகளை இறக்கிக் கொண்டு, உங்கள் பார்வைக்கு தயார் நிலையில் வைக்கக் கூடியது. நீங்கள் எழுதும் மடல்களை சிறப்பான தோற்றத்துடன் htmlஇல் வடிவமைக்க உதவும் கருவி. தெரிந்தவர்கள் / சொந்தங்கள் / அதிகத் தொடர்புடையவர்களது மின்னஞ்சல், மண்ணஞ்சல், தொலைபேசி எண்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் ஒரு தகவல் தளம். செயல்படுத்த அதிகக் கணிமையாற்றலெல்லாம் தேவையில்லாமல், ஆதிகாலத்து pentium செயலியைக் கொண்ட கணினியில் கூட செயலாற்றக்கூடியது. வேறு சில மென்பொருட்களைப் போல் active உறுப்புகளுக்கு வசதி செய்து கொடுத்து, வைரஸ் வகையறாகளுக்குப் பின் கதவைத் திறந்து விடாத, பாதுகாப்பானதொரு தீர்வு. திறமூலத்தாலான ஆதாயங்களுமுண்டு.

இப்படிப் பல புகழாரங்களை சூட்டிக் கொண்டே போகலாம். ஆனால் அது மட்டுமல்ல என் நோக்கம். உலாவி(browser) என்பது வந்ததிலிருந்து நமது நேரமும் சக்தியும் கூடுதலாக விரையமாகிறதோ என்று ஒரு எண்ணம். தேவையற்ற விளம்பரங்கள், நம் அந்தரங்கத்திற்குள் ஊடுருவப் பார்க்கும் நிரலிகள் / கண்காணிப்பான்கள், மின்மினுக்கும் சொடுக்கத் தூண்டும் சுட்டிகள், அவற்றைச் சொடுக்கியதால் அவசியமே இல்லாமல் செலவாகிப்போன மணித்தியாலங்கள், இவையனைத்தையும் இறக்கிக் கொள்ளத் தேவைப்படும் இணைய இணைப்புகள், அவற்றுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், என்று விரயப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். சில மணி நேரங்கள் இணையத்தில் மேய்ந்த பிறகு, அதனால் கிட்டிய ஆதாயம் என்ன என்று பார்த்தால், பூஜ்யம்தான் மிஞ்சுகிறது. ஒரு உவமையோடு விளக்க வேண்டுமென்றால், இணையத்தில் உலாவுவது, ஒரு முன்திட்டமில்லாமல் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் இங்குமங்கும் அலைவதற்கு ஒப்பானது என்று கூறலாம். தோன்றிய இடத்தில் வண்டியை நிறுத்தி, அங்கிருப்பதை வாங்கி அல்லது வேடிக்கை பார்த்து விட்டு, போரடித்ததும் அங்கிருந்து நகர்ந்து, அடுத்த கண்ணைக் கவரும் இடம் வந்ததும், அங்கும் முந்தைய இடத்தில் செய்ததைப் போலவே நேரவிரயம் செய்து........... நிஜ வாழ்வில் இப்படிச் செய்யாத பொறுப்பானவர்கள்தான் நாம். இருந்தும் இணையத்தில் பெரும்பாலும் இதைத்தான் செய்கிறோம். தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தாலும் அதே கதிதான்.

நேரம்தான் நமது ஒரே அரிய பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. பணமோ, வேறு உடமைகளோ இழந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நேரம் என்பது செலவிட்டது செலவிட்டதுதான். அத்தகைய ஒரு அரிய சொத்தை நாம் கவனத்துடன் செலவிடுவதில்லை. Thunderbird போன்ற ஒரு மென்பொருளை வைத்துக் கொண்டு நம் நேரத்தைத் திறம்பட நிர்வாகிக்க முடியும் என்பதே எனது கருத்து. பொதுவாக நாம் இணையத்தில் சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் பலமுறை செல்கிறோம். இவற்றில் மின்னஞ்சல் தளங்களும் அடக்கம். அவற்றைத் தவிர செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், திரட்டிகள்............ இவை ஒரு நாளில் பலமுறை புதுப்பிக்கப்படும் தன்மையுடையவை என்பதால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாகக் கிடைக்கலாமென்ற நம்பிக்கையில் மறுபடி மறுபடி இத்தளங்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு முறையும் அவை காண்பிக்கும் வர்ண ஜாலங்கள், உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைக் கண்காணிக்கும் நிரல்கள், தேவையற்ற விளம்பரப் பட்டைகள், முன் வந்து விழும் அறிவிப்புகள் / எச்சரிக்கைகள் இவையனைத்தும் உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குகின்றன. இவற்றை இறக்குவதற்கும் இணைய ஆற்றல் (connection speed), நேரம் ஆகியவை செலவாகிறது. Thunderbird போன்றதொரு மென்பொருளைக் கொண்டு இத்தகைய விரயங்களைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக உலாவும் தளங்களின் RSS தொகுப்புகளை அதனிடம் குறிப்பிட்டு விட்டால், அதுவே இத்தளங்களின் புதிய வார்ப்புகளைக் கொண்டு வந்து ஒப்படைத்து விடும். அதே போல் உங்கள் gmail விவரங்களை அதற்குத் தெரிவித்து விட்டால், உங்கள் மின்னஞ்சல்கள் சுடச்சுட உங்களுக்குப் பரிமாறப்பட்டு விடும். அடிக்கடி gmail வலைத்தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டியதில்லை.

வலைப்பதிவு இன்று அதிக நேரத்தை விழுங்கும் ஒரு அம்சமாகி விட்டது. ஒரு பதிவைப் படிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றது என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன் அதன் டெம்ப்ளேட் அட்டகாசங்களுடன் நம் உலாவியில் வந்திறங்குவதற்கு இன்னுமோர் ஐந்து நிமிடங்கள் ஆகிறது. இவ்வாறு ஒரு நாளில் தமிழில் நூறு பதிவுகள், ஆங்கிலத்தில் நூறு பதிவுகள், மற்ற தொழில் / ஆர்வத்துறைகளைச் சார்ந்த பதிவுகள் என்று கூட்ட ஆரம்பித்தால், அதற்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள் காணாது. இவற்றை உலாவியில் படிப்பதற்கு பதிலாக, Thunderbirdஇல் இவற்றின் RSSஐப் பார்வையிட்டால், சில நொடிகளில் தெரிந்து விடும், ஒரு பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டுமா அல்லது நழுவ விட்டு விடலாமா என்று. இந்த அணுகுமுறையில் பல நல்ல பதிவுகளை குறுகிய நேரத்திலேயே படித்து விட முடியும். பதிவிடுவதற்காவது உலாவி தேவையல்லவா என்கிறீர்களா? Bloggerஇல் பதிவுகளை மின்னஞ்சலிலிருந்தே பதிப்பிக்கலாம், Mail-to-Blogger என்ற வசதி கொண்டு. (இப்பதிவு அவ்வகையிலேயே வலையேற்றப்பட்டது, Thunderbirdஇலிருந்து)

மின்னஞ்சல் கொண்டே பதிவுகளை வெளியிட்டு, மின்னஞ்சல்களைப் போலவே (RSS செயல்பாடும் மின்னஞ்சலை ஒத்ததுதானே?) அவற்றைப் படிக்கும் இச்செயல்முறை பழைய மடற்குழுக்களை நினைவு படுத்துகிறதல்லவா? நுட்பமும் fashionஐப் போலத்தானே? முன்பு வெகுவாகக் கடைபிடிக்கப் பட்ட செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் நாளடைவில் பல மாற்றங்களைக் கடந்து, மீண்டும் நடைமுறைக்கு வருவது மனித இயல்புதானே? பல உதாரணங்கள் அளிக்கலாம் இத்தகைய குணத்திற்கு. (e.g. Mainframe => PC => Server-side computing => Peer-to-peer etc.) ஒரு மடற்குழுவாக மட்டும் இல்லாமல், ஒரு வலைத்தளமாகவும் பதிவாவது ஒரு முன்னேற்றம். மேலும் மடற்குழுக்களிலுள்ள சில விரும்பத்தகாத அம்சங்கள் இதில் தவிர்க்கப்படலாம். ( -ம், எதிர் கருத்துக்கள், விவாதங்கள் ஆகியவை எல்லோருக்கும் விநியோகிக்கப் படாமல், படைப்புகள் மட்டுமே RSS தொகுப்பாக விநியோகிக்கப்படுகிறது. விவாதங்கள் வலைப்பதிவுகளில் நடக்கலாம். நேரக்குறைவுள்ளவர்கள் மற்றும் விவாதங்களைத் தொடர விரும்பாதவர்கள் படைப்புகளை மட்டும் படித்து விட்டுச் செல்லலாம்).

இணையம் ஒரு பயனுள்ள வசதிதான். அதில் நமக்குப் பயனளிக்கும் அங்கங்கள் எவை என்று தெரிந்து செயல்பட்டால், அவைகளிலிருந்து Thunderbird மூலமாக அதிகமான பயனை அடையலாம், குறுகிய நேரச் செலவிலேயே. நம் தேவைக்கேற்றவாறு தகவல் நமக்குத் 'தள்ளப்படும்' இத்தகைய நுட்பத்தை push technology என்பார்கள். அதற்கு மாறாக, நாமே (உலாவியைக் கொண்டு) அத்தகவலின் மூலங்களுக்குச் சென்று அதை 'இழுக்க' வேண்டியிருந்தால் அது pull technology ஆகும். Push ஒரு தானியங்கும் நுட்பம். Pull, மனிதர் இயக்கும் நுட்பம். நமது பெரும்பாலான இணையச் செயல்பாடுகள் pushஆகவும், ஒரு சில மட்டுமே pullஆகவும் இருக்குமானால்.......... நமக்கு குடும்பத்துடன் செலவழிக்க அத்த்த்த்த்திக நேரம் கிடைக்கும். இதற்காக மட்டுமேனும் Thunderbird கவனிக்கப்பட வேண்டியது.

3 கருத்துகள்:

அன்பு சொன்னது…

இன்னொரு சிறப்பான பயனுள்ள பதிவு உங்களிடமிருந்து...
Thunderbird முதல்முறை பார்த்தபோது இறக்கி பயன்படுத்திப்பார்த்தேன் தொடரவில்லை. இப்போது மீண்டும் முயற்சி செய்துபார்க்கவேண்டும்.

எண்ணத்துக்கும், நேரத்துக்கும் நன்றி.

Voice on Wings சொன்னது…

உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி, அன்பு.

உங்கள் முயற்சியில் ஏதேனும் சிக்கலேற்பட்டால் தெரியப்படுத்துங்கள். Firefoxஐப் போலவே இதிலும் தமிழெழுத்துக்களில் தகராறு வரலாம். அப்படி வந்தால், அதற்குப் பயன்படுத்திய அதே தீர்வை இதற்கும் பயன்படுத்தி சரிசெய்யலாம். அதாவது Profile Folderஇல் UserContent.cssஐ சேமித்து பிரச்சினையைத் தீர்க்கலாம்். Firefox பிரச்சினையைக் குறித்து எனது முந்தைய பதிவு இங்கே.

தெருத்தொண்டன் சொன்னது…

vow, இனி தனித்தனியாக உங்கள் பதிவுகளுக்கு நன்றி சொல்வதில்லை என்று முடிவு.. இதுவரை நீங்கள் தந்த அனைத்து பயனுள்ள தகவல்களுக்கும் (தகவலுக்குப் பன்மை உண்டா?)தர இருக்கும் தகவல்களுக்கும் இதோ பிடியுங்கள் மொத்தமாக எனது நன்றிகளை..

தனிமடலில் குறிப்பிட்ட விஷயம் என்னால் செயல்படுத்த முடியவில்லை. உங்கள் உதவி தேவைப்படுகிறது என்றே நினைக்கிறேன்.