திங்கள், அக்டோபர் 24, 2005

ஒரு மலையாளப் படம்

தூக்கம் வராத ஒரு இரவு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து channel surfing செய்து கொண்டிருந்த போது, தூர்தர்ஷனில் ஆங்கில sub-titlesசுடன் ஓடிக்கொண்டிருந்த ஒரு மலையாளப் படம் கவனத்தைக் கவர்ந்தது. கதையின் பிரதானப் பாத்திரமாக 'ஷஹீனா' என்றப் பெயர் கொண்ட ஒரு கிராமத்துப் பெண். இவ்வேடத்தைத் தாங்கி நடித்தவர் புகழ் பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின். (ஆய்த எழுத்து / யுவா படத்தில் மாதவனின் மனைவி பாத்திரத்தில் வீணடிக்கப் பட்டவர்.) ஷஹீனா பள்ளியின் இறுதியாண்டுகளில் பயிலும் ஒரு மாணவி. தந்தையை இழந்த, தாயின் வளர்ப்பில் வாழும், படிப்பார்வம் நிறைந்தப் பெண். ஆண்களைக் கண்டால் அவளுக்கொரு பயம். அவளது பள்ளியாசிரியர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

அவள் ஆனந்தமாகத் தனது தோழிகளுடன், அக்கிராமத்தின் வயல் பகுதிகளைக் கடந்து பள்ளிக்குச் சென்று திரும்பும் நேரத்தில், ஒரு பெண்களின் கூட்டம் அவர்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஒரு குழந்தை. ஒவ்வொருத்தியின் முகத்திலும் துயரம். வரிசையாக, ஒருவர் பின் ஒருவராக, இச்சிறுமிகளைக் கடந்து செல்கிறது அக்கூட்டம். அவர்கள் யார், எங்கு செல்கின்றனர் என்றக் கேள்விகளுக்கெல்லாம் விடையின்றி, ஏதோ அவல நிலையிலிருப்பவர்கள் என்ற அறிகுறிகளை மட்டும் வழங்கி விட்டு, மேற்கொண்டு பயணிக்கிறது கதை.

மணமாகி மனைவி, மகள் மற்றும் தாயுடன் வாழும் ஒரு ஆணின் வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது படம். அவன் தான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் அறிவிக்கிறான். இறந்து விடுவதாக அச்சுறுத்தும் மனைவியை சமாதானப் படுத்தி, தனக்கு துபாயில் வேலை கிடைக்க ஆகும் செலவில் ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாய்கள் குறைவதாகவும், அதனை அடைவதற்கே இம்மறுமணம் என்றும் காரணம் கூறிகிறான். பிறகு ஒரு மணத் தரகரின் உதவியுடன், ஷஹீனாவின் குடும்பத்தை நாடி, அவளை மணம் புரிகிறான். கனவுகளனைத்தும் சிதைக்கப்பட்டு ஒரு கைதியைப் போல் அவனுடன் அவனது வீட்டிற்குச் செல்கிறாள் ஷஹீனா. அவனது மனைவியும் தாயும் மகளும் அவளிடம் அன்பு செலுத்துகின்றனர். ஆனால், அவனோ, ஒரு மிருகத்தைப் போல் அவளை அணுகுகிறான். ஏற்கனவே ஆண்களின் மீதுள்ள அச்சத்தால், அவனை எதிர்த்துப் போராடி, கடித்து, பிறாண்டி என்று ஒவ்வொரு முறையும் அவனை விலக்குகிறாள் ஷஹீனா. இதையெல்லாம் கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவனது முதல் மனைவி. சோபன அறையின் கதவை அவளது முகத்திற்கெதிராகவே அறைந்து மூடுகிறான் அவள் கணவன். அங்கு அவனுக்கேற்படும் காயங்களுக்கு, பிற்பாடு மருந்துகள் தடவுகிறாள் இம்முதல் மனைவி. இவற்றையெல்லாம் நையாண்டி செய்யும் அவனது தாய் அவனிடம் கூறவது, "நீ கொடுத்து வைத்தவன். உனது ஒரு மனைவி உனக்கு ஏற்படுத்தியக் காயங்களுக்கு உனது இன்னொரு மனைவி மருந்து போடுகிறாள். பெரும்பாலோருக்கு இந்த யோகம் கிடைக்காது."

ஷஹீனாவின் பிடிவாத குணத்தைப் போக்க, அவளுக்குப் பேயோட்டல்கள் நடத்தப்படுகின்றன. இச்சடங்கில் சுவாசித்தப் புகையினால் அவளுக்குக் காய்ச்சலேற்படுகிறது. அவளுக்கு அளிக்கப்படும் மருந்துடன் தூக்க மருந்தைக் கலக்க ஆணையிடுகிறான் கணவன். இதற்கு மறுத்துக் கூறியும், கட்டாயத்தால் வேறு வழியின்றி, அவனது கட்டளையை நிறைவேற்றுகிறாள் முதல் மனைவி. அதன் பிறகு மயக்க நிலையில் அவனால் வன்புணரப்படுகிறாள் ஷஹீனா. (சட்டப்படி மணமுடித்ததால், அவன் செய்தது வன்புணர்ச்சியல்ல, மென்புணர்ச்சியே என்று வாதிடக்கூடிய சமூகம் நம்முடையது) மயக்கம் தெளிந்தபின், என்ன நேர்ந்தது என்று உணரும் பக்குவமும் அவளுக்கு இருக்கவில்லை. கட்டிப்போடப்பட்டு, செயலற்ற நிலையில் தான் கொடுமைப்படுத்தப் பட்டதைப் போன்றவொரு உணர்வு / கெட்ட கனவு மட்டுமே மிஞ்சியிருந்தது அவளுக்கு. காரியம் முடிந்த நிலையில், அவளை வைத்துக் கொண்டு தன்னால் சமாளிக்க முடியாது, ஆகவே, அவளை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிக்கிறான் கணவன்.

ஷஹீனாவை அவளது தாய் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு, ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் அவளை விவாகரத்து செய்கிறான். பிடிவாதம் கொண்டு, தன்னைத் தொடுவதற்கும் அவள் அனுமதிக்கவில்லை என்று அவர்களுக்குக் காரணம் கூறுகிறான். அவளைத் தனது நாலாம் தாரமாக ஆக்கிக்கொள்ளும் நோக்கத்தில், ஊர் பெரியவரும் ஆர்வத்துடன் இதற்கு சம்மதிக்கிறார். மயக்க நிலையிலிருந்ததால் அவளும் தான் வன்புணரப்பட்டதை உணர்ந்திருக்காத நிலையில், கணவனுடன் படுக்கவில்லை என்றே தன் தாயிடம் கூறுகிறாள். விவாகரத்தானதில் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் பள்ளிக்குத் திரும்புகிறாள் ஷஹீனா. ஆங்கிலப் பாடம் மட்டும் கடினமாகவுள்ளது என்று ஆசிரியரிடம் கூற, அவர் அவளது வீட்டிற்கு வந்து சிறப்புப் பாடமெடுக்கிறார். அதனையும் கோணப் பார்வையுடன் பார்க்கிறது சமூகம். கடினமாக உழைத்து, இறுதித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு, கடைசியில் தேர்வறையில் மயக்கமடைகிறாள். மருத்துவமனையில் அவள் கர்ப்பமான செய்தி வெளிபடுகிறது. செய்தியைக் கேட்டு மண்டையைப் போடுகிறார் அவளது தாய்.

அனாதையான பெண்ணை ஊர் தூற்றுகிறது. அவளது ஆசிரியருடன் ஏற்பட்டத் தொடர்புதான் கர்ப்பத்திற்குக் காரணமென்கிறது. மதநூல்களிலிருந்து மேற்கோள் காட்டி, இத்தகையப் பெண்ணை என்ன செய்யவேண்டுமென்ற தீர்ப்புகள் கூறப்படுகின்றன. இதே வேறு நாடாகயிருந்திருந்தால் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள், ஆனால் நாம்தான் முற்போக்காளர்களாயிற்றே, ஆகவே இத்துடன் நிறுத்திக்கொண்டோமென்று தம் முதுகில் தாமே தட்டிவிட்டுக் கொள்கின்றனர் ஊர் மக்கள். கைக்குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளிவருகிறாள் ஷஹீனா.

அடுத்தக் காட்சியில், முன்பு பார்த்த அதே பெண்கள் கூட்டம். ஒருவர் பின் ஒருவராக, வயல் வரப்புகளின் மீது, கைக்குழந்தையுடனும் சோகமான முகத்துடனும், தரை பார்த்து நடக்கின்றனர் அப்பெண்கள். அவர்களில் ஒருத்தியாக, ஷஹீனாவும். எல்லோரும் ஒரு ஆற்றங்கறைக்குச் சென்று, குழந்தைகளைக் கறையில் இறக்கிவிட்டு, தண்ணீருக்குச் சென்று தம் பணிகளில் ஈடுபடுகின்றனர். காமெரா குழந்தைகள் பக்கம் வருகிறது. பத்து பதினைந்து குழந்தைகள், ஒரு பெரிய துணியின் மீது கிடத்தப் பட்ட நிலையில். அவை அழத் துவங்குகின்றன. சில நிமிடங்களுக்கு அவற்றின் ஒருமித்த ஓலக்குரல்கள் காட்டப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் உருவாக்கமும் ஒரு சோகக்கதையாக, நமக்கு இதுவரை காண்பிக்கப்பட்ட ஒன்றைப் போலவே. காட்சி அகன்று மலையாள எழுத்துக்கள் 'சுபம்' என்றோ, 'மங்களம்' என்றோ, 'நன்றி' என்றோ, தெரிவிக்கின்றன.

கனத்த மனதை லேசாக்கிக் கொள்ள, ஒரு தமிழ் சானலுக்கு மாற்றி, அங்கு ஓடிக்கொண்டிருந்த வடிவேலுவின் தரக்குறைவான நகைச்சுவைக் காட்சியொன்றை சிறிது நேரம் பார்த்து விட்டு, இறுதியில் தூங்கிப்போனேன்.

பி.கு: படத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை.

6 கருத்துகள்:

ramachandranusha(உஷா) சொன்னது…

"பாடம் ஒண்ணு, ஒரு விலாபம்"- இந்த படத்தைப் பற்றி விவரமாய் தோழியர் பதிவில் எழுதியிருக்கிறேன்.

Voice on Wings சொன்னது…

தகவலுக்கு நன்றி, உஷா. உங்கள் பதிவின் சுட்டியைத் தர முடியுமா?

வசந்தன்(Vasanthan) சொன்னது…

இந்தப் படத்துக்காகத் தானே சிறந்த நடிகைக்கான தேசியவிருது மீராவுக்குக் கிடைத்தது?

Voice on Wings சொன்னது…

வசந்தன், அப்படித்தான் தெரிய வருகிறது. காண்க: http://www.imdb.com/title/tt0384404/

ramachandranusha(உஷா) சொன்னது…

நான் எழுதியதை இங்கு இட்டுள்ளேன். நேசகுமார் கூட எழுதியிருந்தார்.

//மீபத்தில் பார்த்த மலையாளப்படம்- பாடம் ஒன்னு, ஒரு விலாபம் படத்தில் அறிந்த ஓரே முகம் நம் மீரா ஜாஸ்மின். கதையின்நாயகி ஏழை பெண் பள்ளியிறுதி வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பில் மிக ஆர்வம். துபாய்க்கு செல்ல துடிக்கும் ஒருவனுக்கு இரண்டாம்தாரமாய் கட்டாய கல்யாணம். ஆனால் இந்தச்சிறு பெண், அவன் அருகில் செல்லவே பயப் படுகிறாள். அவனின் முதல் மனைவியும், தாயாரும் அவளுக்கு பாதுகாப்பாய் இருக்கிறார்கள். ஒரு நாள் நாயகி உடல் நலமில்லாமல் படித்திருக்கும்பொழுது, முதல் மனைவியைக் கட்டாயப் படுத்தி துக்க மருந்து கொடுத்துவிட்டு, தன் ஆசையை தீர்த்துக் கொள்கிறான். காலையில் தன் நிலை உணர்ந்த நாயகி அழுது ஆர்ப்பாட்டம் செய்ததும் அவளை தாய் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். துபாயில் வேலை கிடைத்ததும், அவளை சரிபடவில்லை, தொடவே விடமாட்டேன் என்கிறாள் என்று சொல்லி தலாக் செய்துவிடுகிறான். இதனால் சந்தோஷப்பட்ட நாயகி தன் படிப்பை தொடருகிறாள் ஆனால் அவள் தாய்மை அடைந்துவிட்டாள் என்று தெரிந்ததும், கணவனால் கைவிடப்பட்ட அவளின் ஏழைதாய் நெஞ்சடைத்து உயிர்விடுகிறாள். அனாதையாய் நிற்கிறாள் நாயகி. படம் ஆரம்பிக்கும்பொழுதும், கடைசி காட்சியிலும் நிறைய கணவனால் கைவிடப்பட்ட சிறுமித்தாய்கள் வரிசையாய்த் தங்கள் குழந்தைகளுடன் ஆற்றங்கரைக்கு சென்று அழுது புலம்பியவாறு துணி துவைக்கிறார்கள். குழந்தைகள் மணலில் அழுது கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கின்றன.

இப்படத்திற்குத்தான் மீராஜாஸ்மினுக்கு இவ்வருட சிறந்த நடிகை விருது கிடைத்தது. இப்படத்திற்கு டாக்காவில் சிறந்த படத்திற்கான தங்கப்பதக்கமும் கிடைத்துள்ளது. பங்களாதேஷ் பார்வையாளர்கள், இது எங்கள் கதை என்று சொன்னார்களாம். ஆனால் இந்தக்கதை, கேரளாவில் மல்லபுரம் மாவட்டத்து ஏழை இஸ்லாமிய பெண்களின் உண்மை கதை. பள்ளிக்கூடமே பெண்களுக்கு வலை வீசும் தரகர்களின் தளம்.. இப்படம் வெளிவரும்பொழுது, சிறுபான்மையினரின் உணர்வுகளை தூண்டுகிறது என்று பிற்போக்குவாதிகளால் ஒரு முறை தடைப்பட்டது, மற்றொருமுறை வணிக நோக்கு இல்லாமல் எடுக்கப்பட்டதால் ஓடுமா என்று விநியோகஸ்தர்களின் சந்தேகத்தால் தாமதப்பட்டுள்ளது. ஆனால் நல்ல கதை எப்போதும் வெல்லும் என்று மற்றொருமுறை நீரூபிக்கப்பட்டுள்ளது.

Voice on Wings சொன்னது…

நன்றி உஷா, படத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களையும் வழங்கியிருக்கிறீர்கள், உங்கள் பதிவில். நான் இணையத்தில் கண்டெடுத்த இன்னொரு விமர்சனம் இதோ. நன்றாக எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.