மாணிக்கம், மணிபாரதி என்று பகற் பொழுதில் பெயருடையவர்கள் இருட்டியபின் Markஆகவோ Michaelஆகவோ மாறும் அதிசயத்தைக் கண்டதுண்டா? Jekyll் & Hyde நாவலில் வருவது போல் இவர்கள் விசேஷ திரவமெதையும் பருகுவதில்லை. பொறுப்புடன் தத்தம் அலுவலகங்களுக்குச் செல்கின்றனர், அவ்வளவே. இங்குதான் நடைபெறும் அவர்களது பெயர் மாற்றம். ஏனென்றால் இவர்கள் வேலை செய்வது Call் centers் எனப்படும் அழைப்பு மையங்களில். இவர்களது வேலை அமெரிக்காவிலிருக்கும் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவது - அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வளிப்பது, அல்லது அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு சரியான விடையளிப்பது, அல்லது அவர்களை அழைத்து அவர்கள் செலுத்த வேண்டிய பணம் ஏதாவது இருப்பின், அது குறித்து நினைவுபடுத்துவது. இதற்கு இவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் மற்ற (அறிவுபூர்வமான?) வேலைகளில் கிடைப்பதைவிட அதிகமாதலால், பலரும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வேலைவாய்ப்புக்களே இவை.
சாதகமாகத் தோன்றும் இச்சூழலில் பாதகமான சில விஷயங்களுமுண்டு. முதலாவதாக, இவர்களது பணிநேரம் - அமெரிக்கப் பகற் பொழுதுக்கேற்றவாறு, (இந்திய நேரப்படி) இரவு நேரங்களிலேயே இவர்கள் பணி செய்தாக வேண்டும். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பலவற்றிலும் மாற்றுநேரங்கள் கடைபிடிக்கப் பட்டாலும், இப்படி ஆயிரக்கணக்கான பணியாளர்கள் (அதிலும் பெண்கள்) ஒவ்வொரு நாளும் இரவுநேரப் பணி செய்துகொண்டிருப்பது நாம் இதுவரை கண்டிராத ஒன்று. இதனால் ஏற்படும் உடல் மற்றும் மனப் பாதிப்புகள் நாளடைவில்தான் வெட்டவெளிச்சமாகும். தூக்கமின்மை, மகப்பேற்றில் சிக்கல்கள், மனத் தளர்வு, இல்லற வாழ்வில் குழப்பங்கள் என்று இதுவரை கிடைத்த அறிகுறிகள் எதுவும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. இதனோடு வேலைப்பளூ அதிகரிப்பு, கண்காணிப்பு என்று சில நிறுவனங்களின் சுரண்டல் மனப்பான்மை வேறு. 'மூச்சா' போக விடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமிருக்குமென்று ரெடிஃப் வலைதளத்தில் ஒரு பணியாளர் புலம்பியிருந்தார்.
பிறகு நம் பாணியில் ஆங்கிலம் பேசினால் அமெரிக்கர்களுக்குப் புரியாதாம். ஆகவே, accent neutralization என்றொருக் கூத்து வேறு. எனக்குத் தோன்றும் கேள்வி: பிரிட்டிஷ்ஷாரோ அல்லது ஆஸ்திரேலியர்களோ அல்லது கனேடியர்களோ பேசும் ஆங்கிலமும் அமெரிக்கர்களுக்கு வித்தியாசமான ஒரு மொழிதான். அமெரிக்காவிலேயே வடக்கு, தெற்கு, கறுப்பு, வெள்ளை என்று பேச்சின் லயம் பேசுபவரைப் பொறுத்து மாறுபடுகின்றது. இவ்வாறிருக்க, நாம் ஏன் நம் பேச்சை அவர்களுக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு அவர்களை மகிழ்விக்க இப்படிப் பாடுபட வேண்டும்? அமெரிக்காவுக்கு சேவைகள் வழங்கும் மேற்கூறிய நாடுகள் இவ்வாறுதான் செய்கின்றனவா? அல்லது நமக்குத்தான் அளவுக்கு மீறிய தாழ்வு மனப்பான்மையா? அமெரிக்கர்களை 'உறுத்திவிடக்கூடாது' என்ற அக்கறை நமக்கிருப்பதைப் போல், அவர்களுக்கெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியேதேனும் இருந்திருந்தால் இப்படிக் குர்ஆனை flush out செய்திருக்க மாட்டார்கள். Guess i'm digressing.....
இவையனைத்தையும் விட என்னைக் கொதிப்படையச் செய்த விஷயம் இந்தப் பெயர் மாற்றல்தான். நம் பெயர்கள் என்னவாயிருந்தால் அவர்களுக்கென்ன வந்தது? அவர்களுக்குத் தேவை, நம் சேவை. அவதியுற்ற நேரத்தில் நம் உதவி. எழுந்த சந்தேகங்களுக்கு நம் விடைகள். இவையனைத்தும் அடிமட்ட விலையில். அவற்றை அளிப்பவர் ராமபத்ரனாக இருந்தாலென்ன, மாடசாமியாக இருந்தாலென்ன? ஆனால், இல்லை......... நம் அடிமை மனப்பான்மையானது அதிலும் புகுந்து அமெரிக்கனுக்கு எவ்வாறு மேலும் மேலும் வளைந்து வளைந்து கொடுப்பது என்று ஆய்வு நடத்தியதன் விளைவே ராமலிங்கம் Robertஆகவும், ஜெயலட்சுமி Jenniferராகவும் உருமாறிய நிலை. சுயமரியாதை என்னும் உன்னதமான ஒரு குணத்தை சில டாலர்களுக்காகக் காற்றில் பறக்க விட்ட எனது தாயகம் இந்தியா வாழ்க! ஒளிமயமான உன் எதிர்காலத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் American Dream நனவாக, முன்கூட்டியே நான் தெரிவிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
2 கருத்துகள்:
இங்கேகூட நம்ம பேரை அவுங்களா அவுங்க சொந்த செளகரியத்துக்கு மாத்திக்கறாங்க.
சுரேஷ் இப்ப ஸ்டீவ்
ஏன், என்னையே ஒரு பாட்டி 'ட்ரிஷ்'னு கூப்பிடுவாங்க.
எல்லாம் நம்ம பேரு வாயிலெ நுழையாத காரணம்தானாம்!!!!!
ஆனா ஒண்ணு, நமக்கு( எல்லாருக்கும்தான்) வாயிலே நுழையாத 'ரஷ்யப் பெயர்கள்'எல்லாம் கஷ்டப்பட்டாவது சொல்லுவார்கள் டிவி உள்பட!
எங்கெபோய் முட்டிக்கறது?
துளசி, ஹரி, உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
துளசி, ரஷ்யப் பெயர்கள் மட்டுமல்ல, போலிஷ், ஜெர்மன், ஃபிரென்சு மற்றும் ஏனைய ஐரோப்பியர்களின் பெயர்களும் கூட உச்சரிக்கக் கடினமானவைதான். எனவே, நம் பெயர் யார் வாயிலோ நுழையவில்லை என்று நாம் வருத்தப் படத்தேவையில்லை. இது நம் BPO நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அவர்களது 'வளைந்து கொடுத்து அதிகம் ஈட்டும்' மனப்பான்மைக்கு நம் கௌரவத்தைத்தான் தியாகம் செய்வார்கள். இது பணியாளர்களின் உரிமையை பறிப்பதாகவே் எனக்குத் தோன்றுகிறது. இதனை முறியடிக்க நம் உழைப்பாளர் சட்டத்தில் ஏதும் வசதியுள்ளதா எனத் தெரியவில்லை.
ஹரி, சீன மக்களிடையே உள்ள இந்தப் பழக்கத்தை நானுமறிவேன். உங்கள் சகப் பணியாளர் விஷயத்தில் அது அவரது சொந்த முடிவு. உ-ம், உங்கள் நிறுவனம் அவரை ஜாக்கி சாங் என்று பெயர் மாற்றிக்கொள்ளுமாறு நிர்பந்திக்கவில்லை, உங்களையும் Harry என மாற்றிக் கொள்ளூமாறு கட்டாயப் படுத்தவில்லை (என்று ஊகிக்கிறேன்). ஆனால் இந்திய அழைப்பு மையங்களிலோ பெயர் மாற்றம் என்பது பணியாளர்கள் மீது திணிக்கப் பட்ட ஒரு கட்டாயம். இரு சூழ்நிலைகளுக்கும் உள்ள வேற்றுமை இப்போது தெளிவாகியிருக்குமென்று நினைக்கிறேன். சுயமரியாதை குறைவா, இல்லையா என்பதில் நாம் வேறுபடலாம். எதையும் திணிப்பது என்பதே சுயமரியாதையைக் குறைக்கும் ஒரு முயற்சியே என்பது என் கருத்து. அதிலும் இங்கே திணிக்கப் படுவது ஒருவரின் அடிப்படை அடையாளமாகிய பெயரை. ஆகவே, இத்தகைய நடைமுறைகளுக்கு என் வலுவான கண்டனங்கள்.
கருத்துரையிடுக