இது தனித் தமிழா என்று தெரியாது. ஆனால் விடலைப் பருவத்தில் விளையாட்டு மைதானங்களில் இது ஒரு இன்றியமையாத சொல்லாகும். விரிவாக சொல்ல வேண்டுமென்றால், மட்டையைப் பிடித்துக் கொண்டு, எல்லார் கவனமும் தன் மீதிருக்க, அதிவேகமாக வீசப்படும் பந்தை, அதைவிட வேகமாக, எத்திசையில் வேண்டுமானாலும் திருப்பியடித்து, எல்லாரையும் பரபரப்புடன் ஓட வைத்து, தானும் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடி ஓட்டங்களை குவித்து, கூச்சல் கும்மாளங்களுக்கொரு காரணியாகி, ஒரு உன்னதமான இன்பத்தில் திளைத்திருக்கும் வாய்ப்பே 'காஜி' எனப்படுவது (to be pronounced 'gaaji' as per சென்னை செந்தமிழ் standards).
இது எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பன்று. முதலில் மைதானத்தின் விளிம்புகளில், வேகும் வெய்யிலில், கால் கடுக்க, மணிக் கணக்காக நின்று கிடக்க வேண்டும். அந்தப் பக்கம் வருகின்ற பந்தை சரியாக தடுத்து, சரியான திசையில் திருப்பி வீசியெறிய வேண்டும். 'தேவி'னாலோ, 'தடவி'னாலோ, விளிம்பிலேயே கிடக்க வேண்டியதுதான். அங்கிருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால், மைதானத்தின் நடுப்பகுதிகளுக்கு உயர்வு பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், பதவி உயர்வுடன் பொறுப்புகளும் அதிகரிக்கும். உதாரணம், அப்போது காஜி அடித்துக் கொண்டிருப்பவர் மட்டையால் பந்தை அடிக்க, அது காற்றிலிருக்கும் போதே அதைத் தாவிப் பிடித்து, அவரிடமிருந்து காஜியை பறிமுதல் செய்வது, போன்ற சாகசங்களை நிகழ்த்த வேண்டும். அவ்வாறெல்லாம் செய்தபின், முற்றிலும் தகுதியானவரே என்று சந்தேகத்துக்கிடமின்றி நிருபணமானபின், உங்களுக்கும் காஜி அடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதல் சில முறைகளில் காஜி வந்த வேகத்திலேயே பறிக்கப்பட்டு விடும், கவனமாக ஆடாவிட்டால். காஜி பறிபோவதைப் போல் ஒரு கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது.
இவ்விடத்தில் காஜியைக் குறித்த மைதான தர்மங்களைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். "காஜி அடித்தால் காஜி கொடு" என்பது எழுதப் படாத ஒரு தர்மமாகும். "காஜி கொடுப்பவரில்லையேல் காஜி அடிப்பவரில்லை" என்ற கசப்பான உண்மையை கணக்கில் கொண்டே இந்த தர்மம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதன்படி, முதலில் காஜி அடித்த அணியினர், பிறகு எதிரணியினருக்கு காஜி கொடுக்கத் தவறக் கூடாது. நேரமாகிவிட்டது, இருட்டிவிட்டது போன்ற சப்பைக் கட்டுகளைக் காரணம் காட்டி காஜி கொடுக்காது நழுவினால், 'ஓசி காஜி' அடித்ததாகத் தூற்றப்படுவார்கள், "காஜி அஷ்டு ஓட்றாங்கடா" என்று அநியாயம் செய்தவர்களாகக் கண்டுகொள்ளப் படுவார்கள். ஆகவே, இருந்து காஜி கொடுத்து விட்டே, வீட்டுக்குச் செல்லவேண்டும், வீட்டில் தாமதமாக வந்ததற்கு வாங்கிக் கட்டிக் கொள்ளும் அபாயமிருந்தாலும்.
இன்னொரு சட்டம் 'last man காஜி' என்பது. இது (என்னைப் போன்ற) கத்துக்குட்டிகள் இடம்பெறும் அணிகளில் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஒரு அணியின் கடைசி இரு ஆட்டக்காரர்களில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் மற்றவர் தொடர்ந்து காஜி அடிக்கலாம் என்ற சலுகையே இது. கத்துக்குட்டி ஒருவரால் மற்றவரின் காஜி பறிபோகாமல் இருக்க வழி செய்யவே இந்த ஏற்பாடு. இரு அணியினரும் ஆட்டத்தைத் தொடங்கு முன்னரே 'last man் காஜி' உண்டா இல்லையா என ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து விடுவார்கள், பிறகு பிரச்சனைகள் வரவேண்டாமேயென்று.
ஓவர்களின் (over) கடைசி பந்தில் 1, 3 என்று ஒற்றைப் படை எண்களாக ஓட்டங்களை எடுத்து, அடுத்த ஓவரையும் தானே சந்திக்கும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வது 'ஓவர் காஜி' எனப்படும். தொடர்ந்து 'ஓவர் காஜி' அடித்து சக ஆட்டக்காரரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும் பேர்வழிகளும் உண்டு. காஜிதான் நட்பை விடவும் மேலாயிற்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக