வெள்ளி, ஜூன் 17, 2005

சேது சமுத்திரம் கால்வாய்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள Palk Straits வழியாக பெருங்கப்பல்களும் செல்வதற்கு வசதியாக, 82 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு மணலை கடற்படுகையிலிருந்து குடைந்தெடுத்து, அகலமானதொரு கால்வாய் அமைக்கப் படப்போவதை அநேகமாக அனைவரும் அறிந்திருக்கலாம். சேது சமுத்திரம் எனப்படும் இத்திட்டம் தமிழர்களின் நூறு வருடத்திய கனவை நனவாக்குகிறதாம் (தகவல்: மத்திய அமைச்சர் ப.சி.). எனக்குத் தெரிந்து அப்படியெல்லாம் யாரும் கனவு கண்டதாகத் தெரியவில்லை. தமிழர்களின் கனவெல்லாம் குழாயில் தண்ணி, விலைவாசியில் கட்டுப்பாடு, படித்த பின் வேலை, பள்ளி / கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு இடம் போன்ற மிக எளிமையான கனவுகளே, என்றே இவ்வளவு நாட்களும் நினைத்திருந்தேன். ப.சி.யின் தகவல் என் ஞானக்கண்ணைத் திறந்தது ஒரு புறம், ஒரு மிகப்பெரிய கண் துடைப்பு அரங்கேறிக் கொண்டிருப்பது மறுபுறம், எனலாம்.

இத்திட்டத்தில் மேற்கொள்ளப்போகும் பிரம்மாண்ட அளவிலான மணற்குடைவால் கடல் நீர் கலங்கலேற் பட்டு மாசு படப்போவது நிச்சயம் (இல்லையன்று சாதிக்க 'நீரி' என்னும் National Environmental Engineering Research Instituteஉம் வக்காலத்து. தமிழக மாநில மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை இத்திட்டம் இன்னும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் அந்த நீர்ப்பரப்பிலுள்ள கடல்வாழ் உயிரினங்கள் அழியப்போவதும் கண்கூடான உண்மை. நிச்சயமில்லாதது என்னவென்றால், இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும், ஆறு தமிழக மாவட்டங்களிலுள்ள மூன்றரை இலட்சம் மீனவர்களின் பிழைப்பு மற்றும் வருங்காலம் ஆகியவையே. இத்திட்டம் தரும் பயன்கள்: கப்பல்கள் செல்ல ஒரு குறுக்கு வழி, பயணத்தில் 800 கி.மீ மற்றும் 30 மணி நேரம் குறைவாம். யாருடைய பயணமோ 30 மணிநேரம் குறையவேண்டுமென்று தமிழர்கள் ஏன் நூறு வருடங்களாகக் கனவு கண்டார்களாம்? ப.சி, you can fool some people some time, but not all the people all the time......... என்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.

மறுபடி மறுபடி, முன்னேற்றம் என்ற பெயரில் விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமானியர்களின் பிழைப்பு காவு கொடுக்கப் படுவது இந்த பாழாய்ப்போன நாட்டில்தான். எப்படியும் சுனாமி அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறார்களல்லவா? கொடுப்போம் அவர்களுக்கு அடுத்த அடியை!

Ref:
1. NDTV site
2. Hindu news item

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒரு நல்லது நடக்க விடமாட்டீங்கலே?

Voice on Wings சொன்னது…

அனானிமஸ், உங்க பின்னூட்டத்துக்கும் (பரிந்துரைக்கும்?) நன்றி :) ஒரு மூன்றரை இலட்சம் பேர்களின் பிழைப்பில் (நிஜமாகவே) மண் விழுவது உங்களுக்கு 'நல்லதாகப்' படுகிறதா? நல்லது!

NONO சொன்னது…

இத்திட்டம் முறியடிக்க படவேண்டியதில் ஒன்று, இயற்கை தான் எமக்கு முக்கியம்! அற்ப ஆசைக்காக உயிர்ரினங்களை அழிய விடுவது முட்டாள் தனமானது...

Voice on Wings சொன்னது…

பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி, nono. இத்திட்டம் குறித்து மேலும் பல விவரங்களையும், இரு பக்க வாதங்களையும் இங்கு காணலாம்.

இது போன்ற திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புக் குரல்கள் (நீதிமன்றங்களிலும்) எவ்வாறு அமைதிப் படுத்தப் படுகின்றன எனபதை விவரிக்கும் கட்டுரை இங்கே.

தெருத்தொண்டன் சொன்னது…

கிழவியைத் தூக்கி மனையில் வை!
ஜுலை இரண்டாம் தேதி.. மதுரையில் சேது சமுத்திரத் திட்டம் தொடக்க விழா..
சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மீனவர்களும் கடல்வாழ் உயிரினங்கள் மீது அக்கறை கொண்டோரும் எழுப்பிய எதிர்ப்புக் குரல்கள் புறந்தள்ளப்பட்டன.

தமிழகத்திற்குப் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்த போது சுற்றுச் சூழலைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போட்டவர் டி.ஆர்.பாலு. இப்போது சேது சமுத்திரத் திட்டம் குறித்து எழுப்பப்படும் நியாயமான ஐயங்கள் கூட ஒதுக்கப்படுகின்றன. ஜெயலலிதா இப்போது சுற்றுச் சூழல் குறித்துப் பேசுவதும் பாலு பெருந்திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதும் வாழ்க்கை முரண்.

எப்போதுமே இருவருக்கும் சுற்றுச் சூழல் குறித்துஉண்மையான அக்கறை இருந்திருக்காது. ஏதேனும் ஒரு கோணத்தில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுவது மேலதிக வேடிக்கைக் காட்சி.

கிணற்றைத் தூர்வாரினால், சாலைகள் போட்டால், வேலை நடந்ததா இல்லையா என்று மக்களுக்குத் தெரியும். கடலை ஆழப்படுத்தினார்களா இல்லையா என்பதை யார் பார்ப்பார்கள்? ஆழப்படுத்தப்படும் மண்ணின் தன்மை, எடுத்த மண் எங்கு கொட்டப்படும், விளைவு, கப்பல் பழுது, விபத்து, எண்ணெய்க் கசிவு, ஒருவழிப்பாதை, கட்டணங்கள் என்று அலைஅலையாய்க் கேள்விகள் .. தூத்துக்குடி அருகே உள்ள பவளப்பாறைகள், சின்னச் சின்னத் தீவுகள் கதி என்ன என்பதும் விவாதத்திற்கு உரியவை என்கிறார்கள் நிபுணர்கள்..
குரல் கொடுத்த வைகோவுக்கு முக்கியத்துவம் இல்லையா இருக்கா விவாதம் ஊடகங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வை..
தெருத் தொண்டன், http://theruththondan.blogspot.com