திங்கள், ஜூன் 20, 2005

படித்த முட்டாள்களும் படிக்காத மேதைகளும்

தோழியொருவரை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு, வீடு சேர்ந்து, ஒரு படத்தின் குறுந்தகட்டையும் பார்த்து முடித்து விட்டு, இணையத்தில் புகுந்தால், சிறிது நேரத்தில் வழியனுப்பியவரும் இணையத்தில் புகுவது தெரிந்தது. வணக்கம் கூறி அரட்டையை ஆரம்பித்தோம். பயணம் குறித்து விசாரித்தேன். எங்களூரிலிருந்து பெங்களூர் மார்க்கமாக ஒரு வளைகுடா நகருக்குச் செல்லுமந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், மிகவும் பழமையாக இருந்ததென்றும், சரியான காற்றோட்டமும் இல்லாதவொன்றாக அமைந்ததென்றும் வருத்தப் பட்டார். பரிமாறப்பட்ட சிற்றுண்டியின் பரிதாப நிலை காரணமாக அதையும் தொட இயலவில்லையென்றார். என்ன தைரியத்தில் இவர்கள் மற்றொரு விமான அமைப்பை (ஏர் டெக்கன்) விட இரு மடங்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என எண்ணத் தோன்றியது. இவையெல்லாவற்றையும் விட வருத்தமளிக்கக்கூடிய ஒன்றையும் அவர் குறிப்பிட்டார். இப்பதிவின் கரு அதுவே.

அவருடன் பயணித்தவர்கள் இரு வகையாம். முதல் வகை, மேற்படிப்பு படித்த, பெங்களூர் மற்றும் வளைகுடா நாடுகளில் மென்பொருள் / பொறியியல் துறைகளில் பணியாற்றுவோர், மற்றும் குடும்பத்தினர். இரண்டாம் வகை, (அதிகம்) படிக்காத, ஆங்கிலம் நன்றறியாத, எளிய தோற்றமும் உடமைகளும் கொண்ட, வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றுவோர். ஒரு வசதிக்கு, இந்த இரு வகைகளை, 'படித்த முட்டாள்கள்' (ப.மு) என்றும் 'படிக்காத மேதைகள்' (ப.மே) என்றும் வைத்துக் கொள்வோம் - அடைமொழிக் காரணமறிய மேற்கொண்டுப் படியுங்கள்.

ப.மே. இனத்தவர்களை, ப.மு. இனத்தைச் சேர்ந்த விமானப் பணிப் பெண்களும் தரக் குறைவாக, மரியாதையின்றி நடத்தினார்களாம். வாடிக்கையாளர்களிடம் காட்டவேண்டிய அடிப்படை நட்புணர்வு, சேவை மனப்பான்மை போன்றவற்றுக்கெல்லாம் ப.மே. இனத்தவர்கள் அருகதையற்றவர்கள் போலும். ப.மே. பயணிகளுக்கு அருகில் அமரும்படி நேர்ந்த ப.மு. பயணிகளோ, தம் நிலையை நொந்து மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தது அவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்ததாம். அத்தகையவொரு ப.மு. பெண்மணி, பொறுக்க முடியாமல் விமானப் பணிப்பெண்ணிடம் அவரை வேறு இருக்கைக்கு மாற்றித் தருமாறு வேண்டினாராம். என்னாயிற்று என்றதற்கு, ஒரு ப.மே. அருகில் அமர்ந்து தன்னால் பயணிக்க இயலாது என்று வெளிப்படையாகவே கூறினாராம். அதற்கு ப.மு. பணிப்பெண்ணும், எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டதால் அவரால் உதவ இயலவில்லையென்றும், முடிந்திருந்தால் நிச்சயமாக அந்த வேண்டுகோளை நிறைவேற்றியிருப்பாரென்றும் விடையளித்தாராம். ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்த உரையாடலின் பொருளை தன் அறிவுக் கூர்மையால் உணர்ந்த ப.மே., மிகவும் அவமானமடைந்து, குறை கூறிய அந்தப் ப.மு. பயணியிடம் உடைந்த ஆங்கிலத்தில், தான் அவருக்கு எந்தத் தீங்கும் இழைக்கப் போவதில்லையென்றும், ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வெகு தூரம் சென்று பொருளீட்ட வேண்டியிருக்கிறதென்றும் கூறினாராம். அதன் பிறகு ப.மு. வாயை(யும் மற்றதுகளையும்) மூடிக்கொண்டு பயணம் செய்தாராம்.

மேலும் எனது தோழி கூறியது: ப.மே.க்கள் அதிகம் படித்திராவிட்டாலும், அவர்கள் நடத்தையில் கண்ணியமும், நாகரீகமும், பலமுறை வெளிநாடு சென்று வந்த அனுபவமும் தெரிந்ததாம். அவர்கள் நடத்தப் பட்ட விதத்தையும் மீறி, மற்றவர்களுக்கு சாமான்கள் இறக்கித் தருவது போன்ற ஒத்தாசைகளும் செய்தார்களாம். ஆனால் ப.மு.க்களோ, விமானம் நிறுத்ததிற்கு வருமுன்னரே முண்டியடித்துக் கொண்டு எழுந்து, தடாலடியாக சாமான்களையிறக்கி, மற்றவர்களுக்கும் இன்னல் விளைவித்துக் கொண்டிருந்தார்களாம்.

வேடிக்கை என்னவென்றால், நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட ப.மு.க்களின் எண்ணிக்கையே கருத்தில் கொள்ளப்படுகிறது. எங்கேயோ தவறிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nalla Pathivu!

ஒரு பொடிச்சி சொன்னது…

---ப.மு.க்களோ, விமானம் நிறுத்ததிற்கு வருமுன்னரே முண்டியடித்துக் கொண்டு எழுந்து, தடாலடியாக சாமான்களையிறக்கி, மற்றவர்களுக்கும் இன்னல் விளைவித்துக் கொண்டிருந்தார்களாம்.---
:-)
உண்மை!

அடிப்படையில் தவறு இருக்கிறதுதான். ஆனால் பொருளாலும் அதிநவீன நாகரீகங்களாலும் (cosmetics, Western) 'வளர்கிற'
உலகில் இதுபோன்ற ஏற்றதாழ்வு/இடைவெளிகள் கூடிக்கொண்டேதான் போகும். என்ன செய்ய முடியும்.
நல்ல பதிவு.

Muthu சொன்னது…

நல்ல பதிவு.

முகமூடி சொன்னது…

சிங்கப்பூரில் இருந்து சென்னை பறந்து பாருங்கள்... அப்புறம் இந்த பதிவை வேறு விதமாக போடுவீர்கள்

பெயரில்லா சொன்னது…

அட எங்கடா 'சுருதி பேதம்' யில்லாம இருக்குதேன்னு? நினைச்சேன்., சிங்கப்பூர்ல இருந்து., சென்னைக்குக்கும் மற்றும் சென்னையிலிருந்து சிங்கைக்கும் சேர்த்து மொத்தம் 6 to 7 (முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணம் செய்திருப்பேன்., அதில் ப.மே விட ப.முக்களே அதிகம் இருந்தனர்., பணிப்பெண்ணைப் பார்த்து இளிப்பது., தரக்குறைவாக 'கமெண்ட்' செய்வது., விமானத்தில் தரும் மதுபானத்தை திரும்ப, திரும்ப கேட்டு ஊத்திக் கொள்வது., 4 மணிநேரப் பயணத்தில் 40 முறை குறுக்கும், நெடுக்குமாக நடப்பது. எல்லாம் எல்லாரும் செய்வதுதான். குருவிகள் ஓவர்., எல்லாம் படித்த 'கம்பியூட்டர் ஸ்பேர் பார்ட்ஸைக்' கவ்வும் குருவிகள்தான். படிக்காதவர்கள் எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்?., அதைச் சொல்லுங்கள்.

துளசி கோபால் சொன்னது…

சபாஷ் அப்படிப்போடு!

நீங்க சொன்னது அப்படியே உண்மை!!!!

இவுங்க செய்யற அட்டகாசம் இருக்கே அப்பப்பா

Voice on Wings சொன்னது…

அனானிமஸ், பொடிச்சி, முத்து, முகமூடி, அப்பிடிப்போடு, மூர்த்தி மற்றும் துளசி, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. :)

எவ்விடமாயினும், எவராக இருந்தாலும் ஒரு சக மனிதரை மரியாதையுடன் நடத்தத் தெரியாதவர்கள் / விரும்பாதவர்கள், எவ்வளவு படித்திருந்தாலும், எத்தனை வசதிகள் பெற்றிருந்தாலும்,் என்னைப் பொருத்த வரை தாழ்ந்தவர்களே.

முகமூடி சொன்னது…

ஓ... குருவிங்கள்லாம் ப.மு வகையில சேத்தியா...

சுட்டுவிரல் சொன்னது…

திறந்த வாயில்களில் (அது பேருந்தாக இருந்தாலும்) நமதூரில் முண்டியடித்து ஏறுவதைப்பார்த்தே பழக்கப்பட்ட நான் (என்னையும் சேர்த்துத்தான்),
முதலில் வெளிநாட்டில் தான் (சவூதியில்) பிறருக்கு வழிவிடும் நாகரீகத்தைப் பார்க்க முடிந்தது.

என்னைப்பொறுத்தவரை இதில் ப.மு ப.மே விதியாசஙளில்லை. ஆனால் பழக்க வழ்க்கத்தில் உள்ளது.

Voice on Wings சொன்னது…

சுட்டுவிரல், முண்டியடித்து ஏறுவதில் பேதமில்லாதிருக்கலாம். நான் கூற வந்தது அந்தப் பயணத்தில் தாம் படித்தவர்கள், ஆகவே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் / தனித்து விடப்பட வேண்டியவர்கள் என்று உரிமை கொண்டாடியவர்கள்், இறுதியில் எவ்வாறு அங்கிருந்த படிக்காத (ஆகவே தாழ்ந்த) மக்களைவிட அநாகரீகமாக நடந்து கொண்டார்கள் என்பதையே. உயர்வு - தாழ்வு என்று பொதுவாக அறியப்பட்ட / நம் மனங்களில்் புகுத்தப்பட்ட குணங்கள், உண்மையில் தலைகீழாக வெளிப்பட்ட முரண்பாட்டைக் குறித்தே எனது பதிவு. வருகைக்கு நன்றி :)

இராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு! ப.மு.க்கள் அட்டகாசம் ரொம்பவே அதிகம்தான்.

அப்புறம், 'பறிமாரப்பட்ட சிற்றுண்டி', 'பரிமாறப்பட்ட சிற்றுண்டி' என்றிருக்க வேண்டும்.

Voice on Wings சொன்னது…

நன்றி இராதாகிருஷ்ணன். திருத்திவிட்டேன் :)

contivity சொன்னது…

VoW,
இதில் படித்தவர் படிக்காதவர் என்று பிரித்துப் பார்க்க இயலாது.. படித்த படிக்காத முட்டாள்களும் , படித்த படிக்காத மேதைகளும் இருக்கின்றனர். சக மனிதனை மதிக்கத் தெரிந்தவர் மேதை..
நன்றி..

Voice on Wings சொன்னது…

contivity, நான் குறிப்பிட்ட சம்பவத்தில் அத்தகைய பிரிவினையே மேலோங்கி இருந்தது. ஆனாலும் இது படிப்பு குறித்த விஷயமல்ல என்பதை நானும் அறிவேன். நுணுக்கமாகக் கூறவேண்டுமென்றால் பூர்ஷ்வா - ப்ராலடேரியட் (bourgeousie - proletariat) பாகுபாடு எனலாம் என்றால்.......... பதிவு இடதுசாரிப் பிரச்சாரம் போலாகிவிடும். எனது நோக்கமும் அதுவல்ல. ஒரு அபத்த சம்பவத்தை விவரிப்பதே என் நோக்கம்.

"சக மனிதனை மதிக்கத் தெரிந்தவரே மேதை.." என்று உங்கள் கருத்தையே சிறு மாற்றத்துடன் கூற விரும்புகிறேன். நன்றி :)