திங்கள், ஜூலை 14, 2008

16 வயதினிலே

மதன், ரதி. பருவத்தை எட்டிப்பார்க்கும் வயசு இருவருக்கும். தாய் தேவியின் பாதுகாப்பில் மதன். ரதியோ தந்தை சிவாவின் பொறுப்பில்.

சமூகம் உயர் கணினிகளின் உதவி கொண்டு இளவட்டங்களைக் கட்டிப்போட்டு வெகு காலங்களாகி விட்டது. அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பெற்றொர்களுக்கு முப்பரிமாண ஒளிபரப்பு சென்று கொண்டே இருந்தது, அவர்களது கைக்கணினிகள், உடற்கணினிகள், இப்படி எதில் வேண்டுமானாலும். அதன் மூலமாகவே தங்கள் மக்களை இடைவிடாது கண்டித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வப்போது, "அங்கே அவனோடு என்ன பேச்சு?", "என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற? பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது!" என்ற ரீதிகளில். பெற்றோர் தம் குழந்தைகள் எதிர் பாலாரிடம் நட்பாயிருப்பதை விட ஒரே பாலாரிடம் நட்பு பாராட்டுவதை இன்னமும் தீவிரமாக எதிர்த்தார்கள்.

இந்நிலையில் ரதியும் மதனும் தங்கள் விதியை நொந்து கொண்டு, தத்தமது அறைகளிலிருந்து மின் நட்புத் தளங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள் (அதுவும் பெற்றோர்களின் மேற்பார்வையைத் தப்பவில்லை). இந்த மின் நட்புத் தளங்களில் இள வயதினர் வேறொரு மொழியை உருவாக்கி அதிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள், வெளி உலகைச் சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. இம்மொழிக்கு விளக்கவுரைகளும் வந்து கொண்டுதானிருந்தன. ஆனால் இளைஞர்களோ அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே விளக்கவுரைகளும் பயன்றறுப் போய், பெற்றோர்களுக்கு தங்கள் மக்களின் மொழி புரியாமலேயே இருந்து வந்தது.

ரதியும், மதனும் கிடைத்த இந்த இடைவெளியில் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். ரதி தனக்கு யூனிக்ஸ் (UNIX) பிடிக்குமென்றாள். மதன் வாயைப் பிளந்தான். தனது கணினியிலுள்ள விண்டோஸை கடந்து அவன் வேறெதையும் அறிந்ததில்லை. தனக்கு கவிதை நன்றாக வருமென்றும், குறிப்பாக பெண்ணை வர்ணித்து கவிதை எழுதுவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்றும் கூறினான். தன்னை வர்ணித்து ஒரு கவிதை கூறும்படி கேட்டாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில், அதுவரை அவள் அறிந்திருந்த shell scripts அனைத்தையும் விஞ்சியது. காதல் வயப்பட்டார்கள்.

விரல் நுனிக்காதல் விரைவில் சலித்தது. கவிதைப் பரிமாற்றங்கள் விரகத்தை அதிகரிக்கவே செய்தன. அவசர நிலை விரைவில் எட்டப்பட்டது. இனியும் தாமதிக்காமல் செயலில் இறங்க வேண்டுமென்பதை இருவருமே உணர்ந்தார்கள். மின் நட்பு தளத்தின் 'சிறப்புச் சேவையை' நாடுவதென முடிவு செய்தார்கள். தங்கள் சேமிப்பைச் செலவிட்டு, அதற்குப் பதிவும் செய்து கொண்டார்கள். விரைவிலேயே இருவருக்கும் வந்து சேர்ந்தன, அதற்குத் தேவையான உபகரணங்கள், பாடப் புத்தகங்களோ என்று எண்ண வைக்கும் வெளித் தோற்றத்தோடு. கண்காணிப்புகளிலிருந்துத் தப்ப வேண்டுமல்லவா?

இனி தங்கள் நோக்கத்துக்கு இடையூறாக இருக்கப் போவது சிவாவும் தேவியும்தான் என்பதை உணர்ந்தார்கள். ரதிக்கு சிவாவைப் பற்றி அதிகம் கவலையில்லை. அவனது கணினியை ஏற்கனவே ஊடுருவி, அறிய வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டுவிட்டாள். ஆகவே, அவனது கண்காணிப்பான்களை ஏமாற்றுவது கடினமல்ல. ஏற்கனவே செய்து வருவதுதான். பிரச்சனை தேவியிடமிருந்துதான். ரதியைப் போலவே (அல்லது அவளை விடப் பன்மடங்கு) கணினியில் மேதமை படைத்தவள் தேவி. அவர்களது வீட்டையே ஒரு உயர்கணினியின் பாதுகாப்பில் வைத்திருந்தாள். வெறுத்துப் போய் அரற்றினான் மதன், 'ரதி, என்னை தேவியின் பிடியிலிருந்து காப்பாற்று' என்று. அவளுக்கே அதன் சாத்தியம் குறித்து சற்று சந்தேகம் இருந்த போதும், "கவலைப்படாதே, உன்னை எல்லா கட்டுக்காவலிலிருந்தும் மீட்கிறேன்" என்று ஆறுதல் கூறினாள்.

ரதியின் அறிவுறுத்தலின் பேரில் தனது கணினியில் அவள் அனுப்பிய நிரல்களை நிறுவினான். அது வடிவமைத்தபடி, தேவியின் கணினியிலும் சென்று நிறுவிக் கொண்டது. தனது மகனின் கணினி அறிவு பற்றி தெரிந்திருந்ததாலும், அவனது கணினியிலிருந்து ஊடுருவல் ஏற்படும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்காததாலும் இத்தகைய தாக்குதலிலிருந்து தேவி தன் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஊடுருவப்பட்ட இரு பெற்றோர்களின் கண்காணிப்பான்களுக்கும் போலியான ஒளிபரப்புகள் அனுப்பும் ஏற்பாடுகள் செய்யபட்டன. ஒரு பதினைந்து நிமிட நேரம் நீடிக்கும் வகையில் இந்த போலி ஒளிபரப்பு அமைக்கப்பட்டது. அதற்கு மேல் என்றால் ஊடுருவிய நிரலியின் அளவு அதிகமாகி, வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பி விடும் என்று அஞ்சினாள் ரதி. இந்த போலி ஒளிபரப்புகள், தங்கள் மக்கள் படித்துக் கொண்டோ அல்லது வேறு வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ இருப்பது போன்ற தோற்றத்தை அந்த இரு பெற்றோர்களுக்கும் அளிக்கக் கூடியதாய் இருந்தன.

ஒரு பதினைந்து நிமிட ஏமாற்று நாடகத்தை ஏற்பாடு செய்த நிறைவில் மற்றும் மகிழ்ச்சியில், மதனும் ரதியும் அந்த 'சிறப்புச் சேவையை' பெறுவதற்கு ஆயத்தமானார்கள். விரைவஞ்சலில் (பாடப்புத்தக உறையில்) வந்த உணர்விகளையும் (sensors) உணர்விப்பிகளையும் ( ;) ) அணிந்து கொண்டு, மெய் நிகர் (virtual reality) அறைக்குள் இருவரும் பிரவேசம் செய்தார்கள், கலவியில் (அல்லது அதைப் போன்ற ஒரு அனுபவத்தில்) ஈடுபடுவதற்கு.

பிகு:

1. இது போட்டிக்குன்னு சொன்னா பொதுமாத்துதான் விழும். அதனால, இது சும்மா ஜாலிக்குதான்.
2.இதைப் படிச்சிட்டு "Keanu Reeves" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.
3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.
4. நுண்ணரசியல் பார்ட்டிங்களுக்கு - மேலே (#3) சொன்னதுதான் உங்களுக்கும்.

3 கருத்துகள்:

rapp சொன்னது…

//இதைப் படிச்சிட்டு "Keanu Reeves" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.
3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது//



இந்த பன்ச் எல்லாத்தையும் விட சூப்பர்

Voice on Wings சொன்னது…

rapp :) இது சும்மா ஒரு ஜாலி முயற்சிதான். புனைவுக்கும் எனக்கும் வெகுதூரம்.

"Speed" படம் பார்த்திருக்கீங்களா? அருமையான படம்.

rapp சொன்னது…

//"Speed" படம் பார்த்திருக்கீங்களா? //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........பாக்காமக் கூட யாராவது இருக்காங்களா, இல்ல நம்ம ஊருல அப்படி இருக்கத்தான் விட்டாங்களா