திங்கள், மார்ச் 27, 2006

Being Cyrus: திரை விமர்சனம்

அவசியம் பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் நாளிதழ்கள் இதைப் புகழ்ந்துத் தள்ளுவதாக அறிகிறேன். இணையத்திலும் பல சாதகமான விமர்சனங்களைப் பார்த்த பிறகே இதைப் பார்க்கச் சென்றேன். பார்த்த பிறகுதான் தெரிந்தது, இது நான் pseudo-art என்று கருதும் வகையைச் சேர்ந்த படம் என்று. இணையத்தின் அறிவுஜீவிகள் இதைச் சிலாகித்து எழுதுவதற்கு முன் இதைப் பதிய வேண்டுமென்றுதான் அவசர அவசரமாக இப்பதிவு. :)

நம் திரை விமர்சகர்களிடையே உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், லாப நோக்கோடு formula அம்சங்கள் என்று கருதக்கூடிய சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள், பாடல் காட்சிகள், நாயக வழிபாடுகள், ஆகிய எதுவும் இல்லாமல் ஒரு படம் வெளி வந்தால், அதை ஆகாய உயரத்திற்கு உயர்த்துவதே ஆகும். எனது அணுமுறை என்னவென்றால், இவையனைத்தையும் படத்தில் சேர்க்கவில்லை என்பதைக் கடந்து, அப்படத்தின் நிறை குறைகளை ஆராய வேண்டுமென்பதே. அண்மையில் 'தவமாய் தவமிருந்து', 'அன்பே சிவம்' போன்ற படங்களைப் புகழ்ந்து ஒரு meme அளவிற்கு பதிவுகள் வெளிவந்தது நினைவிருக்கலாம். Formula அம்சங்களைச் சேர்க்கவில்லை என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான முடிவுதான். அதற்கு மேல், அப்படத்திற்கு சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு வலுவுள்ளதா என்பதையே ஆராய்ந்து விமர்சிக்க வேண்டும். ஒரு உவமையுடன் கூற வேண்டுமென்றால், ஒருவனுக்கு குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் வேறெந்தக் கெட்டப் பழக்கமுமில்லை என்பதற்காகவே அவன் ஒரு சிறந்த மணமகனுக்கான தகுதி படைத்தவன் என்ற முடிவிற்கு வர இயலாதல்லவா? இந்த நல்ல குணங்களுடன், அவன் அன்பு செலுத்தக்கூடியவனா, மரியாதை தெரிந்தவனா, நீதி / நேர்மை பாராட்டுபவனா, குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றும் திறமை படைத்தவனா, என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகுதானே அவனது தகுதியை முடிவு செய்ய இயலும்?

இப்போது, Being Cyrus. விமர்சக தர்மத்தைக் கடைபிடித்து, கதையை வழங்கப்போவதில்லை. உங்கள் படம் பார்க்கும் திட்டத்தைக் கெடுக்கும் எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. படத்தைப் பார்த்த பின் எழுந்த தீவிரமாக கருத்துகளை மட்டுமே இங்கு வழங்குகிறேன். முதலில், formula அம்சங்கள் இல்லாத படம் என்பதைக் குறிப்பிட்டு விடுகிறேன். சைஃப் அலி கான், நஸ்ரருத்தீன் ஷா, போமன் இரானி, டிம்பிள் கபாடியா என்று நட்சத்திரப் பட்டாளத்திற்குக் குறைவில்லை. இவர்களைக் கடந்து இரண்டு மூன்று பிரதான பாத்திரங்கள் - முதியவரொருவர், போமனின் மனைவியாக வரும் சிமோன் சிங், மற்றும் ஒரு காவலதிகாரி வேடத்தில் மனோஜ் பாஹ்வா. அனைவரின்் நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தது, குறிப்பாக (வரிசைப்படி) டிம்பிள், போமன், நஸ்ரருத்தீன், மனோஜ், சிமோன்....... சைஃபுக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கும் பாத்திரம்தான்.

இந்தியாவின் சிறுபான்மை மதமான பார்ஸி மதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், அதன் அங்கத்தினர், அவர்களுக்குள்ளான பிரச்சனைகள், என்று பின்னப்பட்டிருக்கிறது கதை. பார்ஸி பின்னணியால் கதைக்கு எந்த சிறப்பும் கிடையாது. அச்சமூகத்தின் வாழ்வு முறைகள், வழக்கங்கள், அது சந்திக்கும் பிரச்சனைகள் என்பதைப் பற்றியல்ல கதை. வேறொரு மதத்தை சார்ந்த அல்லது மத சார்பற்றவொரு குடும்பமாகக் காட்டியிருந்தாலும் கதையில் எந்த மாற்றமுமிருந்திருக்காது. அதுவே எனது முதல் ஏமாற்றம். கதைக்குத் தேவையில்லாமல், அவர்களின் உடைகள், வீட்டின் அமைப்புகள், பழக்க வழக்கங்கள் என்று அநாவசியமான திசை திருப்பலாகவே அமைகிறது, கதையின் பார்ஸி பின்னணி. ஆனால் எனது முக்கியமான பிரச்சனை அதுவல்ல.

மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில், அவலமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து் கொண்டிருக்கும் சில ஜீவன்கள், அவர்களைச் சுரண்டி / ஏமாற்றிப் பிழைக்கும் வேறு சிலர், என்று தொடங்குகிறது படம். இவர்களது வாழ்க்கையில் ஒன்று சேரும் சில மூன்றாம் தரப்பினர், மற்றும் அவர்களது செயல்கள் அக்குடும்பத்தில் உண்டாக்கும் பாதிப்புகள்் என்பதுதான் கதை. வேறு மாதிரியாகக் கூற வேண்டுமென்றால், சாமர்த்தியமாகச் செயல்படும் சில சூழ்ச்சிக்காரர்களின் குற்றங்களால், சாமர்த்தியம் போதாத வேறு சில சூழ்ச்சிக்காரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள், அல்லது கொலை செய்யப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தில் அப்பாவிகள் காவு கொடுக்கப்படுகிறார்கள். முன்பு கூறிய சாமர்த்தியசாலிகள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியதோடு, கோடிக்கணக்கான சொத்துக்களின் வாரிசுதாரர்களாகிறார்கள். ஆகவே, 'எத்தகைய குற்றத்தைச் செய்தாலும், சாமர்த்தியசாலியாக மட்டும் இருந்து விட்டால், சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம்்' என்பதுதான் இப்படம் போதிக்கும் அறநெறி. இதற்கு, "கசப்பான உண்மை உள்ளபடி வழங்கப்பட்டிருக்கிறது" போன்ற சப்பைக்கட்டு வாதங்களைக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு எனது எதிர்வினை: யாருடைய பக்கம் நியாயப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இளம்பருவத்தில் சந்தித்த கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு, சாமர்த்தியமான முறையில் சூழ்ச்சிகள் செய்து (அதுவும், துளியும் சம்மந்தமில்லாதவொரு குடும்பத்தை அழிக்கும் வகையில்) கோடிகளுக்கு வாரிசாவதே, என்ற ஆலோசனை தெளிவாக வழங்கப்பட்டிருக்கிறது. (இறுதியில் "we have arrived", என்று தம் முதுகிலேயே தட்டிக்கொள்ளுதல் வேறு). இத்தகையவொரு நச்சுக் கருத்தைத் தாங்கி வரும் ஒரு படம், எந்த intellectual, arty பாசாங்குகளுடன் வந்தாலும், அதற்கு எனது கண்டனங்களே மிஞ்சும்்.

உண்மை / யதார்த்தம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது என்று புருடா விடுபவர்களுக்கு - கை ரேகைகளை வைத்து ஆள் மாறாட்டம் என்றொரு பூச்சுற்றல் செய்யப் பட்டிருக்கிறது. எனக்கு forensics பற்றி அதிகம் தெரியாது. இருந்தும், வேறொருவருடைய கை ரேகைகள் பதிந்த glovesஐ மாட்டிக் கொண்டு, தேர்ந்த புலனாய்வாளர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான காரியமா என்பது ஐயமாகத்தானுள்ளது. மேலும் கொலை விசாரணைகளில் motive நிச்சயமாக ஆராயப்படும் என்று நினைக்கிறேன். ஒரு வீட்டில் இரு கொலைகள் நடந்து, அதன் விளைவாக ஒருவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் கைவசம் வருகின்றன என்றால் அவர் மீதுதானே முதலில் சந்தேகம் வரும்? இப்படியாக, உண்மையும் தேவைக்கேற்றவாறு திரித்து வழங்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு உறுத்தும் தகவல் - பெண்ணின் சதை ஒரு சர்வ சாதாரணக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது, எந்தவொரு தேவையுமின்றி. டிம்பிள் கபாடியா ஒரு பாலுறவுக்கு ஏங்கும் நடு வயதுப் பெண்மணியாம். அவரைப் பற்றி நாயகனின் குரலில் இப்படியொரு விவரிப்பு - every one makes eye contacts, but she makes breast contacts with her every move. இதற்கு ஏற்ற காட்சியமைப்பு வேறு. மற்றும், மும்பை தெருவில் தூங்கும் ஒரு பிச்சைக்காரியின் ஆடை விலகல், அதனூடாகத் தெரியும் அவளது சதை. இன்னொரு காட்சியில், ஏறக்குறைய முழு நிர்வாணமாக ஒரு கனவுலக ஸ்த்ரீ. இதுவல்லவோ கலைநயம்? மேலும், எந்தவிதத் தயக்கமுமில்லாமல் வசைமாரிகள் வேறு...... bitch, bastard என்று, படம் முழுவதும். இவையெல்லாம் ஒரு படத்தில் இடம்பெறக்கூடாதென்பதல்ல எனது வாதம். "இது போன்ற காட்சிகள் கலாச்சாரச் சீரழிவுக்கே நம்மைக் கொண்டு செல்லும், ஆகவே இவற்றைத் தடை செய்ய வேண்டும்" என்று முழங்கும் தூய்மைவாதியல்ல நான். சமூகம் அல்லது வாழ்க்கையைப் பற்றிய விமர்சனத்தை வைக்கும் வகையில், இது போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி, ஒரு தாக்கதை ஏற்படுத்தும் genuine கலைப்படங்களை நானறிவேன். ஆனால் இது போன்றவற்றைப் பயன்படுத்தி, இதுவும் ஒரு கலைப்படமே என்று நிறுவ முயற்சிக்கும் wannabe படைப்புகள் எரிச்சலையே வரவழைக்கின்றன.

இறுதியாக, இதன் நிறைகுறைகளோடு இதைக் கண்டு களிக்கலாம். ஆனால் இதை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கும் அபத்தங்களெல்லாம் நடக்காது என்றே நம்புகிறேன், பார்க்கலாம்.

10 கருத்துகள்:

Jayaprakash Sampath சொன்னது…

நான் இந்தப் படம் பார்த்தேன். கலைப்படங்கள் மீதான உங்கள் பொதுப்பார்வை தவிர்த்து, நீங்கள் படத்தின் விமர்சனமாக எழுதியதில், ஒரு வரி கூட எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், நீங்கள் விமர்சித்த விதம் நன்றாக இருந்தது.

Voice on Wings சொன்னது…

//நீங்கள் படத்தின் விமர்சனமாக எழுதியதில், ஒரு வரி கூட எனக்கு உடன்பாடில்லை//

பிரகாஷ், கருத்துக்கு நன்றி. ஏன் உடன்பாடில்லை என்றுத் தெரிவித்தால் அறிந்து கொள்வேன். அல்லது, விருப்பமிருந்தால் உங்கள் விமர்சனத்தை எழுதவும். அதிலிருந்தும் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பிரதீப் சொன்னது…

உங்கள் கருத்துகளுடன் முழுமையாக உடன் படுகிறேன்.
மசாலா சமாச்சாரங்கள் இல்லாததாலேயோ, சில பல காட்சிகள் மெதுவாக நகர்வதாலேயோ இந்தப் படம் உலகத் தரம் பெற்று விடவில்லை. கிறுக்குத்தனமான கதையம்சம், எரிச்சலூட்டும் கதாபாத்திரங்கள் பல இடங்களில் பல்லிளிக்கும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் என தர வரிசையில் கீழேதான் இருக்கிறது.

எந்தத் தேவையுமின்றி டிம்பிள் கபாடியாவை உறவுக்கு ஏங்கும் பெண்ணாகக் காட்டுவது அபத்தம்.

பாலுணர்வுக் காட்சிகளை அப்படியே காட்டி அதற்கு உள்ளதை யதார்த்தத்தைத் தானே காட்டுகிறோம் என்று சொன்னவர்களுக்கு பாலு மகேந்திரா ஒரு முறை பதில் கொடுத்தார். "இது யதார்த்தமென்றால் கக்கூஸ் போவதும் யதார்த்தம்தானே - அதையும் காட்ட வேண்டியதுதானே" அப்படிப் பட்ட பாலு மகேந்திராவும் அது ஒரு கனாக்காலம் என அதல பாதாளத்துக்கு இறங்க வேண்டி வந்தது.

என்னைப் பொறுத்தவரை being cyrus வெறும் sirens.

Voice on Wings சொன்னது…

பிரதீப், உங்கள் கருத்துக்கு நன்றி.

சைஃபின் பாத்திரம்தான் utterly unconvincing. தெருவில் உறங்கும் பிச்சைக்காரியிடமெல்லாம் அன்பு செலுத்தும் மென்மையான இதயம் படைத்தவர் என்றெல்லாம் (நம்பகத்தனமற்ற வகையில்) காட்டி விட்டு, பிற்பாதியில் ஒரேயடியாக உல்டாவாகி விடுகிறது அவரது வேடம் :) கொஞ்சம் surreal அம்சங்களைப் புகுத்தியிருக்கிறார்கள். அசாரிரீ போல் பேசப்படும் வசனங்கள், halucinatory கனவுகள், நொடிப்பொழுதில் தோன்றி மறையும் flashback, என்றெல்லாம். இதுவொன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம், ஏதோ புது முயற்சியென்று. ஒளிப்பதிவைக் கண்டு நானும் அசந்து விட்டேன், குறிப்பாக titles போடும்போது. பழுதான ஒளிப்பதிவா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட special effectsஆ, என்று குழம்பித்தான் போனேன். இங்கு அரங்கின் ஒலியமைப்பு ஒரே இரைச்சலாக இருந்ததால், ஒலியை சரியாக கவனிக்கவில்லை. எங்கே சென்று பார்த்தீர்கள் - PVRஇலா, Prasadsஇலா? (noticed that you are also in Hyd)

பிரதீப் சொன்னது…

என் தலை எழுத்து.
பி வி ஆரில் கொள்ளக் காசு குடுத்து டிக்கட் அடித்துப் பிடித்து ரிசர்வ் செய்து பார்த்தேன்.

Voice on Wings சொன்னது…

நானும் PVRஇல்தான் பார்த்தேன். ஒலியமைப்பின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்ததைப் போல் தோன்றியது. ஆம், மற்ற அரங்குகளை விட, இந்த PVR, Prasads ஆகியவற்றில் நுழைவுச் சீட்டின் விலை கொஞ்சம் அதிகம்தான்.

Anand சொன்னது…

Wings: I do agree with many points you have raised, and I admire your tone, and neither do I say that this film is award worthy; yet I would disagree with your contention that this film was pretentious. And more importantly, I do not consider the Prsi element to be vestigial. I can at-least hope to agree to disagree with you on quite a few other counts as well! Cheers!

Voice on Wings சொன்னது…

Anand, 'agree to disagree' is the best option :)

Maybe the moral of the story is not a big deal (to me, it is). Even the unrealistic faking of finger-prints can be overlooked, and probably you're right about the Parsi background too (from your logic that Bharatiraja did what he knew best - creating village-centric movies, and similarly, Homi offered what he knew best - a Parsi setting).

I guess the key disagreement that we have is whether the movie is pretentious or not. I have walked out more satisfied watching some of the other Indian movies recently - some movies by Nagesh Kukunoor (Iqbal & Teen Deewaraen), some movies featuring Konkona Sen Sharma like Page 3 and Mr/Mrs.Iyer (and I hear excellent feedback about 'Amu' though I havent watched it), a Malayalam movie titled 'Paadam Onnu, Oru Vilaapam' - just an offhand listing - and I rate them better than this flick. They seemed more genuine that this one, more natural and less irritating. I am amused by the attempts to compare this one with 6th Sense kind of ending. 6th sense was far far more captivating, and I was totally shaken by its ending :) However, I agree that the movie does offer a surprise or two, though it doesnt come as too much of a surprise.

Nirmala. சொன்னது…

படம் பார்க்க வேண்டும் என்றே உங்கள் விமர்சனம் படிக்காமல் வைத்திருந்தேன். எனக்கு நிஜத்துக்கு ரொம்பப் பக்கத்தில் போய் வந்தது போலத்தான் இருந்தது. மூன்றாவது வரிசையில் உட்கார்ந்ததில் முகத்தில் மோதிய திரையையும், செல்பேசியில் ஓயாமல் தொணதொணக்கும் 'சத்யம்' மக்களையும் தவிர்க்க முடிந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்!

Voice on Wings சொன்னது…

நிர்மலா, நீங்கள் படம் பார்க்கும் வரை நினைவில் வைத்துக் கொண்டு, இதைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. பலரும் படம் நன்றாக இருப்பதாகவே கூறியுள்ளார்கள். என்னவோ, எனக்கு அந்த அளவிற்கு கதை மீது பற்றுதல் ஏற்படவில்லை.

//எனக்கு நிஜத்துக்கு ரொம்பப் பக்கத்தில் போய் வந்தது போலத்தான் இருந்தது.//
திரைக்கு வெகு அருகில் உட்கார்ந்ததால் அப்படியொரு உணர்வு ஏற்பட்டிருக்கலாமோ? :) Just joking.

செல்பேசிகள் கொடுமைதான். பொதுவிடங்களில் etiquette என்பது கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து கொண்டுதானிருக்கிறது.