தோழியொருவரை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு, வீடு சேர்ந்து, ஒரு படத்தின் குறுந்தகட்டையும் பார்த்து முடித்து விட்டு, இணையத்தில் புகுந்தால், சிறிது நேரத்தில் வழியனுப்பியவரும் இணையத்தில் புகுவது தெரிந்தது. வணக்கம் கூறி அரட்டையை ஆரம்பித்தோம். பயணம் குறித்து விசாரித்தேன். எங்களூரிலிருந்து பெங்களூர் மார்க்கமாக ஒரு வளைகுடா நகருக்குச் செல்லுமந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், மிகவும் பழமையாக இருந்ததென்றும், சரியான காற்றோட்டமும் இல்லாதவொன்றாக அமைந்ததென்றும் வருத்தப் பட்டார். பரிமாறப்பட்ட சிற்றுண்டியின் பரிதாப நிலை காரணமாக அதையும் தொட இயலவில்லையென்றார். என்ன தைரியத்தில் இவர்கள் மற்றொரு விமான அமைப்பை (ஏர் டெக்கன்) விட இரு மடங்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என எண்ணத் தோன்றியது. இவையெல்லாவற்றையும் விட வருத்தமளிக்கக்கூடிய ஒன்றையும் அவர் குறிப்பிட்டார். இப்பதிவின் கரு அதுவே.
அவருடன் பயணித்தவர்கள் இரு வகையாம். முதல் வகை, மேற்படிப்பு படித்த, பெங்களூர் மற்றும் வளைகுடா நாடுகளில் மென்பொருள் / பொறியியல் துறைகளில் பணியாற்றுவோர், மற்றும் குடும்பத்தினர். இரண்டாம் வகை, (அதிகம்) படிக்காத, ஆங்கிலம் நன்றறியாத, எளிய தோற்றமும் உடமைகளும் கொண்ட, வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றுவோர். ஒரு வசதிக்கு, இந்த இரு வகைகளை, 'படித்த முட்டாள்கள்' (ப.மு) என்றும் 'படிக்காத மேதைகள்' (ப.மே) என்றும் வைத்துக் கொள்வோம் - அடைமொழிக் காரணமறிய மேற்கொண்டுப் படியுங்கள்.
ப.மே. இனத்தவர்களை, ப.மு. இனத்தைச் சேர்ந்த விமானப் பணிப் பெண்களும் தரக் குறைவாக, மரியாதையின்றி நடத்தினார்களாம். வாடிக்கையாளர்களிடம் காட்டவேண்டிய அடிப்படை நட்புணர்வு, சேவை மனப்பான்மை போன்றவற்றுக்கெல்லாம் ப.மே. இனத்தவர்கள் அருகதையற்றவர்கள் போலும். ப.மே. பயணிகளுக்கு அருகில் அமரும்படி நேர்ந்த ப.மு. பயணிகளோ, தம் நிலையை நொந்து மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தது அவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்ததாம். அத்தகையவொரு ப.மு. பெண்மணி, பொறுக்க முடியாமல் விமானப் பணிப்பெண்ணிடம் அவரை வேறு இருக்கைக்கு மாற்றித் தருமாறு வேண்டினாராம். என்னாயிற்று என்றதற்கு, ஒரு ப.மே. அருகில் அமர்ந்து தன்னால் பயணிக்க இயலாது என்று வெளிப்படையாகவே கூறினாராம். அதற்கு ப.மு. பணிப்பெண்ணும், எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டதால் அவரால் உதவ இயலவில்லையென்றும், முடிந்திருந்தால் நிச்சயமாக அந்த வேண்டுகோளை நிறைவேற்றியிருப்பாரென்றும் விடையளித்தாராம். ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்த உரையாடலின் பொருளை தன் அறிவுக் கூர்மையால் உணர்ந்த ப.மே., மிகவும் அவமானமடைந்து, குறை கூறிய அந்தப் ப.மு. பயணியிடம் உடைந்த ஆங்கிலத்தில், தான் அவருக்கு எந்தத் தீங்கும் இழைக்கப் போவதில்லையென்றும், ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வெகு தூரம் சென்று பொருளீட்ட வேண்டியிருக்கிறதென்றும் கூறினாராம். அதன் பிறகு ப.மு. வாயை(யும் மற்றதுகளையும்) மூடிக்கொண்டு பயணம் செய்தாராம்.
மேலும் எனது தோழி கூறியது: ப.மே.க்கள் அதிகம் படித்திராவிட்டாலும், அவர்கள் நடத்தையில் கண்ணியமும், நாகரீகமும், பலமுறை வெளிநாடு சென்று வந்த அனுபவமும் தெரிந்ததாம். அவர்கள் நடத்தப் பட்ட விதத்தையும் மீறி, மற்றவர்களுக்கு சாமான்கள் இறக்கித் தருவது போன்ற ஒத்தாசைகளும் செய்தார்களாம். ஆனால் ப.மு.க்களோ, விமானம் நிறுத்ததிற்கு வருமுன்னரே முண்டியடித்துக் கொண்டு எழுந்து, தடாலடியாக சாமான்களையிறக்கி, மற்றவர்களுக்கும் இன்னல் விளைவித்துக் கொண்டிருந்தார்களாம்.
வேடிக்கை என்னவென்றால், நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட ப.மு.க்களின் எண்ணிக்கையே கருத்தில் கொள்ளப்படுகிறது. எங்கேயோ தவறிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.