ஞாயிறு, டிசம்பர் 07, 2008

"வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை"

'இப்படிக்கு ரோஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியை உள்ளடக்கிய சில பதிவுகளைக் காண நேரிட்டது. ஈழம் பற்றி சில நாட்களுக்கு முன் அதிக பரபரப்போட பேசப்பட்டது. ஈழத்தில் / இலங்கையில் அமைதி திரும்பி அனைவருக்கும் ஏற்புடைய சமரசம் / தீர்வு ஏற்பட வேண்டியது நிச்சயமாக நமது நெடுங்கால இலக்காக இருக்கிறது. ஆனா அதற்கு முன்பு போர்ச்சூழலால் அவதிப்படும் மக்களின் துயரைத் துடைப்பதுவும் ஒரு அவசரத் தேவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். தேசிய / சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் உணவு மூட்டைகளை வெற்றிகரமாக அனுப்பி விட்டோம். அவ்வளவு மெனக்கெடாமலேயே அதை விட அதிகமாக அம்மக்களுக்கு நம்மால் செய்ய முடியுமென்று தோன்றுகிறது.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் நமது நாட்டில்தான் அதிக அளவில் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கறேன் (இந்தத் தகவல் தவறாகவும் இருக்கலாம்). மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தெரிய வருவது என்னன்னா, கொட்டும் மழையில் செங்கல்பட்டு வரை மனிதச் சங்கிலியாக நிற்பதை விட நம்மால் மேலும் பயனுள்ள வகையில் உதவ முடியும் என்பதுதான்.

தமிழகம் - இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்று. (எந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுகிறது). தொழில்மயமாக்கம் (#1), அந்நிய முதலீடு (#3), ஏற்றுமதி (#3), பொருளாதாரம் (#3 - state's GDP = US$70 billion), அதிகமான வீட்டு உரிமையாளர்கள் (#3), இத்யாதி, இத்யாதி........ இப்படி செல்வச் செழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தால் நிச்சயமாக தன்னை நம்பி வந்தோருக்கு இதை விட அதிகமாகச் செய்து தர இயலும். நாம் கோருவதெல்லாம் 'வசிக்க ஒரு வீடு'. நாட்டிலேயே மிக அதிகமான வீடுகளைக் கொண்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்திலிருக்கும் தமிழகத்திற்கு இது ஒரு பெரிய சவால் கிடையாது என்று நம்புகிறேன். அதே போல், 'பிழைக்க ஒரு வேலை'. நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.

நிறுவன உரிமையாளர்கள், அதிகாரப் பொறுப்பிலிருப்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பார்வைக்கு இந்த சிந்தனைகளை முன்வைக்கிறேன். மேலும், ஈழத்தவர்களை வேலைக்கு அமர்த்துவதிலோ, அல்லது அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதிலோ ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்குமானால், அவற்றை உடனே நீக்குவதற்கு நம் தமிழக அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

5 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

//நிறுவன உரிமையாளர்கள், அதிகாரப் பொறுப்பிலிருப்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பார்வைக்கு இந்த சிந்தனைகளை முன்வைக்கிறேன். மேலும், ஈழத்தவர்களை வேலைக்கு அமர்த்துவதிலோ, அல்லது அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதிலோ ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்குமானால், அவற்றை உடனே நீக்குவதற்கு நம் தமிழக அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
//

மிகச்சிறந்த கருத்து.

தமிழ் சசி | Tamil SASI சொன்னது…

இந்தியாவிற்கு அகதியாக வரும் மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை தேவைகளை கூட இந்தியா செய்து கொடுப்பதில்லை. அடிப்படை தேவை என்னும் பொழுது இந்தியா அகதிகளை அக்கறையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது அல்ல.

ஐரோப்பிய நாடுகள் போல அவர்களின் வாழ்க்கையை அவர்களே அமைத்துக் கொள்ள தேவைப்படும் சட்டங்கள் கூட இந்தியாவில் இல்லை என்பது தான் வேதனையானது. தங்களுக்கு ஏற்ற வேலைகளை கூட செய்ய முடியாத சூழ்நிலை தான் இங்கு அகதியாக வருபவர்களுக்கு உள்ளது.

ஐநாவின் அகதிகள் நலச்சட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. தன்னை வல்லரசு என கூறிக்கொள்ளும் இந்தியா, பிற நாடுகள் எப்படி இந்தப் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுகுகின்றன என்பதையாவது பார்த்து நடந்து கொள்ளலாம்.

இந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் பெரும்மளவில் அகதிகளாக உள்ளனர். இவர்களில் திபெத் மக்களின் நிலை ஓரளவிற்கு பரவாயில்லை.

ஆனால் தமிழர்களின் நிலை தான் பரிதாபமாக உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பொழுது ரவிக்குமார் ஆனந்த விகடனில் கட்டுரை எழுதினார். கருணாநிதியும் கவனிப்பதாக கூறினார். அது என்ன ஆனது என தெரியவில்லை. இந்தப் பிரச்சனையை தேவைப்படும் பொழுது பேசுவதும், பிறகு மறந்து போவதும் தான் நம்முடைய அரசியல்வாதிகளின் வாடிக்கையாக உள்ளது.

நம்மைப் போன்றவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு இயலாமையுடன் இதனை தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதும்/எழுதிக்கொண்டிருப்பதும் மட்டும் தான் முடிகிறது

Voice on Wings சொன்னது…

சென்ஷி மற்றும் தமிழ் சசி, நன்றி.

எனக்குத் தெரிந்து கிழக்கு வங்கத்திலிருந்து அதிக அளவில் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களை உள்வாங்கிக் கொண்டதோடு மட்டுமின்றி, அவர்களை இந்நாட்டுக் குடிமக்களாகவும் ஏற்றுக் கொண்டுள்ளது என்று நினைக்கறேன். கிழக்கு வங்கத்தினர்களுக்கென்று கல்கத்தாவின் புறநகர்களில் வீட்டு மனைகளெல்லாம் விநியோகிக்கப்பட்டதாக அறிகிறேன். (ஒரு சில மாதங்கள் அங்கு பணிபுரிந்த போது, ஒரு சகப் பணியாளர் அத்தகைய ஒரு குடும்பத்தின் வீட்டில் வாடகைக்கு இருந்தார்) அது போன்ற ஆதரவை எல்லாம் நம் தமிழக அரசால் நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

குறைந்தது பொதுமக்கள் வரையிலாவது, வேலை வாய்ப்பு, வீட்டு வசதி போன்றவற்றை தயங்காமல் வழங்கும் மனநிலை ஏற்படுமானால், கொஞ்சமாவது ஆறுதல் பெற வாய்ப்புள்ளது. ஆனால், இத்தகைய ஆதரவுக் கரம் நீட்டுபவர்களையும் கலைக்கும் வகையில், அவர்களுக்கெதிராக போடா / வாடா என்று சட்டங்கள் பாயாமல் இருக்க வேண்டும். அரசு அதை மட்டுமாவது உறுதி செய்யுமா என்றுத் தெரியவில்லை.

ஆட்காட்டி சொன்னது…

செருப்படி...

Voice on Wings சொன்னது…

நல்வரவு, ஆட்காட்டி.