இப்போது ஆங்கிலத்தில் முன்னணி நாவலாசிரியர்கள்லாம் யார் யாருன்னு அவ்வளவா தெரியல. பள்ளி / கல்லூரி நாட்களில் சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஜெஃப்ரீ ஆர்ச்சர், ஆர்தர் ஹெய்லி அப்படீன்னு நிறைய பேர் இருந்தாங்க. அந்த அளவு பிரபலமா இப்போது இருக்கும் நாலவாசிரியர்கள் பற்றிய தகவல் கிடைச்சா நல்லா இருக்கும். ஸ்டீஃபன் கிங் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டாலும், அவரோட நூல் எதையும் படிச்சது கிடையாது. மற்றபடி, பரபரப்பா பேசப்படும் / அவார்ட் வாங்கிய எழுத்தாளர்கள் அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, டாவின்சி கோட் எழுதிய டேன் பிரவுன், அனிதா தேசாய் போன்றவர்களின் படைப்புகளை வாங்கிப் படித்து விடுவதுண்டு.
அன்பளிப்பா கிடைத்த ஒரு மின் புத்தகப் படிப்பான் (e-book reader) கைவசம் இருப்பதால், அதற்கு தீனி போடுவதற்கு (அல்லது, என்னோட இலக்கியப் பசிக்கும் தீனி போடும் வகையில்) மின் புத்தக வேட்டை செஞ்சிக்கிட்டு இருந்தேன். Manybooks, Feedbooks போன்ற தளங்களில் நிறைய மின் புத்தகங்கள் இலவசமா கிடைக்குது. பெரும்பாலும் பழைய classics ரக நூல்கள். இவைகளை பெருமளவுக்கு பதிவிறக்கி படிச்சு முடிச்சாலும், (அவற்றில் பல வெகு சிறப்பா இருந்தாலும்), இப்போதைய நிகழ்கால எழுத்துக்களைப் படிக்கும் ஆர்வம் அதிகமாயிட்டு வருது. அதை மனதில் கொண்டு மேற்கூறிய தளங்களில் தேடிய போதுதான் கிடைத்தது இந்த அருமையான புத்தகம்.
கணினித் துறையில் இருக்கிறவங்க, மற்றும் ஆங்கிலப் புனைவுக் கதைகள் படிக்கும் ஆர்வமுள்ளவங்க நிச்சயமா இதை விரும்புவாங்கன்னு தோணுது. ஹேக்கர்களின் (hackers) வாழ்கையை அடிப்படையா கொண்ட கதை. தங்களின் அபரிமிதமான திறமையை கொண்டு சட்ட விரோதமான / சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுக்கும் சில மென்பொருள் மற்றும் இதர வல்லுனர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, ஒரு குழு (அதை Crew என்று கூறிக் கொள்கிறார்கள்) அமைத்துக் கொண்டு, ஒரு சமத்துவமான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் நிகழ்த்தும் ஏமாற்று வேலைகளிலிருந்து கிடைக்கும் பணத்தை விட, அந்த வாழ்க்கை முறை தரும் untraceability, அமைப்பு சாரா தன்மையே அவர்களை தொடர்ந்து அவ்வாறு வாழத் தூண்டுகிறது. வரிப் பணம் கட்டுவதில்லை, போலி கடனட்டைகள், போலி அடையாள அட்டைகள்ன்னு, ஒரு 'off-the-grid' வாழ்வே அவர்களோடது. ஆண் - பெண் பேதம் என்பதுவும் கிடையாது. இந்தக் கதையில் சொல்லப்பட்ட Crewவின் தலைமைப் பொறுப்பே ஒரு பெண்ணின் கையில்தான். மேலும், முடிவுகளை அனைவரும் சேர்ந்து எடுப்பது, மற்றும் கிடைக்கும் வருமானத்தை அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதுன்னு, ஒரு ஜனநாயக, சமத்துவ, ideal சமூகம் அவர்களுடையது. ஒரே பிரச்சனை அவர்கள் செய்யும் ஏமாற்று / மோசடி வேலைகள்தான் :) வெறும் தொழில்நுட்ப விஷயங்கள்ன்னு மட்டுமில்லாம, எனது இதயத்திற்கு நெருக்கமான இடது / liberal கருத்தியல்களும் அதைச் சார்ந்த சில நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. (There's a liberal deep inside every programmer என்பது எனது இன்றைய அருள்வாக்கு).
இந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சனங்கள் எப்படின்னு பாத்தா, மேல இருக்கும் சுட்டியிலேயே பலர் கருத்து / விமர்சனங்களைத் தெரிவிச்சிருக்காங்க. சுத்தமா நல்லாயில்லன்னு சில பேர்களும், ஆகா அபாரம்ன்னு சில பேரும் கருத்து தெரிவிச்சிருகாங்க. இடைப்பட்ட கருத்துகளே கிடையாது. அதிலிருந்தே இது ஒரு தீவிர வகை நூல்ன்னு தெரிய வரலாம் :) இருபத்தியோராம் நூற்றாண்டின் சிந்தனையாளர்கள்ன்னு நான் நினைக்கும் சிலர் Steven Levitt (Freakonomics நூலின் ஆசிரியர்), Malcolm Gladwell (Blink ஆசிரியர்), Seth Godin (Viral Marketing மற்றும் இதர பல நூல்கள்), மற்றும் Cory Doctorow (பிரபல Boing boing வலைப்பதிவின் ஒரு முக்கிய பங்களிப்பாளர்). இதில் கடைசி இருவரும் இந்த நூலைப் பரிந்துரை செய்திருக்காங்கன்னு தெரிய வருது. என்னோட தீர்ப்பு என்னன்னு கேட்டா - எனக்கு plot, groundன்னுல்லாம் சொல்லத் தெரியல. கதை பரவாயில்லை ரகம். எழுத்து நடை, சம்பவங்கள், விவரிப்புகள் ஆகியவை வெகுவாகக் கவர்ந்தன. முயற்சி செய்து பார்க்க விரும்பறவங்க மேலுள்ள சுட்டியிலிருந்து பதிவிறக்கி படிச்சிகோங்க :)
8 கருத்துகள்:
ஜான் கிரிஷாம், க்ரைட்டன், அயன் ராங்க்ளின், கென் ஃபாலட்லாம் படிக்க மாட்டீங்களா? கிரிஷாமும் ராங்க்ளினும் இந்த வகையறால டாப்னு நினைக்கிறேன். ஹாக்கர்ஸ் பத்திய விறுவிறுப்பான ஒரு நான்பிக்சன் புத்தகம்: Underground.
சாத்தான், ஜான் கிரிஷாம் பெயர் கேள்விப் பட்டிருக்கேன். ஆனா எதுவும் படிச்சது கிடையாது. நீங்கள் குறிப்பிட்ட இதர நாவலாசிரியர்களையும் முயற்சி செய்து பார்க்கிறேன். மேலும், Underground சுட்டிக்கு ரொம்ப நன்றி. அதைப் பதிவிறக்கி படித்து விட்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.
(இந்த மாதிரி பொதுச் சேவை எல்லாம் நிறைய பண்ணுங்கப்பா :) )
கிரைட்டன்தான் Jurassic park கதையின் ஆசிரியர் அல்லவா? அதைப் புத்தக வடிவில் படித்தது கிடையாது, ஆனால் திரை வடிவில் அதன் முன்று பகுதிகளின் குறுந்தகடுகளும் என்னிடம் உள்ளன. வெகு சிறப்பான கதை / திரைக்கதைகள். அவரது நூல்களை இனிதான் முயற்சிக்க வேண்டும்.
(பகுதி ஒன்றில், அந்தப் பூங்காவைக் கட்டுப்படுத்தும் கணினி அமைப்பு மொத்தமும் செயலிழந்து விட, அதை உயிர்ப்பித்தால்தான் மிஞ்சி உள்ள அனைவரும் உயிர் தப்ப முடியும் என்ற நிலையில், அவர்களில் ஒரு சிறுமி, 'This is UNIX, I know how to use this' என்று அந்தக் கருவிகளை உயிர்ப்பிக்கும் இடத்தை வெகுவாக ரசித்தேன் :) )
கிரிஷாம் லீகல் த்ரில்லர்களை எழுதுபவர். The Firm, The Client எல்லாம் அவர் எழுதியதுதான். டீசன்ட்டான உரைநடை. ராபர்ட் லட்லம் மாதிரி அனாவசிய அலங்காரங்களால் கதையைக் கைமா பண்ணுபவர் அல்ல. அவருடைய Street Lawyer அமெரிக்க நடைபாதைவாசிகளைப் பற்றிய த்ரில்லர். The Brethren கூட அட்டகாசமாக இருக்கும். க்ரைட்டனின் Prey என்கிற ஒரே ஒரு புத்தகம்தான் படித்திருக்கிறேன். நன்றாக இருந்தது.
சாத்தான், மேலதிக தகவல்களுக்கு நன்றி. இவைகளை எல்லாம் முயற்சி செய்து பார்க்க வேண்டும். நீங்கள் சல்மான் ருஷ்டி படித்திருக்கிறீர்களா? சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'Shalimar, the clown' என்ற நாவல் சிறப்பாக இருந்தது. அவருடைய வெறெந்த நூலையும் படித்தது கிடையாது. அவரது விவரிப்பை (narrative) போல் வேறெங்கும் படித்ததில்லை. அவரது பாணியை ஏதோ மாயாவாத..... ன்னு (magical realism) தமிழில் குறிப்பிட்டு கேள்விப்பட்டிருக்கிறேன் :)
சல்மான் ருஷ்டி படித்ததில்லை, ஆனால் ஒரு நீண்ட பட்டியலில் இருக்கிறது. :-)
கண்டுபிடித்துவிட்டேன்.
நன்றி, சாத்தான். இந்த format எனக்கு கூடுதல் வசதியானது :)
கருத்துரையிடுக