திங்கள், ஏப்ரல் 16, 2007

வியர்டுரை

எச்சரிக்கை - Proxyvon எனப்படும் ஒரு sedative மருந்தின் பாதிப்பில் இந்த இடுகையை எழுதுவதால், weirdness அதிகம் தென்பட வாய்ப்புள்ளது.

முதலில், எனது வினோதங்களைப் பிரஸ்தாபிக்கும்படி அழைப்பு விடுத்த லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நன்றி.

பிறகு, ஒரு சிறிய flashback - அதிகம் பின்நோக்கிப் போக வேண்டியதில்லை, ஒரு நான்கைந்து நாட்கள், அவ்வளவே. இடம் - Madras Bank Road, Bangalore. நேரம் - இரவு சுமார் எட்டரை மணி. வளைந்து நெளிந்து செல்லும் சாலை. லேசாகத் தூறல் போட்டிருந்தது. சிக்னல் கிடைத்ததுதான் தாமதமென விர்ரென முன்னோக்கிப் பாய்ந்தது ஒரு மோட்டார் பைக். அதில் அப்போதுதான் gymமில் (இரண்டாவது நாளாக) workoutஐ முடித்து விட்டு வரும் ஒருவன். work out தந்த உற்சாகம் / தன்னம்பிக்கை / over-confidence (இதில் நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்) -இன் காரணத்தால், சிறு மழையைக் கண்டு எச்சரிக்கை அடைவதற்கு பதிலாக, மேலும் உற்சாகமடைகிறான். (சிறுமழையைக் கண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் ஏன் எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் கட்டாயம் இவ்விடுகையை மேற்கொண்டு படிக்க வேண்டும்). அவனது உற்சாகத்தை வண்டியின் accelerator பிரதிபலிக்கிறது. தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனமாகக் கடந்து அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறான் நமது candidate. (candidate - ஆந்திர வழக்கின்படி, person / ஆள் என்பதைக் குறிக்கும்)

நம் ஆள் எப்போதும் தனக்கு முன்னால் செல்லும் வண்டியை மட்டும் பார்ப்பது கிடையாது, அதற்கும் முன் சில வண்டிகள் எவ்வாறு செல்கின்றன, எவை வேகத்தைக் குறைக்கின்றன என்றெல்லாம் sub-consciousஆகவே கவனித்துக் கொண்டு செல்லும் பேர்வழி ஆவான். அப்படி, தனக்கு ஓரிரு வாகனங்களுக்கு முன் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர், திடீரென்று வேகத்தைக் குறைத்து, நேராகப் போவதா அல்லது வலது பக்கம் (Museum roadக்குள்) திரும்புவதா என்று குழம்பிக் கொண்டிருந்ததை நம் candidate தனது ஞானக் கண்ணாலேயே அறிந்து விடுகிறான். அப்படியே, தான் சென்று கொண்டிருக்கும் வேகத்தில் தொடர்ந்தால் அந்தக் குழப்பவாதியின் (வண்டியின்) பின்புறத்தை சேதப்படுத்துவதுதான் நடக்குமென்றும் ஆழ்மனதில் உணர்ந்து விடுகிறான். உடனே, தனது முன் பின் சக்கரங்களுக்கான பிரேக்களை அழுத்தி, வேகத்தைக் குறைக்க முயலுகிறான்.

ஆனால், மழை நீராலும் எண்ணைக் கசிவுகளாலும் ஈரம் தோய்ந்த சாலையில், அவனது பைக் சறுக்கிக் கொண்டு தனது vertical நிலையிலிருந்து horizontal நிலைக்கு மாறி, தனது பயணத்தை சிறிது தூரம் தொடர்ந்து விட்டு, பிறகு நிற்கிறது. நம் ஆளுக்கு இவ்வண்ணம் நிகழ்வது இது மூன்றாவது முறை. சென்ற இரு முறைகளும் தனது உள்ளங்கைகளில் land ஆகி, எலும்பு முறிவு எதுவும் ஆகாமல் தப்பித்ததால், எப்படி விழ வேண்டுமென்பது கிட்டத்தட்ட அவனுக்கு பழக்கமாகி விட்டிருந்தது. இப்போதுதான் வினோதத்திலும் வினோதம் நடந்தது.

அவனைப் பின் தொடர்ந்து மேலும் மூன்று மோட்டார் பைக்குகள் அவனைப் போலவே சறுக்கிக் கொண்டு விழுந்தன. அவற்றில் ஒன்று விழுந்து கிடக்கும் நம் ஆளின் மீதே வந்து விழுந்தது. அதன் காரணமாக, சேதமின்றி விழ முடிந்தவனால் சேதமின்றி எழுந்திருக்க முடியாமல் போய்விட்டது. சரி, யாராவது இந்த பைக்கை முதுகின் மீதிருந்து எடுப்பார்கள் என்று காத்திருந்தான். சிறிது நேரமாகியும் யாரும் எடுக்காமல் போகவே, 'somebody pls take this bike off me' என்று கூச்சலிட்டான். (Bob Dylan 'Ma, take this badge off of me' என்று பாடிய மனநிலையில்தான் நம் ஆளும் அப்போது இருந்திருப்பானோ என்று எனக்கு ஒரு ஐயம்) அது யாருக்காவது கேட்டதோ இல்லையோ. கொஞ்சம் நேரம் கழித்து தன் மீதிருந்த பாரம் அகற்றப் பட்டு, அவனால் எழுந்திருக்க முடிந்தது.

எழுந்ததும் gymமில் warm up செய்வது போல் தனது கைகளையும் கால்களையும் நீட்டி மடக்கிப் பார்த்துக் கொண்டான், எலும்புகளெல்லாம் நலமா என்று. இடது கை கொஞ்சம் படுத்தியது. சறுக்கிய வீரர்கள் அனைவரது வண்டிகளும் வரிசையாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். எல்லாரும் நலமே என்று தெரிந்த பின், வண்டிகள் மீண்டும் பிரயாணப் பட்டன. நம் ஆளும் தனது 200கிலோ எடையுள்ள வண்டியை, படுத்தும் இடதுகையையும் பொருட்படுத்தாது, வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்ததில், ஒன்றும் பாதிப்பில்லை என்று தெரிய வந்தது. வண்டியை விற்று விட வேண்டும், இனி அது தேவையில்லை என்றெல்லாம் தோன்றியது. மறுநாள் செய்தித்தாளை வாசித்ததில், முன்தினம் பெய்த லேசான மழையால் மற்றும் பெங்களூரின் எண்ணை தோய்ந்த சாலைகளால்), இது போன்ற நிகழ்வுகள் நகரின் பல இடங்களிலும் ஏற்பட்டு, கிட்டத்தட்ட முப்பது இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் இது போல் சறுக்கினார்கள் என்று தெரிய வந்தது. சே, வண்டியைக் குறை சொல்லி விட்டோமே, நாம்தான் பார்த்து ஓட்டியிருக்க வேண்டும்.
சக்கரங்களின் காற்றழுத்தத்தையும் சரிபார்த்திருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தான்.

இப்போது ஒரு வார ஓய்வில் இருந்து கொண்டு, இடது கை வலியை மட்டுப்படுத்த Proxyvonகளை விழுங்கிக் கொண்டு (மருத்துவர் ஆலோசனைப் படிதான் - இதுல வேற எதுவும் weirdness கிடையாது. இந்த மாதிரின்னெல்லாம் நினைச்சிடாதீங்க) இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறான் நம் candidate, எப்போது தன்னால் மீண்டும் வண்டியை ஓட்ட முடியும் என்ற ஆதங்கத்துடன்.

இக்கதை நமக்கு அளிக்கக்கூடிய படிப்பினை............. வேண்டாம், இதற்கு மேல் சொதப்பப் போவதில்லை. :)

7 கருத்துகள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…

ம்ம்.. ஒண்ணும் சரியில்ல. ;)

எதையெதையோ எதிர்பார்த்துவந்தது என் தப்புத்தான். :))

உடம்பைக் கவனித்துக்கொள்ளவும்.

-மதி

Voice on Wings சொன்னது…

வாங்க, மதி :)

எதிர்பார்ப்புகளோட வந்து ஏமாற்றமடைஞ்சீங்கன்னு தெரிஞ்சி வருத்தமாயிருக்கு. weirdஆ இருக்கும்ன்னு முதல்லியே எச்சரிக்கை செய்துட்டேனே? :)

நாமக்கல் சிபி சொன்னது…

சரிதான்!

:)

டேக் ரெஸ்ட்!

பிராக்ஸிவான் - பெயின் கில்லர்தானே!

Voice on Wings சொன்னது…

சிபி :)

//பிராக்ஸிவான் - பெயின் கில்லர்தானே!//

சாதாரணமா பயன்படுத்தினா பெயின் கில்லர்தான். நம்ம வட கிழக்கு மாகாணங்கள்லதான் அதை கொஞ்சம் வித்தியாசமா பயன்படுத்தறாங்கன்னு தெரிய வருது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

கையை உடைத்துக் கொண்டு பதிவெழுதுவதே self-explanatory weirdness தான்.. ;) அதனால் ஒரு weird குணத்துடன் உங்களை விட்டு விடுகிறோம் :)

விரைவில் நலம் பெறுக !

Voice on Wings சொன்னது…

ரவிசங்கர் :) நம்ம weirdness பத்தி உங்களுக்குத் தெரியாததா?

கை ஒடைஞ்சாலும் எழுதறதுக்கு நிறைய மேட்டர் இருக்கு......... ஆனா, scim tableதான் குடுக்கறேன்னு சொன்னவங்க இன்னும் குடுக்கல்ல ;)

ஜென்ராம் சொன்னது…

ஒன்றே கால் ஆண்டு கழித்து இந்தப் பதிவைப் பார்த்து மறுமொழி இடுகிறேன். நலமாக இருக்கிறீர்களா?