வெள்ளி, ஆகஸ்ட் 05, 2005

Holy Recitals in G Minor

இதைப் போன்ற ஏதாவது ஆங்கிலப் பெயராகவே வைத்திருக்கலாம். குறுந்தகட்டை வாங்கி அதன் உரையை ஆராய்ந்தால், கண்ணில் தென்பட்டதெல்லாம் ஆங்கிலம்தான். Poovaar Senni Mannan, Pollaa Vinayen, Pooerukonum Purantharanum, Umbarkatkarasaey, Muthu Natramam, Puttril Vazh Aravum Anjen........ இவையெல்லாம் பாடல்களின் பெயர்களாம். (சென்னை வடபழனியில் 'டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ்' என்று அழகாகத் தமிழில் எழுதப்பட்ட அர்த்தமற்றப் பெயர்ப்பலகைதான் நினைவுக்கு வருகிறது) கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு தேடியதில் 'ஆனந்த விகடன்' logoவும் போனால் போகிறதென்று தமிழில் 'திருவாசகம்' என்று ஒரே ஒரு இடத்தில் மட்டும் போட்டிருக்கிறார்கள். இவையிரண்டைத் தவிர மற்றவையெல்லாமே ஆங்கிலத்தில்தான். தமிழர்களைச் சென்றடைய சரியான வியாபார உத்திதான் போலும். இது ஒரு பெரிய விஷயமா என்றுத் தோன்றலாம். திருவாசகம் ஒரு தமிழிலக்கியம் மற்றும் தமிழ் மரபைச் சார்ந்தவொன்று. அதனைக் கையாளுகையில் அது இயற்றப்பட்ட மொழியை / பின்னணியைச் சிறப்பிக்காமல் இப்படி ஒரேயடியாக உதாசீனப் படுத்தியது உறுத்துகிறது.

பாடல்கள் / இசையமைப்பு - 'சுமார்' ரகம். 'ஆகா, ஓகோ' ரகம் எது என்றுக் கேட்டால் இதே இளையராஜா இசையமைத்த 'பாரதி' படப்பாடல்கள் என்றுக் கூறலாம். "கேளடா, மானிடவா, எம்மில் கீழோர் மேலோர் இல்லை" என்றுக் கேட்கும்போது ஏற்படுவது புல்லரிப்பு. திருவாசகத்தில் "என் சாமிதான் பெரிய சாமி" என்று ஆர்கெஸ்டிரா பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் கேட்டாலும் ஏற்படுவது நகைப்பு மற்றும் "சாருக்கு எந்த நூற்றாண்டு?" என்று எழும் பரிதாபம் தோய்ந்த கேள்வியே. இசையில் புதுமையென்றுக் கூறும்படி எதுவும் புலப்படவில்லை. தமிழில் கோரஸ் (chorus) நன்றாகவுள்ளது. Muthu Natramam பாடலில் இது மேலோங்கியிருக்கிறது. மற்றபடி தமிழ்த் திரையிசை மெட்டுக்கள் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது போலொரு உணர்வு. உ-ம், அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் 'காதல் ஓவியம்' பாடலில் "தேன்சிந்தும் பூஞ்சோலை நம் இராஜ்ஜியம்" என்ற வரிக்கான மெட்டு, 'லவ் பேர்ட்ஸ்' படத்தில் 'மலர்களே' பாடலில் "உருகியதே எனதுள்ளம், பெருகியதே ஒரு வெள்ளம்" என்ற வரிகளுக்கான மெட்டு (பின்னது ரஹ்மானின் இசையல்லவா?). பழைய சோறு ருசிதான், ஆனால் ஐந்து நட்சத்திர உணவகத்தில் அதைப் பரிமாறினால் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கைதானே? இளையராஜாவின் குரல் எனக்குப் பிடித்தவொன்றாதலால், அது எனக்கு ஓரு குறையாகத் தென்படவில்லை. ஆனால் இளையராஜாவும் அவரது மகள் பவதாரிணியும் பாடிய ஒரு பாடலில், ஒரு பகுதி நேரப் பாடகருக்கும் ஒரு முழு நேரப் பாடகருக்குமுள்ள வித்தியாசம், அவர்களது குரல் வளத்திலுள்ள வேற்றுமை, ஆகியவை வெளிப்பட்டது. ஐரோப்பிய ஒலிக்கருவிகள் நன்று. ஐரோப்பியக் கூச்சல்களைத் தவிர்த்திருக்கலாம். சற்றும் பொருந்தவில்லை.

இத்திட்டத்தின் இணையத்தளத்தில் கண்டது: One of the main objectives of this project is to bring to the attention of the youth, such masterpieces from India's rich yet forgotten spiritual traditions. அதாவது, இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் போன்றப் படைப்புகளை அறிமுகப் படுத்த வேண்டும், இந்தியாவின் வளமையான ஆனால் மறக்கப்பட்டு வரும் ஆன்மீக மரபுகளின்பால் அவர்களது ஆர்வத்தைப் பெருக்க வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கமாம். எவ்வளவு தூரம் வெற்றி என்றுத் தெரியவில்லை. இந்த நோக்கத்தின் தேவையும் விளங்கவில்லை. "என்னவோய் சொல்லுதீக" என்றுப் பாடல்களைக் கேட்க முனைந்தால் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. இசைஞானியின் மீது கவிஞர் வைரமுத்து வைத்தக் குற்றச்சாட்டின் உண்மையை உணர முடிந்தது. கவித்துவத்தை அரியணையில் அமர்த்தி, இசையை அதற்குச் சாமரம் வீசச் செய்வதற்கு பதிலாக, ஓலிகளின் அராஜகமே மேலோங்கி, போனால் போகிறதென்று வரிகளுக்கு ஓரத்தில் கொஞ்சம் இடம் விட்டது போலிருந்தது. திருவாசக வரிகளுக்கேற்பட்ட இத்தகைய நிலை, மேற்கூறிய நோக்கத்தைத் தோற்கடிப்பதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. நல்ல வேளையாகப் பாட்டுப் புத்தகம் கொடுத்திருந்தார்கள். எத்தனை இளைஞர்கள் பொறுமையுடன் அதனைப் பிரித்துப் படிப்பார்களோ?

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

>>>> பழைய சோறு ருசிதான், ஆனால் ஐந்து நட்சத்திர உணவகத்தில் அதைப் பரிமாறினால் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கைதானே?

You reflected my views!

See my comments in...
http://santhoshguru.blogspot.com/2005/07/blog-post.html#comments

.:dYNo:.

Voice on Wings சொன்னது…

Dyno, I'm surprised :)

Thanks for the link to Santhosh Guru's post and comments. It was a pleasure to read them. The wiki link is useful too. (http://ta.wikibooks.org/wiki/திருவாசகம்)

தெருத்தொண்டன் சொன்னது…

vow, இளையராஜா செய்ததைக் குறை சொல்லலாமா? அவர் இந்திய அல்லது தமிழ்க் கலாச்சாரத்தின் புனிதப் பசு அல்லவோ? புரியவில்லை என்று தன்னடக்கத்துடன் சொல்வது நல்லது.

அபத்தம் என்று பல நண்பர்களால் முத்திரை குத்தப்பட்ட ஞாநியின் விமர்சனம்:
http://www.keetru.com/literature/essays/jnani.html

இளையராஜாவின் சினிமா பாடல்களை மட்டுமே ரசிக்கத் தெரிந்த என்னைப் போன்ற தெருவோரத் தொண்டர்களுக்கு திருவாசகம் புரியாது என்பது வேறு விஷயம்.

Voice on Wings சொன்னது…

தெருத்தொண்டன், உங்கள் வருகைக்கு நன்றி.

ஞாநியின் கருத்துக்கள் எனக்கு அபத்தமாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் மிகவும் இரசித்துப் படித்தேன் அவரது விமர்சனத்தை. இறுதியில் மாணிக்கவாசகரையே ஒரு பிடி பிடித்திருக்கிறார் கவனித்தீரா?

புனிதப் பசுக்களை வதைக்கக் கூடாதென்றப் பசு வதைச் சட்டமெதுவும் நடைமுறையில் இல்லைதானே? :)