வியாழன், ஆகஸ்ட் 11, 2005

திருயாசகம்

தமிழர்களின் அதீதத் தமிழ்ப் பற்றோ, இல்லை வேறென்னவோ தெரியாது. ஆனால் கொஞ்சம் நாட்களாகப் பல திக்குகளிலிருந்தும் புகட்டப்பட்டு வரும் அறிவுரை - இளையராஜாவின் திருவாசக சிம்ஃபனியைத் தரவிறக்கிக் கேட்க வேண்டாம், காசு கொடுத்து வாங்கிய பின்னரே கேளுங்கள் என்றுத் தமிழ் சமூகத்தை நோக்கி அவரவர் பிறப்பிக்கும் அன்புக் கட்டளைகள். காரணமென்னவென்றால் இது இளையராஜா தமிழுக்குத் தந்த வரப்பிரசாதம், தியாகம் மற்றும் பல சாமானியத் தமிழர்களின் நன்கொடைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது இத்யாதி, இத்யாதி....... அனைத்து வகை இசைக் குறுந்தகடுகளுக்காகவும் பெருமளவு செலவழித்தவன் என்ற போதிலும், திரும்பத் திரும்பக் கேட்க நேரிட்ட இத்தகைய கருத்து/வேண்டுகோள்/அறிவுரை எரிச்சலையே ஊட்டியது.

இளையராஜா தன் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார் என்பது பாராட்ட வேண்டியச் செயலாக இருந்தாலும், அது அவரது சொந்தத் தேர்வு, அவ்வளவே. இசையைத் தரவிறக்கிக் கேட்பதென்பது பல காரணங்களுக்காக நடைமுறையிலுள்ள வழக்கமே. John Coltraneஇன் Jazz இசையிலிருந்து, ஜானகியின் 'பொன்மேனி, உருகுதே' வரை அனைத்து வகையான பாடல்களையும் ஒலிக்கோப்புகளாக வழங்கும் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் இணையத்தில் ஏராளம். திருவாசகம் மட்டும் இதற்கு விதிவிலக்கு / நடைமுறை உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்றக் கருத்து ஏற்கும்படியாக இல்லை. என்னதான் உயரிய நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டத் திட்டம் என்ற சப்பைக்கட்டுக்களை முன்வைத்தாலும், இதே அளவு உயரிய நோக்கத்தோடு வெளிவந்த 'வந்தே மாதரம்' தொகுப்பிற்கு இத்தகைய மரியாதைகள் அளிக்கப்பட்டனவா என்று யோசிக்க வேண்டும். இளையராஜாவுக்கு மட்டும் ஏதேனும் கொம்புகள் முளைத்திருக்கின்றனவா?

பாடல்களைத் தரவிறக்குவது நேர்மையற்ற செயல் என்று வாதிடலாம். திருட்டுக்கு ஒப்பானது என்றுக் கூக்குரலிடலாம். முற்றிலும் உண்மை. நீதிமன்றங்களும் அவ்வாறே தீர்ப்பளித்துள்ளன. ஆனாலும் இந்த விவாதம் இன்றும் முற்று பெறாதவொன்றாகவே திகழ்கிறது. பல இசைஞர்கள் தரவிறக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களது வலைத்தளங்களில் சிலப் பாடல்களையாவது தரவிறக்க வழங்குகின்றனர். தங்கள் புகழ் பரவ மேற்கொள்ளும் உத்தியாகவே இதைச் செய்கின்றனர். இசை ஆர்வலர்களோ, ஒரு குறுந்தகட்டை வாங்குவதற்கு முன் பாடல்களை sample செய்து பார்க்க mp3க்களை நாடுகின்றனர். ஒரு முழுத் தொகுப்பையும் தரவிறக்கத் தேவைப்படும் நேரம், இணைப்பு வசதி, hard disk இட வசதி ஆகியவற்றிற்கு பதிலாக அதன் குறுந்தகட்டை வாங்கிவிட்டுப் போவது அவர்களுக்கு சிக்கனமானது.

மேலும், பொதுவாகப் புழக்கத்திலுள்ள mp3 ஒலிவடிவம் ஒரு கீழ்த்தரமானவொன்றே (i.e. lossy format). ஒரு வானொலியில் பாடலைக் கேட்பதற்கு நிகரானதே, இந்த mp3 வடிவில் அந்தப் பாடலைக் கேட்பது. 5.1 channel ஓலியமைப்பில் ஒரு mp3 கோப்பை இயக்கினால், இரு channelகளில் மட்டுமே இசை ஓலிக்கும், மற்ற நான்கிலும் மௌனம்தான். ஏன், வெறும் stereo மட்டுமே உள்ள ஒலியமைப்பிலும், ஒரு பாடலை mp3யாகக் கேட்பதற்கும் அதே பாடலை குறுந்தகட்டிலோ, ஒலிநாடாவிலோ கேட்பதற்குமுள்ள வேறுபாட்டை வெகுவாக உணரலாம். mp3 வடிவில் ஒரு பாடலின் அளவு பன்னிரண்டு மடங்கு சுருக்கப் படுகிறது. இதனால் பாடலின் பல அத்தியாவசிய அம்சங்கள் களையப்பட்டு எலும்பும் தோலுமே மிஞ்சுகிறது. ஒரு தீவிர இசையார்வலரை mp3 வடிவம் ஒரு நாளும் திருப்திப் படுத்தாது. இதனையும் மீறி mp3 கோப்புகள் நாடப்படுகின்றன என்றால் அது தற்காலிக உபயோகத்திற்கோ அல்லது விநியோகத்திலில்லாத அரியப் பாடல்களைக் கேட்பதற்கோதான். பணவசதி அதிகமில்லாத, ஆனால் இசையார்வம் மேலோங்கியிருக்கும் மாணவ சமூகத்தில் வேண்டுமானால் mp3யின் புழக்கம் கொஞ்சம் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. இதனை நேர்மையின்மை என்ற கண்ணோட்டத்திலல்லாது பெருந்தன்மையோடு நோக்கினால் தீர்வுகள் பிறக்கலாம். உ-ம், மென்பொருள் நிறுவனங்களைப் போல், இசை நிறுவனங்களும் மாணவர்களுக்குச் சலுகை விலையில் குறுந்தகடுகளை வழங்குவது (like academic editions of software), போன்ற உத்திகள் மாணவர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கலாம்.

மேற்கூறிய வாதங்களனைத்தும் தேவையற்றவையே. ஏனென்றால், 'திருவாசக வேண்டுகோள்' விடுப்பவர்களில் பெரும்பாலோர் மற்ற பாடல்களின் mp3க்களைத் தயக்கமின்றிக் கையாள்பவர்கள்தான். திருவாசக சிம்ஃபனிக்கு மாத்திரமே அவர்களது 'காப்புரிமை மரியாதை' என்னும் சிறப்பிடம், மற்றும் ஊருக்கு உபதேசம் ஆகியன. இந்த வேற்றுமைப் படுத்தல்தான் என்னை எரிச்சலூட்டுகிற அம்சம். இவ்வாறு சிறப்பிடம் பெற்ற திருவாசகம் எவ்வாறு விநியோகிக்கப் படுகிறது என்றுப் பார்ப்போம். (சென்னையில்) குறுந்தகடு - ரு.150/-, ஒலிநாடா - ரு.50/-. தயாரிப்புச் செலவு ஒன்றேயென்றாலும் இரண்டுக்குமிடையில் ஏன் ரு.100/- வித்தியாசம்? இது எவ்வகையான நேர்மை? வியாபாரத்திற்கு வந்துவிட்ட ஒரு பொருளின் வெற்றியை தரம், கவர்ச்சித்தன்மை, விநியோகத் திறன் போன்ற வர்த்தகக் காரணிகள் முடிவு செய்யட்டும். உணர்வுகளைத் தூண்டும் வேண்டுகோள்கள் வர்த்தகத்தில் தேவையற்றவையே.

ஆகவே, நீங்கள் இதுவரை கேட்ட அறிவுரைகளுக்கு மாற்றாக நான் கூற விரும்புவது: உங்களுக்குத் திருவாசக சிம்ஃபனி இசைப் பிடித்திருந்து, உங்கள் நண்பர்கள் / உறவினர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், winamp போன்ற மென்பொருள் கொண்டு, உங்களுக்குப் பிடித்த பாடலை rip செய்து, வேண்டியவர்களுக்கு மின்னஞ்சலோ, ftpயோ செய்யுங்கள். அது அவர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தால், அவர்களும் கடைக்குச் சென்று குறுந்தகடோ அல்லது ஒலிநாடாவோ வாங்கிக் கேட்டு மகிழ்வார்கள். நம்மைப் பிசினாளிகளாகக் கருதி விடுக்கப் படும் வேண்டுகோள்களுக்கு நாம் செவிசாய்க்கத் தேவையில்லை.

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//குறுந்தகடு - ரு.150/-, ஒலிநாடா - ரு.50/-. தயாரிப்புச் செலவு ஒன்றேயென்றாலும் இரண்டுக்குமிடையில் ஏன் ரு.100/- வித்தியாசம்? இது எவ்வகையான நேர்மை? //

இது அனைத்து இசைவட்டுகளுக்கும் பொருந்தும் தானே ?

Voice on Wings சொன்னது…

அனானிமஸ், நீங்கள் கூறுவது உண்மைதான். எனினும், இவ்வாறு ஒரே தயாரிப்புச் செலவாகும் இரு பொருட்களில் ஒன்றை விட இன்னொன்றை மூன்று மடங்கு அதிக விலையில் விற்பதே, பொதுவாகவே இசை விநியோகஸ்தர்கள் கடைபிடிக்கும் நேர்மையின்மையைத்தானே காட்டுகிறது? திருவாசக விநியோகமும் இதற்கு விதிவிலக்கல்ல என்று தானே தெரிகிறது? நம்மிடம் நேர்மையை வேண்டும் திருவாசக ஆர்வலர்கள் இதற்குக் கூறும் விடையென்ன என்றுதான் கேட்கிறேன்.

Venkat சொன்னது…

திருவாசகத்தை எம்பி3 வடிவில் கேட்கத் தயங்க வேண்டும், தயங்கினேன் என்று எழுதியவன் என்ற முறையில் நான் விளக்கம் தருவது கடமையாகிறது.

மற்ற இசைத்திட்டங்களைப் போலல்லாது இது பொதுமக்களின் பணத்தில் நேரடியாக உருவாக்கப்பட்டது. என்னைப் பொருத்தவரை இதுபோல பலர்கூடிச் செய்யும் காரியங்கள் வரவேற்கப்படவேண்டும். குறிப்பாக கலைத்துறையில். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன, ஒன்று மக்களின் நேரடி ஈடுபாடு - தங்களுக்கு விருப்பம் இருக்கிற திட்டங்களுக்குத்தான் பணம் தருவார்கள். மற்றது கலைஞரின் பொறுப்புணர்வு.இதில் ஏப்பம் விட்டால் அல்லது தரம் குறைந்த படைப்பை வெளீயிட்டால் நாளை இன்னொரு திட்டம் சாத்தியமில்லாமல் போகும். மாறாக இது வெற்றி பெற்றால் பல - வர்த்தக ரீதியாக முதலீட்டுச் சாத்தியமற்ற கலைப்படைப்புகள் உருவாகக் கூடும்.

இது இளையராஜாவுக்கான தனிச் சலுகை என்று நான் பார்க்கவில்லை. நாளை கமலஹாசன் மருதநாயகம் எடுத்தாலோ, ஏ.ஆர். ரகுமான் ஒரு தேசபக்தி அல்லது இஸ்லாமிய கீதம் பொதுப்பணத்தில் வெளியிட்டாலோ இந்த மரியாதையைத் தருவேன்.

மற்றபடி எம்பி3 நீங்கள் சொல்லியிருப்பதைப் போல முழுக்க முழுக்க "இழப்புள்ள" வடிவம் இல்லை. அப்படியிருந்தால் ஆப்பிள் முதல் யாகூ வரை யாரும் அதை விற்று பணம் பண்ண முடியாது. கொஞ்சம் மேலதிக விபரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Voice on Wings சொன்னது…

வெங்கட், உங்கள் வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி.

'தயங்கினேன்' என்று நீங்கள் கூறுவதை உங்கள் சொந்த முடிவாக மதிப்பதைத் தவிர வேறொன்றும் கூறுவதற்கில்லை. (அத்தகைய தயக்கங்களெதுவுமின்றி John Coltraneஐ நீங்கள் தரவிறக்கத்திற்கு உங்கள் பதிவில் வழங்கினாலும்). 'தயங்க வேண்டுமெ'ன்றுக் கூறுவதில்தான் பிரச்சினையே.

பொதுமக்களின் பணம் ஒரு திட்டத்திற்குச் சென்றுள்ளது என்பதாலேயே அதற்கு உயர்ந்தவொரு இடத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் அளிக்க வேண்டுமென்ற வாதமும் ஏற்புடையதாக இல்லை. நாட்டின் பல பகுதிகளிலிருந்து செங்கல் அனுப்பினார்கள் பொதுமக்கள், ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக. சவுதியிலுள்ள பொதுமக்கள் இங்கு துணைக்கண்டத்திலுள்ள மதராஸாக்களுக்கு நிதி அனுப்புகிறார்கள். இப்படிப் பலவகை. (மேலுள்ளவற்றுடன் திருவாசகத் திட்டத்தை ஒப்பிட முடியாதுதான்.)

mp3க்கள் புழங்குவதால் திட்டத்தின் நோக்கத்தில் பின்னடைவு ஏற்படும் என்ற அனுமானமும் எவ்வளவு தூரம் சரியானதென்ற கேள்வியும் எழுகிறது. mp3க்களின் புழக்கம், 'திருவாசகம் பலரையும் சென்றடைய வேண்டுமெ'ன்ற நோக்கத்தில் வெற்றியையே அளிக்கக்கூடுமென்பது என் கணிப்பு, தவறாகவுமிருக்கலாம்.

நீங்கள் mp3 lossy format கிடையாதென்றுக் கூறுவது வியப்பளிக்கிறது. Pls check this page on FLAC, which is an open source lossless compression format. ஒரு lossy formatஐ வைத்து Appleஉம், yahooவும் பணம் பண்ணுவது வருந்தத் தக்க விஷயமே.

Venkat சொன்னது…

வாய்ஸ் - நான் ஜான் கொல்த்ரெய்னோ நுஸ்ரத் ஃபடே அலிஹானோ என் தளத்தில் போடும்பொழுது ஜாக்கிரதையாக மிகக் குறைந்த தரத்தில்தான் போடுகிறேன். (ஏம்.எம் ரேடியோ தரம் அல்லது அதற்கும் குறைவு). என்னுடைய இசை விளக்கங்களுக்காகப் பாடலை ஒரு முறை கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். இவை உன்னதமான தரமல்ல - தரவிறக்கிச் சேமிப்பதற்கு.

பொதுமக்கள் காசு கொடுத்தார்கள், கல் கொடுத்தார்கள் என்பது மாத்திரமல்ல. இது கலை முயற்சி என்றும் சொல்லியிருக்கிறேன். பெரும் செலவாகும் கலை முயற்சிகளுக்கு வணிக உலகில் பலத்த முட்டுக்கட்டையிருக்கிறது. போட்ட முதல் வராது என்று எந்த நிறுவனமும் இதில் ஈடுபடாது. இந்த நிலையில் தனி மனிதர்கள் ஒவ்வொரு ரூபாய் (நம்பிக்கையிருந்தால்) கொடுத்தால் இது நடக்கலாம் - நடந்திருக்கிறது. இதையும் செங்கல்லையும் ஒன்றாகப் பார்க்கமுடியுமா?

இசையில் தீவிர நாட்டமில்லாதவர்கள் எம்பி3-ல் ஒரு முறை கேட்டுவிட்டுப் போய்விடக்கூடும். இதைக் குறைக்கத்தான் (ஏன் குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே விளக்கியாகிவிட்டது) திருவாசக எம்பி3-ஐத் தவிர்க்கச் சொன்னது.

எம்பி3 - இழப்புள்ள வடிவம் என்று சொல்வதன் முழு விபரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். இதில் இழக்கப்படுவது நம் காதுக்குக் கேட்காத இசையும், ஒரு ஓடையில் இரைச்சல் அதிகமுள்ள வாத்தியம் வரும்பொழுது மறு ஓடையில் இருக்கும் மென்மையான வாத்தியம் என்பவையும்தான் (இதன் கூடவே சிடியில் பயன்படுத்தபடும் அரதப்ப்ழைய பிழைதிருத்த கணக்குச் சமாச்சாரங்களும்). சுருக்கமாகச் சொல்லப்போனால் எம்பி3-ல் நம் காதால் கேட்கக்கூடிய எந்தவிதமான ஒலியும் இழப்பதில்லை.

யாகூவும், ஆப்பிளும்தான் எம்பி3-ஐ விற்கிறார்கள், பொதுமக்கள் ஏன் வாங்குகிறார்கள் என்று யோசித்துப்பாருங்கள், எம்பி3-ன் தரம் புரியும்.

பெயரில்லா சொன்னது…

//பொதுமக்கள் ஏன் வாங்குகிறார்கள் என்று யோசித்துப்பாருங்கள், எம்பி3-ன் தரம் புரியும//

ஆக மைக்ரோசொஃப்ட் மென்பொருள்களையும் மக்கள் தரத்துக்காகத்தான் வாக்குகிறார்கள் போலும்!:)

Voice on Wings சொன்னது…

வெங்கட், நீங்கள் John Coltraneஐ வழங்கியதைத் தவறென்று கூறவில்லை. அதே வகையில் இளையராஜாவின் திருவாசகத்தையும் பலரின் அறிமுகத்திற்காக வழங்குவதில் தவறில்லையென்றே கூறுகிறேன்.

பொதுமக்களின் கூட்டு முயற்சியாகத் தயரிக்கப்படும் படைப்புகள் (usually open source software) பொதுவாக இலவசமாகவே விநியோகிக்கப் படுகின்றன. அதனைத் தொடர்ந்து, அந்தப் படைப்பு பிடித்திருந்தால் நன்கொடை செலுத்தி ஆதரிக்குமாறு பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப் படுகின்றன. ஆனால் திருவாசக விஷயத்தில் உங்களைப் போன்றவர்கள் கூறுவதோ - முதலில் பணத்தை எண்ணி வைத்து விட்டு, பிறகு கேட்டுப்பார்த்து விட்டு, பிறகு பிடித்திருக்கிறதா இல்லையா என முடிவு செய்து கொள்ளுங்கள் என்ற ரீதியிலுள்ளது.

இசையில் தீவிர நாட்டமில்லாதவர்கள் குறுந்தகட்டையும் ஒரு முறை கேட்டுவிட்டு அதனைத் தள்ளி வைத்துவிடக்கூடுமல்லவா? அவ்வாறு நிகழ்ந்தால் அவர்களிடம் பணம் பண்ணிய சாதனை மட்டுமே மிஞ்சியிருக்கும். கூட்டு முயற்சியில் இறங்கியவர்கள் அத்தகையவொரு முடிவை விரும்புவார்களா என்பது சந்தேகமே. நான் கூறியபடி mp3ஐ ஆதரித்தால், அதனைக் கேட்டு impress ஆனவர்கள், அதன் அசல் வடிவத்தை வாங்கி ஆதரிக்கும் வாய்ப்புள்ளது, word of mouth மூலமாக அதனைப் பிரபலப் படுத்தும் சாத்தியமுமுள்ளது.

mp3 குறித்து நீங்கள் கூறுவதை 5-6 வருடங்களுக்கு முன் நானும் white papers வாயிலாகப் படித்திருக்கிறேன். இன்றைய நிலையில் mp3 என்பது digital musicஇன் முதல் படி, அவ்வளவே. AAC, Ogg Vorbis போன்ற அதனை விட உயர்தர வடிவங்கள் பிரபலமடைந்து விட்டன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நீங்கள் சுட்டும் Appleஏ Apple Lossless என்ற இழப்பற்ற ஒலிவடிவத்தை முன்வைத்துள்ளது.
இதுகுறித்த ஒரு சுவாரசியமான விவாதத்தை இங்குக் காணலாம். mp3 விற்கும் Appleஉம் உணர்ந்துள்ளது போலும் அதன் தரத்தை.

tit4tat, :)

தெருத்தொண்டன் சொன்னது…

//நாட்டின் பல பகுதிகளிலிருந்து செங்கல் அனுப்பினார்கள் பொதுமக்கள், ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக. //
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்.. பதிவும் சூப்பர்..பதிலும் சூப்பர்..இது எதனால் "புனிதம்" பெற்றது? சிம்பனியாலா? திருவாசகத்தாலா? இளையராஜா என்பதாலா?

//பொதுமக்களின் கூட்டு முயற்சியாகத் தயரிக்கப்படும் படைப்புகள் (usually open source software) பொதுவாக இலவசமாகவே விநியோகிக்கப் படுகின்றன//
விவாதம் ஆழமாகவும் சரியான திசையில் போவதாகவும் நான் நினைக்கிறேன்.

நமக்குள் இருக்கும் முரண்களைச் சுட்டினீர்கள்..முரண்களை ஒத்துக்கொள்ள முடியாத நண்பர்கள் நியாயப்படுத்திக் கொண்டே போகலாம்.

திருவாசகத்தைப் பொதுமக்கள் பணத்தில் எதற்காக சிம்பனியில் வெளியிட வேண்டும்? அதற்கு உதவினோம் என்பதற்காக ஏன் அறைகூவல்கள் விட வேண்டும்?

எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.. நியாயமானதாகக் கருதப்படும் சில விமர்சனங்கள் கூட பல்வேறு "முத்திரைகள்" குத்தப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. சில விமர்சனங்கள் காழ்ப்புடன் இருக்கலாம்; இருக்கின்றன. ஆனால் அதற்காக விமர்சனங்களையும் விமர்சகர்களையும் முத்திரை குத்தித் தூக்கி வீசுவது முறையாகத் தோன்றவில்லை.

சில விஷயங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை..விஓடபிள்யூ, இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Voice on Wings சொன்னது…

தெருத்தொண்டன், நன்றி. வெகு நாட்களாக இந்தப் பக்கம் வர இயலவில்லை. இப்பொழுதுதான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

'திருவாசகம்', 'இளையராஜா', 'symphony', 'பொதுமக்களின் பங்களிப்பு', போன்ற labelகளை அகற்றிவிட்டுப் பார்த்தால் மிஞ்சுவது ஒரு சராசரிப் பரிசோதனை முயற்சியே. இதற்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் என்றுதான் என் போன்ற சாமானியர்களுக்கு விளங்கவில்லை.

ஞாநி கூறியதைப் போல், இது மேற்கூறிய labelகளைத் தாங்கி வெளிவந்த ஒரு விற்பனைப் பொருள் மட்டுமே, ஒரு marketing gimmickஏ ஆகும் என்ற உண்மையை வெளிப்படுத்தினால்் பலருக்குக் கோபம் வருகிறது.