வெள்ளி, பிப்ரவரி 06, 2009

கலைஞரைக் கும்முவது சரியா?

இந்தக் கேள்விதான் இப்போ பதிவுகளில் சூடாக விவாதிக்கப்பட்டு வருது. சரின்னு ஒரு அணியும், தவறுன்னு ஒரு அணியும், சரி - ஆனா அதைச் செய்வதற்கும் ஒரு தகுதி இருக்கணும்ன்னு (அதாவது, அவரது கடந்த கால எல்லா சாதக / பாதகச் செயல்களையும் விமர்சனமில்லாம ஆதரிச்சவங்களுக்குத்தான் இப்போ அவரைக் கும்மறதுக்கு தகுதியோ உரிமையோ இருக்குன்னு) மூன்றாவதா ஒரு அணியும் கருத்து தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க.

என்னைப் பொறுத்தவரை, கலைஞரையோ, ஜெயலலிதாவையோ, மன்மோகனையோ, சோனியாவையோ கும்முவதில் ஒரு பயனும் இல்லை. அவர்களை என் உணர்வுகளை மதிப்பவர்களா, என் மக்களுக்காக எதுவும் செய்யக்கூடியவர்களா கருதுவதை நிறுத்தியே பல காலமாகி விட்டது. இப்போதைய உடனடி சிந்தனை பெருந்துயரத்தில் இருக்கும் நம் உறவுகளான ஈழத்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பதுதான். அதற்கு நம்மிடம் என்ன ஆயுதம் இருக்கு என்பதுதான் மற்ற எல்லா சிந்தனைகளையும் விட முன்னுரிமை பெறுவது. எந்தக் கட்சி சார்புகளும் இல்லாத ஒரு சாமானியனாக, என்னிடம் இருப்பது எனது வோட்டு என்ற ஒரே துருப்புச் சீட்டுதான். (முத்துக்குமாரைப் போல் உடல் என்ற துருப்புச் சீட்டையெல்லாம் வழங்கும் அளவுக்கு எனக்கு வீரம் கிடையாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்). பெரும்பாலனவர்களின் நிலையும் இதுதான்னு நம்பறேன்.

இந்த வோட்டு என்ற ஆயுதத்தை எப்படி மிகுந்த சக்தி வாய்ந்த விதத்தில் பயன்படுத்துவது? (How to use it in the most effective manner?) மற்ற சூழல்களில் சிறந்த ஆட்சியைத் தரக்கூடிய கட்சிக்கு வாக்களித்து அதைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்றைய சூழலிலோ அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் அதன் மிகுந்த வீரியமான பயன்பாடாக அமையும். தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள் - 'election ke din, aap vote nahi kare tho, aap so rahen hein'. (தேர்தல் தினத்தன்று நீங்கள் வோட்டளிக்கச் செல்லவில்லை என்றால் நீங்கள் தூங்கவதாகப் பொருள்) அந்தத் தூக்கம்தான் இப்போது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் செய்ய வேண்டியது. நம் துயரைக் கண்டும் காணாதது போல் இருக்கும் மத்திய அரசு, அதற்குத் துணை போகும் மாநிலக் கூட்டணிக் கட்சிகள்...... இவர்கள் அனைவரையும் எழுப்ப, நம் தூக்கத்தால்தான் முடியும்.

இந்த வோட்டு என்பது நம்மால் மிகக் குறைவாக மதிக்கப் படுகிறது என்று கருதுகிறேன். அண்மைய இடைத்தேர்தலில் ஒவ்வொரு வோட்டுக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக அறிகிறேன். அது போலவே, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற விலை மதிப்பு மிக்க பரிசுகளை வழங்கியே ஆட்சியைப் பிடித்திருக்கிறது தற்போதைய தமிழக அரசு. ஆகவே, ஒவ்வொரு வோட்டும் நிச்சயமாக பல ஆயிரம் ரூபாய்கள் (அல்லது அதை விட அதிக) மதிப்புடையது. இன்றைய சூழலிலோ அது நம் உயிருக்குச் சமானமானது; நம் இனத்தின் வருங்காலத்திற்குச் சமானமானது. அந்த வோட்டை ஒரு கட்சிக்கு ஆதரவாக வழங்குவதோ, தத்தமது கணவன் / மனைவியையே வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்குச் சமானமானது. நிச்சயமாக அதைச் செய்ய நாம் விரும்ப மாட்டோம். இன உணர்வு என்றெல்லாம் கூறுவதை விட, சுயமரியாதை உள்ள எந்தத் தமிழனும், மனிதாபிமானம் உள்ள தமிழர் மற்றும் தமிழரல்லாத எந்தத் தமிழக / புதுவை வாக்காளரும், தமது வோட்டை தமது உயிருக்கும் மேலானதாகக் கருதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதை எந்தக் கட்சிக்கும் வழங்காதிருக்க வேண்டும்.

இதைப் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவு.

6 கருத்துகள்:

சிவாஜி த பாஸ் சொன்னது…

நல்ல சிந்தனை, வாழ்த்துக்கள்!
எது எப்படியோ, கலைஞர் தமிழகத்திற்க்கு ஒட்டு மொத்தமாக துரோகமே இழைத்துள்ளார்...!

கானா பிரபா சொன்னது…

//என்னைப் பொறுத்தவரை, கலைஞரையோ, ஜெயலலிதாவையோ, மன்மோகனையோ, சோனியாவையோ கும்முவதில் ஒரு பயனும் இல்லை. //

உண்மை தான் ஆனா சோனியாவையோ மன்மோகனையோ கும்முவதால் இலங்கை அரசுக்கு பிராந்திய நல்லுறவு(வல்லுறவு) என்ற போர்வையில் செய்யும் ஆயுத உதவியும் அதன் மூலம் அப்பாவி ஜனங்கள் அழிவதையும் தட்டிக்கேட்கலாமே.ஒண்ணுமே செய்யாத மரத்துப்போனவர்களாக இருக்கக் கூடாது இல்லையா.

ஜெயை விட்டுவிடுங்கள் அவர் பாட்டுக்குக்கு கண்டித்துக் கொண்டே இருக்கட்டும். கலைஞர் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்து (எதிர்ப்போ/ஆதரவோ) எல்லோரையும் குழப்பாம இருந்தால் ஏதோ ஒரு மூலையில் இவங்களால் ஏதோ கிடைக்கும்னு நினைக்கிறவங்களுக்கும் தெளிவு கிடைக்கும்.

Voice on Wings சொன்னது…

சிவாஜி, தமிழகத்திற்கு துரோகம் இழைத்தவர் கலைஞர் மட்டும்தான் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால் அதை நான் மாற்றுவதற்கு முயற்சி செய்யப்போவதில்லை.

கானா பிரபா, எனது இடுகையை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சோனியாவையோ மன்மோகனையோ கும்முவதால் பயனில்லை என்பது அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற பொருளில் அல்ல. நிச்சயமாக அவர்கள் எல்லா வகையான கண்டனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உரியவர்களே. நான் முக்கியமாகக் கூறியது தேர்தல் புறக்கணிப்பு பற்றி. (அவர்களை எங்கு கும்மினால் வலிக்குமோ, அங்கு கும்முவதைப் பற்றி)

உதாரணத்திற்கு, இலங்கையில் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அது போலவே இங்கு தமிழகமும் வருகிற தேர்தலைப் புறக்கணித்தால், அது உலகப் பார்வையாளர்களிடையே பல கேள்விகளை எழுப்பும். (இந்தியா எனும் தேசியத்தின் கருத்தியல் அடிப்படை உட்பட). உங்களது வருகைக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

sari i accept ur words.but election la nikara elarume ayogya pasanga.oru ayogiyan ilana inoruthan vara poran.avan matum nalada seiya poran.voting is total waste

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

pls visit and give feedback


http://peacetrain1.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

காங்கிரசினால் தான் முத்துக்குமார் இறந்தார். ஆகவே இம்முறை காங்கிரஸ் தமிழ் நாட்டில் வெற்றிபெறக் கூடாது.