அண்மையில் நடந்து முடிஞ்ச மும்பை தாக்குதல்கள் தொடர்பா ஊடகங்களில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. இவ்வளவு நாளா சாமானியன் அடி வாங்கியது போய், இப்போ ஏழு நட்சத்திர பார்ட்டிங்களுக்கும் அதே கதிதான்னு வரும்போது, நம்ம ஊடகங்கள், படித்த மக்கள், பண முதலைகள், அரசியல்வாதிகள்ன்னு சமூகத்தின் அதிகாரம் படைத்த எல்லாரும் முன்பை விட ரொம்ப அதிகமாவே ஊளையிடற மாதிரி ஒரு உணர்வு. எப்படியோ, இதுனாலல்லாம் சாமானியனுக்கும் இறுதியில் நன்மை கிடைக்கும்ன்னா, இவற்றையும் வரவேற்கலாம்ங்கிற நிலையில்தான் இப்போ இருக்கேன்.
இத்தகைய கசப்புணர்வோடயே இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்துக்கிட்டு இருந்தேன்.
ஒரு பொதுமக்கள் பங்கெடுக்கும் விவாத நிகழ்ச்சியில் 'சிமி கரேவால்'ங்கிற முன்னாள் பாலிவுட் நடிகை, வாழைப்பழத்தில் நச்சு தோய்ந்த ஊசியை ஏத்தற மாதிரி ஒண்ணைச் சொன்னாங்க. என்னன்னா, மும்பையில் குறிப்பிட்ட இடங்களிலுள்ள அடுக்கு மாளிகைகளிலிருந்து பார்வையிட்டால் தென்படக் கூடிய குடிசைப் பகுதிகளில், பல கொடிகள் காணக் கிடைக்குமாம். அவை, இந்திய நாட்டுக் கொடிகளோ, அல்லது காங்கிரஸ் / பாஜக போன்ற கட்சிகளின் கொடிகளோ கிடையாதாம். பாகிஸ்தான் நாட்டுக் கொடிகளாம் அவை. இந்தத் தகவலைத் தெரிவித்து, அவர்களெல்லாம் பாகிஸ்தான் நாட்டு விசுவாசிகள்ன்னு தேசிய தொலைக்காட்சியில் நிறுவ முயன்று கொண்டிருந்தார் அந்த முன்னாள் நடிகை. இதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஒரு இளைஞர், 'இந்தியாவின் எதிரிகள் முஸ்லிம்களோ, பாகிஸ்தானோ அல்ல, நீங்கள்தான் இந்தியாவின் எதிரி' என்று கூச்சலிட்டார். கொஞ்சம் உணர்ச்சி அதிகமான வெளிப்பாடுதான். இருந்தாலும் அவரது கொந்தளிப்பு நியாயமாப் பட்டது. (இறுதியில் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது கொசுறுச் செய்தி).
எனது சொந்த அனுபவத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலேயே நானும் வாழும்படி அமைந்துவிட்டது. இந்தக் கொடி விவகாரம் எனக்கும் பரிச்சயமானதுதான். (கொஞ்சம் வசதி குறைவான) சில இஸ்லாமியர்களின் வீட்டு உச்சியில் பச்சை வண்ண முக்கோண வடிவிலான கொடிகள் பறப்பதைக் கண்டிருக்கிறேன். (அதன் ஓரங்களில் ஒரு பளபளா ஜிகினா வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும் :) ). அத்தகைய கொடிகளை மசூதிகளிலும் கண்டிருக்கிறேன். கல்லறைகள் அதே போன்ற ஒரு பசுமையான துணியால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். இவையெல்லாம் என்னை உறுத்தியது கிடையாது. வேறு யாரையும் உறுத்தியது கிடையாது என்றே நம்புகிறேன். ஒரு மத அடையாளமாகவே என்னாலும் (சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் காவல் துறையினர் உட்பட) பலராலும் இந்தக் கொடிகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். வட இந்திய இந்துக் கோவில்களில் இதைப் போன்ற காவிக் கொடிகளை காணலாம். மத நம்பிக்கை அதிகமுள்ள இந்துக்களும் (குறிப்பாக, குடிசைப் பகுதிகளில்) இத்தகைய கொடிகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்கக் கூடும் (உறுதியாகத் தெரியவில்லை).
இந்தப் பச்சை வண்ணக் கொடி பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஒத்திருப்பதில் வியப்பேதுமில்லை. பாகிஸ்தான் ஒரு வெளிப்படையான இஸ்லாமிய நாடு, ஆகவே ஒரு இஸ்லாமிய அடையாளத்தை தாங்கிய ஒரு கொடியைப் பின்பற்றுகிறது. அது போலவே நேபாளம் இது நாள் வரை ஒரு இந்து முடியாட்சி நாடாகத் திகழ்ந்து வந்த காரணத்தால், அதன் கொடிக்கும் இந்துக்களின் கொடிக்கும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இப்படியாக, காலங்காலமாக ஒரு மரபை பின்பற்றும் ஒரு பிரிவினருக்கும் அதே மரபைப் பின்பற்றும் வேற்று நாடுகளுக்கும் ஏற்பட்டு விடும் ஒரு சில ஒற்றுமைகளால், இவர்கள் அந்நாடுகளின் விசுவாசிகள் என்று தேசிய அளவில் செய்யப்படும் விஷமத்தனமான பரப்புரை என்னை கவலைக்குள்ளாக்குகிறது.
இத்தகைய misinformation / போலிப் பரப்புரைகளை எதிர்கொண்டு சம்மந்தப்பட்ட விவரமறிந்தவர்கள், இஸ்லாமிய தரப்பினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இஸ்லாமியர்களும் பாகிஸ்தானிய விசுவாசிகள், அங்கிருந்து ஏற்றுமதியாகும் தீவிரவாதத்திற்கு மறைமுக / வெளிப்படை ஆதரவளிப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. (ஏற்கனவே இவ்வாறெல்லாம் கூறி ஒதுக்கப்பட்டு வருவது தெரிந்ததுதான். மேலும் பாதிப்பு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதே நான் கூற வருவது).
ஞாயிறு, நவம்பர் 30, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)