வெள்ளி, ஜூன் 10, 2005

விரிவான பதிவு

தமிழ்99 விசைப்பலகை குறித்து (அதனைப் பயன் படுத்தியே) நேற்று ஒரு பதிவிட்டேன். அதில் அவ்வளவாகப் பழகியிராத காரணத்தால் சுருக்கமாக அமைந்து விட்டது. இன்று கொஞ்சம் முன்னேற்றமிருப்பதால் விரிவாகவே எழுதுகிறேன். உலகின் மிகச் சுளுவான விசைப்பலகை இதுதானாம். 'தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்' என்று எண்ணுவதற்கு முன் அவசர அவசரமாக யதார்த்த நிலை நினைவுக்கு வருகிறது. அதாவது, தமிழிணையப் பயனர்கள் பெருவாரியாக உபயோகிப்பது 'romanized' எனப்படும் ஒலியியல் முறைத் தட்டச்சையே என்ற உண்மை நிலை. நாம் தோற்றுவித்த நுட்பம் குறித்து நமக்கே சந்தேகம். இல்லாவிட்டால், தோன்றி ஆறு வருடங்களாகியும் இப்படிக் கேட்பாரற்றுக் கிடக்குமா? சரி, இப்போது தமிழ்99னின் அருமை பெருமைகளைப் பார்ப்போம்:
  • 'shift' விசையிலிருந்து விடுதலை. எப்போதேனும் ஒரு முறை பயன் படுத்தும் கிரந்த எழுத்துக்களுக்கு மட்டுமே 'shift' விசை தேவைப் படுகிறது. (Romanizedஇலோ, நெடில் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் shift அழுத்தியாக வேண்டிய கட்டாயம்.) இதனால் நீங்கள் சேமிக்கும் சக்தியை வேறு எந்த வகையில் செலவிடலாமென நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
  • உயிரெழுத்துக்கள் ஒரு (இடது) பக்கமும் மெய்யெழுத்துக்கள் மறு(வலது) பக்கமும் உள்ளதால் (உயிர்மெய்யெழுத்துக்கள் அதிகம் உள்ளிடப்படும் சாத்தியமிருப்பதால்), இரு கைகளுக்கும் சமமான ஈடுபாடு. இதனால் பழகப் பழக, வெகு வேகமாக உள்ளிடும் சாத்தியமிருக்கிறது. (ergonomicsஐ தமிழில் எப்படிக் கூறலாம்?)
  • 'அகர' உயிர்மெய்யெழுத்துக்களான க, ங, ச, ஞ போன்றவற்றை ஒரு விசை அழுத்தத்திலேயே பெற்று விடலாம். ஏனென்றால், 'romanized'இல் க் + அ, க் + ஆ, க் + இ என்று தட்டும் முறையைப் போலல்லாது, க + ஆ, க + இ, க + ஈ என்று தட்ட வேண்டும். இதனால் கிடைக்கும் பயன், அதிகம் பயனிக்கும் எழுத்துக்களுக்குக் குறைந்தத் தட்டல்கள்.
  • சிகரம் வைத்தாற்போல் அமைந்த அம்சம், தானியங்கிப் புள்ளி வைப்பு ஆகும். மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி வைக்க வேண்டுமென்பது அனைவரும் அறிந்ததே (என்று நினைக்கிறேன்). இந்த விசைப்பலகையில் பொதிந்த புத்திசாலித்தனத்தால் (intelligence) புள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலைகளில் தானாகவே புள்ளி வைக்கப் பட்டு விடும். உதாரணம்,
    • ஒரே எழுத்து இரு முறைகள் தட்டப் பட்டால். 'அ ம ம' என்ற உள்ளீட்டை 'அம்ம' என்று ஏற்றுக்கொண்டு விடும். அதே போல், 'ஆ த த' --> 'ஆத்த', 'ம ன ன' ---> 'மன்ன'.
    • மெல்லினத்தைத் தொடரும் வல்லினம். 'க ந த' ---> 'கந்த', 'எ ன ற' ---> 'என்ற', 'வ ண ட' ---> 'வண்ட', 'வ ங க' ---> 'வங்க'. இதில் அழகு என்னவென்றால், 'ந த', 'ன ற', 'ண ட', 'ங க' ஆகியன, அடுத்தடுத்துள்ள விசைகளாகும்.
இது எல்லா வகைகளிலும் சிந்தித்து, ஆய்ந்து பார்த்து உருவாக்கிய ஒரு விசைப்பலகை வடிவமைப்பாக எனக்குப் படுகிறது. இதில் பயிற்சி பெற ஒரு உதவித் திரை உருவாக்கியிருந்தேன். (காண்க: என் சென்றப் பதிவு). இதனை நன்றாகப் பயின்றால் தமிழில் வேகமாகவும், குறைந்த சிரமத்துடனும் உள்ளிடலாம்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

¿ýÈ¢

Nanri!

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

ஆஹா, ஒரு வாரமாகத் தான் தமிழ்99 விசைப்பலகை பற்றி பதிவு போடலாம்னு நான் நினைச்சா ஒரே நேரத்துல பல பேர் இப்படி நினைக்கிறாங்கப்பா..யாமறிந்த ஜெர்மன், சீன, ஆங்கில, தமிழ் விசைப்பலகைகளிலே தமிழ்99 போல் அருமையான ஒரு பலகை கண்டதில்லை..ஹா ஹா..ஆறு வருடமாக ஆங்கிலம் தட்டச்சு செய்தாலும் ஒரு ஆண்டில் என் தமிழ் தட்டச்சு வேகம் இன்னும் அதிகமாக இருக்கிறது..நண்பர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம்..முடிஞ்ச அளவுக்கு இனி தமிழ்99 விசைப்பலகைக்கு கொள்கை பரப்புச் செயலாளரா இருக்கப் பார்க்கிறேன். இதைப் பயன்படுத்திப் பார்த்தவன் கனவிலும் ரோமன் முறையில் தட்டச்சிட நினைக்க மாட்டான்