இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 24, 2009

பாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி

இப்போது தமிழ்த் திரைப்படங்களில் வர்ற பாடல்களையெல்லாம் கேக்க முடியவில்லை. உதாரணங்கள் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கறேன். இந்த 'நாக்கு மூக்கு' ரகப் பாடல்களையெல்லாம் நம்மளால எவ்வளவு காலத்துக்கு தாக்கப்பிடிக்க முடியும்ன்னு நம்ம இசையமைப்பாளர்கள் கணித்து வச்சிருக்காங்கங்கிற தகவல் தெரிஞ்சா நல்லா இருக்கும். (அதுக்குப் பிறகு தமிழ்ல பாட்டு கேக்க ஆரம்பிக்கலாம்). நல்ல வேளையா இரவு பதினொண்ணு மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் 'நினைத்தாலே இனிக்கும்'ன்னு ஒரு நிகழ்ச்சி வருது (அதே பெயரில் அண்மையில் வந்திருக்கும் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லவில்லை - அதிலுள்ள பாடல்கள் ஜவுளிக் கடை விளம்பரப்பாடல்கள் ரகம்), இந்த நிகழ்ச்சியில் நம்ம காலத்து (அதாவது 70, 80களில் வந்த) பாடல்களையெல்லாம் போடறாங்க. அவற்றையெல்லாம் கேக்கும்போதுதான் ஒரு உன்னதமான கலை வடிவத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை நினைச்சி கவலையா இருக்கு.

அண்மையில் சானல் மாத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு கன்னட இசை சானல் கவனத்தை ஈர்த்தது. தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகளில் அடிக்கடி பார்த்திருக்கும் ஒரு கதாநாயகரும் (பெயர் சிவராஜ்குமார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்) கதாநாயகி நவ்யா நாயரும் ஒரு டூயட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. இசை என்னோட கல்லூரி நாட்களில் தமிழில் வெளிவந்தத் திரையிசையை ஒத்திருந்தது. திடிரென ஆண்குரலில் இளையராஜா! பாடலும் அட்டகாசமான இளையராஜாவின் படைப்பு போல இருந்தது. உடனே கூகிளாண்டவரை துணைக்கழைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பாட்டு, அது இடம்பெற்ற படம் (பெயர்: பாக்யதா பளேகாரா, பொருள்: ராசியான வளையல்காரர்?), எல்லாமே இளையராஜாவின் இசையில் வெளிவந்ததுன்னு. முதலில் நான் தொலைக்காட்சியில் கேட்ட பாடலை (செந்துள்ளி, செந்துள்ளி) தரவிறக்கம் செய்தேன். பல இணையத் தளங்களில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிலாகித்து எழுதியிருந்ததைப் பார்த்ததால் மொத்த ஆல்பத்தையும் தரவிறக்கி சேமித்துக் கொண்டேன். (ஒரு தரவிறக்கும் தளம், பிற தளங்களும் உள்ளன)

எனக்குப் பிடித்துப் போன பாடல்கள் சிலவற்றைக் குறித்து சில வரிகள்:

1. பளேகாரா, பளேகாரா - ஒரு ராமராஜன் படப் பாடலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் கொஞ்சம் variations, tempo changes என்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சும் குரலில் ஷ்ரேயா கோஷல், அபஸ்வரமாக குனால் கஞ்சாவாலா.

2. செந்துள்ளி செந்துள்ளி - என்னை தொலைக்காட்சியில் ஈர்த்த பாடல் இதுதான். அழகான நவ்யா நாயர்(videoவில்), கிரங்கடிக்கும் இளையராஜாவின் rustic குரல். தொண்ணூறுகளில் வந்த 'ஆனந்தக் குயிலின் பாட்டு' என்ற 'காதலுக்கு மரியாதை' படப் பாடலை நினைவுப்படுத்துகிறது.

3. கல்லு கல்லெனுதா - அட்டகாசமான கன்னட folk பாடல், இவ்வளவு அழகான மொழியா என்று வியக்க வைக்கும் பாடல். இளையராஜாவுக்கு folk இசை பிறந்த வீட்டைப் போன்றது என்பதால் அசத்தி விடுகிறார்.

4. மது மகளு செலுவே - இதை போன்ற ஒரு பழைய இளையராஜாவின் தமிழ்ப் பாடலைக் கேட்டது போல் உள்ளது. உதித் நாரயணனின் கொடுமையான குரலிலிருந்து பாடலைக் காப்பாற்றுவது சித்ராவின் தேன் போன்ற குரலும் பின்னணி கோரஸ் பாடகிகளும். இசை, குறிப்பிடத் தேவையன்றி உயர்தரம்.

5. நன்னன்னே நோடுவனு ('என்னையே பாத்த்துக்கிட்டு இரு'ங்கிறாங்களா? ஆச, தோச :) ) - இதுவும் (மௌனராகம் வகையாறா) பழைய பாடல்களை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான டூயட் பாடல். இளையராஜாவும், ஷ்ரேயா கோஷலும் பாடியிருக்கிறார்கள்.

6. பாக்யதா பளேகாரா - இன்னொரு அழகான டுயட் பாடல், புது பாடகர்களால் பாடப்பட்டது.

மொத்தத்தில், தூங்க வைக்கக் கூடிய இனிமையான பாடல்கள் ராஜாவிடமிருந்து. தமிழகத்தில் பாயவேண்டிய காவிரி, கன்னட நாட்டை நோக்கிச் சென்று விட்டது, நம்மை நாக்கு மூக்கர்களின் தயவில் விட்டுவிட்டு.

ஞாயிறு, அக்டோபர் 12, 2008

Caravanserai

எண்பதுகளில் கல்லூரியில் படிச்சவங்க, அதுவும் மேற்கத்திய இசை பரிச்சயம் உள்ளவங்களுக்கு Carlos Santanaவை தெரியாம இருக்காது. அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். முஸ்தஃபா...... முஸ்தஃபா....... பாட்டு கேட்டிருப்பீங்க 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மானோட இசையில். அதோட மூலம் Santanaவின் Esperando என்ற பாடல்தான். அவரோட Oye como va, Open Invitation, Soul Sacrifice, Jingo போன்ற பாடல்களையும் நீங்க எங்கயாவது கேட்டிருக்கக் கூடும் (இசைப்புயல் / வெள்ளங்களின் திரைப்பாடல்களாவோ, அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களாவோ). Santanaவோட பெரும்பான்மையான பாடல்கள் இது போன்ற radio-friendly (அதாவது, 'வெகுசன ரசனைக்கேற்ற'ன்னு தமிழ்ல சொல்லலாம்) எனப்படும் வகையைச் சார்ந்தவை. அந்தக் காரணத்தினாலயே தீவிர இசை ரசிகர்கள் மத்தியில் இத்தகைய பாடல்கள் பெரு மதிப்பைப் பெறுவது கிடையாது. ஆனா இதுக்குல்லாம் விதிவிலக்கா ஒரு ஆல்பம் தந்திருக்காரு Santana. அவ்வளவா பிரபலமடையாத அந்த ஆல்பத்தின் பெயர்தான் Caravanserai. அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

ஒரு பாலைவனத்தில் caravan ஒன்றுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த இசைத் தொகுப்பின் நோக்கம். எதுக்கு பாலைவனத்தில் பயணம் செய்யணும்ன்னெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :) ஒரு தனியறையில் வேண்டிய 'வசதிகள்' செய்து கொண்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்வது எல்லா வகையிலும் பயன் தரக்கூடும் :) ஒரு பாடல் தொகுப்பு என்ற உணர்வே ஏற்படாமல், முதலிலிருந்து இறுதி வரை ஒரே பாடலைக் கேட்பது போன்ற ஒரு உணர்வை வலுவாக ஏற்படுத்துகிறது இந்த இசைத்தட்டு. இது போல் இருப்பதை concept album என்பார்கள். ஒரு பொது கருத்துடன் எல்லா பாடல்களும் பொருந்தி வருவது போல் இருக்கும்.

இசை என்பது கருவிகளில் / குரலில் காட்டும் மேதமை என்பதைக் கடந்து, ஒரு அனுபவம், ஒரு உணர்வு, ஒரு ஆழ்மனப் பரிமாற்றம் (subconscious communication) என்ற தளங்களிலிருந்து அணுகினால் இந்த இசைத் தொகுப்பு ஒரு இணையற்ற விருந்தாக அமையக்கூடும். ஒரு மாதிரிக்காக ' பேரண்டத்திலுள்ள எல்லா அன்பும்' (All the love of the Universe) என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.



(பாடலின் climax கட்டம் கொஞ்சம் விடுபட்டுவிட்டது :) ஒட்டகங்களின் நாலு கால் பாய்ச்சலை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)

குறிப்பட்டுச் சொல்லணும்னா, guitar, bass மற்றும் drumsஇன் இடைவிடாத உரையாடல்கள், மற்றும் மொத்தத்தில் அதன் காலத்தை வென்ற தன்மை (timelessness), ஆகியன இந்தத் தொகுப்பை மற்ற இசைத்தட்டுகளிலிருந்து வேறுபடுத்தும். Radio-friendly பாடல்களே பெரும்பாலும் பரிச்சயமானவர்கள் இந்த இசைத் தொகுப்பை அணுகும்போது ஒரு முழு விருந்துக்கு தயாராகச் செல்லுங்கள். மனரீதியாக என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியாததால், இதைத் தனிமையில் கேட்பது சிறந்தது.

பி.கு. - இது போன்ற நல்ல இசை பற்றிய பகிர்வுகளை இந்தத் தளத்தில் சேகரித்து வருகிறேன். விரும்பினால் அங்கேயும் வருகை தாருங்கள்.

வெள்ளி, மே 18, 2007

கறுப்பு ஞாயிறு

எனது விசிறித்தனத்தை இப்படி அப்பட்டமாகப் பறைசாற்றிக் கொள்வதற்கு மன்னிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக இந்த Black Sabbath (BS? no way) எனப்படும் இசைக்குழுவின் இசையில் மூழ்கித் திளைத்திருக்கிறேன். இப்பொ என்ன Black Sabbath என்று நினைத்தீர்களென்றால் அதில் நியாயமுள்ளது. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்க வேண்டிய இடுகையை இப்பொழுது எழுதுவதற்கு வலுவான காரணங்கள் இருந்தாக வேண்டும். அத்தகைய வலுவான காரணம், இந்த இசைக் குழு மீண்டும் இணைந்திருப்பதுதான். இணைந்து Heaven & Hell என்ற பெயரில் tour செய்து கொண்டிருக்கிறார்கள். (Black Sabbath என்ற பெயரை உபயோகிப்பதில் சில சட்டம் சார்ந்த சிக்கல்கள்.) அதை முன்னிட்டு The Dio Years என்ற அவர்களது தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எனக்கு Black Sabbath குறித்து அதிகம் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர்களது இசை மீது வெறித்தனமான விருப்பமேற்பட்டிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு தொகுப்பையும் வாங்கி அடுக்குமளவுக்கு மோசமான நிலையை இன்னமும் எட்டவில்லை.

இன்றைய heavy metal எனப்படும் இசைக்கு முன்னோடி என அறியப்படுபவர்கள் இந்த Black Sabbath குழுவினர்கள். எழுபதுகளில் தொடங்கி, தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். எண்பதுகளில் அதன் முன்னணிப் பாடகரான Ozzy Osbourne குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Ronnie James Dio அந்த இடத்தைப் பிடித்தார். Dio அதன் பிறகு பல முறை குழுவிலிருந்து வெளியேறி, மீண்டும் இணைந்து கொண்டுள்ளார். இப்போதைய இணைப்பும் அத்தகையதே. எது எப்படியோ, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான் இத்தகைய கூட்டுறவுகளால். Black Sabbath பற்றி பேசும்போது Ozzy Vs. Dio ஓப்பீட்டைச் செய்யாமலிருக்க முடியாது. Ozzy இருந்த காலத்தில்தான் குழுவின் ஆரம்பக் கால hit பாடல்கள் வெளிவந்தன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அவரது ஈடுபாடு / திறமை / பங்களிப்பு ஆகிவை கேள்விக்கிடமாகியிருக்கலாம். குழுவுக்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்பட்ட போது அவரது வெளியேற்றம் தேவையானதொரு மாற்றமாக இருந்தது. அவருக்கு மாற்றாக வந்த Dio ஏற்கனவே Rainbow இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக இருந்து, அதிலிருந்து வெளியேறியவர். (Rainbowவின் hit பாடல்களெல்லாம் Dio பாடியவைதான் என்பது எனது தாழ்மையான கருத்து. Black Sabbath விஷயத்திலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் Ozzy பாடிய அவர்களது பல ஆரம்ப காலப் பாடல்கள் வெகு அருமையானவை) அவர் வந்து இணைந்ததும் வெளியான Heaven & Hell என்ற வெளியீடு பல உச்சங்களை எட்டியது. நிச்சயமாக Dio ஒரு சிறப்பான பாடகர் என்பதில் எந்தவொரு ஐயமும் கிடையாது. Ozzy பற்றி அப்படியெல்லாம் எதுவும் கூற விரும்பவில்லை :)

Black Sabbathஇன் இசைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் அவர்களது ஆன்மீகத்தைப் பற்றி: அபாரமான இசைத் திறமையைப் பெறுவதற்கான உத்திகளில் ஒன்று, சாத்தானிடம் ஆன்மாவை விற்பது (sell your soul to the devil), அதற்கு பதிலாக வேண்டிய கலைத் திறமையைப் பெற்றுக் கொள்வது, என்று மேற்குலகில் (விளையாட்டாக) ஒரு ஐதீகமுண்டு. விளையாட்டு வினையாகி விடுவது போல், பல இசைக்குழுக்கள் சாத்தானிய சடங்குகளில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பாடல் வரிகளிலும் உட்பொருள் வைத்து சாத்தானின் மகிமைகளைப் போற்றிக் கொண்டிருந்தன இசைக் குழுக்கள், அல்லது அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டன. இந்தக் கதைகளில் தனி கவனம் செலுத்திக் கொண்டு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருந்தது. இந்த வகையில், சாத்தானுடன் தொடர்பிருந்ததாக நம்பப்பட்ட குழுக்களில் ஒன்று இந்த Black Sabbathஉம் ஆகும். அவர்களது பாடல்களின் சிலிர்க்க வைக்கும் தொனியிலிந்து இது உண்மையாக இருக்கலாம் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Black Sabbathஇன் தலைவர் என்று கருதப்படக்கூடியவர் அதன் கித்தார் கலைஞர் Tony Iommi. அவரது சிறப்புத்தன்மை அவரது ஆபாரமான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் riffs. riff - இதைத் தமிழ்ப்படுத்தணும்ன்னா, ஒரு பாடலோட இதயத்துடிப்பு மாதிரி திரும்பத் திரும்ப ஒலிச்சிக்கிட்டே இருக்குமே, அதுதான். ரிதம்ன்னு தவறா புரிஞ்சுக்காதீங்க. ரிதம் வெறும் தாளம் மட்டும்தான். riff அந்தத் தாளத்துக்கு மேல வர்ற அமைப்பு. ஒரு மெட்டை உள்ளடக்கிய, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஒலியமைப்பு. ஒரு பாடலின் moodஐ நிர்ணயிப்பது இந்த riffதான். Tonyயின் வாசிப்பில் இந்த riff பிரதானமாக ஒலிப்பதைக் காணலாம். Black Sabbathஇன் பல பாடல்களின் வெற்றிக்கு அவற்றின் கவர்ச்சிகரமான riffsஏ காரணம். (Ozzy அல்ல ;) ) riffs மட்டுமல்லாமல், அவரது solosஉம் (அதாங்க, தனி ஆவர்தனம்ன்னு சொல்வோமே, அது) நம்மை உயரங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. சொல்ல முடியாத உணர்வுகளையெல்லாம் ஏற்படுத்தக் கூடியவை.

Bill Ward இக்குழுவின் drums கலைஞர். பல பாடல்களில் அவரது அசத்தலான வாசிப்பைக் கேட்கலாம். ஒரு Jazz drummerஐப் போன்ற சுதந்திரமான, கலக்கலான வாசிப்பு, variations, அவ்வப்போது ஆச்சரியப்படுத்துவது, என்று, பாடல்களுக்கு drums ஒரு தனி பரிமாணத்தை வழங்குவதை மறுக்க முடியாது. அதே போல், குழுவின் bass guitar கலைஞரான Geezer Butlerஇன் வாசிப்பையும் கூர்ந்து கவனித்தால், அது பாடல்களுக்குப் புதுப் புது அர்த்தங்களைக் கற்பிக்கும். அருமையான (bass) solos, மற்றும் பாடல்களுக்கு வித்தியாசமான backing........ பல இடங்களில் leadஉடன் சேர்ந்து ஒலிப்பது, வேறு பல இடங்களில் leadஇலிருந்து தனித்து வேறு notes ஒலிப்பது, அப்படி இரு வேறு ஓலிகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் பாதிப்பு, என்று உன்னிப்பாகக் கேட்டால் கூடுதல் பயன்களைப் பெறலாம்.

தனித்தனியாக குழுவினரின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டேன். மொத்தக் குழுவின் இசை எப்படி என்றுக் கேட்டீர்களென்றால், ஒரு eerie, அச்சமேற்படுத்தக் கூடிய தொனியில், அதே சமயம், மனதைக் கவரும் இசையை வழங்கியுள்ளனர் இந்த Black Sabbath குழுவினர். அடிமைப்படுத்தும் இசை. கவர்ந்திழுக்கும் தீமை (evil) :)

என்னிடமுள்ள இவர்களின் குறுவட்டுகள்:
இரண்டையுமே பரிந்துரைக்கிறேன். இவர்களைப் போன்ற பிற இசைக்குழுக்கள்: Deep Purple, Rainbow, Whitesnake, Uriah Heep..... (இவற்றில் எதாவது உங்களுக்குப் பிடித்திருந்தால், Black Sabbathஐ நம்பிக்கையுடன் கேட்கலாம். அல்லது Black Sabbath பிடித்துப் போனால் இவற்றையும் முயற்சிக்கலாம்).

உங்கள் வசதிக்காக, சில Black Sabbath பாடல்களை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்.

Ozzy பாடிய Wicked World (பாடல் மட்டுமே, நிகழ்படம் கிடையாது):



Dio ஒரு live நிகழ்ச்சியில் பாடிய Die Young என்ற பாடலின் ஒளிப்பதிவு:



ஒன்றே குலம், ஒருவனே சாத்தான்!