ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2005

காணப்படாத ஒற்றுக்களும், இதர மொழி வன்முறைகளும்

எனக்குப் பயனளித்தத் தகவலொன்றை இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவுகளிலும் மடற்குழுக்களிலும் 'காதல் கவிதை', 'தமிழ் பாட்டு', 'பங்கு சந்தை', 'தேச துரோகி'......... என்றெல்லாம் எழுதிவிட்டுப் போய்விடுகிறோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. இணையத் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்வது?

எனக்குத் தோன்றியவொரு யோசனை - back to basics. கூகிளியதில் இந்த வலைத்தளம் மாட்டியது. பன்னிரண்டே பக்கங்கள்தான். அதிக நேரம் பிடிக்காது. மொத்தத்தையும் படித்து முடியுங்கள். வெகு நாட்களாக இருந்து வந்த அனைத்துச் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உங்களுக்குத் தெரிந்த மற்ற இணைய எழுத்தாள / வலைப்பதிவ நண்பர்களுக்கும் இதனைப் பரிந்துரை செய்யுங்கள்.

மற்றது, அறிந்தோ அறியாமலோ எழுத்தில் புகுந்துவிடும் எழுத்துப் பிழைகள். 'அன்னியர்' பதிவுகளில் பல நாட்களாக வலம் வந்து கொண்டிருந்தார். நானும் 'பொருமை'யோடு சில இடங்களில் சுட்டிக்காட்டினேன். இருந்தும் 'ஆவரை' (இது, தமாஷானவொரு அ-ஆ பிழை) வீழ்த்த முடியவில்லை. வேறு சிலப் பிழைகளும் அடிக்கடித் தென்படுகின்றன, இப்போதைக்கு 'நியாபக'த்திற்கு வர மறுக்கிறது. இந்தப் 'பிண்ணனி'யில், நான் முன்வைக்க விரும்பும் யோசனை அல்லது வேண்டுகோள் - ஒரு நல்லத் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதிகம் பயன்படுத்தாதச் சொற்களை உபயோகிப்பதற்கு முன் ஒருமுறை அவற்றை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் எழுத்துக்களையும் பொருட்களையும் சரிபாருங்கள். இப்படிச் செய்வதால் சில சமயம் பொருந்தாதச் சொற்களைப் பயன்படுத்தும் அபாயமும் தவிர்க்கப்படும். சொற்களைப் பற்றிய நம் புரிதலில் தவறிருந்தால், இந்தச் செயலினால் அது திருத்தம் பெறக்கூடும். இன்னொரு உத்தி - நீங்கள் உள்ளிட்ட சொல்லை, கூகிளில் வெட்டியொட்டுங்கள். 'என்னைப் பொருத்த வரை' என்று எழுதிவிட்டு, சந்தேகமாக இருந்தால் அதனை அப்படியே கூகிளுங்கள். பிழையிருந்தால் உங்கள் தேடலில் எதுவும் மாட்டாது, இல்லை உங்கள் பழையப் பதிவுகளே மாட்டலாம். (எனக்கு நேர்ந்ததைப் போல்). அதன் பிறகு 'பொறுத்த வரை' / 'பொருத்த வறை' என்றெல்லாம் மாற்றிப் பார்க்கலாம், சரியான விடை வரும் வரை :-)

இலக்கண விதிகளையும் சொல்வடிவங்களையும் ஐயமின்றி அறிந்த பின் அவற்றைக் கவனமாகக் கடைபிடிப்பது அடுத்த படி. பதிவுகளை / எழுத்துக்களை வெளியிடும் முன் ஒருமுறைக்கு இருமுறைகள் சரிபார்த்த பின்பே அதனை வெளியிடுங்கள். ஆங்கிலத்திலுள்ள spelling and grammar check போன்றத் தானியங்கு வசதிகள் நமக்கில்லாததால், நம் மானுட முயற்சியைக் கொண்டே பிழைகளைக் களைய வேண்டியிருக்கிறது. கவனத்துடன், தரமான, பிழையில்லாத வகையில் எழுத்துக்களை வெளியிடுவதும் தமிழுக்கு நாமளிக்கும் சிறப்பு, என்பது என் தாழ்மையானக் கருத்து.

இனியாவது 'காதல் கவிதை'களையும், 'பங்கு சந்தை'களையும் தவிர்ப்போம். மொழி வன்முறைகளிலிருந்துத் தமிழைக் காப்போம்.

வியாழன், ஆகஸ்ட் 11, 2005

திருயாசகம்

தமிழர்களின் அதீதத் தமிழ்ப் பற்றோ, இல்லை வேறென்னவோ தெரியாது. ஆனால் கொஞ்சம் நாட்களாகப் பல திக்குகளிலிருந்தும் புகட்டப்பட்டு வரும் அறிவுரை - இளையராஜாவின் திருவாசக சிம்ஃபனியைத் தரவிறக்கிக் கேட்க வேண்டாம், காசு கொடுத்து வாங்கிய பின்னரே கேளுங்கள் என்றுத் தமிழ் சமூகத்தை நோக்கி அவரவர் பிறப்பிக்கும் அன்புக் கட்டளைகள். காரணமென்னவென்றால் இது இளையராஜா தமிழுக்குத் தந்த வரப்பிரசாதம், தியாகம் மற்றும் பல சாமானியத் தமிழர்களின் நன்கொடைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது இத்யாதி, இத்யாதி....... அனைத்து வகை இசைக் குறுந்தகடுகளுக்காகவும் பெருமளவு செலவழித்தவன் என்ற போதிலும், திரும்பத் திரும்பக் கேட்க நேரிட்ட இத்தகைய கருத்து/வேண்டுகோள்/அறிவுரை எரிச்சலையே ஊட்டியது.

இளையராஜா தன் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார் என்பது பாராட்ட வேண்டியச் செயலாக இருந்தாலும், அது அவரது சொந்தத் தேர்வு, அவ்வளவே. இசையைத் தரவிறக்கிக் கேட்பதென்பது பல காரணங்களுக்காக நடைமுறையிலுள்ள வழக்கமே. John Coltraneஇன் Jazz இசையிலிருந்து, ஜானகியின் 'பொன்மேனி, உருகுதே' வரை அனைத்து வகையான பாடல்களையும் ஒலிக்கோப்புகளாக வழங்கும் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் இணையத்தில் ஏராளம். திருவாசகம் மட்டும் இதற்கு விதிவிலக்கு / நடைமுறை உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்றக் கருத்து ஏற்கும்படியாக இல்லை. என்னதான் உயரிய நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டத் திட்டம் என்ற சப்பைக்கட்டுக்களை முன்வைத்தாலும், இதே அளவு உயரிய நோக்கத்தோடு வெளிவந்த 'வந்தே மாதரம்' தொகுப்பிற்கு இத்தகைய மரியாதைகள் அளிக்கப்பட்டனவா என்று யோசிக்க வேண்டும். இளையராஜாவுக்கு மட்டும் ஏதேனும் கொம்புகள் முளைத்திருக்கின்றனவா?

பாடல்களைத் தரவிறக்குவது நேர்மையற்ற செயல் என்று வாதிடலாம். திருட்டுக்கு ஒப்பானது என்றுக் கூக்குரலிடலாம். முற்றிலும் உண்மை. நீதிமன்றங்களும் அவ்வாறே தீர்ப்பளித்துள்ளன. ஆனாலும் இந்த விவாதம் இன்றும் முற்று பெறாதவொன்றாகவே திகழ்கிறது. பல இசைஞர்கள் தரவிறக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களது வலைத்தளங்களில் சிலப் பாடல்களையாவது தரவிறக்க வழங்குகின்றனர். தங்கள் புகழ் பரவ மேற்கொள்ளும் உத்தியாகவே இதைச் செய்கின்றனர். இசை ஆர்வலர்களோ, ஒரு குறுந்தகட்டை வாங்குவதற்கு முன் பாடல்களை sample செய்து பார்க்க mp3க்களை நாடுகின்றனர். ஒரு முழுத் தொகுப்பையும் தரவிறக்கத் தேவைப்படும் நேரம், இணைப்பு வசதி, hard disk இட வசதி ஆகியவற்றிற்கு பதிலாக அதன் குறுந்தகட்டை வாங்கிவிட்டுப் போவது அவர்களுக்கு சிக்கனமானது.

மேலும், பொதுவாகப் புழக்கத்திலுள்ள mp3 ஒலிவடிவம் ஒரு கீழ்த்தரமானவொன்றே (i.e. lossy format). ஒரு வானொலியில் பாடலைக் கேட்பதற்கு நிகரானதே, இந்த mp3 வடிவில் அந்தப் பாடலைக் கேட்பது. 5.1 channel ஓலியமைப்பில் ஒரு mp3 கோப்பை இயக்கினால், இரு channelகளில் மட்டுமே இசை ஓலிக்கும், மற்ற நான்கிலும் மௌனம்தான். ஏன், வெறும் stereo மட்டுமே உள்ள ஒலியமைப்பிலும், ஒரு பாடலை mp3யாகக் கேட்பதற்கும் அதே பாடலை குறுந்தகட்டிலோ, ஒலிநாடாவிலோ கேட்பதற்குமுள்ள வேறுபாட்டை வெகுவாக உணரலாம். mp3 வடிவில் ஒரு பாடலின் அளவு பன்னிரண்டு மடங்கு சுருக்கப் படுகிறது. இதனால் பாடலின் பல அத்தியாவசிய அம்சங்கள் களையப்பட்டு எலும்பும் தோலுமே மிஞ்சுகிறது. ஒரு தீவிர இசையார்வலரை mp3 வடிவம் ஒரு நாளும் திருப்திப் படுத்தாது. இதனையும் மீறி mp3 கோப்புகள் நாடப்படுகின்றன என்றால் அது தற்காலிக உபயோகத்திற்கோ அல்லது விநியோகத்திலில்லாத அரியப் பாடல்களைக் கேட்பதற்கோதான். பணவசதி அதிகமில்லாத, ஆனால் இசையார்வம் மேலோங்கியிருக்கும் மாணவ சமூகத்தில் வேண்டுமானால் mp3யின் புழக்கம் கொஞ்சம் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. இதனை நேர்மையின்மை என்ற கண்ணோட்டத்திலல்லாது பெருந்தன்மையோடு நோக்கினால் தீர்வுகள் பிறக்கலாம். உ-ம், மென்பொருள் நிறுவனங்களைப் போல், இசை நிறுவனங்களும் மாணவர்களுக்குச் சலுகை விலையில் குறுந்தகடுகளை வழங்குவது (like academic editions of software), போன்ற உத்திகள் மாணவர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கலாம்.

மேற்கூறிய வாதங்களனைத்தும் தேவையற்றவையே. ஏனென்றால், 'திருவாசக வேண்டுகோள்' விடுப்பவர்களில் பெரும்பாலோர் மற்ற பாடல்களின் mp3க்களைத் தயக்கமின்றிக் கையாள்பவர்கள்தான். திருவாசக சிம்ஃபனிக்கு மாத்திரமே அவர்களது 'காப்புரிமை மரியாதை' என்னும் சிறப்பிடம், மற்றும் ஊருக்கு உபதேசம் ஆகியன. இந்த வேற்றுமைப் படுத்தல்தான் என்னை எரிச்சலூட்டுகிற அம்சம். இவ்வாறு சிறப்பிடம் பெற்ற திருவாசகம் எவ்வாறு விநியோகிக்கப் படுகிறது என்றுப் பார்ப்போம். (சென்னையில்) குறுந்தகடு - ரு.150/-, ஒலிநாடா - ரு.50/-. தயாரிப்புச் செலவு ஒன்றேயென்றாலும் இரண்டுக்குமிடையில் ஏன் ரு.100/- வித்தியாசம்? இது எவ்வகையான நேர்மை? வியாபாரத்திற்கு வந்துவிட்ட ஒரு பொருளின் வெற்றியை தரம், கவர்ச்சித்தன்மை, விநியோகத் திறன் போன்ற வர்த்தகக் காரணிகள் முடிவு செய்யட்டும். உணர்வுகளைத் தூண்டும் வேண்டுகோள்கள் வர்த்தகத்தில் தேவையற்றவையே.

ஆகவே, நீங்கள் இதுவரை கேட்ட அறிவுரைகளுக்கு மாற்றாக நான் கூற விரும்புவது: உங்களுக்குத் திருவாசக சிம்ஃபனி இசைப் பிடித்திருந்து, உங்கள் நண்பர்கள் / உறவினர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், winamp போன்ற மென்பொருள் கொண்டு, உங்களுக்குப் பிடித்த பாடலை rip செய்து, வேண்டியவர்களுக்கு மின்னஞ்சலோ, ftpயோ செய்யுங்கள். அது அவர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தால், அவர்களும் கடைக்குச் சென்று குறுந்தகடோ அல்லது ஒலிநாடாவோ வாங்கிக் கேட்டு மகிழ்வார்கள். நம்மைப் பிசினாளிகளாகக் கருதி விடுக்கப் படும் வேண்டுகோள்களுக்கு நாம் செவிசாய்க்கத் தேவையில்லை.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2005

Holy Recitals in G Minor

இதைப் போன்ற ஏதாவது ஆங்கிலப் பெயராகவே வைத்திருக்கலாம். குறுந்தகட்டை வாங்கி அதன் உரையை ஆராய்ந்தால், கண்ணில் தென்பட்டதெல்லாம் ஆங்கிலம்தான். Poovaar Senni Mannan, Pollaa Vinayen, Pooerukonum Purantharanum, Umbarkatkarasaey, Muthu Natramam, Puttril Vazh Aravum Anjen........ இவையெல்லாம் பாடல்களின் பெயர்களாம். (சென்னை வடபழனியில் 'டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ்' என்று அழகாகத் தமிழில் எழுதப்பட்ட அர்த்தமற்றப் பெயர்ப்பலகைதான் நினைவுக்கு வருகிறது) கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு தேடியதில் 'ஆனந்த விகடன்' logoவும் போனால் போகிறதென்று தமிழில் 'திருவாசகம்' என்று ஒரே ஒரு இடத்தில் மட்டும் போட்டிருக்கிறார்கள். இவையிரண்டைத் தவிர மற்றவையெல்லாமே ஆங்கிலத்தில்தான். தமிழர்களைச் சென்றடைய சரியான வியாபார உத்திதான் போலும். இது ஒரு பெரிய விஷயமா என்றுத் தோன்றலாம். திருவாசகம் ஒரு தமிழிலக்கியம் மற்றும் தமிழ் மரபைச் சார்ந்தவொன்று. அதனைக் கையாளுகையில் அது இயற்றப்பட்ட மொழியை / பின்னணியைச் சிறப்பிக்காமல் இப்படி ஒரேயடியாக உதாசீனப் படுத்தியது உறுத்துகிறது.

பாடல்கள் / இசையமைப்பு - 'சுமார்' ரகம். 'ஆகா, ஓகோ' ரகம் எது என்றுக் கேட்டால் இதே இளையராஜா இசையமைத்த 'பாரதி' படப்பாடல்கள் என்றுக் கூறலாம். "கேளடா, மானிடவா, எம்மில் கீழோர் மேலோர் இல்லை" என்றுக் கேட்கும்போது ஏற்படுவது புல்லரிப்பு. திருவாசகத்தில் "என் சாமிதான் பெரிய சாமி" என்று ஆர்கெஸ்டிரா பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் கேட்டாலும் ஏற்படுவது நகைப்பு மற்றும் "சாருக்கு எந்த நூற்றாண்டு?" என்று எழும் பரிதாபம் தோய்ந்த கேள்வியே. இசையில் புதுமையென்றுக் கூறும்படி எதுவும் புலப்படவில்லை. தமிழில் கோரஸ் (chorus) நன்றாகவுள்ளது. Muthu Natramam பாடலில் இது மேலோங்கியிருக்கிறது. மற்றபடி தமிழ்த் திரையிசை மெட்டுக்கள் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது போலொரு உணர்வு. உ-ம், அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் 'காதல் ஓவியம்' பாடலில் "தேன்சிந்தும் பூஞ்சோலை நம் இராஜ்ஜியம்" என்ற வரிக்கான மெட்டு, 'லவ் பேர்ட்ஸ்' படத்தில் 'மலர்களே' பாடலில் "உருகியதே எனதுள்ளம், பெருகியதே ஒரு வெள்ளம்" என்ற வரிகளுக்கான மெட்டு (பின்னது ரஹ்மானின் இசையல்லவா?). பழைய சோறு ருசிதான், ஆனால் ஐந்து நட்சத்திர உணவகத்தில் அதைப் பரிமாறினால் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கைதானே? இளையராஜாவின் குரல் எனக்குப் பிடித்தவொன்றாதலால், அது எனக்கு ஓரு குறையாகத் தென்படவில்லை. ஆனால் இளையராஜாவும் அவரது மகள் பவதாரிணியும் பாடிய ஒரு பாடலில், ஒரு பகுதி நேரப் பாடகருக்கும் ஒரு முழு நேரப் பாடகருக்குமுள்ள வித்தியாசம், அவர்களது குரல் வளத்திலுள்ள வேற்றுமை, ஆகியவை வெளிப்பட்டது. ஐரோப்பிய ஒலிக்கருவிகள் நன்று. ஐரோப்பியக் கூச்சல்களைத் தவிர்த்திருக்கலாம். சற்றும் பொருந்தவில்லை.

இத்திட்டத்தின் இணையத்தளத்தில் கண்டது: One of the main objectives of this project is to bring to the attention of the youth, such masterpieces from India's rich yet forgotten spiritual traditions. அதாவது, இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் போன்றப் படைப்புகளை அறிமுகப் படுத்த வேண்டும், இந்தியாவின் வளமையான ஆனால் மறக்கப்பட்டு வரும் ஆன்மீக மரபுகளின்பால் அவர்களது ஆர்வத்தைப் பெருக்க வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கமாம். எவ்வளவு தூரம் வெற்றி என்றுத் தெரியவில்லை. இந்த நோக்கத்தின் தேவையும் விளங்கவில்லை. "என்னவோய் சொல்லுதீக" என்றுப் பாடல்களைக் கேட்க முனைந்தால் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. இசைஞானியின் மீது கவிஞர் வைரமுத்து வைத்தக் குற்றச்சாட்டின் உண்மையை உணர முடிந்தது. கவித்துவத்தை அரியணையில் அமர்த்தி, இசையை அதற்குச் சாமரம் வீசச் செய்வதற்கு பதிலாக, ஓலிகளின் அராஜகமே மேலோங்கி, போனால் போகிறதென்று வரிகளுக்கு ஓரத்தில் கொஞ்சம் இடம் விட்டது போலிருந்தது. திருவாசக வரிகளுக்கேற்பட்ட இத்தகைய நிலை, மேற்கூறிய நோக்கத்தைத் தோற்கடிப்பதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. நல்ல வேளையாகப் பாட்டுப் புத்தகம் கொடுத்திருந்தார்கள். எத்தனை இளைஞர்கள் பொறுமையுடன் அதனைப் பிரித்துப் படிப்பார்களோ?