ஞாயிறு, பிப்ரவரி 26, 2006

தமிழ் ஒருங்குறி - நியூ

இப்போது பழைய ஒருங்குறி, புதிய ஒருங்குறி என்று ஆங்காங்கே சலசலப்புகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பதிவு தற்போது புழக்கத்திலுள்ள ஒருங்குறி பற்றியும், அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் TUNE பற்றியுமான விமர்சனங்களை வைப்பதற்கே. இவ்விஷயத்தைப் பற்றிய சரியான புரிதலைப் பெற இக்கட்டுரை உதவக்கூடும் (நன்றி: டைனோ). மேலும் இராம.கி.யும்(சுட்டி #1, சுட்டி #2) செல்வராஜும் இதனைப் பற்றி சிறப்பாக விளக்கியுள்ளார்கள் (அவசியம் படிக்க வேண்டிய இடுகைகள்). இவையனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில், ஒரு சாமானியனாக என் நிலைப்பாட்டை இங்கு வழங்குகிறேன். (இது பற்றிய எனது முந்தைய பதிவு - பின்னூட்டங்களில் உள்ள தகவல்களுக்காக)

தற்போதைய ஒருங்குறியிலுள்ள முக்கியமான பிழை அதில் உயிர்மெய்யெழுத்துக்கள் உருவாக்கப்படும் விதம்தான். ஒரு பள்ளி மாணவனுக்கும் தெரியும், க = க் + அ, கா = க் + ஆ,........... போன்றப் புணர்ச்சி விதிகளை. ஆனால், ஒருங்குறியை உருவாக்கிய சான்றோர்களோ, இந்த அடிப்படையை கூட மதிக்காமல், க் = க + ஃ, கா = க + ஆ,........... என்ற புது வழியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். இதனால், எளிதில் கிடைத்திருக்கக் கூடிய ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

எனக்குத் தெரிந்த வரையில், Tamil is a highly structured language. அதன் உறுதியான வடிவமைப்பினால், அதன் இலக்கண விதிகளைக் கொண்டே அதைக் கணிமைப்படுத்துவது எளிது. மொழியின் அடிப்படைகளைக் கடாசி விட்டு, க + ஆ, க + இ என்றெல்லாம் எழுத்துக்களை உருவாக்கியதால், இன்று நமக்கு எளிதில் கிடைத்திருக்கக் கூடிய ஒரு வசதி - கணிமையாற்றலால் சொற்களைத் தேடிப் பெறும் வசதி, ஒரு கைக்கெட்டாத கனியாகி விட்டது. ஒற்றில் முடியும் பெயர்ச் சொற்கள் - கோயமுத்தூர், சங்கர், ஜெயமோகன்....... போன்றவைகளை ஒரு ஆவணத்திலிருந்து தேடியெடுக்கும் வசதி இதனால் தாரை வார்க்கப் பட்டுவிட்டது. ஏனென்றால், அவை 'கோயமுத்தூரில்' (கோயமுத்தூர + இல்), 'சங்கரின்' (சங்கர + இன்), 'ஜெயமோகனை' (ஜெயமோகன + ஐ), என்றெல்லாம்தான் பெரும்பாலும் அந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்கும். அவற்றை தேடிப் பெறுவதற்கு, "ஜெய ஜய சங்கர" என்று் முழங்க வேண்டியதுதான்.

இன்னும் சில சிக்கல்களைப் பற்றிக்் கூறுகிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். 'திருக்குறள்' அல்லது 'கம்பன்' என்ற சொல்லை எங்கிருந்தாவது select & copy செய்கிறீர்கள். அதைக் கொண்டு போய் paste செய்தால் வருவதென்ன? 'திருக்குறள' அல்லது 'கம்பன'. இன்னொரு சிக்கல், ஒரு சொல்லுக்குப் பிறகு full-stopஓ, commaவோ வைக்க மறந்து விட்டதால், cursorஐ அங்கு நகர்த்திச் சென்று, வேண்டிய நிறுத்தக் குறியீட்டைப் புகுத்துகிறீர்கள். உ-ம், 'நன்றி' என்பதற்குப் பிறகு full-stop வைக்கிறீர்கள். ஆனால், full-stop விழுவதோ, இவ்வாறு ----> 'ற.ி' மற்றொன்று - நேற்று ஒரு நண்பருடன் அரட்டையில், "கிருஷ்ணா கஃபேயில் என்ன சாப்பிட்டே?" என்று கேட்க முயன்ற போது, அது 'கஃபே'யை 'க்பே' என்று மாற்றி டென்ஷனாக்கியது. இது போல் பல சிக்கல்கள் இருக்கின்றன, இப்போதுள்ள ஒருங்குறியில்.

இப்போது TUNE எனப்படும் பயங்கரத்தைப் பற்றிப் பார்ப்போம். 'வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டை' என்பது போல், தற்போதைய ஒருங்குறியின் உயிர்மெய் புணர்ச்சி விதியில் தவறிருக்கிறது என்பதற்காக, புணர்ச்சி என்பதே இல்லாமல் ஒழித்துக் கட்டி விட்டு், ஒவ்வொரு உயிர்மெய்யெழுத்துக்கும் ஒரு தனி குறியீடு வைக்கப்பட்டிருக்கிறதாம். இவ்வாறு, மொத்தமாக முன்னூத்தி சொச்சம் குறியீடுகள். மொழியின் அடிப்படை என்ன? உயிர்மெய் என்பது ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிரெழுத்தும் புணருவதால் ஏற்படும் கூட்டெழுத்து என்பதே. ஆகவே, அதை அப்படியே விட்டு வைப்பதுதான் மொழிக்கு நாம் செலுத்தும்் மரியாதை. உயிர்மெய் என்பது இரு குறியீடுகளைக் கொண்டே குறிக்கப்பட வேண்டும். அதை ஒரு குறியீடாகச் சுருக்குவதால் என்ன பயன்? இந்த ஏற்பாட்டில், 'இவன்' என்ற சொல் 'இவனால்' (இவனா + ல்), 'இவனை' (இவனை), 'இவனோடு' (இவனோ + டு), 'இவனிடம்' (இவனி +டம்) ஆகியவற்றில் இடம்பெறவில்லை என்பது, அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்ட அவற்றின் TUNE representationஐப் பார்த்தாலே் புரியும். முன்னூற்றுக்கும் மேற்பட்ட எண்களுடைய code set மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால், நமது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற தவறான எண்ணமும் ஆபத்தானது. 50 சொச்சம் குறியீடுகள் இருந்த இடத்தில் 300 சொச்சம் குறியீடுகளை வைத்துக் கணிமை செய்ய வேண்டுமென்றால், அதற்கு செயலியாற்றல் (CPU power), நினைவகத் தேவைகள் ஆகியன பல மடங்கு பெருகும் (இல்லாவிட்டால் கணிமைச் செயல்பாட்டின் வேகம் குறையலாம்). P4 / P5களுக்கு வேண்டுமானால் இது ஒரு பொருட்டாக இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் கிராமங்களுக்கெல்லாம்் கணினிகளைக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், lowest common denominatorஐத்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். (சிம்ப்யூட்டர், கைக்கணினி, செல்பேசி, இதர embedded கணினிகளுக்கான இடைமுகங்கள் etc etc). We need a computing platform that's lean & mean.

எனது பரிந்துரைகள்:
  1. கீழ்க்கண்ட குறியீடுகளே இடம்பெற்றிருக்க வேண்டும்
    • உயிரெழுத்துக்கள் 'அ' விலிருந்து 'ஔ' வரை (and not 'ஃ' to 'ஔ')
    • ஆய்த எழுத்து
    • மெய்யெழுத்துக்கள் 'க்'இலிருந்து 'ன்' வரை (இலக்கண வரிசைப்படி)
    • கிரந்த எழுத்துக்கள் 'ஸ்'இலிருந்து 'க்ஷ்' வரை, மற்றும் 'ஸ்ரீ'
    • உயிர்மெய்க் கீற்றுக்கள் (கால், கொக்கி, கொம்பு etc etc)
    • தமிழ் எண்கள் மற்றும் சிறப்புச் சின்னங்கள்
  2. உயிர்மெய்யெழுத்து = மெய்யெழுத்து + கீற்றெழுத்து என்ற அடிப்படையில் புணர்ச்சிகள் ஏற்பட வேண்டும் (க = க் + அ, கா = க் + ஆ, இத்யாதி, இத்யாதி)
  3. grapheme boundary vs. word boundary வேறுபாட்டை நிரலிகள் அறிந்திருக்க வேண்டும் (if they claim Unicode compliance).
  4. 'Select', 'Insert', 'sort', 'letter-spacing' ஆகிய செயல்களைச் செய்யும்போது, நிரலிகள் முழு எழுத்துக் கொத்துக்களையும் (character clusters) எடுத்துக் கொண்டு, அவற்றின் மீதே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட 1 & 2 ஆகியவற்றை, தமிழ் ஒருங்குறியைச் சீர்திருத்துவதால் அடையலாம். 3 & 4 ஆகியன, மென்பொருள் நிறுவனங்கள் கவனிக்க வேண்டியவை. குறைந்தப்பட்சம், உலாவிகள், மின்மடல் எழுதிகள், word processors, வலை / அச்சுப் பக்கங்களை வடிவமைக்க உதவும் PageMaker / Acrobat / DreamWeaver / Flash போன்ற மென்பொருட்கள், ஆகியவையாவது 3 & 4ஐக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும். Unicode compliant என்ற முத்திரையைப் வழங்குவதற்கான விதிகளைக் கடுமையாக்குவதன் மூலம், ஒருங்குறிக் கூட்டமைப்பே இதனை ஓரளவுக்கு உறுதி செய்யலாமென்பது எனது தாழ்மையான கருத்து. இவ்வமைப்பிலுள்ள தமிழ் அங்கத்தினர்கள் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால், இத்திசையை நோக்கிய நகர்வுகள் நிகழலாம்.(இதைப் படிக்க நேரும் அத்தகைய அங்கத்தினர்களின் கனிவான கவனத்திற்கு)

இப்பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன்் மூலமாக, தமிழ்க் கணிமையில் தேடல், வரிசைப்படுத்துதல், பக்க வடிவமைப்புகள், text-to-speech, ஆகிய செயல்பாடுகளில் கணிசமான முன்னேற்றமிருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. முக்கியமாக, ஒற்றில் முடியும் பெயர்ச் சொற்களை ஆவணங்களிலிருந்து தேடியெடுக்க முடியும், அதாவது ஜெயமோகன் என்று தேடும்போது, 'ஜெயமோகனின்' (ஜெயமோகன் + இன்) என்ற அதற்குத் தொடர்புடைய instanceஉம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், உகர / 'ம்' விகுதிச் சொற்களைத்் தேடிப்் பெறுவதில் இன்னமும் பிரச்சனை இருக்கும் (உ-ம், 'நாகப்பட்டினத்தில்', 'தமிழ் நாட்டை' ஆகியவை 'நாகப்பட்டினம்', 'தமிழ் நாடு' என்று கொடுத்துத் தேடினால் கிடைக்காது). அவற்றையும்் பெற வேண்டுமானால், மென்பொருள்களை கொஞ்சம் tinker செய்ய வேண்டியதுதான்.

வியாழன், பிப்ரவரி 16, 2006

இடுகைகளை எளிதில் tag செய்ய...........

கடந்த சில வாரங்களை, எனக்குத் தோன்றிய ஒரு யோசனையைச் செயல்படுத்துவதில் செலவழித்தேன். அதன் விளைவாக ஒரு Firefox நீட்சியை (அதாங்க, extension) உருவாக்கியிருக்கிறேன். அதை நிறுவிக்கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

உங்கள் இடுகைகளைத் தமிழ்மணத்தில் வகைப்படுத்துவது போலவே, tags எனப்படும் சொற்களாலும் வகைப்படுத்தலாம். ("இத இன்னும் எவ்ளோ வாட்டிப்பா சொல்லுவே", என்று சலித்துக் கொள்ளாதீர்கள் :) ) 15 -16 பொதுவான வகைகளுக்குள் ஒன்றாக உங்கள் இடுகைகளை வகைப்படுத்திய பின், அதை இன்னும் specificஆக வகைப்படுத்தினால் வருங்காலத் தேடல்களுக்கு வசதியாகயிருக்கும். உ-ம், 'ரஜினிகாந்த்' என்றோ, 'சுஜாதா' என்றோ, 'பெரியார்' என்றோ, 'கர்நாடக இசை' என்றோ, 'பின்நவீனத்துவம்' என்றோ, உங்கள் இடுகையை வகைப்படுத்தினால், உங்கள் பதிவு எதனைப் பற்றி, என்ற pointed information கிடைப்பதோடு மட்டுமல்லாமல், இச்சொற்களைக் கொடுத்துத் தேடுபவர்களுக்கு, ஒரு நபர் / நிகழ்வு / துறையைப் பற்றி வலையுலகில் என்னவெல்லாம் பேசப் பட்டதோ / படுகிறதோ அவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஓரிடத்தில் வழங்கப்படும் சாத்தியமேற்படுகிறது. பதிவர்களாகிய உங்களுக்கு, இதனால் உங்கள் பதிவு பிற்காலத்திலும் படிக்கப்படலாமென்ற பலன் கிட்டுகிறது, அதுவும் ஒத்த மனதுடைய வாசகர்களால். வலைவாயில்களில் ஒரு சில மணி நேரங்களோ அல்லது ஒரு சில நிமிடங்களோ (இப்பொழுதெல்லாம் வைரஸ் தொல்லை அதிகரித்து விட்டதாமே? :) ) கிடைக்கும் கவனத்தை விட, ஒரு வாசகர் தேடிக் கண்டுபிடித்து உங்கள் பதிவுக்கு வரும் நிலையில், உங்கள் எழுத்து அதிகமாகப் பாராட்டப்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது. ஓன்றுக்கு மேற்பட்ட tagsஐக் கொண்டு உங்கள் இடுகையை வகைப்படுத்துவதும்் சாத்தியமே. சரி, இதற்கு மேல் taggingஐ மார்க்கெட்டிங் செய்யப்போவதில்லை. எனது நீட்சியின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

இடுகைகளை tagging செய்ய நீளமான html நிரல்களை எழுத வேண்டியிருக்கிறது. "அதெல்லாம் கணினி அறிவு படைத்தவர்களுக்கே, நமக்கும் அதற்கும் சம்மந்தமில்லை" என்று நீங்கள் ஒதுங்கியிருக்கலாம். இந்த html சிக்கல்களெல்லாம் இல்லாமலேயே இடுகைகளை tag செய்ய முடிவது எனது நீட்சியின் ஒரு செயல்பாடு. மற்றொன்று, இந்த tagகளை உள்ளீடு செய்யாமல், முன்தொகுக்கப்பட்ட பட்டியல்களிலிருந்து (i.e. precompiled lists) தேர்வு செய்ய முடிவது. கீழே கொடுக்கப்பட்ட நீட்சியின் இடைமுகத்தைப் (interface) பார்த்தால் இது நன்கு புரிபடும் (அசல் அளவில் காண, படத்தைச் சொடுக்குங்கள்):


இப்பட்டியல்களை உருவாக்கி, மற்ற பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியுமுண்டு. ஏற்கனவே ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்குமான பட்டியல்களை உருவாக்கி, நீட்சியுடன் இணைத்து வழங்கியிருக்கிறேன். அதில் திருப்தியடையாதவர்கள், அவர்களே புதுப் பட்டியல்களைத் தயாரித்து வழங்கலாம். சீன மொழியிலும் பட்டியல்களை உருவாக்கலாம் (என்று நினைக்கிறேன், முயன்று பார்க்கவில்லை. Frenchஇல் கொஞ்சம் முயன்று பார்த்தேன் ;) ) இது போல் பட்டியல்களிலிருந்து தேர்வு செய்யும் முறையினால், அனைவரும் பொதுவான tagsஐப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது. (உ-ம், இன்று 'தமிழ்ப்பதிவுகள்' என்று பலரும் பயன்படுத்துவது போல். அவ்வாறில்லாமல், 'சினிமா', 'திரைப்படம்', 'திரை விமர்சனம்', 'திரைப்பார்வை', 'கீத்துக்கொட்டாய்' என்று அதே விஷயத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக tag செய்தால், இப்பதிவுகள் ஓரிடத்தில் தொகுக்கப் படாமல் வெவ்வேறு tagsஇன் கீழ் சிதறி விடுகின்றன.)

இன்னொரு பயன்பாடு - ஒரு tagஐ நீங்கள் பயன்படுத்தினால், அதே tagஉடன் வெளியான மற்ற பதிவுகளையும் படிக்க விரும்புவீர்கள் என்ற அனுமானத்தில், அந்த tagஇற்கான RSS தொகுப்பை நிகழ் புத்தகக்குறியாக (Live Bookmark) சேர்த்துக் கொள்ளும் வசதி. இத்துடன், பதிவை வெளியிட்ட பிறகு, தானே technoratiஐ ping செய்வதற்கும் வசதியுண்டு. நீங்கள் பலவாளுமை கொண்ட, பல பதிவுகளைப் படைப்பவராக இருந்தால், அவற்றின்் url பட்டியலையும் நீட்சியிடம் கொடுத்து, அதிலிருந்து எந்தப் பதிவை பற்றி ping செய்ய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இவையெல்லாம் எனது விளக்கங்களால் புரியாவிட்டாலும், நீட்சியைப் பரிசோதித்தால் புரியுமென்று நம்புகிறேன்.

உங்கள் எல்லா தேர்வுகளையும் செய்த பின், 'Generate code' என்ற விசையை அழுத்தினால், தேவைப்படும் html நிரல் உருவாக்கப் பட்டுவிடும். அதன் பிறகு, உங்கள் பதிவின் editorஇல் வேண்டிய இடத்திற்கு cursorஐ நகர்த்திக் கொண்டு போய், 'paste' (Ctrl-V) கட்டளையை இட்டால்், tagsஸுக்கான நிரல் இடுகையில் புகுத்தப் பட்டு விடும். அதன் பிறகு, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் publish செய்து விட வேண்டியதுதான். குறிப்பிட்ட புத்தகக் குறிகளும் உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். மேலும்், ping அறிவிப்பும்் குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பிறகு தானாகவே வெளியிடப்படும்.

இது பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமானால்் மகிழ்ச்சியடைவேன். இதைப் பற்றிய விரிவான தகவல்களை ஆங்கிலத்தில் இங்கு வழங்கியிருக்கிறேன். Mozillaவுக்கும் இதை சமர்ப்பித்திருக்கிறேன். இப்பதிவும் இந்த நீட்சியைக் கொண்டே tag செய்யப்பட்டுள்ளது :)

திங்கள், பிப்ரவரி 06, 2006

கீதா கயீதா ஆன கதை

சென்னை, வருடம் 2050: எங்கும் எதிலும் கணிமை. ஒரே இயந்திர மயம்தான். மேலும், பலரது முயற்சியால், தமிழ் எல்லா நிறுவனங்களிலும் அலுவல் மொழியாக உயர்வு பெறுகிறது. டை கட்டிப் பொய் பேசும் கார்பரேட் ஆசாமிகளெல்லாம் 'முனுசாமி' விட்டுக் கொண்டிருக்கிறார்கள். (இது 'பீட்டர்' விடுவதற்குத் தமிழ் நிகர்).

காலை அலுவலகம் செல்கிறான் ரவி. வாயிலில் இருந்த ஒரு இயந்திரம், அவன் முன்பு துறுத்திக் கொண்டு, அவனது கண்ணின் மணிகளைச் சோதித்து விட்டு, அவன் யாரென்று அடையாளம் கண்டு கொள்கிறது. பிறகு இயந்திரக் குரலில் அது கூறுகிறது: "வணக்கம் ரவயி, நல்வரவவு". "இப்படி சொல்றத்துக்கு பதிலா, சொல்லாமலேயே இருந்திருக்கலாம்" என்று எரிச்சலுடன் அதற்கு பதிலளித்து விட்டு, தனது இருக்கையை நோக்கிச் செல்கிறான் ரவி.

அவனுக்குப் பின் வந்த கீதாவிடம், "வணக்கம் கயீதயா" என்கிறது. அதைக் கேட்டுக் கொலை வெறியுடன் உள்ளே செல்கிறாள் கீதா. ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் இவ்வாறு தனது மனநிலை கெடுவதை நினைத்து அவளது ரத்த அழுத்தம் ஏறிக் கொண்டே போய், தற்போது அபாய நிலையை எட்டியிருந்தது. இது போல் பாதிக்கப்பட்ட அனைவரும் நிர்வாகத்திடம் முறையிடுகிறார்கள், காலையில் முதல் வேலையாக தாங்கள் அவமானப் படுத்தப்படுவது பற்றி, அதுவும் ஒரு இயந்திரத்தினால்.

நிர்வாகி கையை விரித்துவிட்டுக் கூறுகிறார், "நான் என்ன செய்யட்டும்? உங்கள் பெயர் தமிழ் ஒருங்குறியில் எவ்வாறு எழுதப் பட்டிருக்கிறதோ, அதன்படி இயந்திரம் உங்கள் பெயரை உச்சரிக்கிறது. -ம், கீதா - + + + , இவற்றைச் சேர்த்து உச்சரித்தால் அது 'கயீதயா' ஆகி விடுகிறது. இதை, இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டிலேயே சரி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போதிருந்தத் தமிழ்க் கணிமை வல்லுனர்களெல்லாம், 'வலைப்பதிவுகளில் போலிப் பின்னூட்டங்கள்' போன்ற முக்கியமான பிரச்சனைகளில் மும்முரமாக இருந்தார்கள். இதை கவனித்து சரி செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது. தவற்றை உணர்ந்து கண் முழிப்பதற்குள் பிழையான ஒருங்குறி அனைத்திடங்களிலும் ஊடுருவி விட்டது, முன்பு Y2K பூச்சி அனைத்திடங்களிலும் விரவியிருந்ததைப் போல். இதை மாற்ற வேண்டுமென்றால், நமக்கு அமெரிக்காவைப் போல் பண வசதியிருந்தாலே அது சாத்தியமாகும். அவ்வாறில்லாத நிலையில், இந்தப் பிழையான குறியேற்றத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தயவு செய்து உங்கள் பெயர் சிதைத்து உச்சரிக்கப் படுவதை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நஷ்ட ஈடாக, சம்பளத்தில் ஏதாவது கூட்டிக் கொடுக்க முடியுமென்றால், அதைப் பரிசீலிக்கிறோம்" என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.

பணியாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றார்கள்.

பி.கு:

1. இது பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கு காணலாம்.

2. 'புனைவு' என்று tag செய்து ஒரு பதிவை இடுவேனென்று கனவிலும் நினைக்கவில்லை :)


| | | |

செவ்வாய், ஜனவரி 31, 2006

உனக்குத் தடா!

சுரேஷ் கண்ணன் அவரது பதிவில் சில கருத்துகளைக் கூறியுள்ளார். உணர்ச்சிவசப்படாமல், அசட்டுத்தனமாக எதிர்க்காமல், யதார்த்தமாக சிந்தித்ததில் அவருக்குத் தோன்றியவொரு எண்ணம் - கல்விக்கூடங்களில் உடைக் கட்டுப்பாடுகள் தேவையே. அதற்கான காரணங்கள் - அவர் காண நேரிட்ட சில பெண்கள் உடுத்தியிருந்த உடைகள், அவர்களது அங்க அளவுகளைச் சந்தேகமின்றி வெளிப்படுத்தினவாம் (கண்களால் அளப்பது என்பது இதுதானோ?). இதனால் அவர் அச்சப்படும் பின்விளைவு - இத்தகைய காட்சிகளைக் காண நேரிடும் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்து, அதன் விளைவாக அவர்கள் அப்பெண்களை மனதால் (மற்றும், வாய்ப்பு கிடைத்தால் செயலிலும்கூட) துகிலுரியக் கூடுமாம். இத்தகைய துகிலுரிதலுக்கு அவர் வழங்கும் ஆண் தரப்பு நியாயம் - இங்கு நிலவும் பாலியல் வறட்சி. ஆகவே, இவ்வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களைத் தவறான பாதையில் கொண்டு செல்லாமலிருக்க, பெண்களே, தயவு செய்து உங்கள் உடலைப் போர்த்திக் கொள்ளுங்கள், தலையிலிருந்து கால் வரை.

எனக்குத் தோன்றும் ஒரு fashion idea - தலையிலிருந்து கால் வரை ஒரு cylindrical வடிவத்தில் (துணியாலான ஒரு கூண்டு போலிருக்கக் கூடிய) ஒரு உடை, with constant radius from head to toe. இது பொது இடங்களில் ஆண்கள் தம்மை கண்களால் அளப்பது, மனதால் துகிலுரிவது, போன்றவற்றைச் செய்வதிலிருந்து தடுக்க உதவும். உள்ளே இருப்பது ஒரு மனித உயிரா (அல்லது, I, Robot மாதிரியானதொரு இயந்திரமா) என்று கூட அறிந்து கொள்ள வாய்ப்பிருக்காது. இந்த உடையிலிருக்கும்போது உட்கார்ந்தால் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. (அதாவது, அங்க அளவுகள் வெளிப்பட்டு விடக்கூடும்). ஆகவே, இதற்கு ஒரு பொறியியலாளர்தான் ஏற்ற உடையை வடிவமைக்க வேண்டும். உட்காரும்போது சுற்றளவு அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும், but still retaining the cylindrical shape. அல்லது ஒரு tent போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம், அதைத் தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் சகிதத்துடன் (அந்தக்கால ஐரோப்பிய மங்கைகள் உடுத்தியதைப்போல்). என்ன, நெரிசலான இடங்களில் கொஞ்சம் பிரச்சனையாகி விடக்கூடும். இது போன்ற உத்திகளைக் கொண்டுதான், நம் நாட்டில் (அல்லது சென்னையில்) நிலவும் வறட்சி நிலையை எதிர்கொள்ள முடியுமென்று தோன்றுகிறது. (எனது யதார்த்தமான, உணர்ச்சிவசப்படாத, அசட்டுத்தனமாக எதிர்க்காத, சிந்தனைகளின் விளைவாக).

அவரது பதிவில் கூறப்படாத விஷயம் - ஆண்களும் இதுபோல் கண்களால் துகிலுரியப்படுகிறார்களா என்பதே (கிடையாது என்று நாமாக அனுமானம் செய்துகொள்ளக்கூடாதல்லவா?). ஆண்களின் உடைகளான ஜீன்ஸ், ஷார்ட்ஸ், நெஞ்சை அணைக்கும் பனியன்ஸ் போன்றவைகளால், அவர்களது அளவுகளையும் கணித்துவிட வாய்ப்பிருக்கிறதே? மேலும் வறட்சி என்பது இருபாலாருக்கும் பொதுவிலுள்ளதுதானே? அவர்களுக்கும் இருக்கிறது தீர்வு - எல்லா ஆண்களும் சாமியார்கள் அணியும் காவி அங்கியைப்போல் ஒரு ஆடையை அணியும்படி சட்டம் பிறப்பிக்கலாம். Hairstyle / மொட்டைத் தலைகளைக்் கண்டு சிலருக்கு ரத்தக் கொதிப்புகள் அதிகமாகி விடும் அபாயத்தைப் போக்க, அனைவரையும் ஒரு முண்டாசு அணிய வைக்கலாம். எல்லோரும் விவேகானந்தரைப்போல் வளைய வரலாம்.

இதுபோல், பல புரட்சிகள் செய்து, இவ்வறட்சியைப் போக்குவோம்!!

சனி, ஜனவரி 28, 2006

தணிக்கை செய்ய மனமின்றி......

புதிய விதிகளைப் பின்பற்றி, எனது கருத்துப் பெட்டியில் தணிக்கை செய்யும் வசதியைச் செயல்படுத்தியிருந்தேன். ஆனால், மனம் ஒப்பாமல் அதை மீண்டும் செயலிழக்கச் செய்திருக்கிறேன். அதற்கு மாறாக, தமிழ்மணத்தின் அருமையான கருவிப்பட்டை வசதியை அகற்றி விட்டு, என் பதிவின் பின்னூட்டங்கள் முகப்புப் பக்கத்தில் திரட்டப் படாதவாறு மாற்றியமைக்கிறேன். இது தமிழ்மண நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு செயலாக இருக்குமென்று நம்புகிறேன்.

இம்மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளாவன:

1. உங்கள் பின்னூட்டங்கள் முன்பிருந்ததைப் போலவே, உடனடியாக பொதுப்பார்வைக்கு வந்துவிடும். இதனால், என் பதிவின் மீதான உங்கள் உண்மையான கருத்துக்களை உடனுக்குடன் பொதுவில் வெளிப்படுத்த வசதியாக இருக்கும் (எனது ஈடுபாடு இல்லாமலேயே).

2. நட்சத்திரங்களைச் சொடுக்கி, உங்கள் ஆதரவையோ, எதிர்ப்பையோ தெரிவிக்கும் வசதி இனி இல்லாமல் போகிறது. ஒரு உற்சாக டானிக்காக இருந்து வந்த இந்த '+' குத்துக்களை நான் miss பண்ணப்போவது நிச்சயம். '-'களாக வந்து விழுந்தபோதும், என் கருத்து எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அறிந்துகொள்ள முடிந்தது.

3. சுதந்திரத்திற்கான விலை - இனி வரும் பின்னூட்டங்கள் தமிழ்மண முகப்பில் திரட்டப்பட மாட்டா. இதனால் இப்பதிவிற்கு 2nd round, 3rd round views கிடைக்காமல் போகின்றன. ஆகவே, 1st roundஇலேயே எனது பதிவைப் படித்து விடுங்கள் :)

4. முன்பைப் போலவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு பிளாக்கர் கணக்கை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் கிடையாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தாலும், என் வலைப்பதிவில் அதை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் கிடையாது. நீங்கள் தாராளமாக ஒரு anonymousஆக உங்கள் பின்னூட்டத்தை இட்டுச் செல்லலாம். நீங்கள் யாரென்பது எனக்கு முக்கியமல்ல, உங்கள் கருத்துதான் எனக்கு முக்கியம்.

5. முன்பைப் போலவே, கோணல்மாணலாகக் கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்களைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றை உள்ளிடக் கோரும் word verification போன்ற கட்டாயங்களை என் பதிவில் வைக்கவில்லை. ஆகவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு, ஏழு மலைகள் எட்டு கடல்களையெல்லாம் தாண்டத் தேவையில்லை.

6. With freedom comes responsibility – என் பதிவில் எச்சப் பின்னூட்டங்களைக் காண நேரிட்டால், தயவு தாட்சண்யமின்றி அவை நீக்கப்படும். இது குறித்த தகவல்களை, பதிவின் கீழே, பின்னூட்டப் பகுதியின் இறுதியில் காணலாம்.

7. இதோடு, எனது பதிவில் எந்தவொரு வருகையாளர் விவரமும் திரட்டப்பட்டதில்லை, இனியும் அதற்கான உத்தேசமில்லை என்ற உத்தரவாததையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். ஆகவே, உங்கள் privacyக்கு என்னால் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.

இதுவரை என் பதிவுகளுக்குப் பச்சை விளக்கைக் காட்டி வந்த தமிழ்மணத்திற்கு நன்றி. மேற்கூறிய மாறுதல்களுக்குப் பிறகும் அது தொடரும் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் நலமே. ஒரு வாசகர் என் பதிவைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடுவதற்கு என் ஒப்புதல் தேவை என்ற நிலையைத் தவிர்ப்பதே என் குறிக்கோள். இது தமிழ்மணத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்றால், மற்ற பதிவர்களும் இம்மாறுதல்களைச் செய்து வாசகரின் சுதந்திரத்தைக் காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். நான் ஒரு பதிவன் மட்டுமல்ல ஒரு வாசகனும் கூட, என்பதால் இவ்வேண்டுகோள்.


வியாழன், ஜனவரி 26, 2006

விடாது தணிக்கை

எவ்வகையான கருத்துக்களைப் பதியலாம் என்று வரையறுக்கும் விதிகளை இப்போதுதான் உள்வாங்கியிருக்கும் நிலையில், இப்போது எவ்வகையான எதிர்வினைகளைப் பெறலாம் என்று நிர்ணயிக்கும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றனவாம்.

வாழ்க, கருத்துச் சுதந்திரம்!







சனி, ஜனவரி 21, 2006

கோடுகள்

ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இரு நகரங்கள், ஐம்பது வருட இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளனவாம். இரண்டும் பஞ்சாபைச் சேர்ந்தவை, ஆனால் இருப்பதோ் இருவேறு நாடுகளில். வினோதமான இந்நிலை, இந்நகரங்களுக்கு மட்டுமே ஏற்பட்ட ஒன்றல்ல. மனிதன் வரைந்த கோடுகளால் இவ்வாறு வெகு அருகாமையில் வாழந்து கொண்டிருக்கும்் மக்கள், ஒருவருக்கொருவர்் தொடர்பேயில்லாமல் நிரந்தரமாகப் பிரிந்திருக்கும் நிலைக்கு ஏராளமான உதாரணங்களைக் கொடுக்கலாம். வரலாற்றின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால் இன்று இரண்டுபட்டிருக்கும் பஞ்சாப்், காஷ்மீர், வங்காளம், கொரியா, ஜெர்மனி (15 ஆண்டுகளுக்கு முன்பு வரை), அரபுப் பிரதேசங்களான பாலஸ்தீனம் - எகிப்து, என்று சோகமான உதாரணங்கள் பல நம் நினைவுக்கு வரலாம். இத்தகைய சூழ்ச்சிகளின் கசப்பான நினைவுச் சின்னங்களாக இக்கோடுகள் இன்றும் நீடித்துக் கொண்டிருப்பதுதான் நாம் வெட்கப்பட வேண்டிய நிஜமாகும்.

அமிர்தசரஸ் - லாஹோர் என்ற இரு பஞ்சாபிய நகரங்கள், ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருப்பவை, ஆனால் ஒன்று இந்தியாவிலும் இன்னொன்று பாகிஸ்தானிலும். எதிர்பார்த்ததைப் போல், இவையிரண்டிற்கும் இடையே கடந்த ஐம்பது வருடங்களாக எவ்வகையான போக்குவரத்தும் இருந்ததில்லையாம். அண்மையில் தொடங்கப்பட்ட பேருந்து வசதியால் இவ்விரு நகரங்களும் மறுபடி இணைக்கப்படுகின்றனவாம். வெகு அருகிலிருக்கும் ஒரு இடத்திற்குப் பயணப்படுவதற்கான சுதந்திரம் கூட இவ்வளவு நாட்களாக அம்மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்கிற உண்மை, இன்று பேருந்து வசதி அறிமுகப் படுத்தியதைத் தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டங்களால் மறக்கப்படக்கூடும். இன்றைய, இருபத்தியோராம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், மனித உரிமை என்பது எந்த அளவிலிருக்கிறது என்று நினைக்கையில் விரக்தியே மிஞ்சுகிறது. இவ்வளவு நாட்களாக அம்மக்கள் நடத்தியிருக்கக் கூடிய வணிக மற்றும் இதரப் பரிமாற்றங்கள், அதனால் கிடைத்திருக்கக் கூடிய ஆதாயங்கள், என்று தொலைந்து போன வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தால், ஒட்டுமொத்த இழப்புகளைக் கணக்கிட முடியாமலும் போகலாம்.

வங்காள தேசத்திலிருந்து வேலை வாய்ப்புக்காக இந்தியப் பகுதிக்குள் குடிபெயரும் மக்களைப் பற்றி அண்மையில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்களால் நமக்குப் பிரச்சனையே, அவர்களது தேவைகளை கவனிக்க வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவர்களுக்கு யாரும் உணவைக் கொண்டு போய் ஊட்டியெல்லாம் விடுவதில்லை, அவர்களது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்கிறார்கள், என்று பதிலளித்தேன். இப்படி அவர்கள் சட்ட விரோதமாக நாட்டுக்குள் உட்புகுவதால், அவர்களோடு தீவிரவாதிகளுக்கும் உள்ளே நுழையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்ற வாதத்தை வைத்தார். செப்டம்பர் 11 சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே சட்டப்படி உட்புகுந்தவர்கள்தான், அதனால் அச்சம்பவத்தைத் தடுக்கவா முடிந்தது என்று பதிலுக்கு வினவினேன். அதெப்படி வேற்று நாட்டவர்கள் நம் நாட்டிற்குள் வரலாம், நாடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமல்லவா என்றார். இப்படிக் கூறுவதற்கு நமக்கென்ன அருகதையுள்ளது, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுபவர்களல்லவா நாம், நமக்கொரு நியதி மற்றவர்களுக்கொரு நியதியா, என்று கேட்டேன். நண்பர் கோபமடைந்து இதற்கு மேல் தன்னால் வாதிட முடியாதென்றார். ஒருவர் தனது திறமைக்கு எங்கு மதிப்பும் வாய்ப்பும் அதிகம் என்று நினைக்கிறாரோ அங்கு குடிபுகுவதற்கு அவருக்கு உரிமை இருக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. இன்றைய நிலையில், மனிதன் வரைந்த கோடுகள் முற்றிலும் அழியும் வரையில், இது ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும்.

பி.கு: நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் Hotel Rwanda என்றத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அது தொண்ணூறுகளில் நடந்த ஒரு இனக்கலவரத்தைப் பற்றிய படமாகும். அதைப் பார்த்த அனுபவமும் இப்பதிவில் வெளியிட்ட எனது எண்ணங்களை வலுப்பெறச் செய்தது. நிலக்கோடுகள் மட்டுமல்லாமல் மனக்கோடுகளும் முற்றிலும் தகர்க்கப்பட வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 06, 2006

குரோ அப், டியூடெட்

வேறு வேலைகளில் மும்முரமாக இருப்பதால், சில நாட்களுக்குப் பதிவுகள் போட வேண்டாமென்று இருந்தேன். ஆனால், எனது முடிவை மாற்ற வேண்டிய நிலைமை வந்து விட்டது, புத்தாண்டுத் தீர்மானங்கள் சிலருக்கு ஒரு வாரத்திலேயே உடைவதைப்போல் :)

நான் அண்மையில் தேசிபண்டிட் தளத்தில் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. தலாஸ்ஸா மிக்ரா என்ற பெண் வலைப்பதிவர் எழுதிய ஒரு பதிவை, முன்னுரையுடன் வழங்குகிறது இப்பக்கம். "ஆண்களைக் காமப் பொருட்களாகப் பார்ப்பதிலுள்ள இன்பங்களை, மிகுந்த உற்சாகத்துடன் விவரிக்கிறார் தலாஸ்ஸா" என்பதே பதிவிற்கான அறிமுக வாக்கியம். பதிவும் நம் எதிர்பார்ப்புகளுக்குச் சற்றும் குறை வைக்காமல், சுவாரசியமாகச் செல்கிறது. "சபாஷ்", "பலே", ", நானும் அப்படித்தான்" என்று ஒரு இருபத்தி ஐந்து பின்னூட்டங்களையும் குவித்திருக்கிறது பதிவு. படித்து, சிரித்து விட்டு நகர்ந்தேன்.

ஓரிரு நாட்களுக்கு முன், நம் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு ஆண் பதிவர் அவரது பதிவில், ஒரு மழையில் நனைந்த மங்கையின் அழகை விவரிக்கப் போக, அதற்கு உடல்நல, மனநல ஆலோசனைகள், பெண்ணியப் பரோட்டாக்களெல்லாம் தட்டில் வந்து விழுகின்றன. அவரது பதிவும் தேசிபண்டிட்டில், ஆனால் கடுமையான விமர்சனங்களுடன், குறிப்பிடப்படுகிறது. ஒட்டு மொத்தத் தமிழ் டியூட்களையும் நோக்கி அறிவுரைகள் பறக்கின்றன, ஆபாசத்தையும் அயோக்கியத்தனத்தையும் கைவிடும்படி.

இத்தகைய முரண்பாடுகளால் ஒன்றுமறியாதத் தமிழ் டியூட்கள் குழம்பப் போவது நிச்சயம். தலாஸ்ஸாவின் பதிவைப் படித்ததால் வந்த நம்பிக்கை, அதற்குப்பின் வந்த குற்றச்சாட்டுகளால் தகர்ந்து போனதொன்றே மிச்சம். உடலழகு ஆபாசமா? அதை இரசிப்பது ஆபாசமா? 'மழையில் நனைந்ததால் ஒரு பெண் மேலும் அழகாகக் காட்சியளித்தாள்' என்றக் கருத்தை வெளியிட்டது தவறு என்று கூறப்படுகிறது. இதில் தவறு எங்கென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. நம் சூழலில், நம்மால் உடுத்தபடும் தொளதொள ஆடைகளால், உடலழகு என்பது மணமாகும் வரை கற்பனையில் மட்டுமே உணரக்கூடிய ஒரு அம்சமாக இருக்கிறது. அதைப்பற்றிப் பேசுவதும், நினைப்பதும் குற்ற உணர்வை அளிக்கக்கூடிய செயல்களாகி விட்டன. இந்நிலையில், ஒரு மழையால் வெளிப்பட்ட ஒரு அழகுணர்வை நினைவு கூர்ந்ததாகக் குறிப்பிட்ட அப்பதிவில், உண்மையாகவே எனக்கு மனநலக் குறைவாக எதுவுமே தோன்றவில்லை.

நாம் ஏன் உடலை ஒரு அவமானச் சின்னமாகக் கருத வேண்டும்? நம் அறிவு, ஆற்றல், சாதனைகள் என்பவற்றைப் போல் நம் உடலழகும் ஒரு போற்றுதலுக்குரிய அம்சம்தானே? ஒருவரிடமுள்ள மற்ற சிறப்புகளைப் போல், அவருடைய உடலழகையும் கருதலாமல்லவா? இதில் ஆபாசமும் குற்றவுணர்வும் ஏன்?

ஒட்டுமொத்தத் தமிழ் டியூடெட்களையும் நோக்கியெல்லாம் நான் அறிக்கைகள் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட டியூடெட்டுக்கு இந்தப் பதிவு கண்ணில் படுமானால் மகிழ்ச்சியே :)

| | | |

வியாழன், டிசம்பர் 29, 2005

தேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button

விக்கி பக்கங்களில் இருப்பது போல் வலைப்பதிவுகளிலும் Edit வசதியிருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்? அதிகமாக எதுவும் செய்து விட மாட்டேன். பதிவை மாற்றி எழுதும் முயற்சிகளிலெல்லாம் இறங்க மாட்டேன். அவ்வப்போது (அதாவது, அடிக்கடி) தென்படும் குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர வேறெந்தத் தவறான நோக்கமும் எனக்கில்லை. ஏனென்றால், இன்று தமிழ்மணமும் வலைப்பதிவுகளும் வாசகர்களால் வெகுவாக வருகை தரப்படுகின்றன. பலவீனமான இதயமுள்ளவர்களும் இதில் அடங்கலாமென்பதால், அவர்களது நலனை முன்னிட்டே இந்த எண்ணம். மேலும், நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வைக்கும் நமது எழுத்தாற்றல்களால், ஆரோக்கியமானவர்களுக்கும் உடல்நலம் குன்றி விடும் வாய்ப்புகள் இருப்பதும், என் கவலைக்கு ஒரு காரணம்.

அளிப்பதற்கும் அழிப்பதற்குமுள்ள வேறுபாடு, களிப்பதற்கும் கழிப்பதற்குமுள்ள வேறுபாடு, போன்றவை மழுங்கி விடுகின்றன, அவ்வப்போது (அதாவது, அடிக்கடி - இதை ஒவ்வொரு முறையும் குறிப்பிடப்போவதில்லை, இனிமேல் நீங்களே மாற்றிப் புரிந்து கொள்ளுங்கள்). விளைவு - "விடுமுறையை நன்றாகக் களித்தேன், நேரத்தை நன்கு செலவளித்தேன்" போன்ற பிரயோகங்கள்.

கற்பு வேண்டாமென்று ஏகமனதாக முடிவு செய்து விட்டோம். சிலர், "அது இருக்கட்டுமே், இருபாலாருக்கும்் அதைப் பொதுவில் வைப்போமே?" என்றெல்லாம் கேட்டுப் பார்த்தனர். ஆனால், "முடியவே முடியாது" என்று அதைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இன்று வெற்றிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் கற்பைத்தானே வேண்டாமென்றோம், 'கறுப்பு' இருந்துவிட்டுப் போகட்டுமே? 'எனக்குப் பிடிச்ச கலரு' அவ்வப்போது 'ருப்பாகி' விடுவது மற்றொரு சோகம்.

ஜனநாயகத்தைப் பற்றிய அதிருப்தியைத் தெரிவிக்கையில், அது ஜனனாயகமாகி விடுகிறது. உலகில் அநியாயம் நடப்பது சகஜம்தான். அதைக் கண்டு பொங்கியெழும் பதிவர்கள், அதை அனியாயமாக்கி விடுவதும் சகஜம்தான் போலிருக்கிறது.

சொற்களை ஒற்றெழுத்துக்களில் தொடங்கி எழுதக் கூடாதென்று ஒரு விதி இருப்பதாக நினைவு. அது தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்பது எனது ச்சின்ன ச்சின்ன ஆசைகளில் ஒன்று. இப்படிக் கூறுவதால் ப்ரச்சினை எதுவும் வராதில்லையா?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு பதிவர், “தமிழில் spell checker இல்லாத காரணத்தால் நான் இப்படித்தான் எழுதுவேன்" என்ற தீர்மானத்துடன் தனது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார். அவருக்கு விரைவில் ஒரு spell checker கிடைக்க நமது வாழ்த்துக்கள்.

நேற்று ஒரு அறிவிப்புப் பதிவைப் பார்த்தேன். அதாவது, அப்பதிவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரென்றும், விரைவில் அது அச்சில் வரப்போகிறதென்றும், அறிவித்திருந்தார். அது ஒரு சுயசரிதை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆகா, சுயசரிதை எழுதும் அளவுக்குப் பெரிய மனிதரா நம் வலைப்பதிவுகளில், என்று மேற்கொண்டு படித்தால், அது ஏதோ நடிகரரொருவரின் வாழ்க்கை வரலாறாம் (அதாவது, சரிதை). பிழையைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிடலாமென்றால், அதுவும் முடியாமல் ஏதோ தகராறு. நல்லவேளையாக அவரது மின்னஞ்சல் முகவரி இருந்தது, profileஇல். பிழையைத் திருத்தக் கோரி மின்னஞ்சலிட்டிருக்கிறேன். ஆவன செய்வாரென்று நம்புவோம்.

இதே உணர்வுகள் ஆங்கிலப் பதிவுகளைப் படிக்கும் போதும் ஏற்படுகின்றன. சில காலமாக, DesiPundit உபயத்தில், பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பதிவுகள் படிக்கக் கிடைக்கின்றன. அங்கும் நெஞ்சு வலி, இதயத் துடிப்பைக் நிறுத்தும் கணங்கள், ஆகியவை அவ்வப்போது ஏற்படுகின்றன. நிறுத்தக் குறியீடுகள் (punctuations) தேவையற்ற இடங்களில் இருப்பதும், தேவைப்படும் இடங்களில் இல்லாதிருப்பதும், பெரும்பாலும் வலைப்பதிவுகளில் ஒரு பொருட்டேயல்ல என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

பொதுவிடங்களிலும் இது போன்ற அறிவிப்புப் பலகைகள், பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகள் போன்றவை இருப்பதைப் பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை என்று ஒரு புத்தகம் முழுவதிலும் புலம்பியிருக்கிறார் ஒரு அம்மணி. “Eats, shoots and leavesஎன்ற அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததும், "அட, நம்மைப் போல் இன்னொருவர்", என்றப் பாச உணர்வு பொங்கிற்று. நல்ல நகைச்சுவையான நடை, முழுவதும் படிக்க வேண்டும். Two weeks notice என்று வெளிவந்த ஒரு படத்தின் பெயரைப் பற்றி மாய்ந்து மாய்ந்து புலம்பியிருக்கிறார், "இப்படியும் ஒரு அநியாயமுண்டா, இதைக் கேட்பாரே இல்லையா", என்றெல்லாம். (இலக்கணப்படி, Two weeks' notice என்று இருந்திருக்க வேண்டும்.) Apostrophe Protection Society என்ற ஒரு அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டு, அகமகிழுந்து போய் அவர்களைத் தொடர்பு கொண்டு, “எவ்வாறு பிழையான பெயர்ப்பலகை வைப்பவர்களைத் திருத்துகிறீர்கள்?” என்று வினவியிருக்கிறார். அதற்கு அவர்கள், மரியாதை கலந்த மடல் ஒன்றை அனுப்புவதாக தெரிவித்தனராம். “அடுத்த முறை பெயர்ப்பலகையை மாற்றும்போது தயவு செய்து இந்தத் திருத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்" என்று இருக்குமாம் அம்மடலில். அம்மணிக்கு இதெல்லாம் திருப்திகரமாகத் தெரியவில்லை. "நாம் ஏன் ஒரு தீவிரவாத அணியாகச் செயல்படக்கூடாது? பெயிண்ட் சகிதம் களத்திலிறங்கி, தவறான குறியீடுகளை நாமே திருத்தலாமே?” என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கினாராம். செயல்படுத்தினாரோ இல்லையோ, மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருக்கிறார், "பிழைகளைச் சகிப்பதில்லை" (zero tolerance approach) என்ற அணுகுமுறையை முன்நிறுத்தி.

நமக்குத் தீவிரவாதமெல்லாம் கைவராது. ஏதோ, விக்கியைப் போல், பிழைகள் தென்பட்டால், அவற்றைத் திருத்த முடிந்தால் நன்றாகயிருக்குமே என்ற எண்ணத்தைத்தான் இங்கு உரக்கச் சிந்திக்கிறேன். சக வாசகர்கள் எதிர்பாராத விதங்களில் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியங்களைக் குறைக்கும் நல்லெண்ணம்தான், வேறொன்றுமில்லை.

ஞாயிறு, டிசம்பர் 25, 2005

Mozilla Thunderbird - ஒரு அறிமுகம்

இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு மென்பொருள் கருவி. உங்கள் gmail (மற்றும் இதர POP access வசதியளிக்கும் மின்னஞ்சல் சேவைகளின்) வழங்கியிலிருந்து, தானியங்கு முறையில் உங்கள் மின்னஞ்சல்களை உங்கள் கணினியில் கொண்டு வந்து ஒப்படைக்கக் கூடியது. விரும்பும் RSS தொகுப்புகளைச் சேர்த்துக் கொண்டால், அவை புதுப்பிக்கப்படும் போதெல்லாம் புதுவரவுகளை இறக்கிக் கொண்டு, உங்கள் பார்வைக்கு தயார் நிலையில் வைக்கக் கூடியது. நீங்கள் எழுதும் மடல்களை சிறப்பான தோற்றத்துடன் htmlஇல் வடிவமைக்க உதவும் கருவி. தெரிந்தவர்கள் / சொந்தங்கள் / அதிகத் தொடர்புடையவர்களது மின்னஞ்சல், மண்ணஞ்சல், தொலைபேசி எண்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் ஒரு தகவல் தளம். செயல்படுத்த அதிகக் கணிமையாற்றலெல்லாம் தேவையில்லாமல், ஆதிகாலத்து pentium செயலியைக் கொண்ட கணினியில் கூட செயலாற்றக்கூடியது. வேறு சில மென்பொருட்களைப் போல் active உறுப்புகளுக்கு வசதி செய்து கொடுத்து, வைரஸ் வகையறாகளுக்குப் பின் கதவைத் திறந்து விடாத, பாதுகாப்பானதொரு தீர்வு. திறமூலத்தாலான ஆதாயங்களுமுண்டு.

இப்படிப் பல புகழாரங்களை சூட்டிக் கொண்டே போகலாம். ஆனால் அது மட்டுமல்ல என் நோக்கம். உலாவி(browser) என்பது வந்ததிலிருந்து நமது நேரமும் சக்தியும் கூடுதலாக விரையமாகிறதோ என்று ஒரு எண்ணம். தேவையற்ற விளம்பரங்கள், நம் அந்தரங்கத்திற்குள் ஊடுருவப் பார்க்கும் நிரலிகள் / கண்காணிப்பான்கள், மின்மினுக்கும் சொடுக்கத் தூண்டும் சுட்டிகள், அவற்றைச் சொடுக்கியதால் அவசியமே இல்லாமல் செலவாகிப்போன மணித்தியாலங்கள், இவையனைத்தையும் இறக்கிக் கொள்ளத் தேவைப்படும் இணைய இணைப்புகள், அவற்றுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், என்று விரயப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். சில மணி நேரங்கள் இணையத்தில் மேய்ந்த பிறகு, அதனால் கிட்டிய ஆதாயம் என்ன என்று பார்த்தால், பூஜ்யம்தான் மிஞ்சுகிறது. ஒரு உவமையோடு விளக்க வேண்டுமென்றால், இணையத்தில் உலாவுவது, ஒரு முன்திட்டமில்லாமல் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் இங்குமங்கும் அலைவதற்கு ஒப்பானது என்று கூறலாம். தோன்றிய இடத்தில் வண்டியை நிறுத்தி, அங்கிருப்பதை வாங்கி அல்லது வேடிக்கை பார்த்து விட்டு, போரடித்ததும் அங்கிருந்து நகர்ந்து, அடுத்த கண்ணைக் கவரும் இடம் வந்ததும், அங்கும் முந்தைய இடத்தில் செய்ததைப் போலவே நேரவிரயம் செய்து........... நிஜ வாழ்வில் இப்படிச் செய்யாத பொறுப்பானவர்கள்தான் நாம். இருந்தும் இணையத்தில் பெரும்பாலும் இதைத்தான் செய்கிறோம். தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தாலும் அதே கதிதான்.

நேரம்தான் நமது ஒரே அரிய பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. பணமோ, வேறு உடமைகளோ இழந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நேரம் என்பது செலவிட்டது செலவிட்டதுதான். அத்தகைய ஒரு அரிய சொத்தை நாம் கவனத்துடன் செலவிடுவதில்லை. Thunderbird போன்ற ஒரு மென்பொருளை வைத்துக் கொண்டு நம் நேரத்தைத் திறம்பட நிர்வாகிக்க முடியும் என்பதே எனது கருத்து. பொதுவாக நாம் இணையத்தில் சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் பலமுறை செல்கிறோம். இவற்றில் மின்னஞ்சல் தளங்களும் அடக்கம். அவற்றைத் தவிர செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், திரட்டிகள்............ இவை ஒரு நாளில் பலமுறை புதுப்பிக்கப்படும் தன்மையுடையவை என்பதால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாகக் கிடைக்கலாமென்ற நம்பிக்கையில் மறுபடி மறுபடி இத்தளங்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு முறையும் அவை காண்பிக்கும் வர்ண ஜாலங்கள், உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைக் கண்காணிக்கும் நிரல்கள், தேவையற்ற விளம்பரப் பட்டைகள், முன் வந்து விழும் அறிவிப்புகள் / எச்சரிக்கைகள் இவையனைத்தும் உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குகின்றன. இவற்றை இறக்குவதற்கும் இணைய ஆற்றல் (connection speed), நேரம் ஆகியவை செலவாகிறது. Thunderbird போன்றதொரு மென்பொருளைக் கொண்டு இத்தகைய விரயங்களைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக உலாவும் தளங்களின் RSS தொகுப்புகளை அதனிடம் குறிப்பிட்டு விட்டால், அதுவே இத்தளங்களின் புதிய வார்ப்புகளைக் கொண்டு வந்து ஒப்படைத்து விடும். அதே போல் உங்கள் gmail விவரங்களை அதற்குத் தெரிவித்து விட்டால், உங்கள் மின்னஞ்சல்கள் சுடச்சுட உங்களுக்குப் பரிமாறப்பட்டு விடும். அடிக்கடி gmail வலைத்தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டியதில்லை.

வலைப்பதிவு இன்று அதிக நேரத்தை விழுங்கும் ஒரு அம்சமாகி விட்டது. ஒரு பதிவைப் படிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றது என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன் அதன் டெம்ப்ளேட் அட்டகாசங்களுடன் நம் உலாவியில் வந்திறங்குவதற்கு இன்னுமோர் ஐந்து நிமிடங்கள் ஆகிறது. இவ்வாறு ஒரு நாளில் தமிழில் நூறு பதிவுகள், ஆங்கிலத்தில் நூறு பதிவுகள், மற்ற தொழில் / ஆர்வத்துறைகளைச் சார்ந்த பதிவுகள் என்று கூட்ட ஆரம்பித்தால், அதற்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள் காணாது. இவற்றை உலாவியில் படிப்பதற்கு பதிலாக, Thunderbirdஇல் இவற்றின் RSSஐப் பார்வையிட்டால், சில நொடிகளில் தெரிந்து விடும், ஒரு பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டுமா அல்லது நழுவ விட்டு விடலாமா என்று. இந்த அணுகுமுறையில் பல நல்ல பதிவுகளை குறுகிய நேரத்திலேயே படித்து விட முடியும். பதிவிடுவதற்காவது உலாவி தேவையல்லவா என்கிறீர்களா? Bloggerஇல் பதிவுகளை மின்னஞ்சலிலிருந்தே பதிப்பிக்கலாம், Mail-to-Blogger என்ற வசதி கொண்டு. (இப்பதிவு அவ்வகையிலேயே வலையேற்றப்பட்டது, Thunderbirdஇலிருந்து)

மின்னஞ்சல் கொண்டே பதிவுகளை வெளியிட்டு, மின்னஞ்சல்களைப் போலவே (RSS செயல்பாடும் மின்னஞ்சலை ஒத்ததுதானே?) அவற்றைப் படிக்கும் இச்செயல்முறை பழைய மடற்குழுக்களை நினைவு படுத்துகிறதல்லவா? நுட்பமும் fashionஐப் போலத்தானே? முன்பு வெகுவாகக் கடைபிடிக்கப் பட்ட செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் நாளடைவில் பல மாற்றங்களைக் கடந்து, மீண்டும் நடைமுறைக்கு வருவது மனித இயல்புதானே? பல உதாரணங்கள் அளிக்கலாம் இத்தகைய குணத்திற்கு. (e.g. Mainframe => PC => Server-side computing => Peer-to-peer etc.) ஒரு மடற்குழுவாக மட்டும் இல்லாமல், ஒரு வலைத்தளமாகவும் பதிவாவது ஒரு முன்னேற்றம். மேலும் மடற்குழுக்களிலுள்ள சில விரும்பத்தகாத அம்சங்கள் இதில் தவிர்க்கப்படலாம். ( -ம், எதிர் கருத்துக்கள், விவாதங்கள் ஆகியவை எல்லோருக்கும் விநியோகிக்கப் படாமல், படைப்புகள் மட்டுமே RSS தொகுப்பாக விநியோகிக்கப்படுகிறது. விவாதங்கள் வலைப்பதிவுகளில் நடக்கலாம். நேரக்குறைவுள்ளவர்கள் மற்றும் விவாதங்களைத் தொடர விரும்பாதவர்கள் படைப்புகளை மட்டும் படித்து விட்டுச் செல்லலாம்).

இணையம் ஒரு பயனுள்ள வசதிதான். அதில் நமக்குப் பயனளிக்கும் அங்கங்கள் எவை என்று தெரிந்து செயல்பட்டால், அவைகளிலிருந்து Thunderbird மூலமாக அதிகமான பயனை அடையலாம், குறுகிய நேரச் செலவிலேயே. நம் தேவைக்கேற்றவாறு தகவல் நமக்குத் 'தள்ளப்படும்' இத்தகைய நுட்பத்தை push technology என்பார்கள். அதற்கு மாறாக, நாமே (உலாவியைக் கொண்டு) அத்தகவலின் மூலங்களுக்குச் சென்று அதை 'இழுக்க' வேண்டியிருந்தால் அது pull technology ஆகும். Push ஒரு தானியங்கும் நுட்பம். Pull, மனிதர் இயக்கும் நுட்பம். நமது பெரும்பாலான இணையச் செயல்பாடுகள் pushஆகவும், ஒரு சில மட்டுமே pullஆகவும் இருக்குமானால்.......... நமக்கு குடும்பத்துடன் செலவழிக்க அத்த்த்த்த்திக நேரம் கிடைக்கும். இதற்காக மட்டுமேனும் Thunderbird கவனிக்கப்பட வேண்டியது.

புதன், டிசம்பர் 21, 2005

தர்ம யுத்தம்

ஒரு நல்லவனைக் கொண்டு போய் ஒரு கயவனிடம் ஒப்படைத்து, அவனுக்குப் பயிற்சியளிக்க விட்டால் என்ன நடக்கும்? இன்னொரு கயவன் உருவாக்கப் படுவானல்லவா? Not always. சில சமயம் நல்லவன் நல்லவனாகவே இருந்து கொண்டு, தன்னைத் தவறாக வழிநடத்தும் கயவனை முற்றிலுமாக அழிப்பதும் நிகழலாம். அத்தகைய அபூர்வமான ஒரு சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதே Training Day, Denzel Washingtonனுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வாங்கித் தந்த படம்.

Denzel போதைப் பொருட்கள் தடுப்புத்துறையைச் சார்ந்த காவலதிகாரி. நீதியை, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நிலையில், தானே அவற்றை மீறுபவர். இருந்தும் சமுதாயத்திற்கு நல்லதே செய்கிறோமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை. ஓநாய்களை வீழ்த்த, தானும் ஒரு ஓநாயாக இருக்க வேண்டுமென்பது அவரது நியாயப்படுத்தல். (அவரது பயிற்சியில் ஓநாயைப் போல் ஊளையிடக் கற்றுக் கொடுப்பதும் ஒரு அங்கம்). தம்மிடம் பயிலும் அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டுவது, தானும் போதைப்பொருளைப் புகைத்து, பயிற்சி பெறுபவரையும் (துப்பாக்கி முனையில்) புகைக்க வைப்பது, குடித்து விட்டு வாகனமோட்டுவது, தெருவில் பிடிபட்ட சிறு குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க வழி செய்யாமல், அவன் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவனிடமிருக்கும் சில்லரை பணத்தையும் அபகரித்துக் கொள்வது, போதைப்போருள் இருக்கிறதா என்று சோதனையிடச் சென்ற வீட்டில், ஒன்றுமில்லை என்று தெரிந்த பின் (வீட்டுக்காரர்களை வேறொரு அறையில் துப்பாக்கி முனனயில் உட்கார வைத்துவிட்டு) அவ்வீட்டிலிருந்த பணப்பெட்டியிலிருந்து பணத்தை திருடுவது, நான்கு மில்லியன் டாலர்கள் திருட்டுப்பணம் பிடிபட்ட இடத்தில், ஒரு மில்லியனை தனக்கும் தனது அதிகாரிகளுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மூன்று மில்லியன் டாலர்களே கிடைத்ததாக அறிக்கை கொடுப்பது, அதற்கான சாட்சியை அழிப்பதற்காக அப்பணத்தை வைத்திருந்தவரை (முற்றிலுமாக அவர் corner செய்யப்பட்ட நிலையில்) கொலை செய்து, ஏதோ encounter நடந்து அதில் தற்காப்புக்காகச் செய்யப்பட்ட கொலையைப் போல் ஜோடனை செய்வது.............. இப்படி அவரது சாகசங்கள் பலவிதம். பிடிபட்ட திருட்டுச் சொத்தில் தனக்கும் பங்குண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, சமூக நலனுக்காக தான் செய்யும் அத்துமீறல்கள், சட்ட விரோதங்கள் ஆகிய எல்லாம் நியாயமானவையே என்ற வலுவான கருத்து, இப்படி ஒரு முரணான பாத்திரமே Denzelஉடையது.

இதற்கு நேரெதிர் குணமுடையவர்தான் அவரிடம் பயற்சி பெறுவதற்காக சேரும் Ethan Hawke. அவரது மேலதிகாரியின் போக்குடன் சற்றும் உடன்படாமல், அவரோடு போரிட்டு இறுதியில் வீழ்த்துகிறார். மிகத் திறமைசாலி. (குற்றங்களைக் கண்டு கொள்வதில்) கூர்மையானப் பார்வை , வேகம், விவேகம், அனைத்தும் கிடைக்கப்பெற்ற ஒரு அதிகாரி. அவரது திறமையே அவரது மேலதிகாரி Denzelஐ மிகவும் கவருகிறது. Ethan தனக்கு ஒரு பொக்கிஷமாகத் திகழ்வார் என்று நம்புகிறார் Denzel. தனது அத்துமீறல்களை மட்டும் கண்டு கொள்ளாமலிருந்தால் நன்றாயிருக்குமே என்ற ஒரு ஆதங்கம்தான் :)

Denzel இப்படியொரு negative roleஇல் இதுவரை பார்த்ததில்லை. The Preacher's Wife, Hurricane, John Q போன்ற படங்களால் என்னை மிகவும் கவர்ந்த நடிகரவர். முதல் முறை இப்படத்தைப் பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது, Denzelஐ இப்படிச் செய்து விட்டார்களேயென்று. இரண்டாம் முறை தக்க முன்னேற்பாடுகளுடன் (Old Monk, Club Soda, Kurkure etc etc.) பார்க்க உட்கார்ந்ததால், அவரது நடிப்பை நன்கு ரசிக்க முடிந்தது :) யதார்த்தம் சமரசம் செய்யப் பட்டது போல் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வுகள் நடைமுறையில் நடக்கக்கூடியதாகத்தான் பட்டது. படம் முழுவதிலும் எங்கும் செயற்கைத்தனம் இருந்ததாகவே உணர முடியவில்லை. சன் டிவி பாணி தீர்ப்பிலிருந்து ("மொத்தத்தில்......” etc etc) உங்களுக்கு விடுதலையளிக்கிறேன். :)


ஞாயிறு, டிசம்பர் 18, 2005

உலகமயமா, மாயமா?

ஒரு நாட்டின் மகிமை, அதன் பின்தங்கியவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்தே கணிக்கப் படுகிறது. ஆகவே, உலக வர்த்தகம் இந்நாட்டை மேம்படுத்துகிறதா என்று ஆராய்வதற்கு, இன்று நம் இலட்சோபலட்சம் இளைஞர்களுக்கு உலகமயமாக்கத்தால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், வசதியான வாழ்க்கை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதைக் கடந்து, நம்மில் எளியவர்களின் நிலை எத்தகைய மாற்றங்களைக் கண்டிருக்கிறது, வரப்போகும் மாற்றங்களால் அவர்கள் அடையக்கூடிய பாதிப்புகள் / ஆதாயங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டும்.

இது பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு அலசல் என்பதால் பேரெட்டோ செயல்திறன் (Pareto Efficiency) விதியைப் பற்றிய அறிமுகமும் பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன். சுருங்கக் கூறவேண்டுமென்றால், ஒரு மாற்றம் நிகழ்வதால் ஒருவருக்கு ஆதாயம், அதோடு வேறெவருக்கும் எவ்வகையான பாதிப்புமில்லை (முன்னிருந்த நிலைமையே தொடர்கிறது) என்றிருந்தால் அது பேரெட்டோ செயல்திறன் விதிக்கு ஏற்புடைய ஒரு மாற்றமாகும். அதாவது, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த சமுதாயமும் முன்னேறியதாகக் கொள்ளலாம். இந்த அளவுகோலை வைத்து உலகமயமாக்கத்தை அளந்தால் கிடைக்கும் விடையென்ன என்பதே நாம் ஆராய வேண்டியது.

அடிப்படைகளைத் தெளிவு படுத்திக் கொள்ளும் சாக்கில், இதையும் குறிப்பிட்டு விடுகிறேன். ஒரு வர்த்தக நிறுவனத்தின் அடிப்படை இலட்சியமென்ன என்று ஆராய்ந்தால், நமக்குப் பொதுவாகக் கிடைக்கக் கூடிய விடைகள் -அதன் இலாபம் (அதனால் அதன் பங்காளர்களுக்குக் கிடைக்கும் வருவாய்), அது அளிக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், அரசுக்குக் கிடைக்கக் கூடிய வரிப்பணம், அதன் சுற்றுப்புறத்திலுள்ள சிறு நிறுவனங்களுக்கு (அவற்றின் பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பிருப்பதால்) வருமானம், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கூறிய காரணங்களால், ஒரு பகுதியில் ஏற்படும் வர்த்தக முதலீடுகள், அப்பகுதியில் வாழும் மக்களாலும், அதன் அரசு நிர்வாகங்களாலும் வரவேற்கப்படுகின்றன. ஆனால், இவையனைத்தும் ஒரு வர்த்தக நிறுவனத்தால் ஏற்படும் பின்விளைவுகளேயன்றி, அதன் இலட்சியமல்ல. அதன் இலட்சியம் என்றுப் பார்த்தால், நிபுணர்களின் தத்துவ ரீதியானக் கூற்றுப்படி, அதன் வாடிக்கையாளர்களின் முன்னேற்றமே அதன் இலட்சியம். அவர்களது குறிப்பிட்ட தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதே ஒரு நிறுவனத்தின் இலட்சியமாகும். ஆகவே, முதலீடுகளுக்கு (அந்நிய, உள்நாட்டு.... எதுவாகயிருப்பினும்) சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்குமுன், அவற்றின் இலட்சியங்களும், அவை நிகழும் பகுதிகளிலுள்ள சமுதாயங்களின் இலட்சியங்களும் ஒத்துப் போகின்றனவா என்று ஆராய்வது பலனைத் தரும். இந்நாட்டு மக்களை, வாடிக்கையாளர்கள் என்ற வகையில் முன்னேற்றாத எந்தவொரு நிறுவனமும் செய்யும் முதலீடுகள், இந்நாட்டின் ஒரு சிறிய பகுதியினருக்கே சாதகமாக முடியும் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. அந்நிய முதலீட்டை விடுங்கள், நம் நாட்டு நிறுவனங்களான Infosys, TCS, Wipro போன்றவற்றால் இச்சமுதாயத்திற்கு பெரிதாக என்ன நேர்ந்து விட்டது? அவற்றின் மொத்தப் பங்களிப்பில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அளித்த பங்களிப்பு / ஏற்படுத்திய முன்னேற்றம் எத்தனை சதவிகிதம்? இவற்றிற்குச் செலவிடப்பட்ட முதலீடுகள், உழைப்பு, வரவேற்பு மரியாதைகள், விதி / வரி விலக்குகள் ஆகியவை, வேறு திசைகளில், நம் நாட்டிற்கு நேரடியாகப் பலனளித்திருக்கக் கூடிய வேறு வகை நிறுவனங்களுக்கு (அவை அந்நிய நாட்டைச் சார்ந்தவையாக இருப்பினும்) கிடைத்திருக்குமானால் நாம் இன்னும் முன்னிலையில் இருந்திருப்போமோ என்னவோ. நம் policy makersஇன் குறைப்பார்வையே வெளிப்படுகிறது இதிலிருந்து.

மேலே உள்ள தத்துவங்களின் படி இன்று நிகழும் பல big ticket முதலீடுகளை ஆராய்ந்தால், அவை இந்நாட்டு மக்களுக்குப் பயன் படாது, பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கே சாதகமாக விளங்குவதைக் காணலாம். சில விதிவிலக்குகள் என்று கூற வேண்டுமென்றால், செல்பேசிகள் தயாரிப்பு, வாகனங்கள் தயாரிப்பு, புது வகையான வங்கி / நிதி / காப்புறுதி சேவைகள், தொலைபேசி / தொடர்பாடல் சேவைகள், மின்/மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பு, சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு, மருந்து-மாத்திரைகள் தயாரிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். கணினிச் செயலிகள் (microprocessors) தயாரிப்பைத் துவக்கப் போவதாக செய்திகள் வந்தாலும், அவற்றால் நமக்குக் குறைந்த விலைக் கணினிகள் கிடைக்கக் கூடுமென்ற சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் அதனை வரவேற்கலாம். இல்லாவிட்டால் அவற்றை சீனாவே தயாரித்து விட்டுப் போகட்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நம் தயவில் கொழிக்கச் செய்வதற்கான கட்டாயம் நமக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனது புரிதலில் பிழையிருக்கலாம் ;)

முதலீடுகளில் அத்தியாவசியமானவை (ஆகவே ஆதரிக்கப்பட வேண்டியவை) எவை, அவ்வளவாக நமக்கு முக்கியமில்லாதவை (இருந்தும் இன்று பரந்த வரவேற்பைப் பெற்றவை) எவை என்பதைப் பற்றிய எனது பார்வையை தெளிவு படுத்தியிருக்கிறேனென்று நம்புகிறேன். இதைக் கடந்து, அது அந்நிய முதலீடா, நம் நாட்டவரின் முதலீடா என்ற செய்தியெல்லாம் ஒரு தகவலுக்காகத்தான் பயன்படுமென்று நினைக்கிறேன். இதை விட, ஒரு முதலீட்டால் பல வறியவர்கள் காலகாலமாக வாழ்ந்துவந்த இடத்திலிருந்து இடம்பெயர நேர்கிறதா, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறதா, அவர்களது சூழல் சரிசெய்ய முடியாத அளவிற்கு மாசடைகிறதா, அவர்களது இயற்கை வளங்களான குடிநீர், விளைநிலங்கள், மீன்வளங்கள் ஆகியவற்றை இழக்க நேரிடுகிறதா, என்பது போன்ற கேள்விகள் நேர்மையான முறையில் விடையளிக்கப்பட வேண்டியவை. இது போன்ற ஆபத்துக்கள் எதுவுமில்லை என்று உறுதியான பிறகே, ஒரு முதலீட்டுக்கு (அது நம் நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று என்ற முடிவுக்கு வந்த பிறகும்) அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அடுத்து ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளைப் பற்றி. உலகெங்கிலுமுள்ள சிறப்பம்சங்களை நாமும் எளிதில் பெற வழி செய்தல் வேண்டும். அது போலவே, நம்மிடமுள்ள சிறப்புகளும் எட்டுத் திக்குகளிலும் பாய்ந்து நமக்கு செல்வச் செழிப்புகளைப் பெற்றுத் தரவேண்டும். இந்த அடிப்படைக் கொள்கையில் நமக்கு எந்த பேதமுமில்லை. நம் தயாரிப்பில் வெளிவரும் பொருட்களுக்குப் போட்டியாக வெளியுலகிலிருந்து அவற்றை விடச் சிறப்பாகவோ, மலிவாவோ பொருட்கள் நம்மை வந்தடைந்தால் அதை இருவிதமாக எதிர்கொள்ளலாம். முதல் வகை - அப்பொருட்களைத் தடை செய்வது, அல்லது அவற்றின் மீது அதிகப்பட்ச வரிகளை விதித்து, அவற்றின் சிறப்பை / கவர்ச்சியை குறைப்பது, அதன் விளைவாக நம் மக்கள் நம் தயாரிப்புகளையே (அவை தரக்குறைவானவையாக இருந்தாலும்) தொடர்ந்து வாங்கச் செய்வது. இப்படிச் செய்வதனால் யாருக்கு ஆதாயம்? நம் தயாரிப்பாளர்களுக்கு, அவர்களைச் சார்ந்திருக்கும் உழைப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு. ஆனால், இத்தகைய கொள்கையால் பொதுமக்களுக்கு பேரிழப்பே. இதனால் அவர்களது வாங்கும் சக்திக்கேற்ற தரமான பொருட்களை வாங்க விடாமல், அதிக விலை கொடுத்து தரக்குறைவான உள்நாட்டுச் சரக்கையே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால், நம் தயாரிப்பாளர்களும் தரக்குறைவான பொருட்களை விற்பதற்கே ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களது இலாபம் பாதுகாக்கப் படுவதொன்றே இதனால் கிடைக்கும் பலன். இப்படியில்லாமல், இறக்குமதி பொருட்களும் தடைகளின்றி நம்மை வந்தடையலாமென்ற நிலையிருந்தால், நம் தயாரிப்பாளர்களும் உலக அளவிலான போட்டியின் காரணமாக அவர்களின் தரத்தை உயர்த்துவது, விலையைக் குறைப்பது போன்றவற்றைச் செய்து, வாடிக்கையாளர்களின் தேவைகளை முதன்மைப்படுத்துவார்கள். .

நான் மேலே குறிபிட்டுள்ளது, அத்தயாரிப்பாளர்கள் கோடிகளில் உழலும் பெருமுதலாளிகளாக இருக்கும் பட்சத்தில். இதுவே, சிறுதொழில் முதலாளிகள், குடிசைத் தொழில் நடத்துவோர் ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்களால் உலக அளவிலான, பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவைகளுடன் போட்டியிட முடியுமா என்று ஆராய்ந்து, பிறகே அத்தகைய தொழில்களில் சர்வதேசப் போட்டிகளை அனுமதிக்கலாம். இல்லாவிட்டால் பலரது வயிற்றுப் பிழைப்பில் மண் விழுவது ஒன்றுதான் நிகழும். வறுமையொழிப்பில் ஒரு முக்கியமான உத்தியாக சிறுதொழில்கள் வளர்ச்சியை ஊக்குவிப்பது நடைபெற்று வருகிறது. அதற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவற்றிற்கு வெளியுலகப் போட்டியை அனுமதித்தால், பலர் மீண்டும் வறுமை நிலைக்கே திரும்பி விடும் அவலமே நிகழும்.

விவசாயப் விளைபொருட்களுக்கும் இத்தர்க்கம் பொருந்தும். ஒரு விவசாயி மிகுந்த உளைச்சல்களுக்குப் பிறகு அறுவடை செய்யும் தானியங்களுக்கும், காய் கனிகளுக்கும் நியாய அடிப்படையில் விலைகளும், வாடிக்கையாளர்களும் கிடைக்குமாறு வழி செய்யப்படா விட்டால், நஞ்சுண்டு உயிரிழப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போகும். இங்கும் சிறுவிவசாயி / பெரும்பண்ணையார் என்ற பாகுபாட்டைக் கடைபிடித்து, அதன்படி விதிகளை இயற்ற வேண்டும். முற்றிலும் தேவைப்பட்டவர்களையே அரசின் உதவிகள் / பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன சென்றடைய வேண்டும். (Tea estate முதலாளிகளையல்ல) விவசாயம் பற்றிய விவாதத்தில் வேறு சில அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1.மேலை நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் அதிநவீன விவசாய முறைகள் 2.மேலை நாட்டு அரசுகள் அவர்களது விவசாயிகளுக்கு அளித்து வரும் அளவுக்கதிகமான மானியத் தொகைகள்.

இங்கு கல்வியறிவு கூட இல்லாத நம் விவசாயிகளால், மேலை நாடுகளில் முற்றிலும் விஞ்ஞான முறையில், இயந்திரமயமாக்கப்பட்ட விவசாய முறைகளைக் கடைபிடிக்கும் அவர்களது விவசாயிகளின் உற்பத்தித் திறனுடன் போட்டியிட முடியுமா என்ற கேள்விக்கு விடை, அதிலேயே பொதிந்துள்ளது. உயர்தர விதைகள், உரங்கள், ரசாயனப் பொருட்கள், பாசன முறைகள், இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பெருமளவினால் ஏற்படும் சிக்கனத்தையும் (economy of scale) சாதகமாக்கிக் கொண்டு, மிகக் குறைந்த வேலையாட்களையே வைத்துக் கொண்டு, ஒரு மேலை நாட்டு விவசாயியால் தன் விளைபொருட்களை மிக மலிவான விலைக்கு விற்க முடியும். இது போதாதென்று, அவர்களது அரசுகள் வேறு அவர்களுக்கு மானியத் தொகைகளை அளிக்கின்றனவாம். பல பில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து இதற்கென ஒதுக்கப் படுகிறதாம், ஒவ்வொரு வருடமும். இதனால் ஏற்படும் விளைவு, அளவுக்கு அதிகமாக சாகுபடி செய்து, உபரி விளைச்சல்களை உலக மயம் என்ற பெயரில் வளரும் நாடுகளின் சந்தைகளில் மலிவு விலைக்கு கொட்டி (dumping), அந்நாட்டு விவசாயிகளால் அதை ஈடு செய்ய முடியாமல், அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப் படுவதுதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களை தக்க முறையில் பரிசோதனைக்குட்படுத்தும் வசதிகளும் போதிய அளவில் இல்லாததன் காரணத்தால், வேறு வளர்ந்த நாடுகளில் (அளவுக்கதிகமான பூச்சி கொல்லிகளின் கலப்படம், போன்ற காரணங்களால்) நிராகரிக்கப்படக்கூடிய உணவுப்பொருட்களை, வளரும் நாடுகளின் தலையில் கட்டும் அபாயமும் இருப்பதாகத் தெரிகிறது.

ஆக, இன்று உலக வர்த்தகமானது பல குறைகளைக் கொண்டுள்ளது. சகல வசதிகளையும் பெற்ற, தம்மை நன்கு நிறுவிக்கொண்ட வர்த்தகர்களுக்குச் சாதகமாகத் திகழ்ந்து, அவர்கள் மேன்மேலும் செழிப்புறுவதற்கு வகை செய்யும் விதமாகவே உள்ளன இன்றைய வர்த்தக விதிமுறைகளும், அரசு நடவடிக்கைகளும். நம் நாட்டளவில் எடுத்துக் கொண்டாலும், கோடிக்கணக்கான எளியவர்களின் வாழ்க்கையை அழிக்கக் கூடிய ஒரு மாற்றமாகவே உலகமயமாக்கத்தைக் கருத முடியும். முதலில் கூறிய பேரெட்டோ செயல்திறன் விதிக்குக் கட்டுப்படாமல், மாறாக அதற்கு நேரெதிர் விளைவைத் தருவதே இந்த உலகமயமாக்கம். இன்றைய நிலையில் அதனை எதிர்ப்பதே எந்தவொரு மகத்துவமான நாட்டிற்கும் சரியானதொரு முடிவாக இருக்க முடியும்.

பி.கு: இன்றைய draft தீர்மானத்தைப் பற்றி இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 2013ஆம் ஆண்டிற்குள் எல்லா விவசாய மானியங்களையும் அகற்றுவதற்கு பரிந்துரை, என்றெல்லாம் செய்தி கண்ணில் பட்டது. ஏதோ, நல்லது நடந்தால் சரிதான்.

புதன், டிசம்பர் 14, 2005

டெக்னோராட்டி - சில தகவல்கள், யோசனைகள்

டெக்னோராட்டி தேடுபொறியை, சில உத்திகளைக் கையாண்டு, ஒரு வலைப்பதிவுத் திரட்டியைப் போல் பயன்படுத்துவதைப் பற்றி முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். அதன்படி இன்று (என்னையும் சேர்த்து) சில வலைப்பதிவர்கள் இம்முறையைப் பின்பற்றி, அவர்களின் பதிவுகள் டெக்னோராட்டி தேடல்களில் கிடைக்கும் வண்ணம் அவற்றை இடுகின்றனர். மேலும் சிலர் இதனை முயற்சித்துவிட்டு, முடியாமல் கைவிட்டு விட்டனர் என்று நினைக்கிறேன். இச்செய்முறையில் பொதுவாக நேர்ந்து விடும் சில தவறுகள், அவற்றைத் தவிர்ப்பது, சில புதிய உத்திகள், மற்றும் டெக்னோராட்டி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதிகள் ஆகியவற்றைத் தெரியப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

1.சின்னத்திரை - 'டெக்னோராட்டி மினி' என்றழைக்கப்படும் இவ்வசதியால், பதிவுகளின் பட்டியல் ஒரு சின்னத்திரையில் காண்பிக்கப்படும், கீழே உள்ளது போல்.

இத்திரை நிமிடத்திற்கொரு முறை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலுடையது என்பதால், சென்ற நிமிடத்தில் டெக்னோராட்டியால் சேர்த்துக் கொள்ளப்பட்ட பதிவுகளும் தாமாகவே இந்த நிமிடத்தில் உங்கள் பார்வைக்குக் கிடைத்து விடும். இதனைச் செயல்படுத்த http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றப் பக்கத்திற்குச் சென்று, அதன் வலதுபுறத்திலிருக்கும் 'View in Mini' என்று குறிப்பிடப்பட்ட சுட்டியைச் சொடுக்க வேண்டும், அவ்வளவே. குட்டித்திரையை minimise செய்து நாள் முழுவதுமாக அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கலாம், புதிதாக பதிவுகள் வந்துள்ளனவா என்று (அலுவலக நேரங்களில் அவ்வப்போது வேலையும் செய்யுங்கள் :) )

2.பதிவில் வகைப்பெயர் (tag) சேர்க்கை: முன்பே கூறியது போல், பதிவுகளை tag செய்வது எளிது. கீழே கொடுக்கப்பட்ட html நிரலை, பதிவின் கடைசி வரியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது பதிவை உள்ளிடும் எழுதிப் பெட்டியிலேயே கடைசியில் இதையும் வெட்டியொட்ட வேண்டும் (i.e. within the text editor):

<a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag">தமிழ்ப்பதிவுகள்</a>

htmlஐப் பார்த்துவிட்டு சிலர் templateஇலெல்லாம் கைவைக்க, விளைவு வேறு விதமாகப் போய்விட்ட அனுபவத்தையெல்லாம் அறிய நேரிட்டது :) Wordpress, Blogsome போன்ற சேவைகளைப் பயன்படுத்துவோர், html எல்லாம் தேவையின்றி, அவர்களது category வசதி கொண்டு (category = தமிழ்ப்பதிவுகள்), பதிவுகளை tag செய்யலாம்.

3. துணைப்பிரிவுகள்: தமிழில் எழுதப்படும் பதிவு என்பதைக் கடந்து, வேறெந்த அடிப்படையில் உங்கள் பதிவை விவரிக்க முடியும்? எந்தத் துறை அல்லது துணைப்பிரிவைச் சார்ந்த பதிவு என்ற தகவல் பயனளிக்குமல்லவா? ஆகவே, தமிழ்ப்பதிவுகள் என்ற main tagஉடன், அரசியல், ஆன்மீகம், வர்த்தகம், நகைச்சுவை, இலக்கியம், இசை, திரைப்படங்கள் (reviews), புத்தகங்கள் (reviews), நுட்பம், கவிதைகள், கதைகள், பயணங்கள்........ இப்படி ஏதாவது ஒன்றையும் (அல்லது ஒன்றுக்கு மேலும்) additional tagஆக வழங்கினால், குறிப்பிட்ட துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதைச் செய்வதற்கும் அதே முறையைப் பின்பற்ற வேண்டியதுதான், அதாவது, tagஇற்கான html நிரலைச் சேர்ப்பது:

<a href="http://technorati.com/tag/[tag]" rel="tag">[tag]</a>

இதில், [tag] என்பதற்கு பதிலாக பதிவின் துணைப்பிரிவைக் குறிப்பிட வேண்டும். உ-ம்,

<a href="http://technorati.com/tag/இசை" rel="tag">இசை</a>
<a href="http://technorati.com/tag/அரசியல்" rel="tag">அரசியல்</a>
<a href="http://technorati.com/tag/வர்த்தகம்" rel="tag">வர்த்தகம்</a>
<a href="http://technorati.com/tag/திரைப்படங்கள்" rel="tag">திரைப்படங்கள்</a> etc, etc.

டெக்னோராட்டி அளிக்கும் related tags வசதியைக் கொண்டு, தமிழ் tags அனைத்திற்குமிடையே உறவுமுறைகளை வளர்க்க முடியுமா என்றும் ஆராயவேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு பட்டியலுக்கான பக்கத்தில் மற்ற பட்டியல்களுக்கான சுட்டிகள் கிடைக்கும், அவற்றுக்குத் தாவிக் கொள்வது எளிதாகும். இப்பதிவிலேயே (இறுதியில்) அந்த ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறேன்.

4.வேற்று கிரக மொழியில் tags: 'தமிழ்ப்பதிவுகள்' என்ற அருமையான தமிழ்ச்சொல் இருக்க, சிலர் அவர்களது பதிவுகளுக்கு வேற்று கிரக மொழிகளிலிருந்தெல்லாம் சொற்களைப் பிடித்து வந்து tag செய்கின்றனர். நிஜமாகத்தான் கூறுகிறேன், நம்பிக்கையில்லை என்றால் இங்கு காண்க. இத்தகைய செயல்களில் ஈடுபடும் தமிழின எதிரிகளைச் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்குத் தக்க பதிலளிக்குமாறு தமிழ் கூறும் நல்லுலகத்தை வேண்டிக் கொள்கிறேன். அத்துடன், நீங்களும் இவ்வாறு வேற்று கிரக மொழியில் tag செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன். (சொல்லாமல் விடப்படும் செய்தி - இந்த வேற்று கிரகப் பட்டியலில் எனது சில பதிவுகளும் அடக்கம். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நம் தமிழினத்தைப் பிரித்தாள முற்படும் வேற்று கிரகச் சதியாக இருக்கக் கூடுமென்பதைத் தவிர வேறெதையும் உறுதியாகக் கூறுவதற்கில்லை)

5.டெக்னோராட்டிக்கு சுட்டி: உங்கள் பதிவின் templateஇல் டெக்னோராட்டிக்கு சுட்டி கொடுக்க விரும்பினால் இவ்வாறு கொடுங்கள்:

<a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்">தமிழ்ப்பதிவுகள்</a>

(Note: rel="tag" என்ற குறிப்பு இதில் இல்லாததை கவனிக்கவும். அக்குறிப்பை பதிவிற்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவிற்கு வெளியே templateஇலெல்லாம் பயன்படுத்தினால் indexingஇல் - அதாவது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் பிரச்சினை வருகிறது).

6.பறைசாற்றுதல்: சரியாக tagging எல்லாம் செய்து பதிவை வெளியிட்ட பின்னர், அதை டெக்னோராட்டியிடம் தெரிவிக்க வேண்டுமல்லவா? Ping எனப்படும் இந்நடவடிக்கை ஒவ்வொரு முறை புதுப் பதிவை வெளியிட்ட பிறகும் கண்டிப்பாக செய்ய வேண்டியது. ஆனால் ஒரு பதிவிற்கு ஒரு முறை ping செய்தால் போதும். அதற்கு மேல் செய்தால் டெக்னோராட்டி கோபித்துக் கொள்ளும். கல்லூரி நாட்களில் "உள்ளேன் ஐயா" என்று ஒரு முறைக்கு மேல் (அதாவது, வகுப்பில் இல்லாத மற்றவர்களின் சார்பாகவும்) குரல் கொடுத்தால் ஆசிரியருக்குக் கோபம் வருமல்லவா, அதே போலத்தான். பதிவிட்ட ஒவ்வொரு முறையும் ping செய்ய வேண்டுமா என்று வருந்தினால், அதற்குத் தீர்வு Wordpress போன்ற சேவைகள் அளிக்கும் auto-ping வசதி. இல்லாவிட்டால், டெக்னோராட்டியில் ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் வலைப்பதிவை அதற்கு அடையாளம் காட்டினால் (i,e, claim your blog), அது அவ்வப்போது உங்கள் வலைப்பதிவுக்கு வந்து "புது பதிவு க்கீதா?" என்று வேவு பார்த்து விட்டுப் போகும், இருந்தால் பட்டியலில் அதுவாகவே சேர்த்துக்கொள்ளும். ஆனால் இது நடைபெறுவதற்கு சில யுகங்களாகலாம் என்பதால், manual pingஏ சிறந்தது.

7.டெக்னோராட்டி vs. தமிழ்மணம்: இத்தகைய ஒப்பீட்டிற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் இவையிரண்டும் வெவ்வேறு பயன்களைத் தருபவை. தமிழ்மணம் என்பது நம் தமிழ் வலைப்பதிவு உலகின் சமூக நுழைவு வாயில். பல்வேறான நிகழ்வுகள், சண்டைகள் :), மீம்கள், நட்சத்திர வாரம் போன்ற சிறப்புப் பங்களிப்புகள், இன்னும் பல்வேறு மனித முயற்சிகளை (உ-ம், பிடித்த பதிவுகள் etc) ஒருங்கிணைக்கும் தளம். டெக்னோராட்டி ஒரு முற்றிலுமான நுட்ப சம்மந்தப்பட்ட, உணர்வுகளில்லாத (கொள்கைகளில்லாத) ஒரு இயந்திர வசதி. ஆகவே, ஒரு டெக்னோராட்டி நிரலை சேர்த்துக் கொள்வதால் ஒருவருடைய தமிழ்மண விசுவாசம் குறைந்து விடும்/விட்டது என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. ஒரு sitemeter, clock போன்ற நிரல்களைச் சேர்ப்பது போலத்தான் இது. அதிகமான அளவில் பதிவர்கள் தங்கள் பதிவுகளை tag செய்வார்களென்றால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு Mini, sub-categories போன்ற அதி நவீன வசதிகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டும். தமிழ் வலைப்பதிவு உலகம் இரண்டாயிரம் / மூன்றாயிரம் பதிவர்கள் என்ற எண்ணிக்கைகளைத் தொட்டு விடுமானால், அவற்றை வகை பிரிக்காமல் படிப்பதென்பது கடினமானதொரு முயற்சியாகி விடும். ஆதலினால், tag செய்வீர்.


(இந்த tag சிதறலைக் கண்டு இது ஏதோ சகலகலா வல்லவப் பதிவு என்று எண்ணிவிட வேண்டாம். tagகளிடையே உறவுகளை உருவாக்கும் முயற்சியிது)

செவ்வாய், டிசம்பர் 13, 2005

நலன் பேணும் அரசு - Welfare State

நாட்டிலுள்ள அனைவருக்கும் எவ்வித பேதமுமின்றி, உயர்தரக் கல்வி, பரவலாகக் கிடைக்ககூடிய மருத்துவ வசதி, அடிப்படை வேலை வாய்ப்புகள், வேலையற்றவர்கள் / வறியவர்களுக்கு உதவித்தொகை, சட்ட ஒழுங்கை உறுதி செய்யக் கூடிய நம்பகமான காவல் துறை, ஆண் - பெண் சமநிலை/உரிமைகள்/வாய்ப்புகள்........... இவையனைத்தையும் இலவசமாக (அதாவது மக்களின் வரிப்பணத்தை மட்டும் கொண்டு) அரசே உறுதி செய்யுமானால் எவ்வாறிருக்கும்? இது ஏதோ இடதுசாரிக் கருத்தியலைப் போலுள்ளதே என்று எண்ணுபவர்களுக்கு - இது மேற்கத்திய (வலதுசாரி) உலகில், பல நாடுகளில் நடைமுறையிலுள்ள ஒரு அரசு முறைதான். நம் நாட்டில் ஒரு அரசியல் கட்சி இத்தகைய வாக்குறுதிகளை அளிக்குமானால், அது ஜனரஞ்சக உத்திகளை (populist measures) கடைபிடித்து ஆட்சியைப் பிடிக்க முயலுவதாக அனைத்துத் தரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்படும். இவை கஜானாவை காலி செய்யும் நடவடிக்கைகள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. மேலும், இது போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் / பொருளாதாரத்தின் வர்த்தகப் போட்டித்தன்மை (business competitiveness) பாதிப்படைந்து விடும் என்ற அச்சமும் நிபுணர்களால் நீரூற்றி வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. அதற்குத் தோதாக fiscal deficit, fiscal discipline எனறெல்லாம் வார்த்தை ஜாலங்களோடு விளையாடுவதற்கென்றே தயார் நிலையில் ஒரு நிபுணர் கூட்டம் காத்திருக்கிறது.

நிற்க! ஒரு நலன் பேணும் அரசு ஒரு அரை நுற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி கொண்டிருக்கும் ஒரு நாட்டின் சாதனைகள் இவை:
  • உலக நாடுகளிலேயே, வர்த்தப் போட்டித்தன்மையில் முதலிடம்
  • உலகின் தலை சிறந்த அடிப்படைக் கல்வியமைப்பு (Basic education system), அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு ஆசிரியர் பதவி என்பது மிக மதிப்பிற்குரிய, பலத்த போட்டிகளைக் கடந்து அடையக்கூடிய ஒன்று என்பதால், முதல்தர கல்வியாளர்கள் நிரம்பிய கல்வியமைப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறதாம்.
  • உலகிலேயே மிக அதிகமான சுதந்திர நிலையை அடைந்த பெண்கள். அந்நாட்டின் குடியரசுத் தலைவரும் ஒரு பெண். (இதிலென்ன சிறப்பு என்றெண்ணுபவர்களுக்கு - மேலை நாடுகளில் நம் நாடுகளைப் போல் பெருந்தலைவர்களின் மனைவிகளும், மகள்களும், தோழிகளும் ஆட்சிப் பீடத்தை அடைந்து விட முடியாது. தகுதி அடிப்படையிலேயே தேர்தல்களுக்கு நியமனம் பெற முடியும்)
  • உலகிலேயே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் முதலிடம்
  • உலகிலேயே மிகக் குறைந்த அளவில் ஊழல்கள்
  • உலகிலேயே அதிகமான செல்பேசிகளின் அடர்த்தி (cellphone density)
  • இணைய இணைப்புகளின் எண்ணிக்கையில் உலகின் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று.
  • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான ஒலிம்பிக் பதக்கங்கள் (1 மில்லியன் மக்களுக்கு 106 ஒலிம்பிக் பதக்கங்கள். அமெரிக்கா - 8.3 பதக்கங்கள், இந்தியா - 0)
  • Formula 1 போட்டிகளில் முன்னணி இடத்திலுள்ள பல வீரர்களின் தாயகம்
  • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான இசைக் கலைஞர்களைப் பயிற்றுவித்த நாடு
  • மக்கள் நூலகங்களுக்குச் செல்வதில் உலகில் முதலிடம் (தேவநேயப் பாவணர் நூலகம் ஆனந்த் தியேட்டர் அருகிலுள்ளது என்றெல்லாம் வழிகாட்ட வேண்டிய நிலையில் இல்லை)
  • உயர் தொழில் நுட்பத்தில் (hitech) உலகில் முன்னணி நாடுகளில் ஒன்று. Nokiaவின் பிறப்பிடம். Linuxஐத் தோற்றுவித்த Linus Trovaldsஇன் தாயகம்.
  • ஐரோப்பாவிலேயே இரண்டாவது பாதுகாப்பான நகரத்தைத் தலைநகராகக் கொண்டது
  • செய்தித்தாள்களுக்கு அதிகமான வாசகர் வட்டம் (ஜனத்தொகையில் 70%. அமெரிக்கா 50%)
  • தலைசிறந்த மருத்துவ வசதிகள், அனைவராலும் எளிதில் பெறக்கூடியவை, இலவசமாக.
  • உலகிலேயே விஞ்ஞான ஆய்வுக்காக (GDP சதவிகிதப்படி) அதிகமான முதலீடு i.e. #1 in investments for R&D as a % of GDP
தகவல் உதவி:

நம் நாட்டுச் சூழலில் ஏன் நலத் திட்டங்கள் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெறுகின்றன? எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு நலத் திட்டம் நமது சத்துணவுத் திட்டமாகும். அதன் பலன்களும் விளைவுகளும் எவ்வளவு தூரம் ஆராயப்பட்டிருக்கின்றன என்றுத் தெரியவில்லை. இருந்தும் நமது கல்வி நிலை மேம்பாடடைந்ததில் அதற்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்றே தோன்றுகிறது. தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுத் துறைகளில் பரவலாக நிலவும் ஊழலைக் காரணம் காட்டி இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டாலும், எனக்கென்னவோ நமது அடிமனதில் வேறூன்றிய நலத் திட்ட எதிர்ப்பு நிலைப்பாடுதான் இதற்குக் காரணமென்று தோன்றுகிறது. ஒரு நலன் பேணும் அரசு வெற்றியடைவதற்கு பொதுமக்களின் அதிகப்படியான பங்களிப்பு தேவை. ஒரு சமத்துவ, நலமான சமுதாயத்தை உருவாக்க, நாம் நம் வருமானத்தில் 45% வரை வரியாகச் செலுத்த வேண்டி வரலாம். நாம் தயாரா அதற்கு?