வியாழன், டிசம்பர் 29, 2005

தேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button

விக்கி பக்கங்களில் இருப்பது போல் வலைப்பதிவுகளிலும் Edit வசதியிருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்? அதிகமாக எதுவும் செய்து விட மாட்டேன். பதிவை மாற்றி எழுதும் முயற்சிகளிலெல்லாம் இறங்க மாட்டேன். அவ்வப்போது (அதாவது, அடிக்கடி) தென்படும் குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர வேறெந்தத் தவறான நோக்கமும் எனக்கில்லை. ஏனென்றால், இன்று தமிழ்மணமும் வலைப்பதிவுகளும் வாசகர்களால் வெகுவாக வருகை தரப்படுகின்றன. பலவீனமான இதயமுள்ளவர்களும் இதில் அடங்கலாமென்பதால், அவர்களது நலனை முன்னிட்டே இந்த எண்ணம். மேலும், நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வைக்கும் நமது எழுத்தாற்றல்களால், ஆரோக்கியமானவர்களுக்கும் உடல்நலம் குன்றி விடும் வாய்ப்புகள் இருப்பதும், என் கவலைக்கு ஒரு காரணம்.

அளிப்பதற்கும் அழிப்பதற்குமுள்ள வேறுபாடு, களிப்பதற்கும் கழிப்பதற்குமுள்ள வேறுபாடு, போன்றவை மழுங்கி விடுகின்றன, அவ்வப்போது (அதாவது, அடிக்கடி - இதை ஒவ்வொரு முறையும் குறிப்பிடப்போவதில்லை, இனிமேல் நீங்களே மாற்றிப் புரிந்து கொள்ளுங்கள்). விளைவு - "விடுமுறையை நன்றாகக் களித்தேன், நேரத்தை நன்கு செலவளித்தேன்" போன்ற பிரயோகங்கள்.

கற்பு வேண்டாமென்று ஏகமனதாக முடிவு செய்து விட்டோம். சிலர், "அது இருக்கட்டுமே், இருபாலாருக்கும்் அதைப் பொதுவில் வைப்போமே?" என்றெல்லாம் கேட்டுப் பார்த்தனர். ஆனால், "முடியவே முடியாது" என்று அதைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இன்று வெற்றிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் கற்பைத்தானே வேண்டாமென்றோம், 'கறுப்பு' இருந்துவிட்டுப் போகட்டுமே? 'எனக்குப் பிடிச்ச கலரு' அவ்வப்போது 'ருப்பாகி' விடுவது மற்றொரு சோகம்.

ஜனநாயகத்தைப் பற்றிய அதிருப்தியைத் தெரிவிக்கையில், அது ஜனனாயகமாகி விடுகிறது. உலகில் அநியாயம் நடப்பது சகஜம்தான். அதைக் கண்டு பொங்கியெழும் பதிவர்கள், அதை அனியாயமாக்கி விடுவதும் சகஜம்தான் போலிருக்கிறது.

சொற்களை ஒற்றெழுத்துக்களில் தொடங்கி எழுதக் கூடாதென்று ஒரு விதி இருப்பதாக நினைவு. அது தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்பது எனது ச்சின்ன ச்சின்ன ஆசைகளில் ஒன்று. இப்படிக் கூறுவதால் ப்ரச்சினை எதுவும் வராதில்லையா?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு பதிவர், “தமிழில் spell checker இல்லாத காரணத்தால் நான் இப்படித்தான் எழுதுவேன்" என்ற தீர்மானத்துடன் தனது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார். அவருக்கு விரைவில் ஒரு spell checker கிடைக்க நமது வாழ்த்துக்கள்.

நேற்று ஒரு அறிவிப்புப் பதிவைப் பார்த்தேன். அதாவது, அப்பதிவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரென்றும், விரைவில் அது அச்சில் வரப்போகிறதென்றும், அறிவித்திருந்தார். அது ஒரு சுயசரிதை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆகா, சுயசரிதை எழுதும் அளவுக்குப் பெரிய மனிதரா நம் வலைப்பதிவுகளில், என்று மேற்கொண்டு படித்தால், அது ஏதோ நடிகரரொருவரின் வாழ்க்கை வரலாறாம் (அதாவது, சரிதை). பிழையைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிடலாமென்றால், அதுவும் முடியாமல் ஏதோ தகராறு. நல்லவேளையாக அவரது மின்னஞ்சல் முகவரி இருந்தது, profileஇல். பிழையைத் திருத்தக் கோரி மின்னஞ்சலிட்டிருக்கிறேன். ஆவன செய்வாரென்று நம்புவோம்.

இதே உணர்வுகள் ஆங்கிலப் பதிவுகளைப் படிக்கும் போதும் ஏற்படுகின்றன. சில காலமாக, DesiPundit உபயத்தில், பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பதிவுகள் படிக்கக் கிடைக்கின்றன. அங்கும் நெஞ்சு வலி, இதயத் துடிப்பைக் நிறுத்தும் கணங்கள், ஆகியவை அவ்வப்போது ஏற்படுகின்றன. நிறுத்தக் குறியீடுகள் (punctuations) தேவையற்ற இடங்களில் இருப்பதும், தேவைப்படும் இடங்களில் இல்லாதிருப்பதும், பெரும்பாலும் வலைப்பதிவுகளில் ஒரு பொருட்டேயல்ல என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

பொதுவிடங்களிலும் இது போன்ற அறிவிப்புப் பலகைகள், பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகள் போன்றவை இருப்பதைப் பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை என்று ஒரு புத்தகம் முழுவதிலும் புலம்பியிருக்கிறார் ஒரு அம்மணி. “Eats, shoots and leavesஎன்ற அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததும், "அட, நம்மைப் போல் இன்னொருவர்", என்றப் பாச உணர்வு பொங்கிற்று. நல்ல நகைச்சுவையான நடை, முழுவதும் படிக்க வேண்டும். Two weeks notice என்று வெளிவந்த ஒரு படத்தின் பெயரைப் பற்றி மாய்ந்து மாய்ந்து புலம்பியிருக்கிறார், "இப்படியும் ஒரு அநியாயமுண்டா, இதைக் கேட்பாரே இல்லையா", என்றெல்லாம். (இலக்கணப்படி, Two weeks' notice என்று இருந்திருக்க வேண்டும்.) Apostrophe Protection Society என்ற ஒரு அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டு, அகமகிழுந்து போய் அவர்களைத் தொடர்பு கொண்டு, “எவ்வாறு பிழையான பெயர்ப்பலகை வைப்பவர்களைத் திருத்துகிறீர்கள்?” என்று வினவியிருக்கிறார். அதற்கு அவர்கள், மரியாதை கலந்த மடல் ஒன்றை அனுப்புவதாக தெரிவித்தனராம். “அடுத்த முறை பெயர்ப்பலகையை மாற்றும்போது தயவு செய்து இந்தத் திருத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்" என்று இருக்குமாம் அம்மடலில். அம்மணிக்கு இதெல்லாம் திருப்திகரமாகத் தெரியவில்லை. "நாம் ஏன் ஒரு தீவிரவாத அணியாகச் செயல்படக்கூடாது? பெயிண்ட் சகிதம் களத்திலிறங்கி, தவறான குறியீடுகளை நாமே திருத்தலாமே?” என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கினாராம். செயல்படுத்தினாரோ இல்லையோ, மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருக்கிறார், "பிழைகளைச் சகிப்பதில்லை" (zero tolerance approach) என்ற அணுகுமுறையை முன்நிறுத்தி.

நமக்குத் தீவிரவாதமெல்லாம் கைவராது. ஏதோ, விக்கியைப் போல், பிழைகள் தென்பட்டால், அவற்றைத் திருத்த முடிந்தால் நன்றாகயிருக்குமே என்ற எண்ணத்தைத்தான் இங்கு உரக்கச் சிந்திக்கிறேன். சக வாசகர்கள் எதிர்பாராத விதங்களில் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியங்களைக் குறைக்கும் நல்லெண்ணம்தான், வேறொன்றுமில்லை.

25 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நான் கவனித்தவரையில் ஒற்றுப்பிழைகள் ஏராளம் - நல்லத் தருணம், வந்துப் போ என்ற ரீதியில். எழுதுபவர்கள் இவற்றில் குறைந்தளவேனும் கவனம் செலுத்தினால் நன்றாகத்தான் இருக்கும். பேச்சுத் தமிழுக்கும் எழுதும் தமிழுக்குமுள்ள வித்தியாசங்கள் இன்னுமொரு சிக்கல்! நகைச்சுவையாக நீங்கள் எழுதியிருப்பினும், யோசிக்கவேண்டிய விஷயம்.

Muthu சொன்னது…

//எதிர்பாராத விதங்களில் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியங்களைக் குறைக்கும் நல்லெண்ணம்தான்//

நல்லா காமெடியா எழுதி இருக்கிறீர்கள். சிந்திக்கவும் வைத்துள்ளீர்கள். வலைப்பதிவர்கள் பலரும் அமெச்சூர்கள் இல்லையா? அப்படித்தான் இருக்கும்.
சில எஷ்டாபிளிஷ்ட் பிளேயர்ஸ் (குட்டி எழுத்தாளர்களும்) அப்படி இருந்தால்
சுட்டி காட்டலாம். அவர்களும் திருத்திக்கொள்ளலாம்.(என் பதிவுகளிலும் பல பின்னூட்டங்களிலும் இந்த தவறு இருக்கும்)

அன்பு சொன்னது…

WoW. வலைப்பதிவுகளில் ஒரு வித்தியாசமான பதிவு. என்னவெல்லாம் பற்றி வாழ்வில் கவலை கொள்கின்றீர்... பெருமையாக இருக்கிறது.
பி.கு: பதிவு பெரும்பாலும் தலைப்பையே சுத்திவந்தாலும், இடையிடையே உங்களின் வேறுசில ஆதங்கங்களையும் தெளித்திருக்கின்றீர்கள்.

நன்றி.

தெருத்தொண்டன் சொன்னது…

VOW,நல்லது. இதை நீங்கள் சொன்னால் கேட்க முடியுமா? அது அதைப் பாதுகாக்க இயக்கம் நடத்த வேண்டும்.

தமிழைத் திருத்தப் புறப்பட்டவர்கள் குடும்பத்தினர் அனைவரும் தமிழ் நன்றாக எழுதுகிறார்களா என்று கேள்வி எழும். பொதுவாகச் சொல்வது குடும்பத்திற்கும் பொருந்தும் என்று விளக்கம் வரும்.

உங்கள் பதிவுகள் மனநிறைவைத் தருகின்றன. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!

Maravandu - Ganesh சொன்னது…

உங்கள் வலைப்பூவின் தலைப்புச் செய்தியில் எண்ணங்களின் குரல் வடிவம் என்று எழுதியிருக்கிறீர்கள்.
நியாயமாகப் பார்த்தால் எண்ணங்களின் எழுத்து வடிவம் என்று தானே இருக்கவேண்டும் :-)

சரி எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன .

அஜீவன் என்ற பெயருக்கு உயிரற்றவன் என்று தானே அர்த்தம்?
சிரஞ்சீவி என்ற பெயரை சிரம்+சீவி என்று பிரித்து தலைவெட்டி என்று சொல்லலாமா?

இதெல்லாம் குதர்க்கமான கேள்விகள் அல்ல , உங்கள் தமிழ் அறிவுக்கு ஒரு சோதனை :-)

என்றும் அன்பகலா
மரவண்டு

ilavanji சொன்னது…

Check out this setting in blogger.com -> settings -> basic tab...

"Show Quick Editing on your Blog?

Yes No

When you're logged in to Blogger, edit your posts from your blog with one click"

வசந்தன்(Vasanthan) சொன்னது…

முக்கியமான பதிவு.
சன்னாசி சொன்னது போல், ஒற்றுப்பிழைகள்தான் அதிகம் உறுத்துகின்றன.
ஆனால் ஒற்றுப்பிழைகளுக்கு, பேச்சுத்தமிழ் - எழுத்துத்தமிழிற்கிடையான வேறுபாடு காரணமன்று. ஏனெனில் பேசும்போது ஒற்றுக்கள் தானாகவே சரியாக வந்துவிடும். உச்சரிப்பதைப்போன்று எழுதினாற்கூட (ஒற்றுப்பிழைகளுக்கு மட்டும் இதுபொருந்தும்) நிறைய ஒற்றுத் தவறுகள் தவிர்க்கப்படலாம்.

சந்திப்பு சொன்னது…

என்னைப் பொறுத்தரை நான் எழுத்துப் பிழையில் மன்னன் (ஆங்கிலத்திலும் தான்!). நீங்கள் கூறுவது போல் ஏதாவது எடிட்டரோ, எழுத்துப் பிழை நீங்கியுடன் இருந்தால் நல்லது என நினைக்கிறேன். இன்னொன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டிரான்°லேஷன்) மென்பொருள் இருந்தாலும் சிறப்பாக இருக்கும். எங்காவது இருந்தால் தகவல் சொல்லுங்கள்.

Voice on Wings சொன்னது…

சன்னாசி, நம் எழுத்தை மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதை ஒரு லேசான மனநிலையோடு கூறுவதுதான் என் நோக்கம். பேச்சு மொழி - எழுத்து மொழி வேறுபாடு எல்லா மொழிகளிலும் உண்டல்லவா? ஆங்கில வலைப்பதிவுகளிலும் இந்நிலை இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். இது தமிழுக்கு மட்டுமே உள்ள ஒரு பிரச்சினையல்ல. இணையத்தால், இன்று எவர் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில், பொதுவாக அதிகம் எழுதாதவர்களும் (என்னையும் சேர்த்துத்தான்) இன்று எழுத்துரிமை பெற்றிருப்பதால் வந்த விளைவு, என்பதைத் தவிர வேறெப்படியும் இதை விளக்க முடியவில்லை.

முத்து, நானும் அமெச்சூர்தான். எனது பிழைகளும் சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றைத் திருத்திய அனுபவமெல்லாம் உண்டு. தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் (நேரமின்மை போன்ற காரணங்களால் இது முடியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது), என்னென்ன சறுக்கல்களெல்லாம் சாத்தியம் என்ற வகையில் பொதுவிலும் வைத்தால், பலருக்கும் அது எழுத்தில் கவனமாயிருக்க வசதிப்படலாமென்றுதான் இப்பதிவை இட்டேன். காமெடி, சும்மா, பாடம் போல் தோன்றாமலிருக்க :)

அன்பு, ஒரு மிகைப்படுத்திய வெளிப்பாடாகத்தான் கவலை, ஆதங்கம், என்றெல்லாம்் குறிப்பிட்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு எதனாலும் கவலையெல்லாம் கிடையாது. (கற்பையும் சேர்த்துத்தான் :) )

தெருத்தொண்டன், குடும்பம் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. என்னதான் தனிமனிதன், தனித்துவம் என்றெல்லாம் பேசினாலும், கடைசியில் ஒரு கூட்டத்தோடு இணைக்கப் படுவதொன்றே நடக்கிறது.

மரவண்டு கணேஷ், நல்ல ரவுசு :) பதிவின் தலைப்பிலுள்ள 'குரலை' தவறென்று கூறமுடியாது. 'குரல்' என்பது வாய்ப் பேச்சாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு கருத்து, ஒரு நிலைப்பாடு, ஒரு எதிர்ப்பு, ஒரு ஆதரவு, இவையனைத்தையுமே 'குரல்' என்பதைக் கொண்டு குறிக்கலாம். முன்பு, 'மக்கள் குரல்' என்றொரு நாளேடு வெளிவந்ததாக நினைவு. நீங்கள் கேட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வாய்ப்பை, மொழி வல்லுனர்களுக்கு விட்டு வைக்கிறேன் :)

Ilavanji, I'm talking about editing others' posts :)

வசந்தன், எனது கருத்தும் அதே. பேச்சு மொழி வித்தியாசமாக இருப்பதை ஒரு பாதகமாக எண்ண முடியவில்லை. ஒற்றுப்பிழைகள் பற்றி யாராவது விரிவாகப் பதிவிட்டால் நன்றாகயிருக்கும். குறிப்பாக பன்மையில் -க்கள் எப்போது வரும், -கள் எப்பொது வரும் என்பது பற்றிய விதிகள் தெரிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சந்திப்பு, இணைய அகராதிகள் சில உள்ளன. மொழிமாற்றிகள் இருப்பதாகத் தெரியவில்லை. பிழைநீக்கி இனிமேல்தான் வரவேண்டும். ஓப்பன் ஆபீஸ் மென்பொருளில் தாய், சுவாஹிலி, போன்ற மொழிகளுக்கெல்லாம் பிழைநீக்கிகள் வந்து விட்டன. தமிழுக்கும் விரைவில் வருமென்று நம்புவோம்.

பின்னூட்டமிட்ட, மற்றும் வருகை தந்து ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நல்ல ஆலோசனை தான். ஆனால் இதில் தமிழ்மணம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. தமிழ்வலைப்பதிவுகளுக்கு என்று தனியான வசதியும் தேவையில்லை. சொந்தத் தளங்களில் வலைப்பதிபவர்கள் விக்கி மென்பொருளை பயன்படுத்தி அனைவரையும் தொகுக்க அனுமதி தரலாம். பெரும்பாலானவர்கள் அரட்டைப் பதிவுகள் போடும்போது பேச்சு நடையிலேயே வலைப்பதிவதால் இலக்கணப் பிழைகளை பெரிதாக கருத்தில் கொள்ள இயலாது. அப்படி பார்த்தால் கள்ளிக்காட்டு இலக்கியங்கள் பலவற்றையும் proof பார்த்து திருத்த முடியுமா என்ன? ஏற்கனவே பின்னூட்டத்தில் வந்தே எச்சமிட்டுத் தொல்லைபடுத்துபவர்களுக்கு இந்த வசதி வந்தால் கொண்டாட்டமாய்ப் போய்விடும். அப்புறம் உண்மையில் வலைப்பதிவு ஆசிரியர் என்ன தான் எழுதினார் என்றே தெரியாமல் போய்விடும். பொதுவாக எழுத்து வடிவில் ஊடகங்களில் உள்ளதை சரியான எழுத்துக்கூட்டல் என்று நினைக்கும் மனப்பாங்கு சிறுவர்கள் உட்பட்ட பலரிடம் உண்டு. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு வலைப்பதிவர்கள் தான் கொஞ்சம் கவனமாக பிழைசரி பார்த்து பதிவு போட வேண்டும். spellchecker ஒரு நல்ல தீர்வு தான். ஆனால், அதுவும் கூட context basedஆக இருக்க சாத்தியமில்லையே..அதாவது 'மனம்' இருக்க வேண்டிய இடத்தில் 'மணம்' இருந்தால் கூட அது பிழை கண்டுபிடிக்காதே? இந்தக் குறையை எப்படி போக்குவது?

மற்றபடி firfoxல் தமிழ் தொடர்புடைய சில நீட்சிகளை நீங்கள் உருவாக்கியிருப்பதை கண்டேன். மகிழ்ச்சி. இன்னும் நிறைய செய்யுங்கள். பழைய நீட்சிகள் பல firfox 1.5ல் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதை கொஞ்சம் கவனியுங்கள். அப்புறம் தமிழ் விக்கிபீடியா பக்கமும் கொஞ்சம் வந்து போங்க..ஆளேயே காணோம்?

ramachandranusha(உஷா) சொன்னது…

ஒற்றுப்பிழைகளைப் பற்றி எனக்கும் குற்றவுணர்வு உண்டு. ஆனால் திருத்திக் கொள்வது எப்படி என்று தெரியாமல் முழிக்கிறேன். மற்ற விஷயங்களைப் பற்றி எந்த கருத்தும் இல்லை :-)

வசந்தன்(Vasanthan) சொன்னது…

இப்பதிவின் தலைப்பு ஒரு நக்கலுக்காகவே என்று நினைக்கிறேன். மாறாக பதிவர், அப்படியொரு வசதியைக் கோரவில்லை என்பது என்புரிதல்.
ஆனால் சிலர், அவர் அப்படிக் கோருவதாக நினைத்துப் பதிலளித்துள்ளார்கள் போலுள்ளது.

ilavanji சொன்னது…

//Ilavanji, I'm talking about editing others' posts :)// ஹாஹா... அப்போ கொய்யான் நாந்தானா?!

நெனைச்சேன்! இம்புட்டு டெக்குனாலஜி எழுதுறவகளுக்கு இந்த துக்கிளியூண்டு விசயம் தெரியாதான்னு!!

வசந்தன்! நானே! நானே!! :)

வசந்தன்(Vasanthan) சொன்னது…

இப்பதிவு பற்றிச் சில ஐயங்கள்:
'கறுப்பு' என்பதும் 'கருப்பு' என்பதும் ஒரே நிறத்தைக் குறித்தாலும் முன்னையது ஈழத்தமிழ் வடிவமாகவும், பின்னையது தமிழகத்தமிழ் வடிவமாகவும் இந்நாள்வரை நினைத்துக்கொண்டிருக்கிறேன் (இரண்டுமே சரியாவை என்ற கருத்தில்). அதனால் நீங்கள் சொல்வது ஆச்சரியமாயிருக்கிறது. இரண்டில் ஒன்றுசரியென்றால் எதுசரி என்பதை மொழிவல்லுநர்கள் யாராவது தெளிவுபடுத்த முடியுமா?
(கரிய, கருமை, போன்ற சொற்கள் சரியாக இருக்கும்போது 'கருப்பு' ம் அதே குடும்பத்துள் இருக்கும் என்று எனக்கு நானே ஒரு 'தெளிவோடு' இருக்கிறேன்.) தேர்ந்த மொழியாளர்களும் 'கருப்பு' பயன்படுத்துகிறார்களே?

வசந்தன்(Vasanthan) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வசந்தன்(Vasanthan) சொன்னது…

VOW,
உங்கள் பக்கத்தில் இரு திருத்தங்களைச் சொல்வதூடாக ஒரு தொடக்கம்:
உயர்திணையின் முன் எண்ணலளவைக் குறிக்கும் சொற்களைத் தவிர்த்தல் நன்று.
"ஒரு நடிகரின் சுயசரிதை" என்பது "நடிகரொருவரின் சுயசரிதை" என்று வந்திருந்தால் நன்று.

//அனைத்து வகையான சிந்தனைகளும் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்//

என்று இருக்கும் உங்கள் மகுட வாக்கியத்தில், "இங்கு'ப்' பகிந்து கொள்ளப்படும்" என்று வரவேண்டும். இங்கு, அங்கு, எங்கு என்பவற்றின் பின் வல்லினத்தொடக்கத்தோடு சொற்கள் வந்தால் அவ்வல்லினம் மிகும்.

தருமி சொன்னது…

'தமிழ்மண சீத்தலைச்சாத்தனார்' என்ற பட்டத்தை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு மறுப்பேதுமில்லையே!

Boston Bala சொன்னது…

சரியா/தப்பா?

அரசியியல் - அரசியல்
பின்னணி - பிண்ணனி
கறுப்பு - கருப்பு
பவளம் - பவழம்
கோவில்-கோயில்
நேயம்-நேசம்
மயல்-மையல்
சீனிவாசன்-சிறீநிவாசன்
பிரியா- ப்ரியா
அனுமன்-ஹனுமன்-அநுமான்
தில்லி-டில்லி-டெல்லி
தருமபுரி-தர்மபுரி
புரட்டாதி-புரட்டாசி

வசந்தன்(Vasanthan) சொன்னது…

உங்கள் பதிவின் தாக்கத்தில் என் தீராத சந்தேகத்துடன் ஒரு
பதிவெழுதிப்போட்டுள்ளேன்.

Voice on Wings சொன்னது…

ரவிசங்கர்,

வசந்தன் குறிப்பிட்டது போல், இந்தத் தலைப்பு ஒரு நக்கலுக்காகத்தான். இவ்வசதியை உண்மையிலேயே நான் கோரவில்லை. ஆனால், ஒரு தனி இழையாகச் சிந்தித்தால், உலக மொழிகள் இதனால் பெறக்கூடிய பலன் / வளர்ச்சி ஆகியவையால், இப்படி ஒரு வசதியிருப்பது நன்மைக்கே, என்றும் நினைக்கத் தோன்றுகிறது. (IP முகவரி அடிப்படையில்) ஒரு சில, அடுத்தடுத்து வராத சொற்களை மட்டும் மாற்றும் வசதியளிக்கலாம், மாற்றப்பட்ட சொற்கள் பதிவாசிரியரின் ஒப்புதலைப் பெறும் வரை வேறு நிறத்திலோ, தோற்றத்திலோ காட்டலாம் (with mouse-over showing the original words). Blogger, WordPress போன்றவர்கள் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்.

பேச்சு நடை இலக்கியங்கள் - அச்சில் வந்திருக்கும் இவை proof read செய்யப்பட்டே வெளியிடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என்னிடமுள்ள 'கள்ளிக்காட்டு இதிகாசத்தை' நோட்டம் விட்டேன். அதில் எங்குமே ற / ர, ள / ழ, ந / ன, ஆகிய எழுத்துக்கள் மாற்றிப் பயன் படுத்தப்படவில்லை. வல்லெழுத்து மிகுதி சரியாகவே கையாளப்பட்டிருக்கிறது. சொற்கள் மட்டுமே பேச்சு நடையில் வழங்கப்பட்டிருக்கின்றன. (அதுல, போயி, வருவாரு, வேணுமுன்னா etc) இவற்றை பிழையாகப் பார்க்க முடியாது. ஏனென்றால் இவை காலகாலமாக நடைமுறையிலுள்ளவை.

Firefox / Wikipedia - Todoவிலுள்ளது :) அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாமென்று காத்திருந்தால், காத்திருப்புதான் மிஞ்சுகிறது :) விரைவில் இம்முயற்சிகளைத் தொடர வேண்டும்.

***************
உஷா,

எவ்வளவு தூரம் உதவியாக இருக்குமென்று தெரியவில்லை. இந்தத் தளத்தில் (2ஆவது, 3ஆவது பக்கங்களில்) உங்களுக்குத் தேவைப்படும் தகவல் இருக்கலாமென்று நினைக்கிறேன்.

//மற்ற விஷயங்களைப் பற்றி எந்த கருத்தும் இல்லை :-)//

இப்படிப் புறக்கணிப்பு செய்யலாமா, நீங்கள்? :)

***************
இளவஞ்சி,

'கொய்யான்'னா என்னன்னு சொல்லிட்டு போயிடுங்க :)

***************
வசந்தன்,

உங்கள் பின்னூட்டங்கள், தொடர் பதிவு ஆகியவை கண்டு மகிழ்ச்சி. உங்கள் இரு திருத்தங்களுக்கும் மிகவும் நன்றி. உடனே மாற்றியமைக்கிறேன்.

'கருப்பு' பற்றி - என்னிடமுள்ள 'நர்மதா தமிழ் அகராதி'யிலிருந்து (சென்னையைச் சேர்ந்த பதிப்பகமென்பதால், தமிழகத் தமிழின் பிரதிநிதியாக இதைக் கருதக்கூடுமென்றால், இதனை அடிப்படையாகக் கொள்ளலாம்):
கருப்பு - பஞ்சம்; famine
கறுப்பு - கருமை; black colour
இதோடு, கறுப்பர், கறுப்புப்பணம், கறுப்புக்கொடி ஆகிய எல்லாவற்றுக்கும் நாம் எதிர்பார்க்கும் அர்த்தங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
'கருப்பு' என்று கூகிளிட்டால், இன்று இணையத்திலிருக்கும் அனைத்துத் தமிழ்த் தளங்களும், வலைப்பதிவுகளும், அதில் சிக்கும். அவையெல்லாமே, அதைக் கருமை என்ற பொருளிலேயே குறிப்பிட்டிருக்கின்றன. பள்ளிக்காலங்களில் எனக்கு 'கருப்பு' என்றொரு நிறமிருப்பதாகத் தெரியாது. இணையம் வந்த பிறகே, அதைத் தெரிந்து கொள்கிறேன் :)

உங்கள் பதிவில் குறிப்பிட்ட 'காவற்றுறை', 'கற்றூண்' போன்ற புணர்ச்சிகளைத் தாங்கும் சக்தி இன்றைய மக்களுக்குண்டா என்பது கேள்விக்குறிதான். :) எளிய உச்சரிப்பு என்ற நோக்கில், காவல் துறை, கல் தூண், போன்றவையே சாதகமாகத் தோன்றுகின்றன.

***************
தருமி,

நீங்கள் கேட்பது வசந்தனைத்தான் என்று நம்புகிறேன் :)

****************
பாலா,

பெயர்களை அப்படியே எழுதுவதுதான் முறை. ச/ய மாற்றியெழுதலாமென்று எங்கோ படித்தேன். உ-ம், முயல் / முசல், அயலூர் / அசலூர் etc. பவளமும், பவழமும் ஒன்றுதான் என்றுத் தெரியவருகிறது. 'கோவில்' சரியா என்றுத் தெரியவில்லை, பேச்சு வழக்கைக் போலுள்ளது. அரசியியலா??? ஜெயா டிவி அதிகம் பார்க்கிறீர்களா? :) மயல், பிண்ணனி எல்லாம் எழுத்துப் பிழைகள்தான். (மையல் - காம மயக்கம்; பித்து; செருக்கு; யானையின் மதம். விவரமாத்தான் கேக்கறீங்க :) )

வசந்தன்(Vasanthan) சொன்னது…

கருப்புப் பற்றித் தெளிவித்தமைக்கு நன்றி.

என்னிடமிருந்த நர்மதாவைக் காணவில்லை. (க்)ரியாவில் கருப்புக்கு 'கறுப்பை' இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். பஞ்சம் பற்றி ஏதுஞ் சொல்லப்படவில்லை. தற்காலத் தமிழகராதி என்பதாற்போலும்.
உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் வெளியிட்ட 'கதிரவேற்பிள்ளையின் அகராதி'யில் கருப்புக்கு நீங்கள் சொன்னதின்படி பஞ்சம் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். நிறம் பற்றி எக்குறிப்புமில்லை.
'எம்.வின்சுலோ' வின் அகராதியில் கருப்பு என்ற சொல்லே இல்லை.

இணையத்தைவிட, அச்சுவடிவில் கருப்பு என்பது தமிழகத்தில் தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. எது, எதைப் பாதித்ததென்று தெரியவில்லை. அனால் நானறிய ஈழத்தில் 'கருப்பு' என்ற பயன்பாடு இதுவரை வரவில்லை. ஆனால் வந்துவிடும் என்றே நினைக்கிறேன். கருப்பு, கறுப்பு இரண்டும் ஒன்றுதான், இரண்டும் சரியான வடிவங்களே என்று சொல்லிக்கொடுக்கப்படத் தொடங்கியாயிற்று. இவற்றைவிட மேலும் பல 'அருந்தமிழ்ச்சொற்கள்' தமிழகத்திலிருந்து படியெடுக்கப்படுவதைப் பற்றிப் பதிவு போட்டுள்ளேன்.
------------------------------------
குறிப்பிட்ட பிழைகளைத் திருத்தியமைக்கு நன்றி.
அங்கு, இங்கு, உங்கு, எங்கு என்பவற்றுக்கு வலிமிகும் (வல்லினம் மிகும்) என்பதைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. முக்கால்வாசிப்பேர் பயன்படுத்துவதுமில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் வலிமிகாது போலவே தோன்றும். இச்சொற்கள் இறுதியில் 'ஏ'காரமாகி, அங்கே, இங்கே, உங்கே, எங்கே என்றுதான் பெருமளவிற் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு வலிமிகாது என்பதால் எச்சிக்கலுமில்லை. (ஆறுமுகநாவலர்தான் இச்சொற்களை அறிமுகப்படுத்தினாரென்று சிலர் சொல்கின்றனர். எனக்கு இதுமட்டிற் பலத்த சந்தேகமுண்டு) உங்களுக்கோ பிறருக்கோ "இங்கு'ப்'" பயன்படுத்துவதில் சிக்கலிருந்தால் 'இங்கே' என்று மாற்றிவிடுங்கள்.

சாணக்கியன் சொன்னது…

ஈழத்தில் 'கறுப்பு' என வழங்கப்படுவது எந்த அர்தத்தில் என்று தெரியாது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை நிறத்திற்கு 'கருப்பு' தான். சங்க இலக்கியத்திலும் அப்படித்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் இராமரை, 'கருஞ்ஞாயிறு அன்ன இராமன்' என்று விளிக்கிறார்.

மழை மேகத்தின் நிறத்தைக் கொண்டு அதனை கார்மேகம் என அழைக்கிறோம். கரிய மேகம், 'கார்மேகம்'. 'காற்மேகம்' அல்ல. மேகத்தின் நிறமே அதற்கு ஆகுபெயராகி, 'கார்' என் அழைக்கபடுவதோடு இல்லாமல் குளிர்மேகத்தில் இருக்கும் நீருக்கும் ஆகுபெயராகிறது. இதற்கும் ஓர் உதாரணம்,

"கார் என்று பேர் கொண்டாய் நீ வானில் நின்றபோது
நீரென்று பேர் பெற்றாய் நீ நிலத்தில் வந்தபோது
இவ்விடைச்சியர் கைப் பட்டு
மோர் என்றும் பேர் பெற்றாய் முப்பேரும் பெற்றாயே"

சாணக்கியன் சொன்னது…

இதையும் பார்க்கவும்.
http://www.maraththadi.com/article.asp?id=1996

Voice on Wings சொன்னது…

சாணக்கியன், உங்கள் வருகைக்கு நன்றி. எனக்கும் ஈழத்தமிழ் குறித்து அதிகம் தெரியாது. நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். நான் தமிழ் கற்று இருபது வருடங்களாகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழில் எழுதும் வாய்ப்பு / தேவை அவ்வளவாக இருக்கவில்லை என்பதனால் என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. இருந்தும் நான் தமிழ் பயின்ற நாட்களில் 'கறுப்பு' என்றுதான் எழுதியதாக நினைவு. அதையே என்னிடமிருக்கும் அகராதியிலும் (Narmada, Jan 2005) பார்த்து உறுதி செய்து கொண்டேன். கருமை, கரிய, கார்மேகம் என்பதெல்லாம் சரியே - அவற்றிலெல்லாம் எனக்குச் சந்தேகமில்லை. வசந்தனும் நீங்களும் கூறுவது போல், 'கருப்பு' என்பதும் சரியான பயன்பாடாக இருக்குமானால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே :)

வசந்தன்(Vasanthan) சொன்னது…

WOW,
நீண்ட நாட்களின் பின் இப்பக்கம் வந்துள்ளேன். சாணக்கியனின் பின்னூட்டம் பார்த்தேன்.
ஈழத்தில் இன்றுவரை நிறத்தைக் குறிக்க 'கருப்பு' என்ற சொல் பாவிப்பதில்லை. அப்படியொரு சொல்லே எங்களிடமில்லை. கறுப்பு என்பதுதான் நிறம்.

சாணக்கியன் கூறுவதுபோல் 'கருப்பு' என்ற சொல் நிறத்தைக் குறிப்பதற்காக எங்காவது சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ளதா? மற்றும்படி வேறு சொற்களைச் சொல்லி கருப்பை சங்க இலக்கியத்தில் தொடர்பு படுத்த வேண்டாம். (கார், கரிய, கருமை)
அதுசரி, எந்த அகராதியிலும் 'கருப்பு' என்பதற்கு நிறத்தைக் குறிக்கவில்லை. மாறாக 'கறுப்பு'த் தான் நிறமென்று சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படி கருப்பை சரியென்று சொல்வதென்று தெரியவில்லை.

ஹரிகிருஸ்ணனின் கட்டுரை எனக்கு தீராத ஆச்சரியத்தையளித்துள்ளது.
அதேவேளை, இராம.கி போன்றோரும் கருப்பு என்றே எழுதுவதும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. யாராவது சரியான பதில் தரலாம்.
**************
நான் கருப்பு சரியான பயன்பாடென்று சொல்லவில்லை. அப்படித்தான் இவ்வளவுநாளும் நினைத்திருந்தேன் என்றுசொல்ல வந்தேன். நீங்கள் என்னைச் சாட்டி கருப்பைச் சரியாக்கிவிடாதீர்கள். இதற்குச் சரியான விளக்கம் எதிர்பார்க்கிறேன்.