வெள்ளி, மார்ச் 18, 2005

தரம்

வாழ்வின் எந்தவொரு பொழுதிலும் நம் கவனத்தைப் ஈர்ப்பது இந்தத் தரம். சாப்பிடும் உணவு, படிக்கும் புத்தகம், கேட்கும் ஒலிகள், நுகரும் மணங்கள், வெப்பம் / ஈரப்பதம், உடல் நலம், மன சாந்தி, மின்சார வோல்டேஜ் நிலவரம் (அது பாதிக்கும் இந்த மின்விசிறியின் வேகம்)........ இப்படி எத்தனையோ வகையில் தரம் நம்மை ஆட்கொள்கிறது. கீழ்த்தரம், உயர்தரம் என பாகுபாடுகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன, நம் ஒவ்வொரு சிந்தனையிலும்.

தரமென்பது எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது? அதற்கு கொடுக்கும் விலையை வைத்தா? செலவழிக்கும் நேரத்தை வைத்தா? அது உண்டாக்கும் விளைவுகளை வைத்தா? அத்தகைய விளைவுகளை மறுபடி உண்டாக்க முடியுமா? உதாரணம், ஒருவருக்கு ஏற்பட்ட விளைவு இன்னொருவருக்கு ஏற்படுமா, அல்லது அவருக்கே மற்றொரு பொழுதில் ஏற்படுமா? இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், AC காரில் பயணம் முதன்முறையில் உயர்தரமே. இரண்டாம், மூன்றாம் முறைகள்?

நான் உடுத்தும் உடை என்னைப் பொருத்த வரையில் உயர்தரமே. மற்றவருக்கோ அதன் நிறம் மிட்டாய்ச் சிவப்பு அல்லது பளீர் மஞ்சள். நான் நிராகரித்த காபியின் கலவை இன்னொருவருக்கு பேஷ் பேஷ். தரம் என்பது அவரவர்களின் சொந்தக் கருத்தா? அல்லது பெரும்பாலோரின் கருத்துடன் ஒத்து போவதா? பெரும்பாலோருக்கு பிடித்தது எனக்கும் உடன்பாடே என்றால் அதுவே ஒரு மந்தை மனப்பான்மையை குறிக்கவில்லை? மேலும் பெரும்பாலோருக்குப் பிடித்ததென்றால் அது தரக்குறைவான ஒன்று, என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இவ்வளவு கேள்விகளுக்குப் பிறகு எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஒரு திருப்தி அல்லது மகிழ்ச்சியை அளிக்கும் எதுவும் உயர்தரமே. தரம் மனிதருக்கு மனிதர், பொழுதுக்கு பொழுது வேறுபடலாம். தரம் என்பது நிரந்தரமல்ல.

வாழ்க்கைத் தரம் உயர பணம் தேவை, கல்வி தேவை என பலவிதமான வாதங்கள். பொருளாதாரம், படிப்பறிவு, அத்தியாவசிய வசதிகள் என பல குறியீடுகளிலும் பின் தங்கியவை நம் கிராமங்கள். எனினும், எப்போதாவது கிராமப் புறம் சென்றால், டிராக்டர்களிலோ அல்லது மாட்டு வண்டிகளிலோ கூட்டங் கூட்டமாக மக்கள் பயணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். எதாவது திருவிழா அல்லது திருமணம் என்று கிளம்பியிருப்பார்கள். பளிச் பளிச்சென்று மலிவு விலைப் புத்தாடைகளையும் நகைகளையும் அணிந்து கொண்டு எல்லையில்லா மகிழ்ச்சியுடன், ஒருவருக்கொருவர் தோழமையுணர்ச்சியுடன். நகர்ப் புறங்களில் அத்தகைய காட்சிகளை அதிகம் காண இயலாது. நகர்களில் இல்லாத வசதியா? இப்போது யாருடைய வாழ்க்கை கீழ்த்தரம், யாருடையது உயர்தரம்?

கருத்துகள் இல்லை: