ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப் பட்டிருக்கணும்", "அதைக் கேட்டுக் கொண்டு சோனியா காந்தி ஏன் அமைதி காத்துக்கிட்டு இருக்காங்க? அவங்க காங்கிரஸ் தலைவி கிடையாதா? ராஜீவ் காந்தியின் விதவை கிடையாதா?"ன்னெல்லாம் பேசியது எல்லார் மனதிலும் பசுமையா இருந்திக்கிட்டு இருக்கும்போதே அடுத்த நாள் அந்தர் பல்டி அடித்து தமிழ் ஈழக் கோரிக்கையை வைக்கறாங்க. அவங்க இதுக்கு முன்னாடி பேசிய "ஈழத் தமிழர்கள்ன்னு யாரும் கிடையாது, இலங்கைத் தமிழர்கள்ன்னுதான் இருக்காங்கன்னு" கண்டுபிடித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் கூட யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற குறுகிய காலத்திற்குள் தெரிவித்த எதிர்மறையான கருத்துகளே நிறைய இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ன்னு ஒருத்தர் இலங்கைக்குப் போய் விடியோ பிடிச்சிக்கிட்டு வந்தாராம். அதைப் பாத்து இவங்க மனம் மாறினாங்களாம். தமிழகத் தமிழர்கள் இந்தப் பூச்சுற்றலுக்கெல்லாம் காதைக் காட்டிக்கிட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. (அதுதான் நடந்துக்கிட்டும் இருக்கு). ஈழம்ங்கிற தனி நாடு கோரிக்கையை இவங்க ஆதரிக்கறாங்களா, அப்படீன்னா அந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இவங்க ஆதரவு தெரிவிக்கறாங்களான்னு விவரமா தெரியல. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவங்க 'separate state' கோருவதா செய்தி வருது. அப்படீன்னா தமிழர்களுக்குன்னு ஒரு தனி மாநிலத்துக்குத்தான் இவங்க ஆதரவளிக்கறாங்களான்னு யோசிக்கத் தோணுது. (இவங்க வரும் நாட்களில் அப்படி ஒரு அந்தர் பல்டி அடிக்கவும் சாத்தியமிருக்கு) விடுதலைப் புலிகளை ஆதரிக்காம தனி ஈழத்துக்கு ஆதரவுங்கிற நிலைப்பாடு எடுக்கறவங்க எனக்கு ஆபத்தானவங்களாவே படறாங்க. மதில் மேல் பூனை போன்றவங்கதான் இவங்கல்லாம்.

தமிழக / புதுவைத் தொகுதிகள் நாற்பதும் இவங்க கையில் சிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடிச்சிட்டு, பழையபடி (ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை) முருங்க மரம் ஏறக்கூடியவங்களாதான் இவங்க எனக்கு தெரியறாங்க. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் போலத் தெரியுது. அப்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் கைப்பற்றும் பட்சத்தில், அது பாஜகவின் இயல்பான கூட்டணிக் கட்சியா (கருத்தியல் / பாசிசம் போன்ற ஒற்றுமைகளின் அடிப்படையில்) அமைந்து விடும் வாய்ப்பிருக்கு. ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே. (மற்றும் ஈழப் போராட்டத்துக்குக் கிடைக்கும் தோல்வியே)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் அது சாதகமான நிலைமையாகவே இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.