ஞாயிறு, நவம்பர் 30, 2008

பாகிஸ்தான் கொடி?

அண்மையில் நடந்து முடிஞ்ச மும்பை தாக்குதல்கள் தொடர்பா ஊடகங்களில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. இவ்வளவு நாளா சாமானியன் அடி வாங்கியது போய், இப்போ ஏழு நட்சத்திர பார்ட்டிங்களுக்கும் அதே கதிதான்னு வரும்போது, நம்ம ஊடகங்கள், படித்த மக்கள், பண முதலைகள், அரசியல்வாதிகள்ன்னு சமூகத்தின் அதிகாரம் படைத்த எல்லாரும் முன்பை விட ரொம்ப அதிகமாவே ஊளையிடற மாதிரி ஒரு உணர்வு. எப்படியோ, இதுனாலல்லாம் சாமானியனுக்கும் இறுதியில் நன்மை கிடைக்கும்ன்னா, இவற்றையும் வரவேற்கலாம்ங்கிற நிலையில்தான் இப்போ இருக்கேன்.

இத்தகைய கசப்புணர்வோடயே இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்துக்கிட்டு இருந்தேன்.
ஒரு பொதுமக்கள் பங்கெடுக்கும் விவாத நிகழ்ச்சியில் 'சிமி கரேவால்'ங்கிற முன்னாள் பாலிவுட் நடிகை, வாழைப்பழத்தில் நச்சு தோய்ந்த ஊசியை ஏத்தற மாதிரி ஒண்ணைச் சொன்னாங்க. என்னன்னா, மும்பையில் குறிப்பிட்ட இடங்களிலுள்ள அடுக்கு மாளிகைகளிலிருந்து பார்வையிட்டால் தென்படக் கூடிய குடிசைப் பகுதிகளில், பல கொடிகள் காணக் கிடைக்குமாம். அவை, இந்திய நாட்டுக் கொடிகளோ, அல்லது காங்கிரஸ் / பாஜக போன்ற கட்சிகளின் கொடிகளோ கிடையாதாம். பாகிஸ்தான் நாட்டுக் கொடிகளாம் அவை. இந்தத் தகவலைத் தெரிவித்து, அவர்களெல்லாம் பாகிஸ்தான் நாட்டு விசுவாசிகள்ன்னு தேசிய தொலைக்காட்சியில் நிறுவ முயன்று கொண்டிருந்தார் அந்த முன்னாள் நடிகை. இதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஒரு இளைஞர், 'இந்தியாவின் எதிரிகள் முஸ்லிம்களோ, பாகிஸ்தானோ அல்ல, நீங்கள்தான் இந்தியாவின் எதிரி' என்று கூச்சலிட்டார். கொஞ்சம் உணர்ச்சி அதிகமான வெளிப்பாடுதான். இருந்தாலும் அவரது கொந்தளிப்பு நியாயமாப் பட்டது. (இறுதியில் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது கொசுறுச் செய்தி).

எனது சொந்த அனுபவத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலேயே நானும் வாழும்படி அமைந்துவிட்டது. இந்தக் கொடி விவகாரம் எனக்கும் பரிச்சயமானதுதான். (கொஞ்சம் வசதி குறைவான) சில இஸ்லாமியர்களின் வீட்டு உச்சியில் பச்சை வண்ண முக்கோண வடிவிலான கொடிகள் பறப்பதைக் கண்டிருக்கிறேன். (அதன் ஓரங்களில் ஒரு பளபளா ஜிகினா வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும் :) ). அத்தகைய கொடிகளை மசூதிகளிலும் கண்டிருக்கிறேன். கல்லறைகள் அதே போன்ற ஒரு பசுமையான துணியால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். இவையெல்லாம் என்னை உறுத்தியது கிடையாது. வேறு யாரையும் உறுத்தியது கிடையாது என்றே நம்புகிறேன். ஒரு மத அடையாளமாகவே என்னாலும் (சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் காவல் துறையினர் உட்பட) பலராலும் இந்தக் கொடிகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். வட இந்திய இந்துக் கோவில்களில் இதைப் போன்ற காவிக் கொடிகளை காணலாம். மத நம்பிக்கை அதிகமுள்ள இந்துக்களும் (குறிப்பாக, குடிசைப் பகுதிகளில்) இத்தகைய கொடிகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்கக் கூடும் (உறுதியாகத் தெரியவில்லை).

இந்தப் பச்சை வண்ணக் கொடி பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஒத்திருப்பதில் வியப்பேதுமில்லை. பாகிஸ்தான் ஒரு வெளிப்படையான இஸ்லாமிய நாடு, ஆகவே ஒரு இஸ்லாமிய அடையாளத்தை தாங்கிய ஒரு கொடியைப் பின்பற்றுகிறது. அது போலவே நேபாளம் இது நாள் வரை ஒரு இந்து முடியாட்சி நாடாகத் திகழ்ந்து வந்த காரணத்தால், அதன் கொடிக்கும் இந்துக்களின் கொடிக்கும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இப்படியாக, காலங்காலமாக ஒரு மரபை பின்பற்றும் ஒரு பிரிவினருக்கும் அதே மரபைப் பின்பற்றும் வேற்று நாடுகளுக்கும் ஏற்பட்டு விடும் ஒரு சில ஒற்றுமைகளால், இவர்கள் அந்நாடுகளின் விசுவாசிகள் என்று தேசிய அளவில் செய்யப்படும் விஷமத்தனமான பரப்புரை என்னை கவலைக்குள்ளாக்குகிறது.

இத்தகைய misinformation / போலிப் பரப்புரைகளை எதிர்கொண்டு சம்மந்தப்பட்ட விவரமறிந்தவர்கள், இஸ்லாமிய தரப்பினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இஸ்லாமியர்களும் பாகிஸ்தானிய விசுவாசிகள், அங்கிருந்து ஏற்றுமதியாகும் தீவிரவாதத்திற்கு மறைமுக / வெளிப்படை ஆதரவளிப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. (ஏற்கனவே இவ்வாறெல்லாம் கூறி ஒதுக்கப்பட்டு வருவது தெரிந்ததுதான். மேலும் பாதிப்பு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதே நான் கூற வருவது).

15 கருத்துகள்:

SurveySan சொன்னது…

உண்மைதான்.

இந்த மாதிரி வன்முறை சம்பவங்களால், இரண்டாம் பட்சமாக, அதிகம் பாதிக்கப் படுபவர்கள், சாமான்ய இஸ்லாமியர்கள் தான். எப்ப எவன் அடிப்பானோன்னு பயந்து போயிருப்பாங்க. பாவம்.

பச்சைக் கொடி ஏற்றிக் கொள்வதெல்லாம் குத்தமாக பார்க்கக் கூடாது.

Voice on Wings சொன்னது…

சர்வேசன், வருகைக்கு நன்றி.

நான் குறிப்பிட்ட தொலைக்காட்சி சம்பவத்தை இங்கே காணலாம். (கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடரும் இந்த நிகழ்ச்சியில், video playerஇன் sliderஐ நகர்த்தி, 46:00 நிமிடத்திலிருந்து பார்வையிட்டால் அந்த நடிகையின் உளரலைக் காணலாம், அதற்குக் கிடைத்த கைத்தட்டல்களையும் சேர்த்து)

-/பெயரிலி. சொன்னது…

பாக்கிஸ்தான் சம்பந்தப்பட்டதோ இல்லையோ என்பது ஒரு புறமிருக்கட்டும். ஆனால், கொடி பற்றி நீங்கள் சொல்வது சரியே. இந்திய ஆங்கிலத்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினையும் இதுவரை பார்த்ததில்லை. இப்போது நீங்கள் சுட்டியதிலே பார்த்தபோது, 9/11 பின்னான அமெரிக்கத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்ததுபோலத்தான் தோன்றியது.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களோடு உடன்படுகிறேன்.

அர டிக்கெட்டு ! சொன்னது…

//வட இந்திய இந்துக் கோவில்களில் இதைப் போன்ற காவிக் கொடிகளை காணலாம். மத நம்பிக்கை அதிகமுள்ள இந்துக்களும் (குறிப்பாக, குடிசைப் பகுதிகளில்) இத்தகைய கொடிகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்கக் கூடும் (உறுதியாகத் தெரியவில்லை).//

முஸ்லீம் மத்ததவர் அனைவரும் முஸ்லீம்களே ஐய்கியம் அதன் சாரத்தில் ஒன்று(வர்க்கப் பிளவு உண்டு) ஆனால் பார்ப்பன இந்து மதம் அப்படியல்ல பிரிவினையே அதன் அடிநாதம் ஆதலால் ராமகோபாலன் அன்டு கம்பெனி பிரைவேட் லிமிடெட் தவிர வேறெங்கும் இது போல பொது குறியீடு பார்ப்பது சாத்தியம் இல்லை அவர்களின் ராமர் பிராண்டு பருப்பு தமிழ்நாட்டில் வேகாத்து ஒரு உதாரணம். சர்வேசனின் கரிசனத்துக்கு நன்றி, பச்சைக் கொடி ஏற்றும் உரிமையையை அங்கீகரித்த்தற்கு பாராட்டு விழா நடத்தலாம். இவரை பார்த்துதான் ஆர்.எஸ்.எஸ் காரன் கூட காப்பியடிக்கீறான்கள் போல அவர்களிடம் பேசினால் தெறியும், முஸ்லீம்கள் இந்துக்களுக்கு அடங்கி, இந்துக்கள் கொடுக்கும் உரிமைகளைக் கொண்டு சுதந்திரமாக இந்த நாட்டில் எப்படி வாழவேண்டும் என பாடமே எடுப்பார்கள். அதில் கொடி முதல் க்ககூஸ் வரை அனைத்து பிரச்சனையும் தீர்க்கப்பட்டிருக்கும்

தமிழன்-கறுப்பி... சொன்னது…

கொடி பற்றிய உங்கள் கருத்து புரிதலோடு இருக்கிறது...

Sri Rangan சொன்னது…

கொடி பற்றி நீங்கள் சொல்வது சரியே-உடன்படுகிறேன்.

SnackDragon சொன்னது…

வாய்ஸ்,

இந்த முறை இங்கே அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாகவே இந்த மும்பை குண்டுவெடிப்புகள் (நான் ஓரளவுக்கு மதிக்கிற
ஆங்கர்கள் இருக்கிற எம். எஸ். என். பி.சி. உட்பட )கவர் செய்யப்பட்டன. குண்டு வெடித்த 10 இடங்களில்
மூன்று இடங்கள் தொடர்ந்து காட்டப்பட்டன, அவை தாஜ், நரிமன் ஹவுஸ், ஜூவிஷ் சபாத் சென்டர்.

குண்டு வெடித்த பிற இடங்கள் முக்கியமில்லையா? சபாத் சென்டர் தாஜ் , நரிமன் ஹவுசை காட்டிலும் முக்கியமானது என்பதுவே என் தனிபட்ட கருத்து. இல்லையேல் இந்த அளவிக்கு வேறெந்த இந்திய செய்தியும் (2004 சுனாமி உடபட) நிமிடத்துக்கு நிமிடம் கவர் செய்யப்படவில்லை, கவனித்தீர்களா?

தீவிபத்தைப் பற்றி கொள்ளிக்கட்டையிடம் செவ்வி காண்பது போல் இந்து ராம் வேறு சி.என். எனில் கருத்து சொல்லியிருந்தார் என்பது இன்னும் சங்கடத்தில் ஆழ்த்தியது. :‍((

SnackDragon சொன்னது…

//சபாத் சென்டர் தாஜ் , நரிமன் ஹவுசை காட்டிலும் முக்கியமானது என்பதுவே என் தனிபட்ட கருத்து.//
சபாத் சென்டர் தாஜ் , நரிமன் ஹவுசை காட்டிலும் முக்கியமானது என்பதாலேயே இவ்வள்வும் என் தனிபட்ட கருத்து.
என்று வாசிக்கவும்.

Voice on Wings சொன்னது…

கார்த்திக்,

நிச்சயமா தாஜ், ஒபராய் ஹோட்டல்களை விட VT எனப்படும் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தை மும்பையின் அடையாளமா, இந்தியாவின் (அதன் உழைக்கும் வர்க்கத்தின்) அடையாளமா எடுத்துக்கலாம். இதைத்தான் ஞானி தனது ஆங்கிலப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்ததும் கொஞ்சம் ஆறுதலா இருந்தது. நகரத்தின் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே செல்லக்கூடிய ஒரு இடத்திற்கு (அதாவது தாஜ் ஹோட்டலுக்கு) பாதிப்பு ஏற்பட்டால் ஏதோ நகரமே இருண்டு விடும் என்பது போன்ற ஒப்பாரிகளைக் கேட்கச் சகிக்கவில்லை.

**************

ஸ்ரீரங்கன், தமிழன்-கறுப்பி,

ஒத்த கருத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

**************

அர டிக்கட்டு,

இந்து - இஸ்லாமிய மத கொடிகள் குறித்து அவற்றைப் பற்றிய ஒரு புரிதலுக்காக மட்டுமே தெரிவித்திருக்கிறேன். இவ்விரு மதங்களில் எதுவொன்றையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இந்தப் பதிவின்
கருப்பொருளில் அடங்காது.

******************
ஜ்யோவ்ராம் சுந்தர்,

உங்கள் உடன்பாட்டுக்கு நன்றி.

******************

பெயரிலி,

இந்தத் தாக்குதல்களை இந்தியாவின் 9/11 என்றுதான் அழைக்கிறார்கள். அமெரிக்காவை எதிலெல்லாம் பின்பற்றுவது என்ற வரையறையே இல்லாமல் போய்விட்டது. அமெரிக்காவைப் போலவே நாமும் போர் தொடுக்க வேண்டும் என்ற கூக்குரல்களை நான் சுட்டிய ndtv காட்சியில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

நண்பன் சொன்னது…

பொறுப்புடன், நிதானமாக, உண்மை உணர்ந்து எழுதப்பட்ட பதிவு.

Thank you.

-/சுடலை மாடன்/- சொன்னது…

உங்களிடமிருந்து வழக்கம் போல் சரியானதொரு அலசல்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Voice on Wings சொன்னது…

நண்பன் மற்றும் சங்கரபாண்டி, உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

குறிப்பிட்ட நடிகை தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக ஊடகங்களில் படித்தேன். ஆனாலும், வரும் நாட்களில் மதசார்பின்மை என்னும் கோட்பாடு மேலும் வீரியமாகத் தாக்கப்படப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

-/பெயரிலி. சொன்னது…

/அமெரிக்காவைப் போலவே நாமும் போர் தொடுக்க வேண்டும் என்ற கூக்குரல்களை நான் சுட்டிய ndtv காட்சியில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்./

அதைத்தான் சொன்னேன். தவிர, இதன்பின்னால், மும்பையிலே ஊர்வலமொன்றிலே தெருவிலே கொண்டு சென்ற பதாகை மேற்கோள்களும் அமெரிக்காவின் 9/11 இன் பின்னானதுபோலவே இருந்ததை CNN இலே கண்டேன். "we won't forget..."

மாறாக, பரபரப்பு இல்லாமலே செய்தீ தராமல் செய்தி தரும் PBS இலே மும்பையிலே இந்துக்கள், முஸ்லீம்கள், மும்பையிலிருந்து இருபத்தைந்து மைல் தூரத்திலே நாட்டுப்புற மஹராஷ்டராவிலே வாழும் மக்கள் இவர்களிடம் செவ்வி கண்டு நான்கு நாட்களின் முன்னாலே ஒரு பத்து நிமிடநேரம் போட்டார்கள். கிராமப்பெண் ஒருவர், "இது பற்றிக் கேள்விப்பட்டோம்; ஆனால், கிராமத்திலே பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை" என்பதுபோலப் பதிலைச் சொன்னார். குஜராத் மோடி மஸ்தானையும் செவ்வி கண்டார்கள்.

நடந்த நிகழ்வொன்றும் புறக்கணிக்கத்தக்கதல்ல. ஆனால், இதுமட்டுமேதான் இதுவரையிலும் நடந்த கொடுமை என்பதுபோல வரும் செய்தி அறிக்கைகளைப் பார்க்கும்போது, வெறுப்பேறுகிறது. நாரிமன் ஹவுசிலே நடந்ததை விபரிக்க, இரண்டாம் உலகயுத்தத்தின் ஐரோப்பியவதைமுகாமிலிருந்துதான் அமெரிக்கத்தொலைக்காட்சி விமர்சகர்கள் செய்தி தொடங்கும் கொடுமை எல்லாக்கொடுமையிலும் பெரிய கொடுமை.

சென்ஷி சொன்னது…

கொடி குறித்த தங்களின் சிந்தனைகளுடன் ஒத்துப்போகின்றேன். பாகிஸ்தான் கொடிக்கும் இந்திய இஸ்லாமியர்கள் ஏற்றுகின்ற கொடிக்கும் பச்சை நிற ஒற்றுமை மாத்திரம்தான் உள்ளது என்பது என் கருத்தும்..

மிக நல்ல பதிவு.. நன்றிகள்