திங்கள், ஜூலை 10, 2006

அனைவரும் விரும்பும் வறட்சி நிலை

இந்தியா ஒரு வறண்ட நாடு. அதன் வறட்சிக்குக் காரணம், சில இடது சாரி இடுப்பசைவுகளைச் செய்து கொண்டே தம் வலது சாரித் திட்டங்களைத் திடமாக முன்னெடுத்துச் செல்லும் அதன் அரசியல் கட்சிகளே. இதில் பாரபட்சமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் உண்டு - காந்தீய, பிராந்திய, தேசிய, மாநில, பெரியாரிய, சோஷலிச, மார்க்சீய, சாதீய, தலித்திய......... என்று அனைத்து ஈயங்களும் இதில் அடக்கம். மேற்கூறிய கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, தம் கொள்ளைகளைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன இக்கட்சிகளும் அவை ஆளும் அரசுகளும். கொள்கையளவில் எதிரும் புதிருமாக இருந்தாலும், கொள்ளையளவில் இக்கட்சிகளிடையே மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காணலாம். என்னதான் ஆட்சிகள் மாறினாலும், நாட்டில் 'வளர்ச்சி'த் திட்டங்கள் அறிவிக்கப்படுவதிலும், அவைகளைச் செயல்படுத்துவதற்காக காண்டிராக்ட்களை வாரி வழங்குவதிலும், எந்த விதமான மாற்றமும் நிகழ்வதில்லை. நம் நகரங்களில் ஆங்காங்கே தேவையில்லாத இடங்களிலெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்படுவது ஒரு tip of the iceberg உதாரணம். வேடிக்கை என்னவென்றால், கோடிகளை விழுங்கும் பல 'வளர்ச்சி'த் திட்டங்களில் கணக்கிடக் கூடிய பலன் என்று எதையும் சுட்டிக்காட்ட இயலாது. கணக்கில் வராத செலவுகளை வேண்டுமானால் காட்ட முடியுமோ என்னவோ.

மிகப் பெரிய அரசு ஆலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள், உயர் நுட்ப ஆராய்ச்சிக் கூடங்கள் என்று ஏகப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இனிதே செயல்படுத்தப் பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மயத்தால் நம் நாடு எங்கோ வெகு தூரம் முன்னேறி விட்டிருக்கிறதோ என்று நினைத்தோமானால் ஏமாற்றம்தான். இவை பெரும்பாலும் ஒரு செயல்திறனற்ற, வலுவற்ற, எப்போது வேண்டுமானாலும் பொலபொலவென்று உதிர்ந்து விடக்கூடிய ஒரு கட்டமைப்பையே நமக்கு வழங்கியுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தேசிய அளவில் நடந்து வந்த இம்மோசடி, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, சர்வதேச நிறுவனங்களின் ஆசிகளுடன் மேன்மேலும் சிறப்பாக நடந்தேறுகிறது - சர்வதேச காண்டிராக்ட்கள், ஐரோ-டாலர்களில் வெகுமதிகள் என்று. Enron – DPC ஊழல் விவகாரம் போன்ற ஒரு சில மோசடிகள் அம்பலமாகின்றன. மற்றவை நம் பார்வைக்கெட்டாமல், மறைமுகமாக நிறைவேறுகின்றன. வளர்ச்சி நடைபெறுகிறதோ இல்லையோ, வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் இந்நாட்டில் பஞ்சமே இல்லை.

இந்நிலை தொடர்வதில் தனியார் துறைக்கும் (மற்றும் அவற்றில் பணியாற்றும் மத்திய வர்க்கத்தினருக்கும்) முழு விருப்பமே. ஏனென்றால், அரசின் இக்கொள்கைகளால் அதிகமான பலனை அடைவது இத்துறையினர்தான். ஒருபுறம் அரசு காண்டிராக்ட்கள், மறுபுறம் நாட்டின் வளங்களைச் சூறையாட தடைகளற்ற free ticket......... இப்படியாகத் தனியார்மயமாக்கத்தின் குணாதிசயங்களும் நம்பிக்கையை ஊட்ட மறுக்கின்றன. இன்று நிலவும் free market பொருளாதாரத்தில், தங்கு தடைகளின்றி சுதந்திரமாக இந்நாட்டு மக்களையும் அவர்களின் உடைமைகளையும் வாழ்வாதாரங்களையும் வேட்டையாடும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்கு. இவ்வேட்டையில் சிக்கிய பெருஞ்செல்வத்திலிருந்து நாய்க்கு எறியும் பிஸ்கட் துண்டுகளைப் போல் எறியப்படும் சம்பள உயர்வுகளால் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்ட நம் படித்த, professional, அறிவுஜீவிக் கூட்டமும், இவற்றால் புளகாங்கிதமடைந்து, இத்திட்டங்களைக் கைத்தட்டி வரவேற்கிறது. இதன் அங்கத்தினர்களால் இன்று முழுவதுமாக ஆக்ரமிக்கப் பட்டிருக்கும் நம் ஊடகங்களைப் பற்றியோ எதுவும் கூறத் தேவையில்லை. எத்திசை நோக்கினும் இவற்றின் ஜால்ரா ஒலி நம் காதைப் பிளக்கிறது. 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள், ஆங்கில செய்தித்தாள்கள், இணையத்திலுள்ள வலைவாசல்கள் என்று எதைத் திறந்தாலும் ஒரே கருத்துதான் வெளியாகிறது - "நம் வளர்ச்சித் திட்டங்கள் வேகமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை, இன்னமும் முன்றாம் உலக மனப்பான்மையிலிருந்து நாம் வெளிவரவில்லை, வளர்ச்சிக்குத் தடை போடுவதற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கிறது, உழைக்காமலேயே சம்பளம் பெற எண்ணும் கூட்டமே அது" இவ்வாறான செய்திகளால் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஒரு பொறுமையின்மையை ஏற்படுத்தி, அவற்றைத் துரிதப்படுத்தும் அழுத்தங்களை அதிகரித்துக் கொண்டே போகும் நற்பணியை நம் ஊடகங்கள் வெகு நேர்த்தியாகச் செய்து வருகின்றன. தனியார் நிறுவனங்களிடமிருந்து கிட்டும் விளம்பர வருவாயின் மீது குறி வைத்திருக்கும், அல்லது முன்னணி வர்த்தகக் குழுமங்களின் ஒரு அங்கமாகத் திகழும் இவ்வூடகங்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அரசின் செயல்பாடுகளை விடாது கண்காணிக்க வேண்டிய தன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு விட்ட நம் ஊடகத்துறை, பொழுது போவதற்கு வேறென்ன பணியாற்றுகிறது என்று பார்த்தால், Page 3யாம், சினிமா செய்திகளாம், பிரபலங்களைப் பற்றிய கிசுகிசுக்களாம். முன்பு It's a rich man's law என்றார்கள் (நீதிமன்றங்களில் தீர்ப்புகளை 'வாங்க'க்கூடிய நிலை ஏற்பட்ட பின்னர்), இன்று It's a rich man's media என்றும் ஆகிவிட்டது (செய்தியாளர்களும் செல்வந்தர்களிடம் விலைபோய்விட்ட இந்நாளில்). ஒவ்வொறு துறையும் இவ்விதமாக மாறிக் கொண்டு வரும் இந்த rich man's countryயில் rich அல்லாதவர்களின் நிலை என்ன என்பதுதான் நான் கேட்க விரும்பும் கேள்வி.

என்னைப் போன்றவர்களின் சந்தேகத்தைத் தெளிவுப் படுத்தும் வகையில் சில உதாரண நிலவரங்களைப் பார்ப்போம். (தகவல் உதவி - பத்திரிகையாளர் திரு. சாய்நாத் எழுதிய கட்டுரைத் தொகுப்பு)

************

இடம்: மல்கன்கிரி, ஒரிஸா

துண்டிக்கப்பட்ட பிராந்தியம் (Cut-off Area) என்ற குறிப்புடன், ஒரு நூற்றைம்பது கிராமங்களையும், சுமார் முப்பதாயிரம் மக்களையும் உள்ளடக்கியிருக்கிறது ஒரு பகுதி. இப்பகுதியின் சிறப்பு, இது நாலாபக்கங்களிலும் தண்ணீரால் முற்றிலுமாகச் சூழப்பட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதே.

ஆனால் இந்நிலப்பரப்பு எப்பொழுதும் அவ்வாறிருக்கவில்லை. ஒரு இயற்கை அழகு ததும்பும் பிரதேசமாக, ஒரு சொர்க்க பூமியாகத்தான் திகழ்ந்தது இப்பகுதி. முன்னூறு அடி உயரத்திலிருந்து விழுந்த ஒரு நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகள் ஏற்படுத்திய மேகமூட்டமும் சூரிய ஒளியும் பிணைந்து ஒரு நிரந்தர வானவில்லையே உருவாக்கியிருந்ததாகக் கூறுகின்றன வரலாற்றுக் குறிப்புகள். இத்தகைய சொர்க்கபுரியை மயான தேசமாக மாற்றுவதற்கும் ஒரு 'வளர்ச்சி'த் திட்டத்தைத் தீட்டினார்கள் நம் சான்றோர்.

'பலிமேளா' மின்சாரத் திட்டத்தின் கீழ் இங்கு ஒரு அணை எழுப்பப்பட்டு, அதன் நீர்த் தேக்கத்தால் தொண்ணூறு கிராமங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற வனப்பகுதிகள் ஆகிய அனைத்துமே முற்றிலுமாக முழுகிப் போயின. ஒரு மாபெரும் நிலப்பரப்பு, மேற்கூறிய 'துண்டிக்கப்பட்ட பகுதியாக மாறியது. நீர்த்தேக்கத்தால் முழுகிய கிரமங்களில் வசித்த மக்களும் இப்பகுதியிலேயே குடிவைக்கபட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள். (இல்லாவிட்டால் இவ்வளவு பேரை இப்படி எளிதாக அப்புறப்படுத்தி, இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி)

ஒரு எண்பது மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் இதனால் ஒரிஸாவுக்கும் ஆந்திர மாநிலத்திற்கும் கிட்டியதாம். ஆனால் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட, அப்புறப்படுத்தப்பட்ட, வாழ்க்கையே ஒரு தீவாக்கப்பட்ட, முப்பதாயிரம் பேர்களின் வாழ்வில் இன்னமும் ஒளி வீசவில்லை. Cut-off area, black-out areaவும் கூட. நாட்டுக்கு விளக்கேற்ற வேண்டி தம் வாழ்வை விரும்பியோ விரும்பாமலோ தியாகம் செய்த இம்மக்கள் கூட்டம், தம் வீடுகளுக்கு விளக்கேற்ற முடியாது திண்டாடுகிறது.

அது மட்டுமல்லாமல், முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்களும் கிட்டாமல், பற்றாக்குறை நிலைதான். மூன்று நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்லும் படகு. மூழ்க்கடிக்கப்பட்ட காடுகளினூடே செல்லவேண்டியிருப்பதால், மெதுவாகத்தான் செல்ல வேண்டும். அறுபது கிலோமீட்டர் பயணத்திற்குப் பல மணி நேரங்கள் எடுத்துக் கொண்டுதான், அதுவும் அறுபது பேருக்கான படகில் நானூறு பேரை ஏற்றிக் கொண்டுதான் சென்றாக வேண்டும். எல்லாப் பொருள்களையும் உபரி விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அடிமட்டக் கூலி தரும் வேலைவாய்ப்புகளே கிட்டும் இப்பகுதியில். (பல மணி நேர உழைப்பிற்கு ரூ.4/-, போன்ற கூலி வேலைகள்)

அரசால் பயிரிடுவதற்காக விநியோகம் செய்யப்படும் கடலை மூட்டைகள் பெரும்பாலும் உணவாகவே உண்ணப்படுகின்றன, வறுமையின் மிகுதியால். இம்மூட்டைகள் சீல் பிரிக்கப்பட்டு, திறந்த நிலையிலேயே வழங்கப்படுகின்றன, அரசின் ஊழியர்களால். ("அத்தகைய மூட்டைகளை வாங்க வேண்டாம்" என்று மூட்டைகளின் மேல் கொட்டை எழுத்துக்களில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தாலும், அதைப் பின்பற்றும் நிலையிலில்லை மக்கள்.) ஒவ்வொரு பெறுனரிடமிருந்தும் முதலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் படிவத்தில் 'அவருக்கு எத்தனை மூட்டைகள் வழங்கப்பட்டன' என்ற தகவல் நிரப்பப்படுவதில்லை (பிறகு நிரப்பிக் கொள்வார்களோ, என்னவோ).

இந்த cut-out areaவில் வாழும் மக்கள் கேட்கும் நியாயமான கேள்வி - "நாங்கள் இந்தியர்கள் என்று பெருமை கொள்வதற்கு ஏதாவது ஒரு காரணம் வழங்க முடியுமா?" அருகே நீர்த்தேக்கத்தில் ஒரு கல்வெட்டு பெருமையாக அறிவித்துக் கொண்டிருந்தது, "மூழ்க்கடிக்கப்பட்ட கிராமங்கள் - 91" என்று.

*********

இடம்: வார்ட்ராஃப் (Wardroff) நகர், சுர்குஜா மாவட்டம், மத்தியப் பிரதேசம்.

ராம்தாஸ் கோர்வா, ரச்கேதா கிராமத்தைச் சேர்ந்த, 'கோர்வா' எனப்படும் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அரசு ஆவணங்களின் படி அவரது மதிப்பு - ரூ.பதினேழரை லட்சம். எப்படியென்றால் அவர் அக்கிராமத்தில் வாழும் ஒரே கோர்வா நபர் என்றாலும், அவர் பெயரை முன்நிறுத்தி அக்கிராமத்திற்கு பதினேழரை லட்சம் ரூபாய் செலவில் ஒரு 3 கி.மீ. நீளமுள்ள ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது, அதுவும் பழங்குடியினர் நலத் திட்ட நிதியிலிருந்து. (3 கி.மீ நீளமுள்ள, அதுவும் கிராமப்புற 1-lane சாலைக்கு 17.5 லட்சங்களாகுமா என்பது தனிக்கேள்வி). நிச்சயமாக அவரது விருப்பத்தின் பெயரில் அந்த சாலை போடப்படவில்லை. அவரது தேவைகளே வேறு. -ம், தன் விவசாய நிலத்திற்குக் கொஞ்சம் பாசன வசதி, போன்றவை.

பின் யாருடைய தேவைக்காக அவரது பெயரும் இனப் பின்புலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன? ஒரு கோர்வா நபருக்குக் கூடப் பயன் தராமல், பதினேழரை லட்சம் ரூபாய் எவ்வாறு கோர்வா நல நிதியிலிருந்து செலவிடப்பட்டது? இது புரியுமானால், இந்தியா என்ற மாபெரும் புதிரும் சுலபமாகப் புரிந்து விடக்கூடும்.

மலைவாழ் கோர்வாக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலிருப்பவர்கள் என்று அறியப்படுபவர்கள் (அதாவது இந்திய மக்களிலேயே கடைசி 5% வகுப்பினர்களில் வருபவர்கள்). சுமார் பதினைந்தாயிரம் எண்ணிக்கை கொண்ட இவர்களின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.42 கோடிகளை அனுமதித்துள்ளது. இந்த கோர்வா மக்கள் பெரும்பாலும் வாழ்வது சுர்குஜா மாவட்டத்தில்தான். ஆனால், அரசியல் காரணங்களை முன்னிட்டு, அவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அவர்கள் வாழாத ராய்காட் மாவட்டத்திற்கே செலவிடப்படுகிறது. ஐந்தாண்டு காலமும் கடந்து, ரூ.42 கோடிகளையும் விழுங்கிய பின்னர், கோர்வா நலத் திட்டம், கோர்வா மக்களின் நலனுக்கு ஆற்றியிருக்கக் கூடிய பங்கு குறித்து யாருக்கேனும் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?

தொடர்ச்சி: மிளகாய்த் தரகும், கொத்தடிமைத்தனமும்.

16 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நட்சத்திரத்துக்கு,

வாழ்த்து(க்)கள்.

வானம்பாடி சொன்னது…

VoW,
இந்தியாவின் பெரும்கொள்ளையன் இந்திய அரசுதான். மக்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலத்தை கையகப்படுத்தி அதை இந்த மண்டலம், அந்த மண்டலம் என்று பெருவிலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்று லாபம் பார்க்கும் அரசை என்னவென்று சொல்வது?

நட்சத்திரமா இந்த வாரம்? வாழ்த்துகள்.

Voice on Wings சொன்னது…

துளசி, விழியன், சுதர்சன், நன்றி :)

விழியன், நான் தமிழில் பார்த்தது கிடையாது. ஆங்கிலத்தில் Hindu போன்ற நாளிதழ்களில் அவர் எழுதியதைப் படித்திருக்கிறேன். இப்போது அளித்துள்ள உதாரணங்கள் அவரது Everybody Loves a Good Drought என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டவை.

மணியன் சொன்னது…

வாழ்த்துக்கள் VoW. ஆரம்பமே விழிப்புணர்ச்சியை தூண்டுவதாக இருக்க்கிறது.

அசுரன் சொன்னது…

வாழ்த்துக்கள் சிறப்பான கட்டுரை,

தகவல்கள் செறிவாக உள்ளன.

P. Sainath-னுடைய ஆங்கிலக் கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கிடைக்கும்:
http://www.indiatogether.org/opinions/psainath/

//"நாங்கள் இந்தியர்கள் என்று பெருமை கொள்வதற்கு ஏதாவது ஒரு காரணம் வழங்க முடியுமா?" //

யார் பதில் சொல்ல. அல்லது இந்தியாவின் definition-யை மாற்ற வேண்டுமா?

நன்றி,
அசுரன்

தருமி சொன்னது…

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

கொஞ்சம் எழுத்துக்களை பெரிதாக்கினால் எங்கள மாதிரி ஆட்களும்கூட வாசிக்க ஏதுவாக இருக்குமே.

-/சுடலை மாடன்/- சொன்னது…

வாழ்த்துக்கள், நல்ல ஆரம்பம்.

சொ. சங்கரபாண்டி

Sri Rangan சொன்னது…

வணக்கம்,இரவி.
நட்ஷத்திரமாக உதித்துள்ளீர்கள்!-வாழ்த்துகிறேன்.

விபரமான கட்டுரை.

தொடர்ந்து வாசித்துவிட்டுப் பின்பு கருத்திடுகிறேன்.

ஸ்ரீரங்கன்

Machi சொன்னது…

//முன்பு It's a rich man's law என்றார்கள் (நீதிமன்றங்களில் தீர்ப்புகளை 'வாங்க'க்கூடிய நிலை ஏற்பட்ட பின்னர்), இன்று It's a rich man's media என்றும் ஆகிவிட்டது (செய்தியாளர்களும் செல்வந்தர்களிடம் விலைபோய்விட்ட இந்நாளில்). ஒவ்வொறு துறையும் இவ்விதமாக மாறிக் கொண்டு வரும் இந்த rich man's countryயில் rich அல்லாதவர்களின் நிலை என்ன என்பதுதான் நான் கேட்க விரும்பும் கேள்வி. //
Rich ஆக இல்லாதவங்க Ditch தான்.

இளங்கோ-டிசே சொன்னது…

நட்சத்திர வாழ்த்து.
....
நீங்கள் ஒரிஸாவில் கட்டப்பட்ட அணைக்கட்டின் பாதிப்பைப் பற்றி எழுதியதை வாசிக்கும்போதுதான் இன்று இங்குள்ள பத்திரிக்கையில் எழுதப்பட்டிருந்த ஆவணப்படம் பற்றிய விமர்சனம் நினைவுக்கு வருகின்றது. சிலியில் இப்படித்தான் ஒரு பெருநிறுவனத்தால் அணைகட்டப்பட அதைச்சூழ்ந்திருந்த ஆதிக்குடிகளும் பிற மக்களும் எவ்வாறு அழிந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அந்த விவரணப்படம் காட்சிப்படுத்தியிருக்கின்றதாம்.

Voice on Wings சொன்னது…

மணியன், அசுரன், தருமி, சங்கரபாண்டி, ஸ்ரீரங்கன், குறும்பன் மற்றும் டிசே,

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி :)

அசுரன், உங்கள் சுட்டியிலுள்ள பக்கத்தை நானும் கண்டிருக்கிறேன். அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்.

தருமி, எழுத்துக்களைப் பெரிது படுத்திப் பார்த்தேன் - இராட்சத அளவுக்குச் செல்கிறதே? உங்கள் browserஇன் settingஐ மாற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.

டிசே, வளர்ச்சித் திட்டங்கள் பழங்குடியினருக்குப் பாதகமாக முடிவதற்கு பல உதாரணங்கள் உலகெங்குமுள்ளன. அது பற்றிய விழிப்புணர்வு பெருகினாலொழிய, இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் எந்த மாற்றமும் இருக்காது.

குமரன் (Kumaran) சொன்னது…

மிக நல்ல பதிவு. அரிய அறியாத செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்.

தமிழ்மண விண்மீன் வார வாழ்த்துகள்.

Muthu சொன்னது…

வாய்ஸ்,

excellent piece...அருமையான கட்டுரை...

நட்சத்திர வாரத்திற்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீ சொன்னது…

ஐயா, நல்ல கட்டுரை.இது போல பல திட்டங்கள் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வீணடிக்கப்படுகின்றன.இதோ ஒரு உதாரணம்.கிராம இணைப்புசாலை என்ற பெயரில் காலம் காலமாய் நீர் ஆதாரத்துக்கு பயன் படும் ஏரி வாய்க்கால்கள் தூர்க்கப்படும் கொடுமையும், காடுவளர்ப்பு என்ற பெயரில் ஏரி,குளங்கள் வேலங்காடுகளாய் மாற்றப்படும் கொடுமையும் சான்று.நீர் ஆதாரங்களை காக்க வேண்டிய அரசாங்கமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வேதனையிலும் வேதனை.

ஸ்ரீ சொன்னது…

uஐயா, நல்ல கட்டுரை.இது போல பல திட்டங்கள் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வீணடிக்கப்படுகின்றன.இதோ ஒரு உதாரணம்.கிராம இணைப்புசாலை என்ற பெயரில் காலம் காலமாய் நீர் ஆதாரத்துக்கு பயன் படும் ஏரி வாய்க்கால்கள் தூர்க்கப்படும் கொடுமையும், காடுவளர்ப்பு என்ற பெயரில் ஏரி,குளங்கள் வேலங்காடுகளாய் மாற்றப்படும் கொடுமையும் சான்று.நீர் ஆதாரங்களை காக்க வேண்டிய அரசாங்கமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வேதனையிலும் வேதனை.

Voice on Wings சொன்னது…

குமரன், முத்து, ஸ்ரீ, உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. :)